search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நினைத்ததை நிறைவேற்றும் பரசினிக்கடவு முத்தப்பன் கோவில்
    X

    நினைத்ததை நிறைவேற்றும் பரசினிக்கடவு முத்தப்பன் கோவில்

    கேரள மாநிலம், தாலிப்பரம்பா எனும் ஊரில் பரசினிக்கடவு எனுமிடத்தில் இந்த முத்தப்பன் கோவில் அமைந்திருக்கிறது. இந்த கோவில் வரலாற்றை இன்று அறிந்து கொள்ளலாம்.
    கேரளா மாநிலம் பையாவூர் எனும் ஊரில் வசித்த ஒரு தம்பதியருக்குப் பல ஆண்டுகளாகக் குழந்தைப்பேறு இல்லாமல் இருந்தது. அதனால் கவலையடைந்த அவர்கள், அருகிலிருந்த சிவபெருமான் கோவிலுக்குச் சென்று, வேண்டிக் கொண்டிருந்தனர். ஒருநாள் அந்த தம்பதியின் கனவில் தோன்றிய இறைவன் சிவபெருமான், மறுநாள் காலையில் ஆற்றில் கூடை ஒன்றில் ஒரு குழந்தை மிதந்து வரும் என்றும், அந்தக் குழந்தையை எடுத்து நல்ல முறையில் வளர்த்துக் கொள்ளும்படியும் சொல்லிவிட்டு மறைந்தார்.

    இறைவன் கனவில் சொன்னபடி, ஆற்றில் மிதந்து வந்த ஒரு கூடையில், மலர்ப் படுக்கையில் ஆண் குழந்தை ஒன்று இருந்தது. அந்த தம்பதியர் குழந்தையை எடுத்து வந்து வளர்க்கத் தொடங்கினர்.

    அந்தக் குழந்தை, குழந்தைப் பருவத்திலேயே பல குறும்புகளைச் செய்யத் தொடங்கியது. குழந்தை வளர்ந்து பெரியவனானதும் கூட அந்த சேட்டைகள் தொடர்ந்தது. உயர்வகுப்பினர் கடைப்பிடித்து வந்த வாழ்க்கை நெறிகள் எதையும் பொருட்படுத்தாமல், வேட்டைக்குச் சென்று விலங்குகளைக் கொல்வது, அதன் இறைச்சியை உண்பது, மது அருந்துவது என்று பெற்றோர் களுக்குப் பிடிக்காத பல்வேறு செயல்களைச் செய்யத் தொடங்கினான். இதுபற்றிய பெற்றோரின் அறிவுரையையும் அவன் கேட்கவில்லை.

    பெற்றோரின் கண்டிப்பில் கோபமடைந்த அவன், தான் சிவபெருமானின் தோற்றம் என்பதை அவர்களிருவருக்கும் காட்டினான். தாங்கள் வளர்த்த குழந்தை சிவபெருமானின் மறுதோற்றம் என்பதைக் கண்ட அவர்கள் அவனை வணங்கி நின்றனர். அதன்பின்னர் அங்கிருக்க முடியாமல், அவன் வீட்டை விட்டு வெளியேறினான். குன்னத்தூர்படி எனுமிடத்தில் சந்தன் என்பவன் பனை மரத்திலிருந்து கள் இறக்கிக் கொண்டிருந்தான்.

    அவன் அங்கிருந்து சென்றதும், அங்கிருந்த பனை மரத்தில் ஏறி, தனக்குத் தேவையான அளவு கள்ளைக் குடித்து மகிழ்ந்தான். ஒவ்வொரு நாளும் பனை மரத்திலிருந்து கிடைக்கும் கள்ளின் அளவு குறைந்து கொண்டே இருந்ததால், சந்தன் சந்தேகமடைந்தான். ஒரு நாள் இரவு காவல் பணியில் ஈடுபட்டான். ஒருவன் பனை மரத்தில் ஏறி கள்ளை எடுத்துக் குடிப்பதைப் பார்த்துக் கோபமடைந்த சந்தன், தான் வைத்திருந்த அம்பை எய்தான். அம்பு சென்ற அடுத்த நொடியில், சந்தன் கல்லாக மாறி நின்றான்.

    மறுநாள் காலையில் அங்கு வந்த சந்தனின் மனைவி, தன் கணவனின் நிலையைக் கண்டு வருத்தமடைந்தாள். அவள் சுற்றிலும் பார்த்தாள். அவளுக்கு, அங்கிருந்த பனைமரம் ஒன்றில் வயதான ஒருவர் அமர்ந்திருப்பது போன்று தெரிந்தது. உடனே அவள் அவரைப் பார்த்து, ‘முத்தப்பா, கல்லாய்க் கிடக்கும் என் கணவனைக் காப்பாற்ற இறங்கி வா’ என்று வேண்டினார். (கேரளாவில், வடக்குப் பகுதியில் பயன்படுத்தப்படும் வட்டார வழக்கு மொழியில் ‘முத்தப்பன்’ என்றால் ‘தாத்தா’ என்று பொருள்) பனை மரத்திலிருந்து அவரும் கீழிறங்கி வந்தார். அவர் சந்தனை, கல் உருவத்திலிருந்து விடுவித்துச் சுய உருவம் கொடுத்தார்.

    இதனால் மகிழ்ச்சியடைந்த அந்தத் தம்பதியர், அவரை முத்தப்பன் என்றே அழைத்ததுடன், அவருக்கு கோவிலை கட்டி வழிபடத் தொடங்கினர். குன்னத்தூர்படியில் அமைந்த இந்தக் கோவில்தான் முத்தப்பனின் முதல் கோவில் என்கின்றனர். சந்தனுவும், அவனது மனைவியும் முத்தப்பனுக்கு, அவர் விரும்பிய கள், மீன், கருவாடு, இறைச்சி போன்றவைகளைப் படைத்துத் தொடர்ந்து வழிபட்டு வந்தனர். இப்போதும் இதே வழிபாடுதான் நடைபெறுகிறது.

    இந்நிலையில் குன்னத்தூர்படியிலிருந்து வேறிடத்தில் கோவில் கொள்ள விரும்பிய முத்தப்பன், ஒரு அம்பை எய்தினார். அது பரசினிக்கடவு என்று அழைக்கப்படும் தலத்தில் போய் விழுந்தது. அங்கும் முத்தப்பனுக்கு கோவில் அமைக்கப்பட்டது. இந்த ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றதாக திகழ்கிறது.

    ‘கள் குடித்தல், இறைச்சி உண்ணுதல் போன்ற செயல்களைச் செய்யக் கூடாது’ என்று அவனுடைய பெற்றோர் கண்டித்ததால், பெற்றோருக்குத் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறிய முத்தப்பன், தன்னுடன் நண்பனான திருவப்பனையும், தான் வளர்த்த நாயையும் கூட்டிச் சென்றான். இறைவனாக முத்தப்பன் கோவில் கொண்ட இடத்தில், அவரது நண்பனான திருவப்பனுக்கும் வழிபாடு நடக்கிறது. முத்தப்பன் சிவபெருமானின் தோற்றம் என்றும், திருவப்பன் விஷ்ணுவின் தோற்றம் என்றும், இந்த ஆலயம் சிவன், விஷ்ணு இணைந்த கோவில் என்றும் சிலர் தெரிவிக்கின்றனர்.

    கோவில் அமைப்பு :

    பரசினிக்கடவு எனுமிடத்தில் அமைந் திருக்கும் இக்கோவிலில் சிறிய கருவறை ஒன்று இருக்கிறது. இதனுள் இரண்டு பஞ்சலோகச் சிலைகள் இருக்கின்றன. ஒரு சிலையினைத் ‘திருவப்பன்’ என்றும், மற்றொரு சிலையை ‘வெள்ளாட்டம்’ என்றும் சொல்கின்றனர். கருவறையினுள் வாள், திரிசூலம் போன்ற சில ஆயுதங்களும் இருக்கின்றன. கேரளக் கோவில்களின் கருவறைக்கு எதிரே அமைக்கப்படும் வழிபாட்டு மண்டபம் இந்தக் கோவிலில் இல்லை.

    பரசினிக்கடவு முத்தப்பன் கோவிலுக்குச் சமயப்பாகுபாடின்றி அனைவரும் வந்து செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இக்கோவில் காலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை திறந்திருக்கிறது. இங்கு வரும் பக்தர் களுக்குப் பச்சைப்பயறு, தேங்காய்த் துண்டு, தேநீர் போன்றவை வழங்கப்படுகின்றன. இது தவிர தினமும், வாழைப்பழம், மிளகு, அரிசி மாவு, மஞ்சள்பொடி சேர்த்துத் தயாரித்த உணவு வழங்கப்படுகிறது. சில வேளைகளில் தேங்காய்த் துண்டு, வறுத்த கருவாடு போன்றவையும் கொடுப்பதுண்டு.



    தங்கள் வேண்டுதல் நிறைவேறுவதற்காகக் கோவிலுக்கு வரும் பக்தர்கள் முத்தப்பன் வழிபாட்டிற்காகத் தேங்காய், வெற்றிலை, பாக்கு, பச்சைப்பயறு, மீன், கருவாடு போன்றவற்றுடன் கள்ளையும் சேர்த்துத் தருகின்றனர். முத்தப்பனுக்குப் பிடித்தமான இந்த வழிபாட்டுப் பொருட்களைக் கொடுத்தால், அவர் பக்தர்கள் வேண்டியது அனைத்தையும் நிறைவேற்றித் தருவார் என்பது இக்கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

    முத்தப்பன் கோவிலில் புத்தரி திருவப்பன் பெருந்திருவிழா கார்த்திகை மாதத்தில் ஐந்து நாட்கள் நடைபெறுகிறது. இவ்விழாவிற்குக் கேரளா மட்டுமின்றி, பிற மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

    திருவப்பன் - முத்தப்பன் :

    இக்கோவிலில் இருவர் தன்னைத் திருவப்பனாகவோ அல்லது முத்தப்பனாகவோ வேடமிட்டுத் தெய்யம் ஆட்டம் ஆடுகின்றனர். திருவப்பனாக வேடமிடுபவர், தலையில் தலைப்பாகை ஒன்றை அணிந்திருப்பார். அந்தத் தலைப்பாகையின் மேல் பகுதி மூன்று பிரிவுகளாகப் பிரிந்திருக்கும். நடுப்பகுதி மிக உயரமாக இருக்கும். கண்களுக்கு வெள்ளியாலான ஒரு தகடை அணிந்து கொள்வதுடன், நீண்ட கருமையான தாடியும் வைத்துக் கொண்டிருக்கிறார்.

    முத்தப்பனாக வேடமிடுபவர் கோவிலின் உள்ளே காணப்படும் அம்பையும் வில்லையும் எடுத்து இடக்கையில் வைத்துக் கொள்கிறார். இவர் அணிந்திருக்கும் தலைப்பாகையின் உயரம் குறைவானது. இவருக்கு வெள்ளை நிறத்தில் தாடி இருக்கிறது. பக்தர் களுக்குத் தேங்காய்க் கீற்றைப் பிரசாதமாகத் தரும், இவர் அங்கு சுற்றிக் கொண்டிருக்கும் நாய்களுக்கும் தேங்காய்த் துண்டு களைச் சாப்பிடக் கொடுக்கிறார். அவ்வப்போது பக்தர்கள் வழங்கும் கள்ளை முத்தப்பனாக இருப்பவர், அருந்திவிட்டுப் பக்தர்களுக்கும் தருகிறார்.

    இக்கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்கள், தெய்யம் ஆட்டமாடும் திருவப்பனையோ, முத்தப்பனையோ கண்டு தங்களது மனக்குறைகளைக் கூறித் தங்கள் துன்பங்கள் மறைந்திட உதவும்படி வேண்டுகின்றனர். அவர்களுக்குக் கடவுளாக இருந்து, அவர்களின் துன்பத்திலிருந்து விடுபட நல்ல வழியைக் காட்டுகின்றனர். பக்தர்கள் வழங்கும் காணிக்கையை இருவருமே பெற்றுக் கொள்கின்றனர்.

    முத்தப்பன் கோவில்கள் :

    கேரளாவின் கண்ணூர், காசர்கோடு உள்ளிட்ட வட மாவட்டங்களில் பல கிராமங்களில் முத்தப்பன் கோவில்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இக்கோவில்களில் குன்னத்தூர்படி, பரசினிக்கடவு தவிர்த்து, புரலிமலா, பாடவில், தில்லங்கேரி, கண்ணபுரம், வல்லுவன்கடவு போன்ற ஊர்களில் அமைந்திருக்கும் கோவில்களும் சிறப்பு பெற்றிருக்கின்றன. இது போல் கேரளாவின் வடமாவட்டங்களுக்கு அருகிலிருக்கும் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மாநில எல்லையிலுள்ள சில ஊர்களிலும் முத்தப்பனுக்குக் கோவில்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. இவை தவிர, மலேசியாவில் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் புக்கிட் பெர்த்தாம், ஜொகூர் மாநிலத்தில் தம்போய் ஆகிய இடங்களிலும் முத்தப்பனுக்குக் கோவில்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இக்கோவில்களில் முத்தப்பனுக்குப் பிடித்தமான மது, இறைச்சி ஆகியவற்றைப் படைத்து வழிபாடு கள் செய்யப்படுகின்றன.

    வழிபாடு இல்லை :

    இக்கோவிலில் ஐப்பசி 1-ந் தேதி முதல் கார்த்திகை மாதம் 11-ந் தேதி வரையிலும், ஆடி மற்றும் ஐப்பசி மாத அமாவாசை நாட்களிலும், ஆலயத்தில் பூஜை செய்பவரின் குடும்பத்தில் ஏதேனும் மரணம் நிகழ்ந்திருந்தாலும் மேற்படி வழிபாடு நடத்தப்படுவதில்லை.

    அமைவிடம் :

    கேரள மாநிலம், தாலிப்பரம்பா எனும் ஊரிலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவிலும் இருக்கும் பரசினிக்கடவு எனுமிடத்தில் இந்த முத்தப்பன் கோவில் அமைந்திருக்கிறது. இரண்டு ஊர்களிலிருந்தும் இக்கோவிலுக்குச் செல்ல நகரப் பேருந்து வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன.
    Next Story
    ×