search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தஞ்சை பெரியகோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
    X

    தஞ்சை பெரியகோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

    தஞ்சை பெரியகோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    தஞ்சை பெரியகோவில் என்று அழைக்கப்படும் பிரகதீஸ்வரர் கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவில் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது.

    1000 ஆண்டுகளை கடந்த இந்த கோவிலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மன், வராகி அம்மன், விநாயகர், முருகன் சன்னதிகள் உள்ளன. இந்த கோவிலை மாமன்னன் ராஜராஜ சோழன் கி.பி. 1004-ம் ஆண்டு முதல் கி.பி.1010-ம் ஆண்டிற்குள் கட்டி முடித்தார். இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருவிழா நேற்றுகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடிமரத்திற்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டன.

    கொடியேற்றத்தின்போது பஞ்சமூர்த்திகள் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தன. விழாவில் தஞ்சை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜாபோன்ஸ்லே, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமணி, செயல் அலுவலர்கள் மாதவன், அரவிந்தன், கண்காணிப்பாளர் ரெங்கராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மாலையில் பஞ்சமூர்த்திகள் படிச்சட்டத்தில் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சுவாமிகளுக்கு சந்தனக்காப்பு அலங்காரம், வெண்ணைத்தாழிஅலங்காரம், பல்லக்கில் சுவாமிகள் புறப்பாடும் நடைபெறுகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 18-ந் தேதி நடக்கிறது. அன்று காலை 5.30 மணிக்கு பெரியகோவிலில் இருந்து தியாகராஜசுவாமி அம்பாளுடன் புறப்பட்டு வந்து தேரில் எழுந்தருளுகிறார். பின்னர் 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் திருத்தேர் வடம்பிடித்து இழுக்கப்படுகிறது.

    21-ந்தேதி காலையில் தியாகராஜர் ருத்திரபாத தரிசனத்துடன் யதாஸ்தான பிரவேசம் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து நடராஜபெருமாள் நான்கு வீதிகளில் உலா வருகிறார். மதியம் சந்திரசேகர் கோவிலுக்குள் உலாவந்து தீர்த்தம் கொடுத்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலை 6.30 மணிக்கு மேல் கொடியிறக்கம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து வெள்ளிரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெறுகிறது.

    Next Story
    ×