search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்த காட்சி
    X
    மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்த காட்சி

    மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்

    மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. கோபுரத்தை சுற்றி கருடன் பறந்ததால் பக்தர்கள் பக்தி முழக்கமிட்டனர்.
    ‘கயிலையே மயிலை...மயிலையே கயிலை’ என்று பக்தர்களால் போற்றப்படும் மயிலாப்பூர் கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் கோவில், 7-ம் நூற்றாண்டை சேர்ந்த பழமை வாய்ந்த கோவில். பார்வதிதேவி மயில் வடிவம் எடுத்து சிவபெருமானை பூஜித்த ஸ்தலம் என்பதால் மயிலாப்பூர் என புகழ் பெற்றது. தேவாரப் பாடல் பெற்ற திருத்தலமான இத்திருக்கோவிலில் கோசாலை அருகே உள்ள ஆதி கபாலீஸ்வரர் சன்னிதியில், இந்த தெய்வத்தம்பதிகளின் திருமணக் காட்சி ஆண்டுதோறும் நிகழ்த்தப்படுகிறது.

    இத்தகைய மகத்துவம் வாய்ந்த கபாலீஸ்வரர் கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, திருப்பணிகள் ரூ.9 கோடி செலவில் நடந்தன. 6 மாத காலத்துக்கு மேல் தொடர்ந்து நடந்து வந்த பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து நேற்று மகா கும்பாபிஷேகம் நடந்தது. கிழக்கு ராஜகோபுரத்தில் 9 கலசங்கள், மேற்கு கோபுரம் 7 கலசங்கள் மற்றும் இதர கலசங்கள் 19 என 36 கலசங்களுக்கு தங்கநீர் தோய்த்து முடிக்கப்பட்டது. ஒரு பெரிய தேர், 4 சிறிய தேர்கள், அறுபத்து மூவர் பல்லக்குகள் என அனைத்து வாகனங்களும் பழுது நீக்கி புதிதாக வண்ணம் தீட்டப்பட்டு இருந்தது.

    யாகசாலை பூஜை கும்பாபிஷேகத்துக்கான யாகசாலை பூஜைகள் கடந்த மாதம் 29-ந்தேதி தொடங்கியது. ஆகம விதிகள் படி யாக பூஜைகளை வேதவாத்தியார் பிரம்ம ஸ்ரீனிவாச சாஸ்திரிகள் தலைமையில், 120 சிவாச்சாரியார்கள் மேற்கொண்டனர். நேற்றுமுன்தினம் காலை 6 மணியளவில் விசேஷ சாந்தி கும்ப திருமஞ்சனமும், தீர்த்த வினியோகமும் நடந்தது.

    கும்பாபிஷேம் நாளான நேற்று மயிலாப்பூர் மாட வீதிகளில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். எங்கு பார்த்தாலும் பக்தர்களின் வெள்ளமாக காட்சியளித்தது. பக்தர்களின் வசதிக்காக நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. கோவிலை சுற்றிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தது. ஆங்காங்கே சிறப்பு காவல் நிலையம் அமைக்கப்பட்டு இருந்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    இதுதவிர நான்கு மாடவீதிகளிலும் கண்காணிப்பு கோபுரங்கள், 26 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு இருந்தது. ஆங்காங்கே பக்தர்களின் வசதிக்காக மருத்துவ முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையிலும், போக்குவரத்தை சீர்படுத்தும் வகையிலும் பக்தர்கள் தங்கள் வாகனத்தை நிறுத்துவதற்காக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதன்படி பக்தர்கள், போலீசார் அறிவுறுத்திய இடங்களில் மட்டும் வாகனங்களை நிறுத்தி வைத்திருந்தனர்.

    நேற்று அதிகாலை 5 மணிக்கு கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் தொடங்கின. காலை 6.30 மணிக்கு பரிவார பூர்ணாஹூதி, பரிவார கலசங்கள் புறப்பாடு நடந்தது. காலை 8.50 மணியளவில் அனைத்து விமானங்கள், ராஜகோபுரங்கள், கபாலீஸ்வரர் விமானம், சிங்காரவேலர், விநாயகர் ஆகியோர் உட்பட 19 தெய்வத்திருவுருவங்களின் விமானக்கலசங்களுக்கும் கலசங்களில் கொண்டு செல்லப்பட்ட புனித நீரால் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. கும்பாபிஷேகத்தை சிவாச்சாரியார்கள் செய்தனர்.

    கும்பாபிஷேகம் நடந்தபோது கோபுரத்திற்கு மேலே கருடன் பறந்தது. அப்போது கோவில் முன்பு கூடியிருந்த பக்தர்கள் ஓம் நமசிவாய, ஓம் நமசிவாய, சிவனே போற்றி என்று பக்தி முழக்கம் எழுப்பினர். கும்பாபிஷேக புனித நீர் கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இந்த புனித நீர் தங்கள் மீது பட வேண்டும் என்பதற்காக பக்தர்கள் ஒருவர்கொருவர் முண்டியடித்துக்கொண்டு முன்னோக்கி சென்றனர்.

    கும்பாபிஷேக நிகழ்வுக்கு பிறகும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர். ஆங்காங்கே பக்தர்களுக்கு குடி நீருடன் கூடிய பிரசாதம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து தீபாராதனை நடந்தது. பகல் 11 மணிக்கு மகா அபிஷேகம் நடந்தது. மாலையில் 48 நாள் மண்டல பூஜை தொடங்கியது. கற்பகாம்பாள் சமேத கபாலீஸ்வரர் வெள்ளிடையேறிய பெருங்காட்சி, பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா நடந்தது.
    Next Story
    ×