search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நினைத்ததை நிறைவேற்றும் திருமால்பூர் மணிகண்டீஸ்வரர் ஆலயம்
    X

    நினைத்ததை நிறைவேற்றும் திருமால்பூர் மணிகண்டீஸ்வரர் ஆலயம்

    தேவாரம் பாடல் பெற்ற திருத்தலங்கள் 32-ல் 11-ஆவதாகவும், திருமால் சிவபெருமானை வழிபட்டு சக்ராயுதம் பெற்ற தலமாகவும் விளங்குகிறது திருமால்பூர் மணிகண்டீஸ்வரர் ஆலயம்.
    உலக உயிர்களெல்லாம் உய்யும் பொருட்டு கடல் சூழ்ந்த நிலவுலகில் சிவப்பரம்பொருள் பல அற்புதங்களை நிகழ்த்தி அருளாட்சி புரிந்து வருகிறான். காஞ்சி நகரைத் தலைமை இடமாகக் கொண்ட தொண்டை மண்டலத்தைச் சார்ந்த தேவாரம் பாடல் பெற்ற திருத்தலங்கள் 32-ல் 11-ஆவதாகவும், திருமால் சிவபெருமானை வழிபட்டு சக்ராயுதம் பெற்ற தலமாகவும் விளங்குகிறது திருமால்பூர் மணிகண்டீஸ்வரர் ஆலயம்.

    ஒருசமயம் சிவனும், பார்வதியும் கயிலாயத்தில் பேசிக்கொண்டிருக்கும்போது, ‘இவ்வுலகம் என்னால்தான் இயங்குகிறது’ என்று ஈசன் சொன்னார். இதனை ஏற்க மறுத்த பார்வதி தேவி, சிவபெருமானின் கண் முன்னே கையை வைத்துப் பார்வையை மறைத்தார். உடனே உலகமே இருளில் மூழ்கியது. இதனால் மிகுந்த வருத்தமுற்ற பார்வதி, ‘என்னால் ஒரு விநாடியில் அனைத்து ஜீவராசிகளும் துயரம் அடைந்துவிட்டனவே! இந்த பாவத்தை நான் ஏற்றுக்கொண்டு உங்களிடத்திலிருந்து விலகி, பூமிக்குச்சென்று என் பாவத்தை நிவர்த்தி செய்கிறேன்’ என்றார்.

    சிவனும், ‘அவ்வாறே ஆகட்டும்’ என்று சொல்ல, தேவி பூமியில் பாலாற்று நதிக்கரையை வந்தடைந்தார். அங்கு ஒரு வில்வமரத்தடியில் மணலை லிங்கமாகப் பிடித்துப் பூஜை செய்து வழிபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஈசன், “பார்வதி தேவி! பார்வதி தேவி!” என்று கூப்பிட்டார். பூஜையில் இருந்ததால் ஈசன் அழைத்தது பார்வதி காதில் விழவில்லை. இதனால் கோபமுற்ற சிவபெருமான், இந்தப் பூஜையை கலைக்க தன் தலையில் இருந்த காவிரியை, பாலாற்றில் போட்டார். உடனே பாலாற்றில் வெள்ளம் கரை புரண்டோடியது.

    அந்த வெள்ளத்தில் சிவலிங்கம் அடித்துச் செல்லாமலிருக்க, தேவி லிங்கத்தை அணைத்துக்கொண்டு தன் அண்ணனான பெருமாளை துணைக்கு அழைத்தார். வெள்ளத்தால் தன் தங்கையின் பூஜை கலைந்துவிடக்கூடாதே என்றெண்ணிய பெருமாள், திருப்பாற்கடலில் படுத்து அணை கட்டியவுடன் இந்த பாலாறு காஞ்சீபுரத்திற்கு தெற்கே ஓடத் தொடங்கியது. இதன்பின் பூஜையைப் பூர்த்தி செய்த பார்வதி தேவி, ஈசனைச் சென்றடைந்தார்.

    இத்தகைய புராணப் பின்னணியைக் கொண்ட சிறப்புமிக்க திருத்தலத்தில், திருமால் ஈசனிடம் சுதர்சன சக்ரம் பெற்றார் என்று காஞ்சி புராணம் கூறுகின்றது.

    குபன் என்ற அரசன் திருமால் பக்தன். அவனுக்கும், ததீசி முனிவருக்கும் ஒருமுறை பகை ஏற்பட்டது. குபன், திருமாலிடம் முறையிட்டான். திருமால் ததீசி முனிவரின் மீது தமது சக்ராயுதத்தை ஏவினார். முனிவரது வஜ்ர உடலைத் தாக்கமுடியாமல் அந்த சக்ராயுதம் கூர் மழுங்கியது.

    முன்பொரு சமயம், சலந்தரன் என்ற அசுரன் தேவர்களுக்குத் துன்பம் விளைவித்து வந்தான். தேவர்கள் சிவ பெருமானிடம் முறையிட, அவர் விரலால் பூமியில் வட்டம் செய்தார். அந்த வட்டம் ஒரு சக்ரமாகி சலந்தரனை அழித்தது. அந்த சக்கரத்தை சிவபெருமானிடம் கேட்டுப் பெறவேண்டும் என்றும், காஞ்சி மாநகரில் சிவ வழிபாடு மேற்கொண்டால் சக்கரம் கிடைக்கும் என்றும் திருமாலிடம் தேவர்கள் கூறினர்.

    அதனால் இத் தலத்தை அடைந்த திருமால், சக்கர தீர்த்தம் ஏற்படுத்தி, பாசுபத விரதம் பூண்டு, திருநீற்றை உடல் முழுவதும் பூசி ருத்ராட்சம் அணிந்து, அம்பிகை பூஜித்த ஈசனை முறைப்படி பூஜை செய்து வந்தார். தினமும் ஆயிரம் தாமரை மலர்கள் கொண்டு, ஆயிரம் நாமங்கள் சொல்லி ஈசனை அர்ச்சித்து வந்தார். ஒருநாள் பூஜையின்போது, ஈசனின் திருவிளையாடலால் ஒரு மலர் குறைந்தது. வழிபாட்டில் குறையேற்படலாகாது என்றெண்ணி, தன் கண்ணைப் பறித்து, கண் மலரால் ஈசனை வழிபாடு செய்தார். திருமாலின் ஆழ்ந்த பக்திக்கு ஈசன் உளம் மகிழ்ந்து காட்சி கொடுத்தார்.

    தனக்கு காட்சி தந்த சிவபெருமானை மும்முறை வலம்வந்து வணங்கினார் திருமால். பின்னர் ஈசன் திருமாலைப் பார்த்து, ‘நாராயணரே! தாமரை மலருக்காக உம் கண்ணை எடுத்து அர்ச்சித்தமையால், உள்ளம் மகிழ்ந்து உமக்கு தேன் மருவிய தாமரை மலர்க்கண்ணை அளித்தோம். இனி நீ தாமரைக்கண்ணன், பதுமாஷன் என்று பெயர்பெற்று விளங்குவாய். நீ பேறு பெற்றதால், இத்தலம் உன் திருப்பெயரால் ‘திருமாற்பேறு’ என விளங்கப்பெறும். இச்சக்கரத்தால் வெல்லற்கரிய பகைவரையும் வெல்க’ என்றுகூறி சுதர்சன சக்கரம் வழங்கி ஆசீர்வதித்தார்.



    சக்ராயுதத்தைப் பெற்றுக்கொண்ட திருமால், ‘என்போன்று ஆயிரம் திருநாமங்கள் கூறி மலர்களால் வழிபடுபவர் களுக்கு, வேண்டும் வரம் அருள வேண்டும்’ என்று வேண்ட ஈசனும் அவ்வாறே வரமளித்தார். புராணப்பெருமை வாய்ந்த இத்தலம் தற்போது திருமால்பூர் என அழைக்கப்படுகிறது. முன்பு அரிச்சக்கரபுரம், வில்வாரண்யம், உத்தர காஞ்சி ஆகிய பெயர்களாலும் அழைக்கப்பட்டுள்ளது.

    இத்தல ஈசனுக்கு தணிவொன்று மணமுடையார், தீண்டச்சிவந்த பிரான், சாந்த ரூபர், மணிகண்டர், தயாநிதியார், பவள மலையார், வாட்டந் தவிர்த்தார், பாசப்பிணி விண்ட சாகிசனார் என்னும் எட்டு நாமங்கள் ஏற்பட்டது. அம்பிகைக்கு அஞ்சனாட்சி, கருணை நாயகி, ஆதி காமாட்சி என்னும் பெயர்கள் வந்தன. அஞ்சனாட்சி சமேத மணிகண்டீசுவரர் என்னும் பெயருடன் விளங்கும் இவ்வாலயம் வேலூர் மாவட்டத்தில் உள்ளது. முதலாம் பராந்தக சோழ மன்னனால் நிர்மாணிக்கப்பட்ட, சைவ-வைணவத்தலமான இவ்வாலயம் கல் திருப்பணி ரீதியாக 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. மன்னனின் நினைவாக சோளஸ்வரர் மேற்கு முகமாக இருந்து காட்சி தருகிறார்.

    சந்திரன் பூஜித்த இத்தலத்தை வழிபடுவோருக்கு, உலகிலுள்ள அனைத்து சிவாலயங்களையும் தரிசித்த பலன் உண்டு. இக்கோவிலில் பக்தர்களுக்கு சடாரி சாத்தி, தீர்த்தம் தருவது தனிச்சிறப்பு.

    மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய அம்சங்களால் சிறப்புப் பெற்றது இவ்வாலயம். கிழக்குப் பார்த்த இக்கோவில் முன்பு சக்கர தீர்த்தம் உள்ளது. அருகில் விநாயகர், நின்ற திருக்கோலத்தில் ஆஞ்சநேயர் சன்னிதி உள்ளது. ராஜகோபுரத்தைக் கடந்து ஆலயத்திற்குள் செல்லும்போது பிரகார வாசலில் இடப்புறமாக ஆஞ்சநேய முகமாக நின்ற நிலையில் உள்ள அதிகார நந்தியை வழிபட்டு, சுவாமியை தரிசனம் செய்வதற்குச் செல்ல வேண்டும்.

    மூலவர் மணிகண்டீசுவரருக்கு எதிரில் திருமால், ஈசனை வணங்கிய கோலத்தில் உள்ளார். உற்சவர் திருமால் கையில் தாமரை மலரும், கண்ணும் உள்ளது. சித்திரை நட்சத்திரக்காரர் களின் பரிகாரத்தலமாக இந்த ஷேத்திரம் விளங்குகிறது. அஷ்ட லட்சுமியுடன் கூடிய பீடத்திலுள்ள அம்பாளை மீன ராசிக்காரர்கள் வழிபட சகல தோஷமும் நீங்கும். பவுர்ணமிதோறும் அம்பாளுக்கு ஊஞ்சல் சேவை நடக்கிறது. அஷ்டபுஜ துர்க்கையும், எட்டுக் கரங்களுடன் நின்ற வண்ணம் காட்சி தருகிறார். பத்துக் கரங்களுடன் வல்லபை சமேதராக பிரதான விநாயகராக, வல்லவ விநாயகர் காட்சி தருகிறார்.

    கும்பகோணத்துக்கு அடுத்தபடியாக மாசி மகம் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஆனித் திருமஞ்சனம், ஆடிப்பூரம், கார்த்திகை தீபம், ஆருத்ரா, அன்னாபிஷேகம் ஆகியவை இங்கு முக்கிய விழாக்களாகும்.

    இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும். திருமால்பூர் தரிசனம் செய்வோர், இறைவனை எட்டு நாமங்கள் சொல்லி வழிபடுவோர், வழிபோக்கராக ஒரு கணப்பொழுதேனும் இத்தலத்தில் தங்கியோர்-நினைத்தோர் ஆகியோருக்கு முக்தி கிட்டும். இப்பிறவியில் நினைத்தது நிறை வேறும். இறைவனுக்கு சிவப்புத் தாமரை அணிவித்து, நெய் தீபம் ஏற்றி, அர்ச்சனை செய்து வழிபடுவது இவ்வாலய முறை.

    நந்திக்கு விசேஷத் தலம் :

    பார்வதி தேவி பூஜைக்குத் துணையாக இருந்ததால், இங்கு அதிகார நந்தி (கயிலாய நந்தி) நின்ற நிலையில் காட்சி தருகிறார். ராவணன் இத்தல இறைவனை தரிசிக்க வரும்போது நந்தி இருப்பதை கவனிக்காமல் தரிசிக்கச் சென்றார். ராவணனைப் பார்த்து, ‘சுவாமி தியானத்தில் இருக்கிறார். ஆகையால் உள்ளே போகாதே!’ என்று நந்தி தடுத்தார். இதனால் ராவணனால் சபிக்கப்பட்டு ஆஞ்சநேய முகமாக மாறிவிட்டது நந்தியம்பெருமானுக்கு. உடனே சபிக்கப்பட்ட முகத்தால் ராவணனுக்கு அழிவு என்று நந்தி சபித்தார். (ஆஞ்சநேயரால் இலங்கை அழிந்தது புராணத் தகவல்). ஆகையால் நின்ற நிலையில் இருக்கும் நந்திகேஸ்வரரை வணங்கி, பின் சுவாமியை தரிசிப்பது கயிலாய தரிசனம் பெற்ற புண்ணியம் ஆகும்.

    செங்கல்பட்டு - அரக்கோணம் ரெயில் பாதையில் திருமால்பூர் ரெயில் நிலையத்திற்கு தென் மேற்கே 4 கி.மீ தூரத்தில் உள்ளது இந்த ஆலயம். காஞ்சீபுரத்திலிருந்து 12 கி.மீ., அரக்கோணத்தில்இருந்து 15 கி.மீ தொலைவில் உள்ளது.
    Next Story
    ×