search icon
என் மலர்tooltip icon

    திருப்பாவை

    வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை எனத்தொடங்கும் திருப்பாவையையும் அதன் பொருளையும் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை
    திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி
    அங்கப் பறைகொண்ட வாற்றை அணி புதுவை
    பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
    சங்கத்தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
    இங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்
    செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால்
    எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.

    பொருள்:

    அலைகள் நிறைந்த பாற்கடலைக் கடைந்த மாதவனும், கேசி என்ற அரக்கனைக் கொன்ற கேசவனுமான கண்ணனை, சந்திரனைப் போன்ற அழகு முகம் கொண்ட அணிகலன் அணிந்த பெண்கள் சிரமப்பட்டு தரிசித்து, பாவை விரத பலன் பெற்ற விபரத்தை ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிறந்த, குளிர்ந்த தாமரை போன்ற முகத்தையுடைய பெரியாழ்வாரின் பெண்ணான ஆண்டாள், இனிய தமிழில் முப்பது பாடல் பாடி பாமாலை தொடுத்திருக்கிறாள். இதனை படிப்பவர்கள், உயர்ந்த தோள்களை யுடையவனும், அழகிய கண்களைக் கொண்ட திருமுகத்தை உடையவனும், செல்வத்துக்கு அதிபதியுமான திருமாலின் ஆசியுடன் எங்கு சென்றாலும் செல்வச்செழிப்பு பெற்று இன்பமுடன் வாழ்வர்.
    சிற்றஞ்சிறுகாலே வந்துனைச் சேவித்து, உன் எனத்தொடங்கும் திருப்பாவையையும் அதன் பொருளையும் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    சிற்றஞ்சிறுகாலே வந்துனைச் சேவித்து, உன் 
    பொற்றாமரையடியே போற்றும் பொருள்கேளாய் 
    பெற்றெம்மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்த நீ 
    குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது 
    இற்றைப்றை கொள்வானென்று காண் கோவிந்தா 
    எற்றைக்கு மேழேழ் பிறவிக்கும், உன் தன்னோடு 
    உற்றோமேயாவோம் உனக்கே நாமாட்செய்வோம் 
    மற்றைநம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.

    பொருள்: அதிகாலையில் வந்து, உனது பாதங்களைப் பணிந்து நிற்பதன் பயனைக் கேட்பாயாக. பசுக் கூட்டத்தை மேய்த்து உண்ணும் இடையர் குலத்தில் பிறந்த நீ, நாங்கள் உனக்கு செய்யும் திருப்பணிகளை ஏற்றுக் கொள்ளாமல் எங்களைக் கைவிடுவது முறையாகாது. 

    இன்று கொடுக்கப்படும் பறையை மட்டும் நீ ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கோரி நாங்கள் வரவில்லை. காலம் உள்ளவரை, ஏழேழு பிறவிகளுக்கும் உன்னோடு நாங்கள் இப்போது இருப்பதைப் போன்ற அதே அன்போடும், உறவோடும் இருக்க வேண்டும். உனக்கு மட்டுமே நாங்கள் அடிமைகளாக இருக்க வேண்டும். அதை மட்டுமே எங்களுக்கு அளித்து அருள் புரிவாயாக.
    கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்துண்போம் எனத்தொடங்கும் திருப்பாவையையும் அதன் பொருளையும் அறிந்து கொள்ளலாம்.
    கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்துண்போம் 
    அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன் தன்னைப் 
    பிறவி பெறுந்தனை புண்ணியம் யாம் உடையோம் 
    குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உன் தன்னோடு 
    உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது 
    அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச் 
    சிறு பேர் அழைத்தனவும் சீறியருளாதே 
    இறைவா! நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்

    பொருள்: இடையர்குல மக்களாகிய நாங்கள் எல்லாம் கறவைப் பசுக்களின் பின்னாலேயே சென்று காட்டுக்குச் சென்று அங்கு உண்போம். கண்ணா, கள்ளம் கபடம் இல்லாத ஆயர்குலத்தில் வந்து பிறந்தாய் நீ. நீயே எங்களுக்குத் தலைவனாக வந்து சேர்நததை எண்ணி நாங்கள் புண்ணியமடைந்தோம். உனக்கும், எங்களுக்குமான உறவு பிரிக்க முடியாதது. உனது பெயரைச் சொல்லி அழைக்கிறோமேஎன்று சீறி எழாதே. நாங்கள் அறியாத சிறு பிள்ளைகள். அதற்காகக் கோபம் கொள்ளாமல், இறைவா உன் அருளை எங்களுக்குத் தந்தருள்வாயாக.
    கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா உன் தன்னைப் எனத்தொடங்கும் திருப்பாவையையும், அதன் பொருளையும் இங்கே பார்க்கலாம்.
    கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா உன் தன்னைப் 
    பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம் 
    நாடு புகழும் பரிசினால் நன்றாகச் 
    சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே 
    பாடகமே என்றனைய பல்கலனும் யாம் அணிவோம் 
    ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற்சோறு 
    மூட நெய் பெய்து முழங்கை வழிவாரக் 
    கூட இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்

    விளக்கம்: நோன்பு நோற்பதற்கு தேவையான பொருட்களை பட்டியலிட்ட சிறுமிகளிடம் கண்ணபிரான், இவை போதுமா இன்னும் வேண்டுமா என்று கேட்டான் போலும். அதற்கு அந்த சிறுமிகள் நாங்கள் நோன்பு முடிந்ததைக் கொண்டாடும்போது தங்களுக்கு வேண்டுவது என்னென்ன என்று இந்த பாடலில் கூறுகின்றார்கள். 

    பகைவரை வென்று சீருடன் விளங்கும் கோவிந்தா, உன்னை வாயாரப் பாடி, மனதார நினைத்து, வேண்டும் பறையைப் பெற்று நாடு புகழும்படியான ஆடை, ஆபரணங்களையும், அணிமணிகளையும் சன்மானமாகக் கேட்பதே நாங்கள் பெறும் பயன்களாகும். ஆடைகளையம், வளைகளையும், செவிப்பூக்களையும், பலவித அணிகளன்களையும் அணிந்து மகிழ்வோம். 
     
    மேலும் நீ அணிந்த ஆடைகள் புனைந்து, பால் சோற்றினை முற்றிலும் மூடுமாறு நெய்யினால் அதனை மறைத்து, அந்த பால் சோற்றினில் உள்ள நெய் எங்களது முழங்கைக் வழியாக வழிந்து ஓடுமாறு சோற்றினை எங்களது கையினில் ஏந்தி, உன்னுடன் கலந்து நாங்கள் உண்போம். அவ்வாறு உண்ட பின்னர், எங்களது உள்ளம் குளிரும் வகையில் உன்னுடன் கூடி இருந்து நாங்கள் அனைவரும் மகிழ்வோம் என்று பாடுகின்றனர் ஆயர்பாடி இளம்பெண்கள்.
    மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான் எனத்தொடங்கும் திருப்பாவையையும் அதன் பொருளையும் அறிந்து கொள்ளலாம்.
    மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான் 
    மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் 
    ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன 
    பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சனியமே 
    போல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே 
    சாலப் பெரும்பறையே பல்லாண் டிசைப்பாரே 
    கோல விளக்கே கொடியே விதானமே 
    ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்

    பொருள்: காண்போர் மயங்கும் வண்ணம் பேரழகைக் கொண்டவனே, நீலமணிவண்ணனே, கண்ணனே, முன்னோர் எல்லாம், வழி வழியாக அனுஷ்டித்து வந்த பாவை நோண்புக்கு தேவையான பொருள்களை எல்லாம் கூறுவாயாக. உலகமே நடுநடுங்க வைக்கும் பால் நிறம் கொண்ட உன்னுடைய பாஞ்சஜன்யத்தைப் போன்ற சங்குகள், தோல் கருவியாக பெரும் பறை, பல்லாண்டு பாரும் பாராயண கோஷ்டியினர், மங்கல தீபங்கள், கொடிகள், மேல் விதானத்தை தந்து அருள்வாயாக. ஆலிலையில் துயில்பவனே, நாங்கள் கேட்பதை தந்து அருள் புரிவாயாக.
    ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் எனத்தொடங்கும் திருப்பாவையையும் அதன் பொருளையும் அறிந்து கொள்ளலாம்.
    ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்
    ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
    தரிக்கிலானாகித் தான் தீங்கு நினைந்த
    கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
    நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை
    அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்
    திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி
    வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்

    பொருள் : தேவகியின் மகனாகப் பிறந்து, ஒரே இரவில் யாருக்கும் தெரியாமல் மறைந்து வந்து யசோதையிடம் சேர்ந்தவனே. உன்னால் தனக்கு கேடு வரும் என்று நினைத்துப் பயந்த கம்சன் உன்னை அழிக்க நினைத்தான். ஆனால் நீயோ அதை தவிடுபொடியாக்கி, அவனது வயிற்றில் நெருப்பைப் போல பயத்தை உண்டாக்கி நின்றாய்.

    அப்படிப்பட்ட திருமாலே உன்னைப் பாடி அர்ச்சிக்க வந்தோம். உன்னுடன் உறைந்திருக்கும் திருமகளின் அருளினால், எங்களுக்கு செல்வத்தையும், வீரத்தையும் தருவாயாக. வருத்தம் நீங்கி, உனது குண நலன்களைப் பாடி மகிழ்வோம்.
    அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி எனத்தொடங்கும் திருப்பாவையையும் அதன் பொருளையும் அறிந்து கொள்ளலாம்.
    அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி 
    சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி 
    கொன்றடச்சகடம் உதைத்தாய் புகழ் போற்றி 
    கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி 
    குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி 
    வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி 
    என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான் 
    இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.

    பொருள்: மகாபலி இந்த உலகத்தை கைப்பற்றிய காலத்தில், அதை மூன்றடிகளால் அளந்து உன்னுடையது என்று உணர்த்தியவனே! உன் திருவடிகளுக்கு வணக்கம். ராமாவதாரம் எடுத்த போது, சீதையை மீட்க தெற்கிலுள்ள இலங்கைக்கு சென்று ராவணனை வெற்றி கொண்டவனே! உன் வீரத்துக்கு நமஸ்காரம். சக்கர வடிவில் வந்த சகடன் எனற அசுரனை ஒரே உதையில் வீழ்த்தியவனே! உன் புகழுக்கு வந்தனம்.

    கன்று வடிவில் வந்த வத்சாசுரனை தடியாகக் கருதி, அவனை விளாமர வடிவில் வந்த கபித்தாசுரன் மீது எறிந்து அழித்தவனே! உன் கால்களில் அணிந்த வீரக்கழலுக்கு மங்களம் உண்டாகட்டும். கோவர்த்தனகிரியை குடையாக்கி ஆயர்குலத்தவரை இந்திரன் அனுப்பிய மழையில் இருந்து காத்தவனே! உன் இரக்க குணத்துக்கு தலை வணங்குகிறோம்.பகைவர்கள் எவ்வளவு பலவான்களாயினும் அவர்களை உன் கையிலுள்ள வேலால் அழித்தவனே! அந்த வேலாயுதத்துக்கு நமஸ்காரம். உன் வீரச்செயல்களைப் பாடி, உன்னருளைப் பெறுவதற்கு, இப்போது நாங்கள் வந்துள்ளோம். எங்கள் மீது இரக்கம் காட்ட வேண்டுகிறோம்.
    மாரி மலைமுழஞ்சில் மன்னிக்கிடத்துறங்கும் எனத்தொடங்கும் திருப்பாவையையும் அதன் பொருளையும் அறிந்து கொள்ளலாம்.
    மாரி மலைமுழஞ்சில் மன்னிக்கிடத்துறங்கும் 
    சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து 
    வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி 
    மூரி நிமிர்ந்து முழங்கப் புறப்பட்டு 
    போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா! உன் 
    கோயில் நின்று இங்ஙனே போந்தருளி கோப்புடைய 
    சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த 
    காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய். 

    பொருள்: மழைக்காலத்தில் மலையிலுள்ள குகையில் உறங்கும் பெருமை மிக்க சிங்கம் விழிக்கிறது. அதன் கண்களில் நெருப்பு பொறி பறக்கிறது. நாற்புறமும் நடமாடி பிடரி மயிரை சிலிர்த்து, பெருமையுடன் நிமிர்ந்து கர்ஜனையுடன் வெளியே கிளம்புகிறது. அதுபோல, காயாம்பூ நிறத்தையுடைய கண்ணனே! நீயும் வீரநடை போட்டு உன் கோயிலில் இருந்து வெளியேறி, இங்கே வந்து அருள் செய். வேலைப்பாடுகளைக் கொண்ட மிகச்சிறந்த சிம்மாசனத்தில் அமர்ந்து, நாங்கள் எதற்காக இங்கே வந்தோம் என்பதை அறிந்து, அந்த கோரிக்கைகளைப் பரிசீலனை செய்து நிறைவேற்றி அருள வேண்டுகிறோம்.
    அங்கண்மா ஞாலத் தரசர் அபிமான எனத்தொடங்கும் திருப்பாவையும் அதன் பொருளையும் இங்கே விரிவாக பார்க்கலாம்.
    அங்கண்மா ஞாலத் தரசர் அபிமான
    பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட்டிற் கீழே
    சங்க மிருப்பார்போல் வந்து தலைப் பெய்தோம்
    கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே
    செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ
    திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற் போல்
    அங்கண் இரண்டும் கொண்டெங்கள் மேல் நோக்குதியேல்
    எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்.

    பொருள்: அழகான பெரிய பூமியில் உள்ள அரசர்கள் தங்கள் நாடுகளை இழந்து, அகந்தை அழிந்து, நீ பள்ளி கொண்டிருக்கும் படுக்கையின் கீழ் கூடி நிற்பதைப் போல நாங்களும் உன்னை வந்தடைந்து நிற்கிறோம்.

    கி்ங்கிணியின் வாயைப் போன்றுள்ள, செந்தாமரையின் இதழ் ஒத்த உன் திருக்கண்கள் எங்களோ நோக்கிப் பார்க்க மாட்டாதா. சூரியனும், சந்திரனும் ஒரே சமயத்தில் உதித்ததைப் போல உனது அழகான இரு கண்களால் எங்களைப் பார்த்தால், எங்கள் மீதான அத்தனை சாபங்களும் போய் விடுமே.
    ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப எனத்தொடங்கும் திருப்பாவையையும், அதன் பொருளையும் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப 
    மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள் 
    ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய் 
    ஊற்ற முடையாய் பெரியாய் உலகினில் 
    தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய் 
    மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண் 
    ஆற்றாது வந்து உன்னடி பணியுமாப் போலே 
    போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்.

    பொருள்: வள்ளலைப் போல கேட்டதும் பாலைப் பொழியும் பெரும் பசுக் கூட்டத்தைக் கொண்ட நந்தகோபரின் திருமகனே, அடியவர்களைக் காக்கும் அக்கறை உடையவனே, பெருமைகளைக் கொண்டவனே. இந்த உலகின் நிலையான சுடர் ஒளியே. நீ உறக்கத்தை விட்டு எழுந்து வருவாயாக. உன்னிடம் போரிட்டு உனது வலிமைக்கு முன்பு நிற்க முடியாமல் தோற்றவரெல்லாம் உனது அடியாராக மாறி உன் அடி பணிந்து வந்து நிற்கிறார்கள்.

    அவர்களுக்கு உனது அடிகளைப் பற்றிப் பணிந்து நிற்பதைத் தவிர வேறு வழியில்லாத நிலை. அதேபோல ஆயர் குலத்தைச் சேர்ந்த பெண்களாகிய நாங்களும், உனது குணநலன்களைப் போற்றிப் பாட வந்து உன் மாளிகை முன்பு காத்திருக்கிறோம். துயில் எழுந்து வந்து எங்களைக் காத்து அருள்வாயாக.
    முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று எனத்தொடங்கும் திருப்பாவையையும் அதன் பொருளையும் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று 
    கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய் 
    செப்பமுடையாய், திறலுடையாய் செற்றார்க்கு 
    வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய் 
    செப்பன்ன, மென்முலை செவ்வாய் சிறுமருங்குல் 
    நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய் 
    உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை 
    இப்போதே எம்மை நீராட்டு ஏல் ஓர் எம்பாவாய்.

    விளக்கம்: கோபியர்கள் இந்தப் பாசுரத்திலும் பகவானையும், பிராட்டியையும் எழுப்புகிறார்கள். முப்பத்து மூன்று கோடி தேவர்கள் இருந்தாலும், அவர்களுக்கெல்லாம் முன்னதாகச் சென்று பக்தர்களின் துயர் துடைக்கும் கலியுக தெய்வமே! நீ எழுவாயாக! நேர்மையானவனே! ஆற்றல் மிக்கவனே! 

    பகைவர்களுக்கு வியர்வை பெருக்கெடுக்கும்படி செய்யும் தூயவனே! துயில் எழுவாயாக. பொற்கலசம் போன்ற மென்மையான ஸ்தனங்களும், பவளச் செவ்வாயும், சிற்றிடையும் கொண்ட நப்பின்னை பிராட்டியே! லட்சுமிக்கு நிகரானவளே! நீயும் விரைந்து துயில் எழுவாயாக. எங்களுக்கு விசிறி, கண்ணாடி ஆகியவற்றையும், உன் கணவனாகிய கண்ணனையும் தந்து இப்போதே எங்களை அருள்மழையில் நனையச் செய்வாயாக. கண்ணனின் திருக்குணங்களையும், நப்பின்னையின் அழகையும் வர்ணிக்கிறார்கள் ஆயர்குலப் பெண்கள். 
     
    கண்ணன் கடவுள். அவள் எல்லோருக்கும் பொதுவானவன், அவன் நப்பின்னைக்கு மட்டும் சொந்தமானவன் என்று எடுத்துக் கொள்ள முடியாது என்பதால் அவனையும் கேட்கிறார்கள். உக்கமும் தட்டொளியும் ஆகிய விசிறியையும், கண்ணாடியையும் ஏன் கேட்கிறார்கள். விசிறினால் காற்று வரும். வீசுபவனுக்கு மட்டுமல்ல, அருகிலுள்ளவனுக்கும் சேர்த்து! நம் செயல்பாடுகள் நமக்கு மட்டுமின்றி பிறருக்கும் பயன் தருவதாக அமைய வேண்டும் என்பது இதன் உட்கருத்து.
    குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல் எனத்தொடங்கும் திருப்பாவை பாடலையும் இதன் பொருளையும் அறிந்து கொள்ளலாம்.
    குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்
    மெத்தென்ற பஞ்சசயனத்தின் மேலேறி
    கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
    வைத்துக் கிடந்த மலர் மார்பா! வாய் திறவாய்
    மைத்தடங் கண்ணினாய் நீயுன் மணாளனை
    எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண்
    எத்தனையேலும் பிரிவாற்ற கில்லையால்
    தத்துவம் அன்று தகவு ஏல் ஓர் எம்பாவாய்.

    விளக்கம்:

    நப்பின்னையும் நானும் இருக்கும்போது நப்பின்னையை மட்டும் கோபியர்கள் எழுப்புகிறார்களே என்று கண்ணன் குறைபட்டுக் கொண்டான். அதனால், இந்தப் பாசுரத்தின் மூலம் கண்ணனையும் நப்பின்னையையும் எழுப்புகிறார்கள். 
     
    முதல் நான்கடிகளில் கண்ணனையும், அடுத்த நான்கடிகளில் நப்பின்னைப் பிராட்டியையும் எழுப்புகிறார்கள். மங்களகரமாக குத்து விளக்கு ஒளிவீச, தந்தத்தினால் செய்யப்பட்ட கால்களைக் கொண்ட கட்டிலின் மேல், மென்மையான துயிலணையின் மேல் கொத்துக் கொத்தாக தலையில் மலர்களை அணிந்த நப்பின்னையோடு படுத்திருக்கும் மலர்ந்த மார்பை உடையவனே! எங்களைப் பார்த்து கவலைப்படாதே என்று ஒரு வார்த்தை சொல்லலாமே! என்றனர். அவன் வார்த்தை சொல்லத் தொடங்கியதும் நப்பின்னை அவன் வாயை மூடிவிட்டாள். 

    இந்த நிகழ்ச்சியை கோபியர்கள் சாளரத்தின் வழியாகக் கண்டார்கள். கண்ணன் வராததற்கு நப்பின்னை தான் காரணம் என்று உணர்ந்த கோபியர்கள், அழகிய கண்களை உடையவளே! நீ உன் மணாளனை ஒருபொழுதும் பிரியவிடமாட்டாய். லோகமாதாவான உனக்கு இது ஸ்வபாவமுமன்று; ஸ்வரூபமுமன்று என்று கூறுவதாக இந்தப் பாசுரம் சொல்கிறது. 

    தாயே! நீயே எங்கள் கோரிக்கையை கவனிக்கவில்லையானால், அந்த மாயவனிடம் யார் எடுத்துச் சொல்வார்கள்? அவன் உன் மார்பில் தலைவைத்து கிடக்கும் பாக்கியத்தைப் பெற்றவள் நீ. எங்களுக்கு அவன் வாயால் "நன்றாயிருங்கள் என்று ஒரே ஒரு ஆசி வார்த்தை கிடைத்தால் போதும் என்கிறார்கள்.
    ×