search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஆதிகேசவப் பெருமாள்
    X
    ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஆதிகேசவப் பெருமாள்

    பந்த நல்லூர் ஆதிகேசவ பெருமாள் கோவில்

    பல நூற்றாண்டுகளைக் கடந்த பந்த நல்லூர் ஆதிகேசவப் பெருமாள் ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    பல நூற்றாண்டுகளைக் கடந்த பந்த நல்லூர் ஆதிகேசவப் பெருமாள் ஆலயத்திற்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. பசுபதீஸ்வரர் அருள்புரியும் சிவாலயமும், இந்த பெருமாள் ஆலயமும் அடுத்தடுத்து அமைந்திருப்பது அரியும், சிவனும் ஒன்றே என்ற சொற்றொடரை மெய்பிக்கும் சான்று என்றே கூறலாம்.

    ஆலய அமைப்பு :

    இந்த ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. மொட்டைக் கோபுரத்தைக் கடந்ததும் விசாலமான பிரகாரம். பலிபீடம், கொடிமரத்தை அடுத்து கருடாழ்வார் தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார். அடுத்துள்ள மகாமண்டபத்தின் நுழைவாசலின் இருபுறமும் துவாரபாலகர்கள் நின்று கொண்டிருக்க, மகாமண்டபத்தின் உள்ளே நுழைந்தால் வலது புறம் ஆழ்வார்களின் திருமேனிகள் காணப்படுகின்றன. அதனை அடுத்து ‘வெங்கடாஜலபதி, இரு தேவிகளுடன் தனிச் சன்னிதியில் சேவை சாதிக்கிறார். மகாமண்டபத்தின் வடகிழக்கு மூலையில் ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார்.

    பெருமாள் - தாயார் :

    அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள கருவறையில் ஆதிகேசவப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் சேவை சாதிக்கும் அழகைக் காண கண்கோடி வேண்டும். பெருமான் அபய ஹஸ்த முத்திரைகளுடன் நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார். இறைவனின் சன்னிதியின் தென்புறம் பரிமள வள்ளித் தாயாரின் தனி ஆலயம் உள்ளது. ஆலயத்தின் நுழைவுவாசலைக் கடந்தால் மகாமண்டபமும், அதன் முன் நுழைவு வாசலில் ஜெய, விஜய துவார பாலகிகளின் திருமேனிகளும் உள்ளன. கருவறையில் தாயார் பீடத்தில் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். இங்கு தாயாருக்கு நான்கு கரங்கள். மேலே உள்ள இரு கரங்களில் தாமரை மலரையும், கீழே உள்ள இரு கரங்களில் அபய, ஹஸ்த முத்திரைகளையும் தாங்கி அருள்பாலிக்கிறார்.

    தல வரலாறு:

    இந்த ஆலயத்தில் அருள்புரியும் ஆதிகேசவப் பெருமாளுக்கு ஒரு தனிப்பட்ட தல வரலாறு உண்டு. அது என்ன?

    அன்னை பார்வதிக்கு பந்து விளையாட வேண்டுமென ஆசை. அதை சிவனிடம் கூறினாள். சிவனோ, நான்கு வேதங்களை பந்தாக்கி அம்மையிடம் தந்தார். அம்மையோ தன் தோழியர்களுடன் ஒரு நாள் மாலை வேளையில் பந்தாடத் தொடங்கினாள். சூரியன் அஸ்தமன நேரம் வந்ததும், விளையாட்டிற்கு இடையூறு வந்துவிடுமோ என்றெண்ணிய சூரியன் மறையாது நீண்ட நேரம் நிலைத்திருக்க, பகல்பொழுது நீண்டுக் கொண்டே போயிற்று.

    உலகங்கள் சோர்ந்தன. உலக இயக்கத்திற்கு நேர்ந்த தடையை விலக்கச் சென்ற நாரதரையும், பின்பு நேரில் சென்ற சிவபெருமானையும் அன்னையார் கவனிக்கவில்லை. தன்னை கவனியாது இருந்த பார்வதி மேல் சினங்கொண்டார் சிவன். எனவே கோபம் கொண்டு பந்தை அவர் எட்டி உதைக்க, பந்து மண்ணுலகில் வந்து விழுந்தது. தன் தவறை உணர்ந்து பார்வதி சிவனிடம் மன்னிப்பு கேட்க, இறைவனோ தேவியை பசுவாகக் கடவது எனச் சபித்தார்.

    இறைவனின் ஆணைப்படி உமை பசு உருவம் கொண்டு, தமையன் கேசவன் மாட்டிடையனாகப் பின் தொடர பூவுலகம் வந்தாள். பந்து வந்து வீழ்ந்த கொன்றைக் காட்டில், சரக்கொன்றை மரநிழலில் சுயம்பு லிங்கமாக இருந்த புற்றின்மீது பாலைச் சொரிந்து வழிபட்டாள்.

    கேசவனும், பசு உருவில் உமையும் கண்ணுவ முனிவர் ஆசிரமத்தில் இருந்து வந்தனர். முனிவரின் பூஜைக்கு பால் குறைந்து போக, சுயம்பு மூர்த்தியின் மீது பசு பாலைச் சொரிவதைக் கண்ட கேசவன் பசுவைக் கோலால் அடிக்க, பசு துள்ளியதில் ஒரு காலின் குளம்பு புற்றின் மீது பட்டு தேவி தன் உருவம் அடைந்தாள். கேசவன் வடிவம் நீங்கி ஆதிகேசவப் பெருமாள் ஆகி தென்புறம் திருக்கோவில் கொண்டார்.

    அன்னை இறைவனை அடைய வடக்கு நோக்கி தவமிருந்தாள். இறைவனும் தவத்தினை ஏற்றார். இந்த பெருமாள் ஆலயம் ஒரு தோஷ நிவர்த்தி தலமாகவும் விளங்குகிறது.

    ஆராதனைகள் :

    தோஷ நிவர்த்தி பெற வேண்டிக் கொள்பவர்கள் பிரசாதம் படைத்து அதை பக்தர்களுக்கு புரசை இலையில் வினியோகம் செய்கின்றனர். இதன் மூலம் தங்கள் தோஷம் விலகுவதாக அவர்கள் நம்புகின்றனர்.

    புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு புளிசாதம், சர்க்கரை பொங்கல், வடை முதலியன நைவேத்தியம் செய்கின்றனர்.

    ைவகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி, மாத பிறப்புகளில் பெருமாளுக்கும் தாயாருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. அன்று அன்னதானமும் நடைபெறும். ஏராளமானவர்கள் இதில் கலந்து கொள்கின்றனர்.

    மாதந்தோறும் பெருமாளுக்கு திருவோண நட்சத்திரத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. தினசரி இங்கு பெருமாளுக்கு சாயரட்சை பூஜையில் தோசை நைவேத்தியம் செய்கின்றனர்.

    இங்கு அருள்பாலிக்கும் ஆஞ்சநேயரிடம் திருமணமாக வேண்டி வேண்டிக் கொள்ளும் கன்னிப் பெண்கள் தங்கள் பிரார்த்தனை பலித்ததும் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சூட்டி, வாைழப்பழத்தை விளக்காக்கி அதில் தீபமேற்றி தங்கள் நன்றிக் கடனை செலுத்துகின்றனர்.

    தினசரி மூன்று கால பூஜை நடக்கும் இந்த ஆலயம், காலை 7.30 மணி முதல் 9 மணி வரையிலும், பகல் 11 மணி முதல் 12 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    தவமிருந்து சிவனை மணந்தாள் பார்வதி. தவமிருந்த பார்வதிக்கு துணையாய் உடன் இருந்து அன்னையைக் காத்தார் பெருமாள். இத்தலம் சென்றால் இருவரையும் ஒரு சேர தரிசிக்கலாம்.

    தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் மணல்மேடு பேருந்து வழித்தடத்தில் திருப்பனந்தாளில் இருந்து 9 கி.மீ. தொலைவில் உள்ளது பந்த நல்லூர் என்ற இத்தலம்.
    Next Story
    ×