search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பகை நீக்கும் பட நிலம் பரப்பிரம்மம் கோவில்
    X

    பகை நீக்கும் பட நிலம் பரப்பிரம்மம் கோவில்

    குடும்பப் பகை, அரசியல் பகை என்று அனைத்துப் பகைகளும் நீங்கும் கோவிலாகக் கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தில் இருக்கும் பட நிலம் பரப்பிரம்மம் கோவில் அமைந்திருக்கிறது.
    குடும்பப் பகை, அரசியல் பகை என்று அனைத்துப் பகைகளும் நீங்கி அவர்களுக்கிடையில் நட்பைத் தொடரச் செய்யும் கோவிலாகக் கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தில் இருக்கும் பட நிலம் பரப்பிரம்மம் கோவில் அமைந்திருக்கிறது.

    தல வரலாறு :

    படநிலம் பரப்பிரம்மம் கோவில், தானாகத் தோன்றிய கோவில் என்கின்றனர். இக்கோவில் தோற்றத்திற்கான தல வரலாறு என்ன? எப்படி இங்கு வழிபாடுகள் தொடங்கின? என்பதற்கான வரலாறு எதுவுமில்லை. முந்தைய காலத்தில் இக்கோவிலைச் சுற்றியிருக்கும் பல கிராமப்பகுதிகளை உள்ளடக்கிய நூறநாடு பகுதியின் நிர்வாக மையமாகப் படநிலம் இருந்திருக்கிறது.

    நூறநாடு பகுதி யாருக்குச் சொந்தம்? என்பதில் கேரளாவின் வடபகுதியை ஆண்ட அரசருக்கும், தென்பகுதியை ஆண்ட அரசருக்கும் இடையே எல்லைப் பிரச்சினை இருந்தது. இரு படையினருக்கும் அடிக்கடி போர் நடைபெறும் இடம் என்பதால் இந்தப் பகுதி படநிலம் (படைநிலம் அல்லது போர் நிலம்) எனப் பெயர் பெற்றுள்ளது.

    நூறநாடு பகுதியில் இருந்த 22 கிராமப் பகுதிகளின் தலைவர்களில் நூறு கோடி கருப்பன்கள் மற்றும் கடக்கால் கருப்பன்கள் உள்ளிட்ட சிலர் தென்பகுதி அரசருக்கும், வேட்டதாசன் மற்றும் வேட்டடிக்கல் கருப்பன்கள் உள்ளிட்ட சிலர் வட பகுதி அரசருக்கும் ஆதரவாக இருந்து வந்தனர்.

    இரண்டு பகுதி அரசர்களுக்கிடையில் நடைபெற்றதாகக் கருதப்படும் இப்போரில் இருபுறமும் பல வீரர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் இக்கோவிலுக்கு அருகிலுள்ள சிரா எனும் பகுதியில் புதைக்கப்பட்டனர். இரண்டு பிரிவுகளுக்குமிடையில் இங்கு அடிக்கடி நடைபெற்ற போரால் உயிரிழப்புகள் மட்டுமின்றி, விவசாயப்பணிகளும், பிற பணிகளும் செய்ய முடியாமல் அதிகமான பாதிப்புகள் ஏற்பட்டன.

    இதனால் ஆலயம் மற்றும் கிராமப்பகுதிகளில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. அங்கிருந்த பொதுமக்கள் தேவையான உணவுப் பொருட்கள் கிடைக்காமல் தவித்தனர். இந்தப் போரை எப்படியாவது முடிவுக்குக் கொண்டு வர நினைத்த அவர்கள், இரண்டு அரசருக்கும் நெருக்கமாக இருந்த பாழூர் பனமன தம்பிரான் என்பவரை அணுகித் தங்களது கோரிக்கையை வைத்தனர்.

    அவரும் இரு நாட்டு அரசர்களையும் சந்தித்துப் போரைக் கைவிடும்படி வேண்டினார். ஆனால், இரு நாட்டு அரசர்களும் அவரது வேண்டுகோளை நிராகரித்து விட்டனர். அதனால் மன வருத்தமடைந்த அவர், இரண்டு அரசர்களும் போர் நிறுத்தம் செய்திட வேண்டி தற்போது ஆலயம் இருக்கும் இடத்தின் கிழக்குப் பகுதியில் சாகும் வரையிலான உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.

    இரண்டு அரசர்களும் அவரது உண்ணாவிரதத்தை முதலில் கண்டு கொள்ளவில்லை. அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. அவர் இறந்து போய்விட்டால், தங்களுக்கு சாபம் வந்து சேர்ந்து விடுமோ என்று நினைத்துப் பயந்த இரண்டு அரசர்களும் அவர் முன்னிலையில் போரைக் கைவிடுவதாக ஒப்புக்கொண்டனர். அதன் பிறகு, அங்கிருந்த பரப்பிரம்மம் கோவிலில், போர் ஆயுதங்களைப் போட்டுப் போர் நிறுத்தம் செய்தனர் என்கிறது ஒரு வரலாறு.

    கோவில் அமைப்பு :

    ஆலமரம் ஒன்றின் கீழ் அமைந்திருக்கும் இக்கோவிலில், தானாகத் தோன்றிய ஓம் எனும் வரிவடிவச் சிலையே இறைவனாக இருக்கிறது. இக்கோவிலுக்குச் சுற்றுச்சுவர்கள், கூரை, கதவுகள் என்று எதுவுமில்லை. அதனால், பிற கோவில்களில் இருப்பது போன்ற நடை திறப்பு, நடை அடைப்பு செயல்பாடுகள் இங்கு இல்லை.

    இங்குள்ள இறைவன், பரப்பிரம்மமான சிவபெருமானாகவே நினைத்து வழிபடப்படுகிறார். இக்கோவிலில் தினசரி அதிகாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை வழிபாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆலயத்தில் கேரளக் கோவில் களில் தரும் சந்தனக் குழைவு தரப்படுவதில்லை, திருநீறு மட்டுமே வழங்கப்படு கிறது.



    சிறப்பு விழாக்கள் :

    இக்கோவிலில் மகா சிவராத்திரி விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் காலையில் சிவபெருமானின் மகனாகக் கருதப்படும் சுப்பிர மணியக் கடவுளுக்கான காவடியாட்டம் எனும் சிறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இந் நிகழ்வுக்காகக் கோவிலைச் சுற்றிலும் உள்ள ஊர்களிலிருந்து பல காவடிகள் கொண்டு வரப்படுகின்றன. இந்தக் காவடியாட்டத்தைக் காணப் பல்லாயிரக் கணக்கான மக்கள் வருகின்றனர்.

    அன்றைய தினம் மாலையில் கெட்டு உத்சவம் எனும் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று நடத்தப்படுகிறது. இறைவன் சிவபெருமானின் வாகனமாகக் கருதப்படும் நந்தியின் உருவங்களைச், சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் 50 அடி உயரம் வரை உருவாக்கி, அதை மரத்தேர்களில் வைத்துக் கோவிலுக்குக் கொண்டு வருகின்றனர். மிகவும் வண்ணமயமாக நடைபெறும் இவ்விழாவினைக் காண கேரளாவின் பல மாவட்டங்களில் இருந்தும் மக்கள் வந்து செல்கின்றனர்.

    இங்கு மகா சிவராத்திரி தவிர, விருச்சிக மகோத்சவம், இருபத்தியெட்டாம் ஓணம், சப்தகாயஜனம் எனும் விழாக்களும் சிறப்பு விழாக்களாகக் கொண்டாடப்படுகின்றன.

    இக்கோவிலில் வழிபடுபவர்களுக்குப் பகை நீங்கி நட்பு தொடரும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. மேலும், இங்கு திருமணம் செய்து கொள்ளும் தம்பதியர்கள் கருத்து வேறுபாடுகளின்றி மன மகிழ்வோடு நீண்டகாலம் வாழ்வர் எனும் நம்பிக்கையும் உள்ளது. இதனால், இக்கோவிலில் அதிக அளவில் திருமணங்கள் நடைபெறுகின்றன. கேரளக் கோவில்களிலேயே இந்த ஆலயத்தில்தான் மிக அதிகமான திருமணங்கள் நடைபெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    பரப்பிரம்மம் :

    அண்டத்தின் மூலக் காரணமே பரப்பிரம்மம் தான். ஆகாயம், வாயு, அக்னி, நிலம், நீர் எல்லாமே இதிலிருந்து வந்தவையே என்கிறது அக்னி புராணம். பரப் பிரம்மத்தைக் ‘கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்’ என்பர். பரப்பிரம்மம் காலம், அண்டங்களைக் கடந்தது. ஸத் (உண்மை), சித் (அறிவு), ஆனந்தம் ஆகிய மூன்றுமே பரப்பிரம்மத்தின் தன்மைகள் என்று ரிக் வேதம் கூறுகிறது.

    இறைவன் படைக்கும் முன்பாக இந்தப் பிரபஞ்சம் பெயர், உருவம் இல்லாமல், சுத்த வெளியாய், நிர்க்குணமாய்ச் சின்மாத்திரப் பரப்பிரம்மமாக இருந்தது. மாயாசக்தி தத்துவக் குணத்தை முதன்மையாக விளக்கும் அதில், பரப்பிரம்மம் பிரதி பலிப்பதனால் தோன்றிய பிரதி பிம்பமே ஈசுவரன் எனப்படுகிறது. இந்த ஈசுவரன் அந்த மாயையை வசப்படுத்திக் கொண்டு, பிரம்மா, விஷ்ணு, உருத்திர வடிவங்களாக நின்று, உலகங்கள் அனைத்தையும் படைத்தல், காத்தல், அழித்தல் எனும் முத்தொழில்களைக் கொண்டு வழிநடத்தி வருகிறான்.

    மாயையினால் உண்டான பிரபஞ்சமும், மாயா சரீரமும் தோன்றி மறைந்து, ஜீவன்களை மீண்டும் பிறப்பு இறப்புகளுக்குள் கொண்டு வரும். முடிவில் எந்தப் பரப்பிரம்மத்திலிருந்து தோன்றியதோ, அந்தப் பரப்பிரம்மத்திலேயே ஒன்றாகக் கலந்துவிடும் என்று சித்தர் தத்துவம் தெரிவிக்கிறது.

    அமைவிடம் :

    கேரள மாநிலம் காயங்குளத்தில் இருந்து எடப்பன், பண்டாளம் வழியாக பத்தினம்திட்டா செல்லும் பேருந்து வழித்தடத்தில் படநிலம் அமைந் திருக்கிறது. காயங்குளத்தில் இருந்து 17 கிலோமீட்டர் தொலைவிலும், பத்தனம்திட்டாவில் இருந்து 26 கிலோமீட்டர் தொலைவிலும் இருக்கும் படநிலம் ஊருக்குச் செல்ல, இரு நகரங்களில் இருந்தும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
    Next Story
    ×