search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மார்கழி பூஜை: திருப்பாவை பாடல் - 6
    X

    மார்கழி பூஜை: திருப்பாவை பாடல் - 6

    மார்கழி மாதம் முழுவதும் பாடக்கூடிய கன்னியரின் கனவை நனவாக்கும் திருப்பாவை பாடல்களையும், அதன் பொருளையும் இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயிலில்
    வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ!
    பிள்ளாய்! எழுந்திராய், பேய்முலை நஞ்சுண்டு
    கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி,
    வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை
    உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
    மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
    உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்!

    விளக்கம்: ஆண்டாள் முதல் ஐந்து பாசுரங்களில் பரமனுடைய, பர, வ்யூக, விபவ, நாம, நித்ய-லீலா விபூதி விசேஷங்களை சொல்லி பாடினாள். அடுத்த படியாக அர்ச்சையையும் பாகவத விசேஷங்களையும் சொல்ல வருகிறாள். இன்றைய பாசுரத்தில், பாகவதர்களுடன் புதிதாக சேர்ந்துகொண்ட சிறுமி ஒருத்தியை விடியலின் அடையாளங்களைச் சொல்லி, எழுப்புகிறாள். இவ்வழகிய காலைப்பொழுதில், பறவைகள் எழுப்பும் கீச் கீச் என்ற இனிய சப்தமும், கருடனுக்குத் தலைவனான நம்பெருமான் எழுந்தருளியிருக்கும் திருக்கோயிலில் வெண்சங்குகள் ஊதுவதால் எழும் இனிய பேரொலியும் உன் செவியில் விழவில்லையா ? அனுபவம் குறைந்த பெண்ணே, விரைவாக உறக்கம் கலைத்து எழுந்திரு ! 

    பூதகி என்ற கொடிய அரக்கியின் முலையில் நச்சுப் பாலை உண்டு அவளை மாய்த்தவனும், வண்டிச் சக்கர உருவெடுத்து வந்த சகடாசுரன் என்ற மாய அரக்கனை உதைத்து அழிக்க தன் திருவடியை உயர்த்தியவனும், திருப்பாற்கடலில் நாகப் பஞ்சணையில் யோக நித்திரையில் ஆழ்ந்திருப்பவனும், ஏழு உலகங்களிலும் உள்ள அசையும், அசையா, உயிருள்ள மற்றும் ஜடப் பொருள்களில் ஆதிமூலமாக உறைந்திருப்பவனும், அவதாரங்களுக்கு காரணனும் ஆன அப்பரந்தாமனை,பெரும்பக்திமான்களான முனிவர்களும் யோகிகளும் தங்கள் சிந்தையில் நிறுத்தி செய்த தியானத்தை மெல்லக் கலைத்து, சிறிதும் பதட்டமின்றி அரி நாமத்தை தொடர்ந்து ஓதுவதால் உண்டாகும் பேரோசை நம் உள்ளம் புகுந்து நம்மைக் குளிர (பேருவகை கொள்ள) வைக்கிறது ! பாவை நோன்பிருந்து, அம்மாயக் கண்ணனை வணங்கி வழிபட வாராய் ! என்று எழுப்புகிறாள் ஆண்டாள்.
    Next Story
    ×