search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருவந்திபுரத்தில் உள்ள ஹயக்கிரீவர் கோவில் கும்பாபிஷேகம் நடந்த போது எடுத்த படம்.
    X
    திருவந்திபுரத்தில் உள்ள ஹயக்கிரீவர் கோவில் கும்பாபிஷேகம் நடந்த போது எடுத்த படம்.

    திருவந்திபுரம் ஹயக்கிரீவர் கோவில் கும்பாபிஷேகம்

    கடலூர் அருகே திருவந்திபுரம் ஹயக்கிரீவர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    கடலூர் அருகே திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலின் எதிரே உள்ள அவுசத மலை மீது ஹயக்கிரீவர் கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள பெருமாள், லட்சுமி ஹயக்கிரீவராக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில் ரூ.45 லட்சம் செலவில் பல்வேறு திருப்பணி வேலைகள் நடைபெற்று, முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    முன்னதாக கடந்த 30-ந்தேதி முதல் யாக சாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்று வந்தது. இதில் யாக சாலை புண்யாகவாசனம், கும்ப ஆராதனம் போன்ற பல்வேறு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடந்தது. நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு புண்யாக வாசனம், அக்னி பிரணயணம், கும்ப ஆராதனம், மகா சாந்தியில் சப்த திரவிய ஹோமம், நித்ய விசேஷ ஹோமங்கள், பூர்ணாகுதி ஆகியவை நடைபெற்றது.

    தொடர்ந்து மாலை ஆதிவாசத்ரய ஹோமங்கள், விமானங்களுக்கு நயநோன் மீனலம் நடந்தது. பிறகு உற்சவர் ஹயக்கிரீவருக்கு விசேஷ மகா சாந்தி திருமஞ்சனம், சயனாதிவாசம், கவுத்திரம், சர்வ தேவார்ச்சனம், மூர்த்தி ஹோமம், பூர்ணாகுதி நடந்தது.

    சிகர நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக காலை 5 மணிக்கு விஸ்வரூபம், புண்யாக வாசனம், அக்னி பிரணயணம், கும்ப ஆராதனம், விசேஷ ஹோமங்கள், மகா பூர்ணாகுதி, யாத்ரா தானம், கடம் புறப்பாடு நடந்தது. இதில் யாக சாலையில் இருந்து பூஜை செய்யப்பட்ட புனித நீர் கலசத்துடன் பட்டாச்சாரியார்கள் கோவிலை சுற்றி வலம் வந்தனர்.

    தொடர்ந்து காலை 8.50 மணிக்கு கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கோவிலை சுற்றி நின்றிருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. உடனே பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்ற பக்தி கோஷங்களை எழுப்பியபடி சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் வாசுநாதன், உதவி ஆணையர் ஜோதி, செயல் அலுவலர் நாகராஜன், ஓட்டல் ஆனந்தபவன் உரிமையாளர் நாராயணன், ஆனந்தபவன் வெங்கடசுப்பு, ராஜகோபால், வக்கீல்கள் சிவமணி, சரவணன், முகுந்தன், டாக்டர் வி.கே.கணபதி, சுபஸ்ரீ வள்ளிவிலாஸ் கணேசன், ரவிசங்கர், தீபக், அ.தி.மு.க. மாவட்ட இளைஞரணி தலைவர் மாதவன், மாடர்ன் மேல்நிலைப்பள்ளி தாளாளர் கலைவிஜயகுமார், ஊராட்சி மன்ற தலைவர் சுதாகர் உள்பட ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பூஜைக்கான ஏற்பாடுகளை ஜெயபிரகாஷ் பட்டாச்சாரியார் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.
    Next Story
    ×