search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருவாய்ப்பாடி ஸ்ரீபாலுகந்த நாதர் திருக்கோவில்
    X

    திருவாய்ப்பாடி ஸ்ரீபாலுகந்த நாதர் திருக்கோவில்

    சிவாலயங்களில் பிரகாரச்சுற்றில் மற்ற நாயன்மார்கள் ஒரே இடத்தில் வீற்றிருக்கையில், இவர் மட்டும் கருவறையின் அபிஷேக நீர் வெளியேறும் கோமுகம் அருகே தனிச் சன்னிதியில் இடம் பெற்றிருப்பதை காணலாம்.
    இறைவன் இணையற்றவன், அவனை வழிபட கோடிக்கணக்கில் செலவிட்டு ஆடம்பரமாக பூஜை புனஸ்காரங்கள் செய்ய வேண்டிய அவசியமில்லை. மனதால் நினைத்து.. வாயால் போற்றி.. நினைவில் நிறுத்தி.. கையில் கிடைப்பதை மனமுவந்து படைத்து.. மனமுருக மெய்யுருக பிரார்த்தனை செய்தாலே போதுமானது. தன்னை நம்பும் எவரையும் இறைவன் கைவிடுவதில்லை.

    இதற்கு உதாரணம், சண்டேசுவர நாயனாரின் வரலாறு.

    சண்டேசுவரர், சண்டிகேசுவரர் என இருவிதமாக அழைக்கப்படும் இவர், நாயன்மார்களில் ஒருவர். ஈசுவர பட்டம் பெற்ற ஐவரில் ஒருவர். சிவாலயங்களில் பிரகாரச்சுற்றில் மற்ற நாயன்மார்கள் ஒரே இடத்தில் வீற்றிருக்கையில், இவர் மட்டும் கருவறையின் அபிஷேக நீர் வெளியேறும் கோமுகம் அருகே தனிச் சன்னிதியில் இடம் பெற்றிருப்பதை காணலாம்.

    சிவாலயங்களில் நடைபெறும் அர்த்தசாம பூஜையின்போது இறுதியாக இவருக்கும், பைரவருக்கும் தீபாராதனை காட்டி முடித்த பின்னரே ஆலயத்தை மூடும் வழக்கம் இன்றளவும் நடைமுறையில் உள்ளது. இதுமட்டுமின்றி ஆலய திருப்பணியை தொடங்கும்போது இவரது சன்னிதியின் திருப்பணியே முதலில் தொடங்கப்படுவதும், விழாக் காலங்களில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவில் ஐந்தாவது மூர்த்தியாக இவரின் உற்சவத்திருமேனி அலங்கரிக்கப்பட்டு வீதியுலா கொண்டுவரப்படுவதும் இவருக்குரிய சிறப்பாகும். இத்தகைய சண்டி கேசுவரர், சிவனால் ஆட்கொள்ளப்பட்டவர்.

    சோழவள நாட்டில் சேய்ஞலூர் என்னும் ஊரில், எத்தச்சன் என்ற அந்தணர் வாழ்ந்து வந்தார். இவரது மனைவி பெயர் பவித்ரை. இந்த தம்பதியினருக்கு இறையருளால் ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு விசாரு தருமன் என்ற பெயர் சூட்டி வளர்த்து வந்தனர். ஏழாம் வயதில் குருகுலத்தில் சேர்த்து வேதவிசாரங்களையும் கற்றுத் தந்தனர். அனைத்தையும் கவனமுடன் கற்ற விசாருதருமன், கல்வி கேள்விகளில் ஞானமுள்ளவனாக திகழ்ந்தான்.

    அவன் ஓய்வு நேரங்களில் தன் பள்ளி தோழர் களுடன் பழவாறு என்ற பகுதிக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தான். அப்படி சென்ற ஒருநாளில் அங்கு மேய்ந்துக் கொண்டிருந்த ஆநிறைக் கூட்டத்தில் கன்று ஈன்ற பசு ஒன்று, தன் கன்றுக்கு இடையூறு தர வருவதாக தவறாக எண்ணி அருகினில் வந்த இடையனை முட்டச் சென்றது. கோபமுற்ற இடையன் கன்று ஈன்ற நிலையில் இருப்பதையும் பொருட்படுத்தாது பசுவை அடித்தான். இது கண்டு வேதனையுற்ற விசாருதருமன் உள்ளூர் வேதியர்களின் அனுமதியைப் பெற்று அப்பசுக்களை மேய்க்கும் பணியை தானே ஏற்றுக்கொண்டான்.

    அனுதினமும் பசுக்களை வேதியர் இல்லங்களிலிருந்து ஓட்டிவந்து, புற்கள் அதிகமுள்ள இடத்தில் மேய்த்து, பழவாற்றுக்கு ஓட்டிச்சென்று நீர் அருந்தச்செய்து, பின்னர் வீடுகளுக்கு ஓட்டிச் செல்வான். பசுக்கள் மேய்ந்து கொண்டிருக்கும் நேரத்தில், சிவனை மனதால் வணங்கியும் வந்தான். மண்ணியாற்றின் கரையில் அத்திமர நிழலில் மணலை குவித்து சிவலிங்கத்தை வடிவமைத்து அனுதினமும் அதற்கு பூஜை செய்தான். அப்போது அபிஷேகத்திற்கு பசுக்களின் பாலையும் பயன்படுத்தினான்.

    இதைப் பார்த்த வழிப்போக்கன் ஒருவன், பசுவின் சொந்தக்காரர்களிடம் இதுபற்றி தெரிவித்தான். அவர்கள் விசாருதருமனின் தந்தை எத்தச்சனை அழைத்து கடிந்து கொண்டனர். எத்தச்சன் தன் மகனின் செயலுக்காக மன்னிப்புக் கோரியதுடன், அவனை தண்ணடிப்பதாகவும் தெரிவித்தார்.

    மறுநாள் வழக்கம் போல பசுக்களை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்ற விசாருதருமன், அவைகளை மேயவிட்டுவிட்டு பூஜை பணிகளை தொடங்கினான். சிவலிங்கத்தை உருவாக்கி அபிஷேகம் செய்து மலர்களை பறித்துவந்து மாலையாக்கி சூட்டி பூஜையில் ஈடுபட்டான். இக்காட்சிகளை சற்று தூரத்தில் மறைந்திருந்து பார்த்த எத்தச்சன், கோபத்தில் ஒரு கோலால் மகனை தாக்கியதுடன் அபிஷேகத்திற்காக வைத்திருந்த பாற்குடத்தை காலால் எட்டி உதைத்தார். தந்தையின் செயலை சற்றும் எதிர்பாராத விசாருதருமர் அதை சிவபாதகமாக கருதி, தந்தை என்றும் பாராமல் ஒரு கோலை எடுத்து ஓங்கினார். அது மழுவாக மாறி எத்தச்சனின் கால்களை துண்டிக்க, அவர் அந்த இடத்திலேயே உயிர்நீத்தார்.

    இவை எதுப்பற்றியும் கவலைக்கொள்ளாது விசாருதருமர், தன் போக்கில் சிவபூஜையை தொடர்ந்தார். விசாருதருமரின் பூஜையால் மகிழ்ந்த சிவபெருமான், மணல் லிங்கத்தில் இருந்து சிவசக்தி சமேதராய் காட்சி தந்தார். விசாருதருமர் அவரை சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார். சிவன் அவரை தம் கரங்களால் பற்றி ‘எம்பொருட்டு உம் தந்தையின் கால்களை வெட்டியெறிந்து இறக்கச் செய்தாய். இனி உமக்கு நாமே தந்தையாவோம்’ என்று அருள் புரிந்து தழுவிக்கொண்டார்.

    இறைவனால் தீண்டப்பட்டதால் விசாருதருமர் பேரொளி பெற்றார். சிவபெருமான் அவரை தம் தொண்டர்களுக்கெல்லாம் தலைவனாக்கியதுடன், தாமுண்ட அமுதும், தனக்கு சூட்டப்பட்ட பரிவட்டமும் உமக்கும் ஆகுக என்று அருள்புரிந்தார். சண்டீசன் என்ற பதவியையும் அளித்தார்.

    சண்டேசுவரரின் பாலாபிஷேகத்தை ஏற்றுக் கொண்ட காரணத்தால் அவர் பிரதிஷ்டை செய்த லிங்கம் பாலுக்குகந்த நாதராகி வழக்கில் பாலுகந்தநாதராக பெயர்பெற்றது. இவ்வரலாறு நிகழ்ந்த இடமான திருஆப்பாடி (ஆ என்பது பசுவையும் பாடி என்பது மேய்ச்சல் காட்டையும் குறிப்பதாகும்), பேச்சு வழக்கில் ‘திருவாய்ப்பாடி’ என்று அழைக்கப்படுகிறது. இவ்வூர் சண்டேசுவரரின் அவதார தலமான சேய்ஞலூரிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் வடக்கிலும், திருப்பனந்தாளில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் தெற்கிலும் இருக்கிறது.

    கிழுக்கு நோக்கிய இந்த ஆலயத்திற்கு, ராஜகோபுரம் இல்லை. நந்திதேவரையும் பலிபீடத்தையும் வணங்கி உள்ளே வர வவ்வால் நெற்றி மண்டபமும், அதனை அடுத்து மகாமண்டபமும் இடம் பெற்றுள்ளன. மகாமண்டபத்தில் பைரவர், சூரியன், சனிபகவான் மற்றும் நடராஜர் சன்னிதிகள் உள்ளன. அர்த்த மண்டபத்தில் சண்டிகேசுவரர் சன்னிதி இருக்கிறது. கருவறையில் சிவன் சுயம்பு மூர்த்தியாகவும் அனுக்கிரக மூர்த்தியாகவும் இருந்து அருள்பாலிக்கிறார்.

    மற்ற ஆலயங்களில் பிரகாரச் சுற்றில் இருக்கும் சண்டேசுவரர், இத்தல இறைவனால் ஆட்கொள்ளப்பட்டதாலும், ஈசுவர பட்டமும் சண்டீச பதவியை பெற்றதாலும் இத்தலத்தில் இறைவனுக்கு இடதுபக்கத்தில் கருவறையை ஒட்டிய அர்த்த மண்டபத்தில் தென்முகமாக இருந்து அருள்பாலிக்கிறார். இக்காட்சி வேறு எந்த ஆலயத்திலும் காணக்கிடைக்காதது. சேய்ஞலூரில் அவதரித்து திருவாய்பாடியில் முக்திபெற்ற சண்டேசுவரரை பதவி உயர்வு வேண்டுவோரும் பணி நிரந்தரம் வெண்டுவோரும் பிரார்த்தனை செய்து வழிபட்டுச் செல்கின்றனர். மாசி மாத அமாவாசைக்கு முன்தினமான சிவராத்திரியில் இவருக்கு பிரம்மோற்சவம் நடத்தப்படுகின்றது.

    கை தட்டும் வழக்கம் :

    சிவபெருமானுக்குப் படைக்கப்படும் உணவு மற்றும் உடைகளுக்கு அதிபதியான இவர், சதாநேரமும் தியானத்தில் இருப்பவர். சிவபெருமானுக்கு படைக்கப்படும் பொருட்கள் இவர் கணக்கில் வரவு வைக்கப்படுவதாக ஐதீகம். ‘சிவன் சொத்து குலநாசம்’ என்ற கருத்தின் அடிப்படையில், சிவாலய வழிபாட்டை முடித்துவிட்டு வெளியே வருவோர், ஆலயத்திலிருந்து எந்த பொருளையும் எடுத்துச் செல்லவில்லை என்பதை உணர்த்தும் விதமாக இவர் திருச்சன்னிதி முன் நின்று இருகரங்களையும் விரித்துக் காட்டி பின் ஒன்றோடொன்றாய் தேய்த்து வெறுங்கையாகச் செல்கிறோம் என்பதாக உணர்த்திவிட்டு வணங்கிச் செல்வது வழக்கம். இதுவே நாளைடைவில் கைதட்டலாகவும், சொடுக்குப் போடுவதாகவும் உருமாறியது.

    தமிழ்நாடு இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் இருக்கும் இந்தக் கோவில் தினமும் காலை 7 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 6 மணி யில் இருந்து இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    கும்பகோணம், ஜெயங்கொண்டம், காட்டுமன்னார்கோயில் ஆகிய ஊர்களிலிருந்து திருவாய்ப்பாடிக்கு பேருந்துகள் உள்ளன. சென்னையில் இருந்து சேத்தியாதோப்பு மார்க்கமாக கும்பகோணம் செல்லும் பேருந்துகள் திருவாய்ப்பாடி வழியாகவேச் செல்கிறது.
    Next Story
    ×