search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பெருநிலை வாழ்வருளும் திருநிலை பெரியாண்டவர் கோவில்
    X

    பெருநிலை வாழ்வருளும் திருநிலை பெரியாண்டவர் கோவில்

    பக்தர்களே அர்ச்சனை ஆராதனை செய்யும் ஆலயம் என்ற பெருமைகள் கொண்ட தலமாகத் திகழ்வது, காஞ்சீபுரம் திருநிலை பெரியாண்டவர் ஆலயம்.
    சிவன்- சக்தி பாதங்கள் பதிந்த தலம், 21 சிவ கணங்கள் சாப விமோசனம் பெற்ற ஊர், வானமே கூரையாய் வாழும் இறைவன், பக்தர்களே அர்ச்சனை ஆராதனை செய்யும் ஆலயம், மனித வடிவ நந்தி பகவான் அருளும் கோவில் என பல்வேறு பெருமைகள் கொண்ட தலமாகத் திகழ்வது, காஞ்சீபுரம் மாவட்டம், திருப்போரூர் வட்டத்தில் உள்ள திருநிலை பெரியாண்டவர் ஆலயம்.

    புராண வரலாறு :

    சிவபெருமானின் திருவுளப்படி மகதநாட்டு மன்னன் விளாசநாதன் - தேவகி தம்பதியினருக்குச் செல்வ மகளாகப் பிறந்தாள், உமாதேவி. அக்குழந்தைக்கு பூங்குழலி எனப் பெயரிடப்பட்டது. நாரதரின் அறிவுரைப்படி, பூங்குழலி இறைவனை மணம் புரிய அவ்வப்போது, தியானம் செய்து வந்தாள்.

    இந்நிலையில், சடாமுடி முனிவரின் சாபத்தால் வேதாளமாக மாறிய இந்திரன், மகதநாட்டு மக்களைத் துன்புறுத்தியும், கொன்று தின்றும் அச்சத்தை ஏற்படுத்தி வந்தான். சிவனடியாரான மகத நாட்டு மன்னனால் அவனை ஒன்றும் செய்ய இயலவில்லை. இதைக் கண்டு வருந்திய பூங்குழலி வேதாளத்துடன் போர் புரிந்தாள். ஆனால், அவளாலும் வெல்ல முடியாமல் மூர்ச்சையானாள்.

    அப்போது வேடன் வடிவில் வந்த சிவபெருமான், மகதநாட்டு மன்னனின் அனுமதியோடு வேதாளத்தை அடக்கி அழித்தார். வேதாளமாய் இருந்த இந்திரனின் சாபம் நீங்கியது. அதற்குப் பரிசாக மன்னன் வாக்களித்தபடி, பூங்குழலியை மணந்தார். இத்திருமண வைபவத்தை திருமால், லட்சுமி, பிரம்மா உள்ளிட்ட தேவர்களும், மன்னனும், நாட்டு மக்களும் வாழ்த்தி மகிழ்ந்தனர்.

    இதற்கிடையே சுந்தரபத்திரன் என்ற அசுரன், தான் புரிந்த கடுந்தவத்தால், சிவன்- பார்வதி இணைந்த சக்தியைத் தவிர, வேறு எந்த சக்தியாலும் அழிக்க முடியாத வரத்தினைப் பெற்றான். அதன் விளைவாக இந்திரலோகம் அவன் வசமானது. சிவபெருமான் பூமிக்குச் சென்ற நிலையில், கயிலாயத்தையும், கைப்பற்றத் துணிந்தான். அவன் பெற்ற வரம் அவன் கண்களை மறைத்தன. அதன்படியே இறைவனும் இறைவியும் பூமியில் பிறந்து, ஓருருவாகி சுந்தர பத்திரனை வதம் செய்தனர் என்கிறது தல புராணம்.

    மற்றொரு தலபுராணம் :

    முன் காலத்தில் தன் மனைவியோடு, திருக்கழுக்குன்றம் வந்தார் ஒரு சிவனடியார். அங்கு வேதகிரீஸ்வரரிடம், தனக்கு பிழைக்க ஒரு வழிகாட்டும்படி வேண்டி நின்றார். அன்று இரவு அவர் கனவில் வந்த இறைவன், ‘விடிந்த பிறகு உங்கள் முன் தோன்றும் பன்றியைப் பின்தொடருங்கள் வழி கிடைக்கும்’ எனக் கூறி மறைந்தார். அதன்படியே ஒளிவீசும் பன்றி அங்கே தோன்றியது. அதனைப் பின்தொடர்ந்து வடகிழக்கே சுமார் 5 கிலோமீட்டர் தூரம் சென்ற போது, ஓரிடத்தில் பன்றி, ஜோதி வடிவாய் அசையாமல் நின்று மறைந்தது. இது இறைவன் செயலே என முடிவு செய்து அதே பகுதியில் தங்கி, விவசாயம் செய்து பிழைத்து வந்தனர். அவர் களின் வறுமையும் நீங்கியது.

    குழந்தைப் பேறு வேண்டி மீண்டும் வணங்கி நின்றனர். மீண்டும் கனவில் வந்த இறைவன், ‘ஜோதியாக மறைந்த இடத்தில் நான் மறைந்திருக்கிறேன். அங்கே என்னை பூஜை செய்து வா, உன் வேண்டுதல் நிறைவேறும்’ என்று கூறி மறைந்தார்.

    மறுநாள் அங்கு சென்று அகழ்ந்து பார்த்த போது, அங்கே ஒளி வீசும் சுயம்புலிங்கத் திருமேனியைக் கண்டு மகிழ்ந்தனர். அதன்பின் தொடர்ந்து பூஜைகள் செய்து வந்தனர். இதையறிந்த ஊர்மக்களும் வழிபடத் தொடங்கினர். அவர்களுக்குக் குழந்தைப்பேறும் கிடைத்தது. இன்றும் அந்தச் சந்ததியினரே பூஜை செய்து வருவதாகத் தலபுராணம் கூறுகிறது. அது முதல் குழந்தைப் பேறு தரும் ஆண்டவனாகப் பெரியாண்டவர் திகழ்ந்து வருகின்றார்.



    ஆலய அமைப்பு :

    ஆலயம் ஏரிகளுக்கும், குளங்களுக்கும் நடுவே பசுமையான சூழலில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கிழக்கே மூன்று நிலை கோபுரம் வரவேற்க, ருத்ராட்ச மரத்தின் அருகே மனித வடிவில், சிவபெருமான் தலையில் கங்கையைத் தாங்கி, எழிலோடு அமர்ந்திருக்கிறார். இவருக்குப் பன்னீரால் அபிஷேகம் செய்து, அந்த நீரை வீட்டிற்குக் கொண்டு சென்றால், வீட்டில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் நீங்கி, அமைதி தவழும் என்பது நம்பிக்கை.

    ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே நுழைந்ததும், விநாயகர், முருகப்பெருமான், பதினாறுகால் மண்டபம் உள்ளன. மண்டபத்தில் மனித வடிவிலான சிவபெருமான், அவரை வணங்கும் அங்காளபரமேஸ்வரி, பட்டினத்தார், திருமூலர், வள்ளலார் சுதைச் சிற்பங்களாகக் காட்சியளிக்கின்றனர். அருகே 21 சிவகணங்களும், நடுவே பெரியாண்டவர் வடிவமும் உள்ளன. இங்கே கொடிமரத்திற்குப் பதிலாக திருநீறை உடலெல்லாம் பூசிய திருநீற்று விநாயகர் காட்சி தருகிறார். இவரின் பின்புறம் மனித வடிவிலான நந்திதேவர் காட்சி தருகிறார்.

    இரண்டாம் நிலையில் சித்திபுத்தி விநாயகர், வள்ளி - தெய்வானை சமேத முருகப்பெருமான் அமர்ந்துள்ளார். மூன்றாம் நிலையில் சுயம்பு லிங்கத்திற்கு பின்புறம் பரம சிவன், அன்னை பார்வதி, அங்காள பரமேஸ்வரி, தட்சிணாமூர்த்தி, பைரவர், அர்த்தநாரீஸ்வரர் ஆகியோர் காட்சி தருகின்றனர்.

    மூன்றாம் நிலையில் வானமே கூரையாக அருளாட்சி செய்து வரும் பெரியாண்டவர், லிங்கத் திருமேனியராக எழிலுடன் காட்சி தருகிறார். இவரின் வலதுபுறம் சுவாமியின் திருப்பாதங்களும், இடதுபுறம் சக்தியின் திருப்பாதங்களும் காட்சியளிக்கின்றன. பெரியாண்டவரை வணங்க வரும் அடியார் அனைவரும், இவற்றுக்கு தங்கள் விருப்பம் போல் அபிஷேக, தீபாராதனை செய்து வணங்கிச் செல்கின்றனர். தலமரம் வில்வம். தல தீர்த்தம் சித்தாமிர்த தீர்த்தம் என்னும் குளம். இது ஆலயத்தின் வடக்கில் அமைந்துள்ளது.

    கார்த்திகை தீபம், மகாசிவராத்திரி ஆகியவை சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. ஞாயிற்றுக்கிழமைகளில் அடியவர்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். அன்றைய தினம் அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக் கும்.

    அமைவிடம் :

    காஞ்சீபுரம் மாவட்டம், திருப்போரூர் வட்டத்தில், திருக் கழுக்குன்றம், ஒரகடம் அருகே அமைந்த ஊராக திருநிலை விளங்குகின்றது. குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே திருக் கழுக்குன்றத்தில் இருந்து இங்கு வர பேருந்து வசதி உள்ளது. என்றாலும், திருக்கழுக்குன்றத்தில் இருந்து ஆட்டோ வசதி உள்ளது.
    Next Story
    ×