search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பிரசித்தி பெற்ற தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலை படத்தில் காணலாம்.
    X
    பிரசித்தி பெற்ற தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலை படத்தில் காணலாம்.

    சூரிய, சந்திரர்கள் வழிபடும் தாரமங்கலம் கைலாசநாதர் கோவில்

    சேலம் மாவட்டத்தில் ஆன்மிக நகரின் அடையாளமாக திகழும் தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலின் கோபுரம் 13-ம் நூற்றாண்டை கடந்து இப்பவும் கம்பீரமாக காட்சியளிக்கிறது.
    சேலம் மாவட்டத்தில் ஆன்மிக நகரின் அடையாளமாக திகழ்கிறது தாரமங்கலம். இங்கு எந்த திசையில் திரும்பி பார்த்தாலும் ஆன்மிக மணத்துடன் கோவில்கள் இருப்பதை காணமுடிகிறது. நமச்சிவாய..! நமச்சிவாய..! ஓம் நமச்சிவாய..! என்று ஊருக்குள் நுழைந்ததும் பக்தி பரவசமுடன் பாடல் ஒலிக்கும் சத்தம் இதயத்தை வருடுகிறது.

    13-ம் நூற்றாண்டை கடந்து இப்பவும் தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலின் கோபுரம் கம்பீரமாக காட்சியளிக்கிறது. இந்த கோவிலின் தனிச்சிறப்பு என்னவென்றால்,சாமி சிலைகள் மட்டுமின்றி உள்மண்டபம், வெளி மண்டபம் அனைத்தும் கற்களால் ஆனவை. கோவிலுக்கு அருகே இருக்கும் மண்டபத்தில் அமர்ந்திருந்த முதியவர்களை சந்தித்தோம்.

    அவர்கள் நம்மிடம் தாரமங்கலம் ஊர் பெருமை பற்றி என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம்?.

    சூரிய பூஜை :

    தாரமங்கலம் என்ற பெயர் ஏற்பட்டதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. சிவபெருமானுக்கும், பார்வதிக்கும் இங்கு திருமணம் நடந்தது என்றும், திருமால் தாரை வார்த்துக் கொடுத்து மணவிழாவினை நடத்தியதால் ‘தாரமங்கலம்’ என்ற பெயர் வந்ததென்றும் கூறுவர். இக்கோவிலிலுள்ள இறைவனை சந்திரனும், சூரியனும் வந்து தொழுது செல்வதாகக் கூறப்படுகிறது. ஆண்டுதோறும் உத்தராயண, தட்சணயான புண்ணிய காலங்களில் மாலை வேளையில் சூரியன் கதிர்களும், சந்திரன் ஒளியும் சிவலிங்கத்தின் மீது படுகின்றன.

    அதாவது, சூரிய ஒளி மூலஸ்தான சிவலிங்க மூர்த்தி மேல் விழுவதை சூரிய பூஜை என்று கூறுவர். சூரியனுடைய கதிர்கள் ராஜகோபுர வாயிலின் வழியே வந்து, நந்தி மண்டபத்தின் ஊடே புகுந்து, பின் மூன்று உள் வாயிலையும் கடந்து சிவலிங்கத்தின் மேல் படுவது அபூர்வமாக கருதப்படுகிறது. சந்திரனுக்கும், சூரியனுக்கும் தாரகாபதி, தாரகன் என்ற பெயர்கள் இருப்பதால் தாரமங்கலம் என்ற பெயர் உண்டாயிற்று என்றும் கூறுவார்கள். கோவிலில். உட்பிரகார தூண்கள் எல்லாவற்றிலும் அற்புதமான சிற்ப வேலைப்பாடு அமைந்த திருவுருவங்கள் காணப்படுகின்றன.



    கங்கை தீர்த்தம் :


    கோவில் வளாகத்தில் சித்தி விநாயகர் சன்னதி இருக்கிறது. இது ஒன்பதே கருங்கற்களால் அமைக்கப்பெற்றது. கல்மேடை அமைக்கப்பட்டு, அதன்மீது விநாயகர் சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. விமானம் வரை கற்களாலேயே ஆனது. கோவிலின் வேலைகள் நடந்து கொண்டிருக்கும் போது சிற்பியின் மகனான சிறுவன் இந்த ஒன்பது கல் கோவிலைக் கட்டியதாக ஒரு வரலாறு உண்டு.

    இந்த கோவிலுக்கு கிழக்கே அதாவது பஸ்நிலையம் அருகில் ஒரு தெப்பக்குளம் இருக்கிறது. இந்த குளத்தில் சிவந்த கற்களால் கட்டப்பெற்ற கைப்பிடிச் சுவர்கள் சுற்றிலும் இருக்கின்றன. குளத்தின் நடுவில் நீராழி மண்டபம் உள்ளது. இந்த குளத்து தண்ணீரை ‘கங்கை தீர்த்தம்’ என்கிறார்கள். ஏனென்றால், மூலவர் கைலாசநாதருக்கு அபிஷேகம் செய்யும் பால், இளநீர், திரவியங்கள் நேரடியாக அங்கிருந்து குழாய் மூலம் இந்த குளத்திற்கு வந்து சேரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே தான் இதனை கங்கை தீர்த்தம் என்கிறார்கள்.

    ராமரிப்பு இல்லாத தெப்பக்குளம் :

    100 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த தெப்பக்குளத்தில் இதுவரை தண்ணீர் வற்றிய வரலாறு கிடையாது. நீருற்று இருந்து கொண்டே இருக்கும். ஒரு காலத்தில் கைலாசநாதர் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், இந்த குளத்திற்கு வந்து கை, கால், முகத்தை கழுவி சுத்தம் செய்துவிட்டு தான் கோவிலுக்குள் செல்வார்களாம். இப்படி வரலாற்று சிறப்பு மிக்க இந்த தெப்பக்குளம் பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமலும், பாசிபடர்ந்து தண்ணீர் அசுத்தமாக காணப்படுகிறது.

    மேலும் இந்த தெப்பக்குளத்தின் அருகே வடக்கில் சிறிய தெப்பக்குளம் உள்ளது. இதுவும் பராமரிப்பு இல்லாமல் காணப்படுகிறது. கற்களால் ஆன இந்த 2 தெப்பக்குளங்களையும் சீரமைத்து உரிய முறையில் பராமரிக்க கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் இப்பகுதி மக்கள்.

    பிரசித்தி பெற்ற கைலாசநாதர் கோவில் மட்டுமின்றி பத்ரகாளியம்மன் கோவில், கண்ணனூர் மாரியம்மன் கோவில், முருகன் கோவில், வரதராஜ பெருமாள் கோவில், தண்டு மாரியம்மன் கோவில், விநாயகர் கோவில் என எட்டு திசையிலும் கோவில்கள் நிறைந்து காணப்படுவதால் இந்நகரை ஆன்மிக நகரம் என்றும் அழைப்பதுண்டு. இங்குள்ள பத்ரகாளியம்மனை ஊர் காவல் தெய்வமாக வழிபடுகிறார்கள். இந்த கோவில் அருகே ஒரு தெப்பக்குளம் இருக்கிறது.
    Next Story
    ×