search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ராகு - கேது தோஷ பரிகார ஸ்தலங்கள்
    X

    ராகு - கேது தோஷ பரிகார ஸ்தலங்கள்

    ராகு, கேது ஆகிய கிரகங்களால் ஏற்படும் தோஷங்களைச் சர்ப்ப தோஷம் என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன. சர்ப்ப தோஷத்திற்கு சிறந்த பரிகார ஸ்தலங்களை பார்க்கலாம்.
    ராகு-கேது தோஷம் உள்ளவர்கள் வழிபட வேண்டிய பரிகாரத் தலங்கள்.....

    * சிதம்பரம் நடராஜர் ஆலயம், சிவகாமசுந்தரியின் சந்நிதியில் உள்ள சித்திரகுப்தரை திங்கட்கிழமை எமகண்ட வேளையில் வணங்கினால் கேது தோஷம் நீங்கும்.

    * நாகர்கோவில், நாகநாதர் ஆலயத்தில் மூலவரே நாகர்தான். கருவறையின் ஓலை விதானத்தில் எப்போதும் ஒரு நாகம் காவல் காக்கிறது என்பது ஐதீகம். இங்குள்ள இரண்டு அரச மரங்களை வலம் வந்து நாகராஜனையும், நாகராணி என்ற துர்க்கையையும் வழிபட, ராகு-கேது தோஷங்கள் நீங்குகின்றன.

    * கேரள மாநிலம் - ஆலப்புழை, ஹரிபாத நகரிலிருந்து மூன்று கி.மீ தொலைவில் உள்ளது மன்னார் சாலை. இங்கு நாகராஜன், சர்ப்பயக்ஷியோடும், சகோதரி நாகசாமுண்டியோடும் தாத்தாஇடம் என்ற பாதாள அறையில் தரிசனம் தருகிறார். ராகு - கேதுவால் பாதிக்கப்பட்டவர்கள் ஆயில்ய நட்சத்திரத்தன்று இங்கு வந்து முறையாக வழிபட அந்த தோஷங்கள் நீங்குகின்றன.

    * நெல்லை மாவட்டத்தில் உள்ளது சங்கரநாராயணர் ஆலயம். இங்கு அருளும் கோமதியம்மன் சந்நிதியின் புற்று மண் தீரா நோய் தீர்க்கும் மாமருந்து. வீடுகளில் விஷ பூச்சிகள் வராமல் இருக்க வெள்ளியினாலான பாம்பு, தேள் போன்ற உருவங்களை உண்டியலில் செலுத்துகிறார்கள். இவ்வாறு செலுத்தினால் நாகதோஷம் நீங்கப்பெறுவர்.

    * ராமநாதபுரம், பரமக்குடியிலிருந்து 19 கி.மீ தொலைவில் உள்ளது நயினார் கோயில். இங்குள்ள இறைவன் -நாகநாதர். ஆதிசேஷனும் அஷ்ட நாகங்களும் வழிபட்ட மூர்த்தி இவர். ராகு-கேது தோஷங்கள் நீங்க இங்குள்ள வாசுகி தீர்த்தத்தில் நீராடி இறைவனை வணங்க தோஷங்கள் நீங்குகின்றன.

    * திருநெல்வேலியில் கார்க்கோடகன் என்று அழைக்கப்படும் ராகு-கேது தலம் அமைந்திருக்கிறது. இங்கு ஸ்ரீநிவாசப் பெருமாள் ராகு-கேது அம்சமாகத் திகழ்கிறார். இவருக்கு அமிர்தகலசம் செய்து நிவேதித்தால் ராகு-கேது தோஷங்கள் நீங்கும்.

    * மதுரையிலிருந்து 80 கி.மீ தொலைவில் உள்ள கோடங்கிபட்டியில் அருளும் சித்திரகுப்தரை பவுர்ணமி தினங்களில் வழிபட்டால் கேது தோஷம் நீங்குகிறது. கேதுவின் அதிதேவதை சித்திரகுப்தர் ஆவார்.

    * கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருப்பனந்தாள், ஆதிசேஷனும் நாகக்கன்னிகைகளும் வழிபட்ட தலம். இங்குள்ள கிணற்றில் நாகக் கன்னிகை பீடம் காணப்படுகிறது. இத்தல ஈசனை வழிபட ராகு-கேது தோஷம் நீங்கும்.

    * சென்னை, பல்லாவரத்திலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது திருநீர்மலை. இங்கு குளக்கரையில் தூமகேது கணபதி அருள்கிறார். தூமம் ராகுவையும் கேது கேதுவையும் குறிக்கும். ராகு-கேது அம்சமாய் விளங்கும் இவரை தரிசித்தால் அரவு கிரகங்களால் ஏற்படும் சுபகாரியத் தடைகள் விலகி மங்களங்கள் உண்டாகும்.

    * ஆதிசேஷனால் நிர்மாணிக்கப்பட்ட திருவஹிந்திரபுரம், கடலூர்-பண்ருட்டி பாதையில் 6 கி.மீ தொலைவில் உள்ளது. பெருமாளின் தாகத்தைத் தீர்க்க ஆதிசேஷனால் உண்டாக்கப்பட்ட சேஷ தீர்த்தக் கரையில் உள்ள நாக சர்ப்பத்தை வழிபட, ராகு-கேது தோஷங்கள் நீங்கும்.

    * திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் அபீதகுஜாம்பாள் சந்நிதிக்கு முன் மண்டபத்தில் அருளும் சித்திரகுப்தரை தரிசித்து வலம் வந்தால் கேது தோஷ பாதிப்பிலிருந்து நிவாரணம் பெறலாம்.

    * கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள பட்டீஸ்வரர் ஆலயத்தில் தனி சந்நிதி கொண்டு அருள் பொழியும் துர்க்கையை தரிசித்தால் ராகு-கேது, செவ்வாய் தோஷங்கள் நீங்கும். இந்த துர்க்கை நவகிரகநாயகி என போற்றப்படுகிறாள்.

    * நாகப்பட்டினம், வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து 3 கி.மீ மணல்மேடு வழியில் கோயில் கொண்டிருக்கிறார் புற்று வடிவான சிவலோகநாதர். இவருக்கு திங்கட்கிழமைகளில் புனுகுச்சட்டம் சாற்றி வழிபட ராகு-கேது தோஷங்கள் விலகுகின்றன.

    * தஞ்சையிலிருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள தலம் புன்னைநல்லூர். இத்தலத்தில் மூன்றாம் பிரகாரத்தில் தென்மேற்குப் பகுதியில் காணப்படும் பாம்புப் புற்றுக்கு பக்தர்கள் பால், முட்டை ஆகியவற்றை வைத்து வணங்குகின்றனர். 12 அடிக்குமேல் நீளம் உள்ள பாம்பு ஒன்று 6-4-1988-ல் இங்கு சட்டை உரித்து விட்டுச் சென்றிருக்கிறது. அதை பொதுமக்களின் பார்வைக்காக கண்ணாடிப் பெட்டியில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். நாக தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழி பட்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.

    முதலில் ராகுகால பூஜை நடந்த ஆலயம் :

    தமிழ்நாட்டில் ராகு கால பூஜை முதன் முதலில் தொடங்கிய பெருமை குடந்தை அருள்மிகு காளிகா பரமேஸ்வரி காமாட்சி அம்மன் கோவிலில் தான் எனப்படுகிறது. இங்கே நாள் தோறும் ராகு கால பூஜை நடைபெற்று வருவது சிறப்பு.
    Next Story
    ×