search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில்
    X

    அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில்

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் மிக முக்கியமானதாக அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில் திகழ்கிறது.
    குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்பதற்கேற்ப தமிழ்நாட்டில் உள்ள மலை மற்றும் குன்றுகளில் முருகப்பெருமான் கோவில்கள் நிறைந்து காணப்படுகின்றன. அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் மிக முக்கியமானதாக அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில் திகழ்கிறது.

    அலகுமலை கோவில் தல வரலாற்றை அறிய வரலாற்று சான்றுகளும் இலக்கிய சான்றுகளும் உள்ளன. திருமலை நாயக்கர் காலத்து கல்வெட்டு ஒன்று கைலாசநாதர் கோவில் முன்பாக உள்ளது. அக்கல்வெட்டு கி.பி.1641–ம் ஆண்டு எழுதப்பட்டது.

    பெயர் காரணம் :


    அலகு என்றால் ‘மூக்கு’ என்பது பொருள். மூக்கின் வடிவம் போல் இந்த மலை அமைந்து உள்ளதால் ‘அலகு மலை’ என்று அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது. அலகு மலைக்கு கீழே அழகாபுரி அம்மன் என்ற ஊர்க்காவல் தெய்வம் ஒன்று இருப்பதால் இந்த மலைக்கு அலகுமலை என்ற பெயர் வந்ததாகவும் சிலர் கூறுகிறார்கள். மலை மீது முருகப்பெருமான் குடிகொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    மலை அடிவாரத்தில் மயில் வாகன மண்டபம் உள்ளது. இதையடுத்து படியேறி எட்டு தூண்கள் கொண்ட மண்டபத்தை கடந்தால், இடதுபுறத்தில் பாதவிநாயகரை தரிசிக்கலாம். அலகுமலை படிகளின் ஆரம்பத்தில் பாத விநாயகர் கோவில் உள்ளது. விநாயகரை வழிபட்டு விட்டு, வடக்கு நோக்கி அமைந்துள்ள படிகளை கடந்தால் இடது புறம் இடும்பன் சன்னிதி அமைந்துள்ளது.

    ஆறுபடை வீடுகள் :

    இடும்பன் சன்னிதியைக் கடந்து மலையின் மேற்காக உள்ள 300 படிகளை கடந்து மேலே சென்றால் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளையும் தரிசனம் செய்யலாம். இந்த ஆறுபடை வீடுகள் கோவில் 1984–ம் ஆண்டுகளில் கட்டப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள ஆறுபடை வீடுகளில் முருகப்பெருமான் எந்தக்கோலத்தில் உள்ளாரோ, அதே போன்று இந்த சன்னிதிகளிலும் காட்சி தருவது சிறப்பம்சமாகும். அத்துடன் சண்முகருக்கு ஒரு சன்னிதி அமைந்துள்ளது. மலை பாதையில் உள்ள கார்த்திகை மண்டபத்தில் நின்றபடி, ஒரே சமயத்தில் ஆறுபடை முருகனையும் மேலே ஏழாவது படைவீடாக அலகுமலை குமரனையும் கண்குளிர தரிசனம் செய்ய முடியும். ஆறுபடை வீடு சன்னிதிகளின் அருகில் நவக்கிரக சன்னிதி உள்ளது.

    இடும்பன் சன்னிதி அருகில் குழந்தை குமார் கோவில் உள்ளது. இங்கு அலகுமலை குமரன், பாலகனாக காட்சி அளிக்கின்றார். குழந்தை வரம் வேண்டுபவர்களுக்கு, அதை நிறைவேற்றும் தெய்வமாக இந்த பாலமுருகன் திகழ்கிறார். பழனி மலையில் இருப்பது போல் ஆண்டி கோலத்தில், சிறிது குஞ்சம் போன்று முடியுடன் வலது கையில் தண்டாயுதத்தை தாங்கியபடி இறைவன் காட்சி தருகிறார்.

    முருகனின் சமயோசிதம் :

    அலகுமலை கோவில் கிழக்கு மேற்காக அமைந்துள்ளது. கிழக்கில் தாழ்ந்தும் மேற்கில் உயர்ந்தும் காணப்படுகிறது. கோவில் கருவறையில் முத்துகுமாரசாமி பாலதண்டாயுதபாணியாக, முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.



    ஒரு முறை திருகயிலாயத்தில் பாலகனான முருகப்பெருமான் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவரை பார்வதிதேவியும், கங்காதேவியும் தன் அருகில் வருமாறு அழைத்தனர். ஆனால் முருகப்பெருமான், அவர்கள் அருகில் செல்லாமல் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சிவபெருமான், முருகனின் அருகில் சென்று, ‘இங்கே உள்ள இரண்டு தாய்மார்களில் உனக்கு கங்காதேவியை பிடிக்குமா? பார்வதிதேவியை பிடிக்குமா?’ என்று கேள்வி எழுப்பினார்.

    அதற்கு முருகப்பெருமான், ‘அறன் மாதாவின் மீதுதான் எனக்கு மிகுந்த ஆசை’ என்று கூறினார்.

    இவ்விடத்தில் முருகப்பெருமான் கூறிய பதில் சமயோசிதமானது. அதாவது ‘அறன்மாதா’ என்ற சொல்லுக்கு இரண்டு பொருள் உண்டு. ‘அறம் வளர்த்த நாயகி’ என்பது ஒரு பொருள். அறம் வளர்த்த நாயகி என்றால் பார்வதி தேவியை குறிக்கும். மேலும் ‘உயிர்களை காக்கும் நீர்’ என்ற பொருளும் உண்டு. இது கங்காதேவியை குறிப்பதாகும். இவ்வாறு முருகப்பெருமான் ஒரு வார்த்தையில் இரண்டு அன்னையரையும் பிடிக்கும் என்று கூறினார்.

    இத்தகைய சிறப்புகளையுடைய பாலதண்டாயுதபாணியை காண கோவிலுக்குள் நுழையும் முதலிலே இருப்பது கொடிமரம். கொடிமரத்திற்கு மேற்கு நோக்கி மயில் வாகனமும் அதற்கு அருகில் பலிபீடமும் உள்ளது. தல விருட்சமாக வில்வ மரம் கோவிலின் இடது புறத்தில் அமைந்துள்ளது.

    கோவில் மகா மண்டபத்தின் உள்ளே வலது புறத்தில் கடந்த 18 ஆண்டுகளாக சிறப்பு சங்கடஹர சதுர்த்தி விழாக்காணும் ஆனந்த விநாயகரும், வலம்புரி விநாயகரும் அருள்பாலிக் கிறார்கள். இடது புற மேடையில் வீரபாகு தேவரும், தெற்கு நோக்கிய தனி சன்னிதியில் தேவியர் வள்ளி, தெய்வானையும் அருள்பாலிக்கிறார்கள். கர்ப்பக்கிரகத்தில் முருகன் ஆண்டி கோலத்தில் இருப்பதால் வள்ளி, தெய்வானை கோவில் தனியாக அமைக்கப்பட்டுள்ளது.

    கவலை தீர்க்கும் கந்தன் :

    நடுவில் கர்ப்பக்கிரகம் உள்ளது. இதில் முருகவேள் ‘முத்துகுமார பால் தண்டாயுதபாணி’ எனும் பெயர் தாங்கி கண்களை சற்று தாழ்த்திய நிலையில் கையில் தண்டாயுதத்துடன் ஞான குருவாக காட்சி தருகிறார். ஞான குருவான அவரை நெஞ்சாரப்பணிவோரின் குறைகள், கவலைகள், பிரச்சினைகள் தீர்வது இன்றும் நடக்கும் நிகழ்வாகும். சுமார் 4 அரை அடி உயர திருவுருவில் காட்சி அளிக்கும் முருகப்பெருமானை, வெள்ளிக் கவசத்தில் காணும்போதும் கண்கள் இமைகளை மூட மறுக்கின்றன. ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலை காண சுமார் 300 படிகளில் ஏறி செல்ல வேண்டும். வாகனங்கள் கோவில் வரை செல்ல சாலை வசதியும் உள்ளது.

    அமைவிடம் :

    திருப்பூருக்கு தென்கிழக்கில் தாராபுரம் சாலையில் 22 கிலோமீட்டர் தூரத்தில் அலகுமலை கிராமம் அமைந்துள்ளது. 4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த கிராமத்தில், அழகு பெற்று எழில் சூழ்ந்த அலகுமலை காணப்படுகிறது. சூரியனுடன் சேர்த்து ஒன்பது கிரகங்கள், நவக்கிரகங்களாக உள்ளன. அது போன்று இந்த மலையை சுற்றிலும் ஏழு மலைகள் உள்ளன. அவை சென்னிமலை, சிவன் மலை, வட்டமலை, ஊதியூர் மலை, பழனிமலை, மருதமலை, கதித்தமலை ஆகியனவாகும். இந்த ஏழு மலைகளுக்கு நடுவில் அலகுமலை காட்சியளிக்கிறது. இதுவும் அலகுமலையின் தனிச் சிறப்பு ஆகும்.
    Next Story
    ×