search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வரும் 2-ந்தேதி அற்புதம் நிறைந்த 5 விழாக்களின் சங்கமம்
    X

    வரும் 2-ந்தேதி அற்புதம் நிறைந்த 5 விழாக்களின் சங்கமம்

    ஆடி அமாவாசை, ஆடி பெருக்கு, ஆடி செவ்வாய், குரு பெயர்ச்சி, திருக்கழுக்குன்றம் லட்ச தீபம் போன்ற அற்புதம் நிறைந்த 5 விழாக்களின் சங்கமம் 2-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) ஒரே நாளில் வருகிறது.
    ஒரு பண்டிகை அல்லது ஒரு சிறப்புத்தினம் வந்தாலே, அன்றையதின வழிபாடு, பூஜை, பரிகாரம் போன்றவற்றை செய்து முடிப்பதற்குள் போதும்... போதும் என்றாகிவிடும். தற்போதைய எந்திர உலகில் முக்கியதின பூஜைகளுக்கு நேரம் ஒதுக்குவது பலருக்கும் சவாலாக உள்ளது. இந்த நிலையில் ஒரே நாளில் 5 முக்கிய விழாக்கள் வந்தால் எப்படி இருக்கும். வருகிற 2-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) ஒரே நாளில் 5 விழாக்கள் வர உள்ளது.

    அன்றையதினம் ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கு, ஆடி செவ்வாய், குருபெயர்ச்சி, திருக்கழுக்குன்றம் சங்கு புஷ்கர-லட்ச தீப திருவிழா ஆகியவை அணிவகுத்து வருகின்றன. எனவே அன்று அதற்கு ஏற்ப நாம் ஆலய தரிசனம், பித்ரு தர்ப்பணம், வீட்டில் செய்ய வேண்டிய பூஜை, தானம் செய்ய வேண்டிய நேரம், பரிகார பூஜைகள் போன்றவைகளை முன்கூட்டியே திட்டமிட்டு அமைத்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.



    ஆடி அமாவாசை தினத்தன்று தாய், தந்தை உள்ளிட்ட மறைந்த நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, அவர்களை நினைத்து தான-தர்மங்கள் செய்து வழிபாடு செய்ய வேண்டும். 2-ந் தேதி காலை முதல் வழிபாடாக இந்த வழிபாட்டை செய்து முடித்துவிட வேண்டும். அன்றையதினம் அதிகாலையில் பித்ரு தர்ப்பணத்தை முடித்து விடுங்கள்.

    இதையடுத்து குரு பெயர்ச்சிக்குரிய பரிகார வழிபாட்டை செய்வது நல்லது என்கிறார்கள். பரிகாரம் செய்து கொள்ள வேண்டிய ராசிக்காரர்கள் உரிய முறைப்படி அவற்றை செய்தல் வேண்டும்.

    முன்னோர்கள் ஆசியைப் பெற்றுவிட்டோம். குரு பெயர்ச்சியால் ஏற்படும் தோஷத்தை - பாதகத்தை பரிகாரம் செய்து தீர்த்து விட்டோம். அடுத்து என்ன செய்ய வேண்டும்? நம் வாழ்வு வளமாக பெருகுவதற்கு உரிய பூஜைகள், வழிபாடுகளை செய்தல் வேண்டும்.



    அதாவது மூன்றாவதாக ஆடிப்பெருக்குக்குரிய பூஜைகளை செய்ய வேண்டும். ஆடி பதினெட்டாம் பெருக்கு தினத்தன்று காவிரி உள்ளிட்ட முக்கிய ஆறுகள் மற்றும் நீர் நிலைகளில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது காலம், காலமாக நடைமுறையில் உள்ளது.

    ஆடிப்பெருக்கு தினமாகவும் 2-ந் தேதி வருவதால் அன்று நதிகளில் இருந்து புனித தீர்த்தம் எடுத்து வந்து வீடுகளில் தெளிக்கலாம். இதனால் வீட்டில் கெட்ட சக்திகள் விலகி வீடு மங்களகரமாக மாறும். வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும். குடும்பத்தில் புத்துணர்ச்சியும் குதூகலமும் பொங்கும்.

    ஆடிப்பெருக்கு தினத்தன்று இது தவிர வீட்டுக்கு தேவையான புதிய பொருட்களை வாங்கலாம். இன்று எந்த பொருள் வாங்கினாலும் இரட்டிப்பாக பெருகும் என்பது ஐதீகமாகும். எனவே அதற்கு ஏற்ப, உங்கள் சக்திக்கு ஏற்ப பொருட்கள் வாங்கலாம்.

    எதுவும் வாங்க முடியவில்லையா? பொருளாதார பிரச்சினையா? அதற்காக கவலைப்படாதீர்கள். ஒரே ஒரு உப்பு பாக்கெட் வாங்குங்கள். அதுபோதும். வீட்டில் செல்வம் பெருகும். லட்சுமிகரம் உங்கள் வீட்டில் தாண்டவமாடும்.



    சரி... .... மூன்று முக்கிய நிகழ்வுகளை முடித்து விட்டீர்கள். 2-ந் தேதி மாலை ஆடி செவ்வாய்க்கிழமைக்குரிய வழிபாட்டை மேற்கொள்ளலாம். வட மாவட்ட மக்கள் திருக்கழுக்குன்றம் லட்ச தீப திருவிழாவில் பங்கேற்கலாம். ஆக 2-ந் தேதி ஒரே நாளில் 5 அருமையான விழாக்களை சந்தித்து. அவற்றுக்குரிய வழிபாடுகளை பெறும் பாக்கியம் உங்களுக்கு கிடைக்கும். இந்த 5 விழாக்களுக்கும் உரிய நேரத்தை நீங்கள் திட்டமிட்டு அமைத்து கொண்டால் மிக அரிய பலன்கள் நிச்சயம் உங்களை தேடி வரும்.

    பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதே மிகப்பெரிய புண்ணியமான செயலாகும். உங்களின் 21 முந்தைய தலைமுறையினருக்கு நீங்கள் பசியாற்றுகிறீர்கள். அதன் மூலம் கிடைக்கும் புண்ணிய பலன்கள் அளவிட முடியாதது.

    அத்தகைய பலனை 2-ந் தேதி பெறும் நீங்கள் குரு பெயர்ச்சிக்கான பரிகாரத்தையும் செய்து ஆடிப்பெருக்குக்குரிய பலன்களையும் பெறுவது என்பது சாதாரண விஷயமல்ல. பல ஆண்டுகளுக்கு ஒருதடவை தான் இத்தகைய வாய்ப்புகள் வரும்.

    அந்த வாய்ப்பு வரும் செவ்வாய்க்கிழமை (2-ந் தேதி) உங்களுக்கு கிடைத்துள்ளது. எனவே அன்று அற்புதம் நிறைந்த 5 விழாக்களின் சங்கமத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்வும் லட்ச தீபம் போல பிரகாசமாக ஜொலிக்கும்.
    Next Story
    ×