search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கோவில் தோற்றம். (உள்படம்) பகவதி அம்மன்
    X
    கோவில் தோற்றம். (உள்படம்) பகவதி அம்மன்

    கொற்றன்குளக்கரை பகவதி கோவில் - கேரளா

    கொல்லம் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது கொற்றன்குளக்கரை பகவதி கோவில். இந்த கோவில் வரலாற்றை இன்று அறிந்து கொள்ளலாம்.
    தங்கள் வேண்டுதலை நிறைவேற்றித் தந்த அம்மனுக்கு நன்றி செலுத்தும் விதமாக, ஆண் பக்தர்கள்.. பெண் வேடமிட்டுக் கோவிலைச் சுற்றி வலம் வந்து விளக்கேற்றி வழிபடும் தலமாகக் கேரளாவில் கொல்லம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் கொற்றன்குளக்கரை பகவதி கோவில் திகழ்கிறது.

    தல வரலாறு :

    ஆடு, மாடு மேய்க்கும் சிறுவர்களைத் தவிர, அந்தக் காட்டுப் பகுதிக்குள் வேறு யாரும் செல்வதில்லை. ஒரு நாள், மாடு மேய்க்கும் சிறுவர்கள் அந்தக் காட்டுப்பகுதிக்குள் கிடந்த தேங்காய் ஒன்றை எடுத்து, அங்கிருந்த கல் ஒன்றில் உடைக்க முயன்றனர். அப்போது, அந்தக் கல்லில் இருந்து ரத்தம் பொங்கி வழிந்தது.

    அதைக் கண்டு பயந்து போன சிறுவர்கள், ஊருக்குள் சென்று காட்டிற்குள் நடந்ததைச் சொன்னார்கள். சிறுவர்கள் சொன்ன இடத்திற்குச் சென்று பார்த்த ஊர்ப் பெரியவர்கள், அந்தக் கல்லில் இருந்து வழியும் ரத்தத்தை நிறுத்த முயற்சித்தனர். ஆனால், அது நிற்கவில்லை.

    இதையடுத்து ஊர்ப் பெரியவர்கள், அந்தப் பகுதியில் பிர பலமாக இருந்த ஜோதிடரை அழைத்துக் காரணம் கேட்டனர். ஜோதிடர் அங்கு நடந்தவைகளைக் கொண்டு கணித்து, அந்தக் கல்லில் பகவதி தேவி இருப்பதைத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, அங்கு பகவதி தேவிக்குக் கோவில் அமைக்கப்பட்டது.

    அடர்ந்த காட்டுக்குள் அமைக்கப்பட்ட அந்தக் கோவிலுக்குச் சென்று வழிபட, பெண்கள் உட்படப் பலரும் பயந்ததால், அக்கோவிலில் பெண்கள் விளக்கேற்றி வழிபட முடியாத நிலை இருந்தது. அதனால், அம்மனுக்குக் கோபமேற்பட்டுத் தங்களுக்குப் பாதிப்பு ஏதும் வந்துவிடக் கூடாது என்று பயந்த மாடு மேய்க்கும் சிறுவர்கள், பெண் வேடமிட்டு அந்தக் கோவிலை வலம் வந்து விளக்கேற்றி வழிபடத் தொடங்கினர்.

    அவர்கள் வழிபாட்டில் மகிழ்ந்த அம்மனும் அந்தச் சிறுவர்களின் வேண்டுதல்களை எல்லாம் நிறைவேற்றி வைத்தார் என்றும், அன்றில் இருந்து ஆண் பக்தர்கள், இந்த அம்மனுக்குப் பெண் வேடமிட்டு வந்து வழிபட்டு வேண்டியதைப் பெறலாம் என்கிற நம்பிக்கை ஏற்பட்டது என்றும் ஆலயத்தின் வரலாற்றைச் சொல்கின்றனர்.

    இன்னொரு கதை :

    பல நூறாண்டுகளுக்கு முன் இக்கோவில் குளத்தில் குளிப்பதற்குச் சென்ற சில சிறுவர்கள், விளையாட்டாக அங்கிருந்த பெரிய பாறை ஒன்றில் கற்களை வீசி எறிந் திருக்கிறார்கள். அப்போது, அந்தப் பாறையில் இருந்து ரத்தம் வழியத் தொடங்கியிருக் கிறது. அதைக் கண்டு பயந்து போன சிறுவர்கள் அங்கிருந்து ஓட முயன்றிருக்கின்றனர்.

    அவர்கள் முன்பு தோன்றிய பகவதி தேவி, அவர்கள் செய்த தவறுக்குத் தண்டனையாக மறுநாள் தன்னைப் பெண் வேடமிட்டு வந்து வழிபட வேண்டும் என்று சொல்லி மறைந்திருக் கிறார். மறுநாள் அச்சிறுவர்களும் அம்மன் சொன்னபடி பெண் வேடமிட்டு, அம்மனை வழிபட்டு இருக்கின்றனர். அம்மனும் அவர்கள் வேண்டியவைகளையெல்லாம் வழங்கியிருக்கிறார். அன்றிலிருந்து இந்த அம்மனுக்குப் பெண் வேடமிட்டு வழிபட்டால் வேண்டியதைப் பெற முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது என்று இன்னொரு கதையும் சொல்லப்படுகிறது.


    பெண் வேடத்தில் வழிபடும் ஆண்கள்

    கோவில் அமைப்பு:

    கேரள முறைக் கட்டுமானத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த ஆலயத்தில், பகவதி தேவி முதன்மை தெய்வமாக வணங்கப்படுகிறார். இக்கோவில் வளாகத்தில் மகாதேவர், மகாகணபதி, தர்மசாஸ்தா, யட்சி, மாடன், நாகராஜன் ஆகியோருக்கு தனித்தனிச் சன்னிதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

    இக்கோவிலில் காலை 5 மணி முதல் பகல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் தினசரி வழிபாடுகள் நடத்தப் பெறுகின்றன. அம்மன் வழிபாட்டுக்குரியதாகக் கருதப்படும் சில முக்கிய நாட்களின் போது வழிபாட்டு நேரம் அதிகரிக்கப்படுகிறது.

    இக்கோவிலில் வழிபடும் ஆண் பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறினால், சமயவிளக்குத் திருவிழாவின் போது, பெண் வேடமிட்டுக் கோவிலுக்கு வந்து விளக்கேற்றி வழிபட்டு நன்றி தெரிவிப்பதாக வேண்டிக் கொள்கின்றனர். சிலர் சமயவிளக்குத் திருநாட்களில் பெண் வேடமிட்டு வந்து வேண்டி வழிபடுவதும் உண்டு.

    குருத்தோலைப் பந்தல் :

    இக்கோவிலின் பழங்கால வரலாற்றையும், சிறப்பையும் நினைவுபடுத்தும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் குருத் தோலைப் பந்தல் விழா நடத்தப்படுகிறது. இந்த விழாவின் போது, ஆலயத்தின் பழங்காலக் கோவில் அமைப்பின் மாதிரி வடிவம் குருத்தோலைகளால் உருவாக்கப்பட்டு, பக்தர்களின் பார்வைக்காக வைக்கப்படுகிறது. இக்குருத்தோலைப் பந்தல் விழாவின் போது, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று இறைவியை வழிபட்டுச் செல்கின்றனர். இந்த ஆலயத்தில், கேரளாவில் அனைத்து அம்மன் கோவில்களிலும் நடத்தப்படும் ‘ஜீவதா எழுநல்லது’ எனும் விழாவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

    சமய விளக்குத் திருவிழா :

    இக்கோவிலில் ஆண்டுதோறும் மலையாள நாட்காட்டியின் படி மீனம் (தமிழ் பங்குனி) மாதம் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் ‘சமயவிளக்கு’ எனும் திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. மலையாள மொழியில் ‘சமயம்’ என்பதற்கு ‘ஒப்பனை’ என்று பொருள். ஆண்கள்... பெண்களைப் போன்று ஒப்பனை செய்து கொண்டு விளக்கேற்றி வழிபடும் திருவிழா என்பதால், அது ‘சமயவிளக்குத் திருவிழா’ என்று அழைக்கப்படுகிறது.

    இவ்விழா நாட்களில் ஆண்டுக்கு ஐந்தாயிரத்துக்கும் அதிகமான ஆண்கள், பெண் போன்று வேடமிட்டுக் கோவிலைச் சுற்றி வந்து விளக்கேற்றி வழிபடுவதைக் காணமுடியும். இந்நாட்களில் ஆண்களுக்குப் பெண் போன்று, அவர்களது வயதுக்கேற்றபடி பல ஒப்பனைக் கலைஞர்கள் பணம் பெற்றுக் கொண்டு ஒப்பனை செய்து விடுகின்றனர்.

    அமைவிடம் :

    கேரளாவில் கொல்லம் நகரிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் இத்தலத்திற்குக் கொல்லம், கருநாகப்பள்ளி ஆகிய இடங்களிலிருந்து அதிகமான பேருந்து வசதிகள் இருக்கின்றன.
    Next Story
    ×