search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கருப்பத்தூர் நரசிம்மபுரீஸ்வரர் கோவில்
    X

    கருப்பத்தூர் நரசிம்மபுரீஸ்வரர் கோவில்

    நரசிம்மர் பூஜை செய்து பாவம் விலகப்பெற்ற தலம் கருப்பத்தூர். இங்குள்ள இறைவன் நரசிம்மபுரீஸ்வரர் என அழைக்கப்பட்டு பின் சிம்மபுரீஸ்வரர் என அழைக்கப்படலானார்.
    நரசிம்மர் பூஜை செய்து பாவம் விலகப்பெற்ற தலம் கருப்பத்தூர். இங்குள்ள இறைவன் நரசிம்மபுரீஸ்வரர் என அழைக்கப்பட்டு பின் சிம்மபுரீஸ்வரர் என அழைக்கப்படலானார். இறைவி பெயர் சுகந்த குந்தளாம்பிகை.

    தல வரலாறு :

    இரணியன் ஒரு அசுரகுல அரசன். விஷ்ணுவை தன் பகைவனாகக் கருதியவன். பதினான்கு உலகங்களிலும் தன் ஆட்சியை செலுத்தி வந்தான் அவன். பிரம்ம விஷ்ணுவாதி தேவதைகளும், எட்டுத் திக்குப் பாலகர்களும், வசிட்டர் முதலிய முனிவர்களும் இரணியன் அவனது சொல்படி கேட்டு நடந்தனர். அதாவது அவ்வாறு நடக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆட்பட்டு இருந்தனர். அவனது குலகுரு சுக்கிராச்சாரியார். அவரது ஆணைப்படி சிவபெருமானை நோக்கி தவமிருந்தான் இரணியன். தேவர், மனிதன், மிருகம், பறவைகளாலும் எந்தவித ஆயுதங்களாலும், வீட்டின் உள்ளும், புறமும், பூமியிலும், ஆகாயத்திலும், இரவிலும், பகலிலும் தனக்கு மரணம் உண்டாகாதபடி சிவபெருமானிடம் வரம் பெற்றான். அந்த வரத்தின்படி அவனது அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்தது.

    இரணியனின் மகன் பிரகலாதன். அவன் கல்வி கற்கத் தொடங்கினான். ‘இரணியாய நம’ எனச் சொல்லும்படி ஆசான் சுக்கிராச்சாரியார் சொல்ல அவன் மறுத்தான். ‘‘ஸ்ரீமன் நாராயணனே வணங்கத் தக்கவர். அவர் பெயரை மட்டுமே நான் சொல்வேன்’’ என பிரகலாதன் கூற இரணியனுக்கு கோபம் தலைக் கேறியது.

    ‘‘உன் வீம்பு அளவுக்கு அதிகமாக வளர்கிறது. நீ கூறும் உன் விஷ்ணு எங்கிருக் கிறார்..?, இதோ இந்த தூணில் உன் விஷ்ணு இருப்பானா..?’’ என்ற இரணியன், அருகே இருந்த ஒரு தூணைக் காட்ட “இருப்பார், நிச்சயம் இருப்பார் தந்தையே” என்று பிரகலாதன் கூற, கோபம் தலைக்கேறி இரணியன் எதிரே இருந்த தூணை எட்டி உதைத்தான்.

    உடனே, ஆயிரம் சிங்கங்கள் முழங்கியது போல் ஓர் ஓசை கேட்டது. தூண் இரண்டாகப் பிளந்தது. கண்களில் தீப்பொறி பறக்க சிங்க முகத்துடனும், கழுத்துக்கு கீழே மனித வடிவத்துடனும், நீண்ட வாலுடனும், கூரிய பற்கள்-வளைந்த நகத்துடனும் நரசிம்ம மூர்த்தியாய் விஷ்ணு தோன்றினார். இரணியனின் மார்பில் அறைந்தார். பூமியில் தூக்கி அடித்தார். அவனை தன் மடியில் கிடத்தி, நகங்களால் அவனது வயிற்றைக் கிழித்தார். அவனது ரத்தத்தை குடித்து, குடலை மாலையாக அணிந்து கொண்டார்.

    அதைப் பார்த்த தேவர்கள் பூமாரி பொழிந்தனர். நரசிம்மமூர்த்தி அடக்க முடியாத சினத்துடன் இருப்பதைக் கண்ட லட்சுமி பஞ்ச சுத்தி செய்து பூஜித்தாள். சினம் குறைந்து, மனம் மகிழ்ந்த நரசிம்மமூர்த்தி லட்சுமியை தன் மடிமீது இருத்தி மகிழ்ந்தார். பிரகலாதன் நடுக்கம் நீங்கி நரசிம்மரை வணங்கினான்.

    தேவர்கள் நரசிம்ம மூர்த்தியை நோக்கி, “எம்பெருமானே! தூய்மை உடையவரால்தான் பிறர் பாவங்களைப் போக்க முடியும். தாங்கள் இரணியனைக் கொன்றதால் பிரம்மஹத்தி தோஷம் பிடித்தவராய் உள்ளீர். எனவே அகண்ட காவிரியின் தென் பாகத்தில், மேற்கு முகமாய் கோவில் கொண்டிருக்கும் பச்சாதாபேசுவரரை பூஜித்தால் தங்களது பாவம் விலகும்’’ எனக் கூறினர்.

    தேவர்கள் சொன்னபடியே நரசிம்மமூர்த்தி லட்சுமியுடனும், பிரகலாதனுடனும் பச்சாதாபேசுவரர் எழுந்தருளியுள்ள கருப்பத்தூர் வந்தடைந்தார். அங்குள்ள ஆலயத்தில் அருள் பாலிக்கும் பச்சாதாபேசுவரரையும் இறைவி சுகந்த குந்தளாம்பிகையும் வணங்கி பூஜித்தார்.

    சிவபெருமான் நரசிம்மரைப் பார்த்து, ‘‘இரணியவதம் செய்ததால் ஏற்பட்ட ரத்தக்கறை, பாவம் இரண்டும் நீங்கப் பெற வேண்டும் என நந்தியின் காது வழியே கூறு. அவைகள் நீங்கிப் பெறுவாய்’’ எனக் கூற அதன்படியே நந்தியின் காதில் நரசிம்மர் கூறினார்.

    அப்போது, சிவபெருமான் கங்கையின் நீரை நந்தியின் காது வழியே செலுத்தி நரசிம்மரின் பாவம், ரத்தக்கறை இரண்டையும் நீங்கச் செய்தார். பின் கங்கை நீர், ரத்தக்கறை எல்லாம் அருகே உள்ள அகன்ற காவிரியில் கலந்தது. அதில் நரசிம்மரும், லட்சுமியும் நீராடி பாவ விமோசனம் பெற்றனர்.

    ஆலய அமைப்பு :

    பச்சாதாபேசுவரரான சிவபெருமான் அருள்பாலிக்கும் இந்த ஆலயம் கருப்பத்தூரில் உள்ளது. ஆலயம் மேற்கு திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் மூன்று நிலை ராஜகோபுரம். நுழைவாயிலைத் தாண்டியதும் அகன்ற பிர காரம். அடுத்து உள்ளது சிறப்பு மண்டபம். பலி பீடத்தை அடுத்து நந்தியம் பெருமான் வீற்றிருக்கிறார். இவர் காதில் பெரிய துவாரம் உண்டு. மண்டபத்தின் இடதுபுறம் இறைவியின் சன்னிதி உள்ளது. அன்னைக்கு நான்கு கரங்கள். மேல் இரண்டு கரங்களில் மலர்களையும், கீழ் இரண்டு கரங்களில் அபய, வரத, ஹஸ்த முத்திரைகளுடனும் அன்னை நின்ற கோலத்தில் புன்னகை தவழ அருள்பாலிக்கும் அழகே அழகு.

    மண்டபத்தின் வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள் அருள்பாலிக்கின்றனர். அடுத்துள்ள மகாமண்டப நுழைவு வாயிலில் இடதுபுறம் சண்டி துவாரபாலகரும், வலதுபுறம் முண்டி துவாரபாலகரும் வீற்றிருக்க மண்டபத்தின் உள்ளே இடதுபுறம் மீனாட்சி சுந்தரேசுவரரும், அஷ்டபைரவரும் அருள்பாலிக்கின்றனர். அடுத்துள்ள கருவறையில் இறைவன் சிம்ம புரீஸ்வரர் லிங்கத் திருமேனியில் மேற்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். கருவறையில் இறைவனுக்கு பின்புறம் உள்ள சுவற்றில் நரசிம்ம மூர்த்தியின் திருவுருவம் தனியாக காட்சி தருவது இத்தலத்தின் தலவரலாற்றுக்கு பெருமை சேர்ப்பதாகும்.

    பிரகாரத்தின் வடக்கு திசையில் மகாலட்சுமியின் தனி சன்னிதி உள்ளது. சிவாலயத்தில் மகாலட்சுமியின் சன்னிதி இருப்பது ஓர் அபூர்வ அமைப்பாகும். கணவருக்கு பாவம் தீர அருள்புரிந்த ஆலயத்தில் அன்னை மகாலட்சுமி தங்கி அருள்பாலிப்பதில் வியப்பாக இருக்கிறது. வடக்கு பிரகாரத்தில் சண்டீஸ்வரர் சன்னிதியும், தெற்கு பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி சன்னிதியும் உள்ளன.

    மஞ்சள் கிழங்கு :

    நரசிம்மரும், லட்சுமியும் இத்தல இறைவியை ஆராதனை செய்து வணங்கியபோது அவர்கள் கொண்டு வந்த பூ பந்து, மஞ்சள் கிழங்குகளாக மாறியதாம். எனவே இன்றும் பூசுமஞ்சளை அரைத்து அதை அம்மன் கழுத்தில் சாத்துகின்றனர். பக்தர்களுக்கு அதையே பிரசாதமாக தருகின்றனர். குழந்தை வேண்டி வரும் பெண்களுக்கும் பிற மகளிருக்கும் உருண்டை மஞ்சளை பிரசாதமாக தருகின்றனர். அவர்கள் அதை அரைத்து பூசி குளிக்க அவர்களுக்கு குழந்தை பேறு நிச்சயம் என்கின்றனர் பக்தர்கள். பிரிந்த தம்பதியர் ஒன்று சேர அம்மனுக்கு தாலி வாங்கி சாத்துகின்றனர். விரைவில் அவர்கள் இணைவது உண்மை என்கின்றனர் பக்தர்கள்.

    திருவிழாக்கள் :

    பங்குனி அன்று கொடியேற்றத்துடன் 11 நாட்கள் திருவிழா இங்கு வெகு விமரிசையாக நடைபெறுகிறது. ஆடி வெள்ளிகள், தை வெள்ளிகள், கிருத்திகை, பொங்கல், தமிழ் வருடப் பிறப்பு போன்ற நாட்களில் இறைவனுக்கும், இறைவிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடை பெறுகின்றன. ஐப்பசி மாத பவுர்ணமியில் இறைவனுக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. நிறைய பக்தர்கள் இதில் கலந்து கொள்கின்றனர்.

    சுமார் 700 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த ஆலயத்தில் தினசரி நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன. தலவிருட்ச வில்வம். ஆலயம் காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். நரசிம்மருக்கு அவருடைய பாவம் விலக அருள்பாலித்த இத்தலத்து இறைவனும் இறைவியும் தன்னை நாடும் பக்தர்களின் பாவத்தையும் களைவார் எனவும், பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர அருள்புரிவார் எனவும் நம்புவது நிஜமே.

    கரூர் மாவட்டம் திருச்சி-கரூர் நெடுஞ்சாலையில் குளித்தலையிலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது கருப்பத்தூர் என்ற இந்த தலம்.
    Next Story
    ×