search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சத்தியநாதர் திருக்கோவில் - காஞ்சீபுரம்
    X

    சத்தியநாதர் திருக்கோவில் - காஞ்சீபுரம்

    காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சத்தியநாதர் திருக்கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சத்தியநாதர் திருக்கோவில். 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயம் அமைந்தப் பகுதியில் முன்காலத்தில் காரைச்செடிகள் அதிகமாக வளர்ந்து காணப்பட்டுள்ளன. இதனால் இத்தல இறைவன் ‘காரைத்திருநாதர்’ என்று அழைக்கப்படுகிறார். திருக்காலீஸ்வரர் என்ற திருநாமமும் அவருக்கு உண்டு. தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டு திருத்தலங்களில் இது 5–வது தலமாகும். திருஞான சம்பந்தர் இத்தல இறைவனைப் பற்றி தேவாரப்பாடல் பாடியுள்ளார்.

    தல வரலாறு :

    கவுதம மகரிஷியின் மனைவி அகலிகை. இவளை மணம் முடிக்க இந்திரன் முதலான தேவர்கள் பலரும் முயற்சி செய்தனர். இறுதியில் திருமணம் செய்தது கவுதமர். அகலிகைக்கு திருமணமான பின்பும் கூட இந்திரனுக்கு அவள் மீதான ஆசை போகவில்லை. அகலிகையை வஞ்சகமான முறையில் அடைய முயற்சி செய்தான். தவத்தின் வலிமையால், விரும்பிய வடிவம் எடுக்கும்படி பெற்றிருந்த வரம் அவனுக்கு கைகொடுத்தது.

    ஒரு நாள் அதிகாலை வேளைக்கு முன்பாகவே கவுதமரின் ஆசிரமத்திற்கு சென்றான் இந்திரன். வெளியில் நின்று கொண்டு சேவலைப் போல கூவினான். பொழுது விடிந்ததாக எண்ணிய கவுதமர் நீராடுவதற்காக வெளியே சென்றார். அந்த நேரத்தில் கவுதமர் போல் வடிவம் கொண்டு ஆசிரமத்திற்குள் நுழைந்த இந்திரன், அகலிகையை ஏமாற்றி காமுற்றான். ஏதோ ஒரு மாயையால் தான் வெளியே கிளம்பி வந்ததை உணர்ந்த கவுதமர், விரைந்து ஆசிரமம் சென்றார்.

    அவரைக் கண்ட இந்திரன் தப்பிச் செல்ல முயன்றான். ஆனால் கவுதமர் அவனுக்கு உடல் முழுவதும் கண்ணாக மாறும்படி சாபம் கொடுத்தார். அதே போல் அகலிகையை கல்லாக மாற சாபமிட்டார். சாபம் பெற்ற இந்திரன், பூலோகம் வந்து பல தலங்களிலும் சிவபெருமானை வழிபட்டு விமோசனம் தேடினான். அவ்வாறு இந்தத் தலத்திற்கு வந்தபோது, காரைச் செடிகளின் மத்தியில் சிவன் காட்சி தந்து அவனது சாபத்தைப் போக்கி ‘காரைத்திருநாதர்’ என்ற பெயர் பெற்றார் என்கிறது தல புராணம்.

    தட்சிணாமூர்த்தி :

    மூன்று நிலைகளுடன் அமைந்துள்ளது இத்தல ராஜகோபுரம். இத்தல இறைவன் சத்தியநாதர் என்ற பெயருடன் அருள்பாலித்து வரு கிறார். இவர் சற்றே சிவந்த நிறத்தில் காட்சியளிக்கிறார். மூலவர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிப்பவர் என்பது சிறப்பாகும். அம்பாளுக்கு காரார்குழலி என்பது திருநாமம். பிரமராம்பிகை என்ற பெயரும் உண்டு. இறைவனுக்கு எதிரே உள்ள நந்தியின் கழுத்து மட்டும் தெற்கு முகமாக திரும்பியிருக்கிறது. இதற்கு நேரே ஒரு வாசலும் உண்டு. கோவில் பிரகாரத்தில் புதன் பகவான் சன்னிதி அமைந்துள்ளது. அவருக்கு அருகில் இந்திரன் வீற்றிருக்கிறார்.

    ஆலயத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி பகவான் சற்று வித்தியாசமான தோற்றத்தில் காட்சியளிக் கிறார். பொதுவாக தட்சிணாமூர்த்தி பகவான் சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய 4 சீடர் களுக்கு ஞானம் போதித்த நிலையில்தான் காட்சி தருவார். ஆனால் இந்தத் தலத்தில் கல்லால மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் தட்சிணாமூர்த்தியின் அருகில் 7 சீடர்கள் இருக்கின்றனர். இது வித்தியாசமான அமைப்பாக உள்ளது. இவரிடம் வேண்டிக்கொண்டால் ஞானம் பிறக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

    புதன் பகவான் :

    பிரகஸ்பதியை (வியாழன்) குருவாக ஏற்றுக்கொண்ட சந்திரன், அவரிடம் கல்வி கற்று வந்தான். குரு என்பதையும், அவரது மனைவி தனக்கு தாய் போன்றவள் என்பதையும் மறந்த சந்திரன், பிரகஸ்பதியின் மனைவியான தாரை மீது காதல்கொண்டான். ஒரு சமயம் சந்திரன், மகாவிஷ்ணுவின் அருளைப் பெறுவதற்காக யாகம் ஒன்றை நடத்தினான். அந்த யாகத்திற்கு குரு என்ற முறையில் பிரகஸ்பதி, தன் மனைவி தாரையுடன் கலந்து கொண்டார். அவள் மீது காதல் கொண்டிருந்த சந்திரன், அவளை மயக்கி அவனுடனேயே இருக்கச் செய்துகொண்டான். சந்திரனுக்கும், தாரைக்கும் மகனாக பிறந்தார் புதன்.

    இந்த நிலையில் சிவபெருமானிடம் முறையிட்டு, தாரையை தன்னுடன் அழைத்துச் சென்றார் பிரகஸ்பதி. புதனை சந்திரனே வளர்த்து வந்தான். புதன் பெரியவனாக வளர்ந்ததும், தான் பிறந்த முறையை அறிந்து வெறுப்புற்று சந்திரனைப் பிரிந்து தவ வாழ்க்கையை மேற்கொண்டார். தாய், தந்தையரைப் பிரிந்திருந்த புதன், இந்த தலத்திற்கு வந்து தனக்கு கிரகங்களில் ஒரு பதவி கிடைக்க அருளும்படி சத்தியநாதரிடம் வேண்டினார். அவருக்கு காட்சி தந்த சிவபெருமான், உரிய காலத்தில் கிரகப் பதவி கிடைக்கும் என்று அருள்புரிந்தார். இந்த புத பகவான், மூலவரின் வலதுபுறத்தில் தெற்கு பார்த்தபடி இருக்கிறார்.

    ஞானகாரகன் என்று அழைக்கப்படும் புதனை வணங்கினால் கல்வியில் சிறந்து விளங்கலாம். புதன்கிழமைகளில், இந்தத் தலத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராடி பச்சை நிற வஸ்திரம் சாத்தி, பச்சைப்பயறு நைவேத்தியமாக படைத்து வழிபட்டால், பேச்சுத் திறமை, மொழியில் புலமை ஏற்படுவதுடன், தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கையாக உள்ளது. ஆலயத்தில் தல விருட்சமாக காரைச்செடி உள்ளது. தல தீர்த்தம், இந்திர தீர்த்தம், சத்தியவிரத தீர்த்தம் ஆகியவை ஆகும்.

    மூலவர் அருகில் அம்பாள் :

    காஞ்சீபுரம் முழுவதும் உள்ள சிவன் ஆலயங்களில் உள்ள சிவனுக்கு, காஞ்சி காமாட்சி அம்மனே பொதுவான அம்பாளாக இருப்பதால், எந்த ஆலயங்களிலும் அம்பாளைப் பார்ப்பது அரிதானதாகும். ஆனால் இந்த ஆலயத்தில் மூலவரின் கருவறையிலேயே அம்பாளும் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். அவர் கருவறையில் சுவாமிக்கு அருகில் தெற்கு பார்த்தபடி உற்சவர் வடிவில் அம்பாள் இருக்கிறார். உற்சவராக இருந்தாலும், மூலவருக்கு உரிய பூஜைகள் அனைத்தும், இந்த அம்மனுக்கும் செய்யப்படுகிறது. ஆனாலும் விழாக்காலங்களில் அம்மனை வெளியே கொண்டுவருவதில்லை. சுவாமி மட்டுமே திருவீதி உலா வருவார்.

    இந்த ஆலயத்தில் மார்கழி திருவாதிரை, சிவராத்திரி, ஐப்பசி மாதத்தில் நடைபெறும் அன்னாபிஷேகம் போன்றவை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகின்றன. காலை 7 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் கோவில் நடை திறந்திருக்கும்.
    Next Story
    ×