search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    உடையப்பன் குடியிருப்பு நடுத்தீர்வைப்பதியில் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி 6 இடங்களில் உறியடி
    X

    உடையப்பன் குடியிருப்பு நடுத்தீர்வைப்பதியில் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி 6 இடங்களில் உறியடி

    உடையப்பன்குடியிருப்பு நடுத்தீர்வைப்பதியில் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி 6 இடங்களில் உறியடி நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    நாகர்கோவில் அருகே உள்ள உடையப்பன்குடியிருப்பு நடுத்தீர்வைப்பதியில் கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று முன்தினம் தொடங்கி நடந்து வந்தது. விழாவில் முதல் நாள் காலை, மதியம், மாலை பணிவிடையும், இரவில் கலை நிகழ்ச்சி, நள்ளிரவில் கிருஷ்ணன் பிறப்பு போன்றவை நடந்தது.

    2–ம் நாளான நேற்று காலை 8 மணிக்கு வைத்தியநாதபுரத்தில் இருந்து ஊர்வலம் புறப்பட்டது. மேளதாளத்துடன் யானை முன்வர ஆலியாட்டம், பொய்கால் குதிரை ஆட்டம், ஆஞ்சநேயர் ஆட்டம், கோலாட்டம் தொடர்ந்து வர ஊர்வலம் நடுத்தீர்வைப்பதியை வந்தடைந்தது. மதியம் அன்னதானம், பிற்பகல் பணிவிடை,

    பின்னர் மாலை 3 மணிக்கு சங்குமான் துறைக்கு ஊர்வலம் சென்றது. இதனை கன்னியாகுமரி தொகுதி எம்.எல்.ஏ. ஆஸ்டின், முன்னாள் அமைச்சர் பச்சைமால், தெங்கம்புதூர் பேரூராட்சி தலைவர் லிவிங்ஸ்டன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். ஊர்வலத்தில் சாமி வாகனம், அருள் வாகனம், அனந்தசயன வாகனம், கருட வாகனம், சர்ப்ப வாகனம், குதிரை வாகனம், அனுமார் வாகனம் ஆகிய வாகனங்களில் சாமிசிலைகள் சங்குமான்துறைக்கு சென்றன. அங்கு சாமி சிலைகள் தீர்த்தமாடிய பின்னர் பதிக்கு ஊர்வலமாக திரும்பின.

    ஊர்வலம் வரும்போது மயிலாட்டம், ஆஞ்சநேயர் ஆட்டம், கிருஷ்ணர் வேடம் அணிந்து ஆடி வரும் ஆட்டம், ஆலியாட்டம், கோலாட்டம் தையம் மற்றும் சிங்காரி மேளம், செண்டை மேளம் முழங்க கண்ணனுக்கு உறியடி நிகழ்ச்சி மேலகிருஷ்ணன்புதூர் சந்திப்பிலும், ஆத்திக்காட்டுவிளை சந்திப்பிலும், தாமரைகுட்டிவிளை சந்திப்பிலும், பிள்ளையார்புரம் சந்திப்பிலும், கோயில்விளை சந்திப்பிலும் மற்றும் நடுத்தீர்வைப்பதியிலும் என 6 இடங்களில் நடந்தது. இந்த நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ஊர்வலம் வரும் வழியில் ஆத்திக்காட்டுவிளையில் அன்னதானமும், வழிநெடுகிலும் பழம், மோர், சிற்றுண்டி போன்றவை பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. தொடர்ந்து ஊர்வலம் பதியை வந்தடைந்ததும் சிற்றுண்டி, வாணவேடிக்கை நடந்தது.

    இதற்கான ஏற்பாடுகளை ஊர்தலைவர் என்.ராகவன் தலைமையில் நிர்வாக குழுவினர் மற்றும் ஊர்பொதுமக்கள் இணைந்து செய்திருந்தனர். விழாவையொட்டி சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாம்சன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    Next Story
    ×