search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    குழந்தைப்பேறு அருளும் செங்கழுநீர் அம்மன் கோவில்
    X

    குழந்தைப்பேறு அருளும் செங்கழுநீர் அம்மன் கோவில்

    மரமே மூலவராக விளங்கும் ஆலயம், மீனவ சமுதாயத்தின் காவல் தெய்வம், என்ற பெருமைகளை கொண்டு திகழ்வது, புதுச்சேரி வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் ஆலயம்.
    மரமே மூலவராக விளங்கும் ஆலயம், மீனவ சமுதாயத்தின் காவல் தெய்வம், புதுச்சேரி மாநிலத்தின் புகழ்பெற்ற அம்மன் ஆலயம் என பல்வேறு பெருமைகள் கொண்ட திருக்கோவிலாகத் திகழ்வது, புதுச்சேரி வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் ஆலயம்.

    ஆண்டுதோறும் எல்லாக் கோவில்களில் விழாக்கள் நடைபெறுவதும், அதில் முக்கிய விழாவாகத் தேர்த் திருவிழா கொண்டாடப்படுவதும் வழக்கமான ஒன்றுதான். ஆனால் செங்கழுநீர் அம்மன் ஆலயத்தில் நடைபெறும் தேர்த் திருவிழாவை, மாநில ஆளுநரும், முதல்- அமைச்சரும் சேர்ந்தே வடம் பிடித்து இழுத்து வைப்பார்கள். இது இன்று, நேற்றல்ல.. பிரெஞ்சு ஆட்சிக்காலத்தில் இருந்தே தொடர்ந்து நடைபெற்று வரும் வழக்கம்.

    தல வரலாறு :

    செங்கழுநீர் அம்மன் ஆலயத்தின் வரலாறு மிகவும் சிறப்பானது. சுமார் ஐந்நூறு ஆண்டு களுக்கு முன்னர், வீரராகவன் என்ற மீனவர் இந்தப் பகுதியில் வாழ்ந்து வந்தார். இவர் மிகுந்த தெய்வப் பக்தி கொண்டவர்.

    ஒருநாள் காலையில் வழக்கம் போல் மீன் பிடிப்பதற்காக வலையைத் தோளில் சுமந்து, அருகேயுள்ள செங்கழுநீர் ஓடைக்குச் சென்றார். நெடுநேரம் வலை வீசியும் மீன் எதுவும் சிக்கவில்லை. மனம் வெறுத்த வீரராகவன், கடைசியாக ஒருமுறை முயற்சி செய்தார். வலையில் மிகப்பெரிய மீன் சிக்கியதற்கான அறிகுறி தென்பட்டது. மகிழ்ச்சியில் திளைந்த அவர் வலையைக் கரைக்கு இழுத்து வந்தார். ஆனால் வலையில் சிக்கியது மீனல்ல, மிகப்பெரிய மரக்கட்டை. என்றாலும் அதை அங்கேயே விட்டுச் செல்ல மனம் இல்லாமல், அந்த மரக்கட்டையைத் தன் வீட்டுத் தோட்டத்தில் கொண்டுவந்து சேர்த்தார்.

    மரக்கட்டையின் மகத்துவம் :

    நாட்கள் பல கடந்தன. ஒரு நாள் அடுப்புஎரிக்க விறகு இல்லாததால், வீரராகவனின் மனைவி கொல்லை புறத்தில் கிடந்த மரக்கட்டையை எடுத்தாள். அதை கோடாரியைக் கொண்டு பிளக்க முயன்றாள். மரத்துண்டு மீது கோடாரி பட்டதும், அது உடைவதற்கு பதிலாக, மரக்கட்டையில் இருந்து ரத்தம் வெளியேறியது. இதைக் கண்ட அந்தப் பெண் அச்சம் கொண்டாள். இந்தச் செய்தி ஊர் முழுவதும் பரவியது.

    இந்த நிலையில் வீடு திரும்பிய வீரராகவன், அந்த மரக்கட்டையை தன் வீட்டிற்குள் வைத்து அதை தெய்வமாக நினைத்து பூஜித்து வரத் தொடங்கினார். அதன்பிறகு அவரது வாழ்வில் மகிழ்ச்சியும், செல்வ வளமும் ஏற்பட்டது.

    இந்நிலையில் ஒருநாள் இரவு வீரராகவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். அப்போது ஒரு கனவு தோன்றியது. அதில் பிரகாசமான ஒளியுடன் அழகிய அம்மன் தோன்றி, ‘பக்தனே! தெய்வீகத்தன்மை பெற்ற ரேணுகை நான்தான். அன்னை பராசக்தியின் ஒரு பகுதி. இவ்வூர் செய்த தவத்தின் பயனால் இங்கே குடியேற வந்துள்ளேன். அதன் முன்னோட்டமாகவே ஒரு மரத்துண்டு உன்னிடம் வந்து சேர்ந்துள்ளது.

    அந்த மரத்தை நான் குறிப்பிடும் இடத்தில் நிறுவி, அதன்மீது என் திருவுருவை விக்கிரகத்தால் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வா!. அந்த இடம் பல்லாண்டு காலம் சித்தர் வழிபட்டு வரும் சித்தர் பீடமாகும். அதுவே எனக்கு ஏற்ற இடம். என்னை செங்கழுநீர் அம்மன் என்ற திருப்பெயரில் அழைக்கலாம்’ என்று கூறி, அன்னை ரேணுகா மறைந்தாள். திடுக்கிட்டு எழுந்த வீரராகவன் மனதில் பெருமகிழ்ச்சி ஏற்பட்டது. இதனை ஊர் மக்களுக்கும் தெரிவித்தார். அனைவரும் வியந்தனர்.



    செங்கழுநீர் அம்மன் :

    மறுநாள் மக்கள் அனைவரும் ஒன்றுகூடி, அன்னை குறிப்பிட்ட இடத்தைத் தேடினர். அப்போது புதர்கள் அடர்ந்த பாம்புப் புற்று ஒன்றைக் கண்டனர். அதிலிருந்து வெளிப்பட்ட பெரிய நாகம் ஒன்று, படம் விரித்து ஆடியது. பின்பு மூன்று முறை பூமியில் அடித்து இடத்தை அடையாளம் காட்டி மறைந்தது.

    அந்த இடத்தைத் சுத்தம் செய்து, வலையில் சிக்கிய மரத்துண்டை பீடமாக அமைத்தனர். பிறகு கழுத்துக்கு மேற்பட்ட அருள்பூத்த முகத்தை உருவமாக வடித்து வைத்தனர். செங்கழுநீர் ஓடையில் கிடைத்ததன் நினைவாக அன்னைக்கு ‘செங்கழுநீர் அம்மன்’ என்ற திருப்பெயரே நிலை பெற்றது. அதன்பிறகு தேவதாரு மரத்தால் செய்யப்பட்ட முழு உருவம் ஒன்று, ஏற்கனவே இருந்த அம்மனின் பின்புறம் அமைக்கப்பட்டது.

    புதுவை மாநிலத்தின் தொன்மைக்கு எடுத்துக்காட்டாய் விளங்குவது, அரிக்கமேடு பகுதி. இங்கு பழங்காலத்தில் ரோமானியர்களோடு நெருங்கிய வாணிபத் தொடர்பு இருந்து வந்ததை வரலாறு நமக்கு எடுத்துக் காட்டுகிறது. அத்தகைய சிறப்புமிகு அரிக்கமேடு பகுதியை அடுத்து உள்ள கடலோர கிராமம் தான் வீராம்பட்டினம். இங்கு தான் பழம்பெருமை வாய்ந்த செங் கழுநீர் அம்மன் திருக்கோவில் கொண்டுள்ளாள்.

    பரிகாரத் தலம் :

    தீராத நோய் தீர, கண் பார்வைக் கோளாறு நீங்க, திருமணப் பேறு, குழந்தைப் பேறு வேண்டுவோர் எனப் பலருக்கும் கண்கண்ட தெய்வமாக இவ்வம்மன் விளங்குவதால், அன்னையை நாடி வரும் பக்தர்கள் எண்ணிக்கை கூடிக் கொண்டே வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் முதல் வெள்ளியில் இருந்து ஆறு வெள்ளிக்கிழமைகள் வரை வீராம்பட்டினம் விழாக்கோலம் பூண்டிருக்கும்.

    ஆடி ஐந்தாம் வெள்ளியன்று தேர்த் திருவிழா நடைபெறும். இந்த நாளில்தான் புதுவை மாநிலத்தின் ஆளுநர், மாநில முதல்-அமைச்சர் இருவரும் வடம் பிடித்து தேரோட்டத்தைத் தொடங்கி வைப்பார்கள்.

    கோவில் நிர்வாகத்தை அறங்காவலர் குழுவும், கிராம பஞ்சாயத்தும், கிராமப் பொதுமக்களும் சேர்ந்து கவனித்து வருகின்றனர். பூஜைகள் செய்யும் பணியினை சிவாச்சாரியார்கள் மேற்கொண்டு வருகின்றனர். ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையும் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.

    அமைவிடம் :

    புதுச்சேரி- கடலூர் நெடுஞ்சாலையில் உள்ளது அரியாங்குப்பம். இங்கிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் வீராம்பட்டினம் உள்ளது. புதுச்சேரி பேருந்து நிலையத்தில் இருந்து வீராம்பட்டினத்திற்கு டவுன் பஸ் வசதியும் உண்டு.
    Next Story
    ×