search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சனி சிங்கனாப்பூர் சனீஸ்வரர் கோவில்
    X

    சனி சிங்கனாப்பூர் சனீஸ்வரர் கோவில்

    மகாராஷ்டிர மாநிலம், அகமது நகர் மாவட்டம், நய்வாசா வட்டத்தில் அமைந்துள்ளது சனி சிங்கனாப்பூர் கோவில். இதன் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    சனி சிங்கனாப்பூர்.. மகாராஷ்டிர மாநிலம், அகமது நகர் மாவட்டம், நய்வாசா வட்டத்தில் அமைந்துள்ள சிறு நகரம் தான் இது. இந்தப் பகுதியில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் பெய்த பெருமழை காரணமாக பனாஸ்னாலா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளத்தில் கனமான பலகை போன்ற ஒரு கல் மிதந்து வந்து, சிங்கனாப்பூரில் கரை ஒதுங்கியது.

    அது என்ன மாதிரியான பொருள் என்று அறியாத கிராம மக்கள் அதை ஒரு குச்சியால் குத்தியபோது, அதில் இருந்து ரத்தம் வழிந்ததைக் கண்டு அச்சமும், வியப்பும் அடைந்தனர். அன்று இரவு கிராம தலைவரின் கனவில் காட்சி கொடுத்த சனி பகவான், அந்த கிராமத்தில் குடியிருக்கப் போவதாகவும், வெள்ளத்தில் மிதந்து வந்த கல்லை, அங்கே வைத்து வழிபடும்படியும் கூறினார். மேலும் தன்னை வெட்ட வெளியில் வைக்கும்படியும், கட்டிடத்திற்குள் வைத்து அடைக்க வேண்டாம் என்றும் சொன்னதாக கூறப்படுகிறது.

    இதனால் கடந்த 300 ஆண்டுகளுக்கும் மேலாக வெட்ட வெளியில் தான் சனி பகவான் அருள்பாலித்து வருகிறார். இங்குள்ள சிவன் மற்றும் அனுமன் சிலைகளுக்கு முன்பு, சனி பகவான், ஐந்தரை அடி உயரத்தில் சுயம்பு வடிவில் கருங்கல்லில் அருள்பாலிக்கிறார். இவருக்கு மேற்கூரையோ, சுற்றுச்சுவரோ கிடையாது.

    சனிபகவானை வழிபட இக்கோவிலுக்கு ஒவ்வொரு நாளும் சராசரியாக 40,000 பக்தர்கள் வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது. அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் மூன்று லட்சம் பக்தர்கள் இக்கோவிலில் வழிபாட்டுக்காக கூடுகிறார்களாம். சனிக்கிழமையில் வரும் அமாவாசை நாளில், சனி பகவானுக்கு விசேஷமாக நல்லெண்ணெய், பூ மற்றும் கறுப்பு உளுந்து படைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.

    செல்லும் வழி :

    சீரடி நகரில் இருந்து 60 கி.மீ., தொலைவிலும், அகமது நகரில் இருந்து 35 கி.மீ. தொலைவிலும், அவுரங்காபாத்தில் இருந்து 84 கி.மீ. தொலைவிலும், பூனாவில் இருந்து 160 கி.மீ. தொலைவிலும், மும்பை நகரில் இருந்து 265 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது, சனி சிங்கனாப்பூர். அவுரங்காபாத் விமான நிலையம் 90 கி.மீ.தொலைவில் உள்ளது.
    Next Story
    ×