search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    குழந்தைப் பேறு அருளும் லட்சுமணர் கோவில் - கேரளா
    X

    குழந்தைப் பேறு அருளும் லட்சுமணர் கோவில் - கேரளா

    கேரளாவில் உள்ள லட்சுமணர் ஆலயத்தில் குழந்தைப் பேறு இல்லாதவர்கள் திருவோண பூஜை செய்து வழிபட்டால், அவர்களுக்கு விரைவில் குழந்தைப்பேறு கிடைக்கும் என்கின்றனர்.
    கேரளாவில் நாலம்பலம் என்று அழைக்கப்படும் ராம சகோதரர்களுக்கான நான்கு கோவில்களில், திருமூழிக்குளம் என்ற இடத்தில் அமைந்திருக்கும் லட்சுமணர் கோவில், மூன்றாவது தலமாகும். இந்த ஆலயத்தில் குழந்தைப் பேறு இல்லாதவர்கள் திருவோண பூஜை செய்து வழிபட்டால், அவர்களுக்கு விரைவில் குழந்தைப்பேறு கிடைக்கும் என்கின்றனர்.

    கோவில் அமைப்பு :

    திருமூழிக்குளத்தில் இருக்கும் லட்சுமணர் கோவில், சாலக்குடி ஆற்றின் கீழ் கரையில் அமைந்துள்ளது. இக்கோவிலின் கருவறை வட்ட வடிவிலும், அதன் மேற்கூரை இரண்டடுக்கு கூம்பு வடிவில், தாமிரத்தகடு கொண்டு மூடப்பட்டும் அழகாகக் காட்சியளிக்கிறது.

    இங்குள்ள லட்சுமணப்பெருமாள் நான்கு கரங்களுடன், வலதுபுறம் மேற்கரத்தில் சங்கு, கீழ் கரத்தில் கதை, இடதுபுறம் மேற்கரத்தில் சக்கரம், கீழ் கரத்தில் தாமரை மலர் ஆகியவைகளைக் கொண்டு, கிழக்கு நோக்கி நின்ற நிலையில் விஷ்ணுவாகவே காட்சி தருகிறார்.

    இத்தல தாயார் பெயர் மதுரவேணி நாச்சியார் என்பதாகும்.

    கோவில் வளாகத்தில் கணபதி, சாஸ்தா, சிவபெருமான் ஆகியோருக்குத் தனிச் சன்னிதிகள் இருக்கின்றன. மேலும் கோவில் வளாகத்தில், பஞ்சலோகத்திலான பகவதி, பஞ்சலோகத்தாலான கோசால கிருஷ்ணன் சிலைகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன.

    கோவில் உட்புறச் சுவர்களில் ராமாயணத்தைச் சொல்லும் அழகிய ஓவியங்கள் வரையப்பட்டிருக்கின்றன.

    லட்சுமணப் பெருமாள் :


    இத்தல இறைவன் லட்சுமணப்பெருமாள், திருமூழிக்குளத்தான், அப்பன், ஸூக்திநாதன் போன்ற பெயர்களால் அழைக்கப்படுகிறார். இவர் லட்சுமணப்பெருமாள் என அழைக்கப்படுவதற்கு காரணமாக ஒரு வரலாற்றுக் கதையும் சொல்லப்படுகிறது.

    கைகேயி தசரதனிடம், ‘ராமன் காட்டுக்குச் செல்ல வேண்டும், பரதன் அரசாள வேண்டும்’ என்று இரண்டு வரங்களைக் கேட்டதால், ராமன் காட்டுக்குச் செல்ல வேண்டியதாயிற்று.

    ராமன் காட்டுக்குச் சென்ற வருத்தத்தில் சில நாட்களிலேயே தசரதன் இறந்து போனார். அதன் பிறகு, தற்செயலாக அயோத்தி திரும்பிய பரதன், தனது விருப்பத்தைக் கேட்காமல் தாய் கேட்ட வரங்களையும், அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் நினைத்து வருந்தினான்.

    பின்னர் அவன், காட்டுக்குச் சென்ற ராமனைத் திரும்பவும் அயோத்திக்கு அழைத்து வரவேண்டும் என நினைத்துக் காட்டுக்குள் சென்றான்.

    பரதன் காட்டுக்குள் வரும் செய்தி அறிந்த லட்சுமணன், ராமனைக் காட்டுக்குள் அனுப்பிவிட்டு, தான் அரசனான செய்தியைச் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்வதற்காகக் காட்டுக்குள் வருகிறானா? இல்லை, ராமனைக் கொல்வதற்காகப் படைபலத்துடன் காட்டுக்குள் வருகிறானா? என்று அவனாக ஏதேதோ நினைத்துக் கோபமடைந்தான்.

    பரதனைத் தவறாக நினைத்த லட்சுமணன், அவனுடன் சண்டைக்குப் போனான். ராமன், லட்சுமணனை தடுத்து நிறுத்தினான். காட்டுக்குள்ளிருக்கும் ராமனை மீண்டும் அயோத்திக்கு அழைத்துச் சென்று அரசனாக்க வேண்டும் என்று நினைத்து வந்த பரதன், ராமன் நாடு திரும்ப மறுக்கவே, ராமனின் காலணிகளைப் பெற்றுச் சென்று, அந்தக் காலணிகளைச் சிம்மாசனத்தில் வைத்து, நந்திகிராமத்தில் தங்கி ராமனின் பெயரிலேயே பரதன் ஆட்சி செய்தான்.

    பரதனைத் தவறாக நினைத்ததை எண்ணி வருந்திய லட்சுமணன் அந்த மனக்குறையுடனேயே இருந்தான். இந்நிலையில், ஒருநாள் இத்தலத்திற்கு பரதனும் லட்சுமணனும் ஒன்றாகச் சேர்ந்து வந்திருந்தனர். அப்போது, அங்கிருந்த அரித முனிவர் லட்சுமணனின் மனதிலிருக்கும் குறையை வெளிப்படுத்தினார்.

    அதைக் கேட்ட லட்சுமணன், அங்கிருந்த பரதனின் காலில் விழுந்து மன்னிப்பு வேண்டினான். ஆனால், பரதன், ‘தம்பி, நீ காட்டிற்குள் இருந்த போது அண்ணன் ராமனைக் கண் போன்று காத்திருந்தவன். அந்நிலையில் என் மேல் நீ கோபப்பட்டதில் எந்தத் தவறும் இல்லை, இதற்காக நீ எந்தக் குற்ற உணர்வும் கொள்ள வேண்டியதில்லை’ என்றான்.

    இருப்பினும், லட்சுமணனுக்கு அந்தக் குற்ற உணர்வு மறையாமல் இருந்தது. அவன் அரித முனிவரிடம் அந்தக் குற்ற உணர்வில் இருந்து விடுபட வழிகாட்டும்படி வேண்டினான். அவர், அங்கிருந்த விஷ்ணு கோவிலைப் புதுப்பித்து, இறைவனை வேண்டினால், மனக்குறை அனைத்தும் நீங்கும் என்று சொன்னார்.

    அதன்படி லட்சுமணன் இக்கோவிலுக்குக் கோபுரம், மண்டபம் போன்றவற்றை எழுப்பிக் கோவிலைப் புதுப்பித்து இறைவனை வழிபட்டுக் குறை நீங்கப் பெற்றார்.

    லட்சுமணனின் திருப்பணிக்குப் பிறகு, இங்கு வந்த பக்தர்கள் லட்சுமணனையே மூலவராக வைத்து வழிபடத் தொடங்கினர். அதன் பிறகு, இறைவன் லட்சுமணப்பெருமாள் என அழைக்கப்பட்டார் என்பது இங்கு சொல் வழக்காக இருக்கிறது.

    ஆலயம் அதிகாலை 5 மணி முதல் பகல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். இக்கோவிலில் தினமும் ஐந்து கால பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன.

    தினமும் மூன்று வேளைகளில், உற்சவர் சிலையை எடுத்துக் கொண்டு கோவிலை வலம் வரும் ‘சீவேலி’ ஊர்வலமும் நடக்கிறது.

    குழந்தைப்பேறு இல்லாதவர்கள் இக்கோவிலில் இருக்கும் இறைவனுக்கு, திருவோண பூஜை செய்து வழிபட்டால் விரைவில் குழந்தைப்பேற்றை அடைய முடியும் என்கிற நம்பிக்கை நிலவுகிறது.

    திருவோண பூஜை வழிபாட்டிற்கு, இந்த ஆலயத்தில் ஒரு ஆண்டுக்கு முன்பே பதிவு செய்து கொள்ள வேண்டும் என்கின்றனர்.

    இக்கோவில் இறைவனுக்குச் சந்தனக்காப்பு செய்து வழிபடுபவர்களுக்கு நல்வாழ்வும், வளமும் கிடைக்கும்.



    விழாக்கள் :

    இத்தலத்தில் மலையாள நாட்காட்டியில் மேட மாதம் (சித்திரை மாதம்) திருவோண நட்சத்திர நாளில் ஆறாட்டு விழா மிகச் சிறப்பாக நடைபெறும். திருவோண நட்சத்திர நாளுக்குப் பத்து நாட்கள் முன்பாகவே, கோவிலில் கொடியேற்றம் நடைபெற்று விழா தொடங்கி விடுகிறது. சித்திரை மாதம் மட்டுமின்றி, அனைத்து மாதங்களிலும் திருவோணம் நட்சத்திர நாளில் சிறப்புப் பூஜைகளும், வழிபாடுகளும் நடத்தப்படுகின்றன.

    கேரளாவில் ஆடி மாதம் முழுவதையும் ராமாயண மாதம் என்று சொல்கிறார்கள். இந்த மாதம் முழுவதும் நாள்தோறும் இறைவனுக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இம்மாதத்தில் இக்கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும்.

    108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகத் திருமூழிக்குளம் லட்சுமணப் பெருமாள் கோவில் இருக் கிறது. நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் மங்களாசனம் செய்த பாசுரங்களில், 14 பாசுரங்கள் இக்கோவில் இறைவனைப் பற்றி சொல்கின்றன. பரதன் மற்றும் லட்சுமணன் இணைந்து வழிபட்ட திருத்தலம் என பல்வேறு சிறப்புகளைக் கொண்டதாக இந்த ஆலயம் திகழ்கிறது.

    லட்சுமணப் பெருமாள் :

    திப்பு சுல்தான் படையெடுப்பின் போது, திரு மூழிக்குளம் லட்சுமணர் கோவில் மூலவர் சிலையின் இருகரங்களும் சேதமடைந்து போய்விட்டன, காலிலும் சிறு விரிசல் ஏற்பட்டு விட்டது.

    அந்தச் சேதங்களை மறைப்பதற்காகச் சிலைக்கு வெள்ளியில் ஒரு கவசம் செய்து அணிவித்தனர்.

    வெள்ளிக்கவசம் அணிவித்த நாளிலேயே காணாமல் போய்விட்டது. அதன் பின்னர், சிலையின் பாதுகாப்புக்கு என்ன செய்யலாம்? என்று தேவ பிரசன்னம் யோசித்த போது, மூலவருக்குக் கவசம் எதுவும் அணிவிக்க வேண்டாமென்று வந்ததால், அப்படியே விட்டுவிட்டனர்.

    பெயர்க்காரணம் :

    அரித மகரிசி என்பவர், திருமாலை நினைத்துத் தவமிருந்து வந்தார். அவரது தவத்தில் மகிழ்ந்த விஷ்ணு அவருக்குக் காட்சியளித்தார்.

    அரித மகரிசி அவரிடம், ‘மனிதராகப் பிறந்தவர்கள் இறைவனை அடைவதற்கு, வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளைச் சொல்லுங்கள்’ என்று வேண்டினார்.

    இறைவன் அவருக்கு ‘ஸ்ரீ ஸுக்தியை’ என்ற திருமொழியைச் சொல்லியருளினார்.

    இறைவன் திருமொழியைச் சொல்லிய இடம் என்பதைக் குறிக்கும் விதமாக, இவ்விடத்திற்குத் திருமொழிக்களம் என்கிற பெயர் வழங்கலாயிற்று.

    நாளடைவில் இப்பெயர் திருமூழிக் களம், திருமூழிக்குளம் என்று மாற்றமடைந்து விட்டது.

    அமைவிடம் :

    லட்சுமணப்பெருமாள் கோவில் அமைந்திருக்கும் திருமூழிக்குளம், எர்ணாகுளத்தில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலும், கோட்டயத்தில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவிலும், திருச்சூரில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்திருக்கிறது. இக்கோவிலுக்கு மேற்கண்ட மூன்று ஊர்களில் இருந்தும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
    Next Story
    ×