search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருமண தோஷம் நீக்கும் திருப்பைஞ்ஞீலி திருத்தலம் - திருச்சி
    X

    திருமண தோஷம் நீக்கும் திருப்பைஞ்ஞீலி திருத்தலம் - திருச்சி

    திருச்சியை அடுத்த மணச்சநல்லூருக்கு வடமேற்கே 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருப்பைஞ்ஞீலி திருத்தலம். இந்த கோவிலின் வரலாற்றை பார்க்கலாம்.
    திருச்சியை அடுத்த மணச்சநல்லூருக்கு வடமேற்கே 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருப்பைஞ்ஞீலி திருத்தலம். இங்கு விசாலாட்சி அம்மன் சமேதராக ஞீலிவனேஸ்வரர் அருள்பாலிக்கிறார். இந்தக் கோவில் நிலமடத்திற்கு கீழே, ஊரின் நடுவில் அமைந்துள்ளது. இத்தல மூலவர் சுயம்பு மூர்த்தி. திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோரால் பாடப்பெற்ற சிறப்பு வாய்ந்தது இந்த ஆலயம். வசிஷ்ட முனிவருக்கு, ஈசன் நடனக் காட்சியை காட்டி அருளிய தலம் இதுவாகும். எனவே இத்தலம் மேலைச் சிதம்பரம் என்று அழைக்கப்படு கிறது. இத்தல இறைவனை அம்பாளும் வழிபட்டு பேறு பெற்றுள்ளார்.

    இங்கு இரண்டு அம்பாள் சன்னிதிகள் உள்ளன. ஒன்று மூலவருக்கு இடதுபுறம் கிழக்கு நோக்கியும், மற்றொன்று தெற்கு நோக்கியும் உள்ளன. இத்தல விசாலாட்சி அம்மன் சிலையில் பின்னம் ஏற்பட்டதால், புதியதாக ஒரு சிலை செய்து பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதையடுத்து பழைய அம்மன் சிலையை அகற்றப்பட்டது. அப்போது ஊரார் கனவில் தோன்றிய அம்மன், ‘உங்கள் வீட்டில் யாருக்காவது உடலில் ஊனம் ஏற்பட்டால் வீட்டை விட்டு துரத்தி விடுவீர்களா?’ என்று கேட்க, ஊர் மக்கள் மீண்டும் பழைய அம்மன் சிலையை மற்றொரு சன்னிதியில் வைத்து வழிபடத் தொடங்கினர்.

    இந்தத் தலத்தில் வாழை மரமே தல விருட்சமாக உள்ளது. இங்குள்ள வாழை மரம் ‘ஞீலி’ என்றொரு வகையைச் சார்ந்தது. இதன் இலை, காய், கனி அனைத்தும் இத்தல ஈசனுக்கே பயன்படுத்தப்படுகிறது. இறைவனுக்கு இவை நிவேதனம் செய்யப்பட்ட பிறகும் கூட, பக்தர்களுக்கு பிரசாதமாகத் தரப்படுவதில்லை. நைவேத்தியத்திற்கு பின்னர் அவற்றை நீரில் விட்டு விடுகின்றனர். ‘ஞீலி’ வகையைச் சேர்ந்த வாழை வேறு இடங்களில் பயிரிடப்படுவதில்லை. ஏனெனில் இந்த வகை வாழை மரத்தில் இருந்து கிடைக்கும் இலை, காய், கனிகளைப் பயன்படுத்தினால் நோய் தாக்கும் என்பதால் இவ்வாறு செய்யப்படுவதாக காரணம் கூறப்படுகிறது.

    திருமணத் தோஷம் உள்ளவர்கள், இங்குள்ள வாழை மரத்திற்கு தாலி கட்டி பரிகார பூஜை செய்தால், விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம். சப்த கன்னியர்களே, அம்மனின் அருளால் இத்தலத்தில் வாழை மரமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    திருக்கடையூரில் சிவபெருமானால் சம்ஹாரம் செய்யப்பட்ட எமதர்மன், இத்தல இறைவனின் அருளால், தைப்பூச நாளன்று மீண்டும் உயிரையும், பணியையும் பெற்றான். எனவே இங்கு எமதர்மனுக்கு தனிச் சன்னிதி உள்ளது. இங்குள்ள சுவாமியின் பாதத்தின் கீழ், குழந்தையாக எமன் இருக்கிறார். இத்தல இறைவனை வழிபட்டால் எம பயம் நீங்கும். அறுபதாம் கல்யாணமும், ஆயுள் ஹோமமும் இங்கு அதிகமாக நடைபெறுகிறது.

    அப்பர் என்று அழைக்கப்பட்ட திருநாவுக்கரசர், சிவதல யாத்திரையின் ஒரு பகுதியாக இத்தல இறைவனை தரிசிக்க வந்து கொண்டிருந்தார். வழியில் அவருக்கு பசி அதிகரித்தது. அப்போது ஈசன், அர்ச்சகர் உருவத்தில் வந்து அப்பருக்கு பொதி சோறு கொடுத்து பசியைப் போக்கினார். இவர் ‘சோற்றுடைய ஈஸ்வரர்’ என்ற பெயரில், கோவிலின் முன்புறத்தில் இரண்டாம் கோபுர வாசலில் தனிச் சன்னிதியில் அருள்புரிகிறார். சித்திரை மாத அவிட்டம் நட்சத்திர நாளில், இந்தச் சன்னிதியில் அப்பருக்கு, ஈசன் சோறு படைத்த விழா நடைபெறுகிறது. சித்திரையில் இந்த ஆலயத்தில் 10 நாள் பிரமோற்சவம் நடைபெறும்.

    இந்த ஆலயத்தில் நவக்கிரகங்கள் ஒன்பது குழியில் விளக்குத் தீபங்களாக வழிபடப்படுகின்றன. இங்கு ராவணன் திருவாயில் கோபுரம் ஒன்று உள்ளது. ராவணன், நவக்கிரகங்களையும் அடக்கி, ஒன்பது படிகளாக மாற்றி வைத்திருந்தான். இத்தல ராவணன் வாசல் கோபுரத்தைக் கடந்து வந்தால், ஒருவருடைய நவக்கிரக தோஷங்கள் முற்றிலும் விலகும் என்பது ஐதீகம்.
    Next Story
    ×