search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    எங்கிருக்கிறார் கடவுள்?
    X

    எங்கிருக்கிறார் கடவுள்?

    இறைவன் எங்கிருக்கிறார் என்பதை உணரசெய்யும் கதையை கீழே பார்க்கலாம்.
    அது ஒரு மடாலயம். அதன் வெளியே கடுங்குளிரில் நடுங்கிக்கொண்டிருந்த ஒரு முதியவரை, உள்ளே தங்கிக்கொள்ள அனுமதி கொடுத்திருந்தார் மடாலய நிர்வாகி. உள்ளேயும் குளிர் வாட்டி எடுத்தது முதியவரை. அவர் உறக்கம் வராமல் வெளியே வந்தார். 

    மடாலயத்தின் பல பகுதிகளில் மரத்தால் செய்யப்பட்ட இறைவனின் சிற்பங்கள் இருந்தன. அவற்றை எடுத்து வந்த முதியவர், ஓரிடத்தில் குவித்தார். பின்னர் அவற்றிற்கு தீவைத்து, அந்தத் தீயில் குளிர்காயத் தொடங்கி விட்டார். சிலைகள் படபடவென வெடித்துச் சிதறி எரியும் ஓசை கேட்டு, அங்கு வந்தார் மடாலய நிர்வாகி.

    அங்கு கண்டகாட்சி அவரை கோபம் கொள்ளச் செய்தது. ‘என்ன காரியம் செய்து கொண்டிருக்கிறீர்?’ என்றார் ஆத்திரத்துடன்.

    ‘பார்த்தால் தெரியவில்லையா?, குளிர் காய்கிறேன். இறைவன் என் குளிரைப் போக்கிவிட்டார். அவர் கருணாமூர்த்தி அல்லவா?’ என்றார் முதியவர்.

    நிர்வாகிக்கோ பற்றிக்கொண்டு வந்தது. ‘என்ன உளறுகிறீர்கள்? தெய்வத்தை எரித்து குளிர்காய்கிறீர்களா?’ என்று பதறினார்.

    முதியவரோ ஒரு குச்சியை எடுத்து நெருப்பில் உருவான சாம்பலை கிளறினார். அதைக் கண்ட நிர்வாகி ‘என்ன செய்கிறீர்?’ என்று கேட்க, ‘நான் இறைவனின் எலும்புகளைத் தேடுகிறேன்’ என்றார் முதியவர்.

    மடாலய நிர்வாகிக்கு எரிச்சல் வந்தது, ‘இதில் எப்படி எலும்பு இருக்கும்?’.

    ‘நான் எரித்தது இறைவனை என்றால், அவரது எலும்புகள் இதில் இருக்க வேண்டுமே!’.

    முதியவரின் பேச்சைக் கேட்ட நிர்வாகி, ‘இனி ஒரு கணமும் நீ இங்கே இருக்கக் கூடாது. தொலைந்து போ’ என்று கூறிவிட்டு கதவை இழுத்து சாத்தினார்.

    மறுநாள் காலையில் எழுந்து வெளியே வந்தார் மடாலய நிர்வாகி. அங்கு அந்த முதியவர், ஒரு மைல் கல்லின் முன்பாக அமர்ந்து, பூக்களை அதன் மீது தூவி வழிபட்டுக் கொண்டிருந்தார்.

    நிர்வாகி அவரிடம் சென்று, ‘ஏய் என்ன செய்கிறாய்? மைல் கல் என்ன இறைவனா?’ என்று கேட்டார்.

    அதற்கு முதியவர், ‘மரம் இறைவன் என்றால், மைல் கல் இறைவனாகக் கூடாதா? நேற்று இரவு குளிர் காய்ந்தது, எனக்குள் இருக்கும் இறைவனைக் காப்பாற்றத்தான். நேற்றிரவு அவர் எனக்குள் நடுங்கிக்கொண்டிருந்தார். அதனால்தான் மரச் சிற்பங்களை எரித்தேன். ஆனால் நீங்கள் அந்த உணர்ச்சியற்ற இறை சிற்பங்களுக்காக, உயிருள்ள இறைவனை வெளியில் துரத்தி விட்டீர்கள்’ என்றார். 
    Next Story
    ×