search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சூரிய பகவானுக்கு அருள் செய்த ஆபத்சகாயேஸ்வரர் கோவில்
    X

    சூரிய பகவானுக்கு அருள் செய்த ஆபத்சகாயேஸ்வரர் கோவில்

    நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறைக்கு வடமேற்கே 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பொன்னூர் என்ற இடத்தில் உள்ளது ஆபத்சகாயேஸ்வரர் ஆலயம்.
    சிவாலயங்களில் காலைசந்தி எனப்படும் காலை நேர ஆராதனை, காலை ஆறு மணியளவில் நடைபெறுவது வழக்கம். ஆனால் பொன்னூரில் விடியற்காலை 4.30 மணிக்கே காலை பூஜைகள் நடைபெறுகிறது. அங்கு மட்டும் முன்கூட்டியே இந்த காலைசந்தி பூஜை நடைபெறுவதற்கான காரணம் ஏதும் இருக்கிறதா? என்று கேட்டதில், ‘ஆம்’ என்றனர்.

    அது என்ன கதை என்று பார்ப்போம்.

    பொன்னூரில் உள்ளது ஆபத்சகாயேஸ்வரர் ஆலயம். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் ஆபத்சகாயேஸ்வரர் என்பதாகும். அக்னி தேவருக்கு அருள்பாலித்ததால் ‘அக்னீசுவரர்’ என்றும், பாண்டவருக்கு காட்சி கொடுத்ததால் ‘பாண்டவேசுவரர்’ என்றும், ரதிதேவிக்கு கருணை புரிந்ததால் ‘ரதீசுவரர்’ என்றும் பல்வேறு பெயர்களால் இத்தல இறைவன் அழைக்கப்படுகிறார். இறைவியின் பெயர் பெரியநாயகி. திரு அன்னியூர் என்று புராணங்களில் அழைக்கப்படும் இந்த ஊர், தற்போது பொன்னூர் என்றே குறிப்பிடப்படுகிறது.

    ஆலய அமைப்பு

    ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ஆலயத்தின் எதிரே உள்ள தீர்த்தம் அக்னி தீர்த்தம். இந்த தீர்த்தத்தை காமசரஸ், சூரியபுஷ்கரணி, வருண தீர்த்தம் என்ற பெயர்களிலும் அழைக்கிறார்கள். கார்த்திகை மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்தத் தீர்த்தத்தில் நீராடி, இத்தல இறைவனையும் இறைவியையும் வழிபட்டால் பாவங்கள் யாவும் நீங்கப் பெறுவார்கள். தவிர, அரிச்சந்திரன், பாண்டவர், ரதிதேவி முதலியோர் இத்திருக்குளத்தில் நீராடி, இறைவனையும் இறைவியையும் வழிபட்டு, தங்களின் பாவங்கள் கரைந்து, நலம் பல பெற்றதாக தல புராணம் கூறுகிறது.

    கோவிலின் அழகிய முகப்பைக் கடந்தவுடன் விசாலமான பிரகாரம் நம்மை வரவேற்கும். அங்கே தனிமண்டபத்தில் உள்ள நந்தியம்பெருமானையும், பலி பீடத்தையும் காணலாம். அதைக் கடந்ததும் மகா மண்டபத்தில் நாம் நுழையலாம். இந்த மண்டபத்தின் வலது புறம் இறைவி ப்ருஹந்நாயகியின் சன்னிதி உள்ளது. இறைவியின் இன்னொரு பெயர் பெரிய நாயகி. இறைவி நான்கு கரங் களுடன் நின்ற கோலத்தில் புன்னகைத் தவழ, தென்முகம் நோக்கி அருள்பாலிக்கும் அழகே அழகு. இறைவியின் சன்னிதிக்கு முன்பாக வும், பலிபீடமும் நந்தியும் இருக்கிறது. கருவறை நுழைவுவாசலின் வலதுபுறம் காமாட்சி அம்மன் திருமேனி உள்ளது.

    மகாமண்டபத்தின் தென்புறம் நால்வர் திருமேனிகளும், கிழக்கே சனீஸ்வரன், நாகர், சூரியன், பைரவர் திருமேனிகளும் உள்ளன. இறைவனின் அர்த்த மண்டபத்தில் நந்தியும் பலிபீடமும் கொலுவிருக்க, அடுத்து உள்ள கருவறையில் இறைவன் லிங்கத் திருமேனியில், சுயம்பு லிங்கமாய் கீழ் திசை நோக்கி அருள்பாலிக்கிறார். கருவறை நுழைவுவாசலின் இடதுபுறம் விநாயகர் வீற்றிருந்து அருள்புரிகிறார்.

    சூரிய பூஜை :

    மயனின் மகளைத்தான் சூரியன் மணந்து கொண்டான். தன் மகளை இழிவுபடுத்தியதால், மயன் சூரியனின் கையை வெட்டினான். கை வெட்டுண்ட சூரியனைப் பார்த்து அவனது மனைவி கதறினாள்; கண்ணீர் விட்டாள். தேவர்களின் குருவான பிரகஸ்பதியிடம் சென்று வேண்டினாள். இழந்த தன் கணவனின் கையை மீண்டும் பெறுவதற்கு வழி சொல்லுமாறு மன்றாடினாள்.

    அவரோ, பூலோகத்தில் இருக்கும் திருஅன்னியூர் சென்று, அங்குள்ள தீர்த்தத்தில் நீராடி அத்தலத்து இறைவனையும், இறைவியையும் வழிபட்டால் இழந்த கையை சூரியன் மீண்டும் பெறலாம் எனக் கூறினார். அதன்படி, சூரியனும், அவர் மனைவியும் திருஅன்னியூர் வந்தனர். ஆலயத்தின் எதிரே உள்ள தீர்த்தத்தில் நீராடி, இறைவனையும் இறைவியையும் வழிபட்டனர். சூரியன் தனது கையை மீண்டும் பெற்றார்.

    இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சூரியன் ஆண்டுதோறும், பங்குனி மாதம் 26-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை ஐந்து நாட்களும் தனது பொற்கதிர்களால் இறைவனை ஆராதித்து வருகிறார். காலை 6 மணி அளவில் இத்தலத்து இறைவனை சூரியன் வழிபடும் காட்சியைக் காண பக்தர்கள் கூடுவார்கள். இதனால் அந்த ஐந்து நாட்களும் காலை 4.30 மணிக்கே ஆலயம் திறக்கப்பட்டு, இறைவனுக்கும் இறைவிக்கும் காலை நேர ஆராதனைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. பின் காலை ஆறு மணிக்கு சூரியன் இறைவனை தன் குளுமையான பொற்கதிர்களால் பூஜை செய்யும் காட்சி தொடங்குகிறது. இந்த அற்புதமான சூரிய பூஜையை, அந்நாட்களில் தினசரி ஏராளமான பக்தர்கள் தரிசித்து பரவசம் அடைவது இன்றும் கண்கூடாகக் காணும் காட்சியாகும்.


    ஆபத்சகாயேஸ்வரர், பெரியநாயகி,

    பரிகார தெய்வங்கள் :

    மேற்குப் பிரகாரத்தில் விநாயகர், வள்ளி- தெய்வானையுடன் கூடிய சுப்ரமணியர், மகாலட்சுமி ஆகியோர் தனித்தனி சன்னிதிகளில் அருள்பாலிக்கின்றனர். வடக்குப் பிரகாரத்தில் சண்டிகேசவர் சன்னிதியும் தலவிருட்சமான எலுமிச்சை மரமும் உள்ளது. வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள் தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கின்றனர். இறைவனின் தேவக் கோட்டத்தின் தென்புறம் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, ஆதி தட்சிணாமூர்த்தி திரு மேனிகளும், மேற்கு திசையில் லிங்கோத்பவரும், வடக்குத் திசையில் துர்க்கையம்மனும் அருள்பாலிக்கின்றனர்.

    தினசரி காலை, சாயரட்சை, அர்த்த சாம பூஜை என மூன்று கால பூஜைகள் இங்கு நடைபெறுகின்றன. திருஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசரால் பாடப்பெற்ற தலம் இது. பிரதோஷம், ஆண்டு பிறப்பு, திருவாதிரை, பொங்கல், தீபாவளி, கார்த்திகை ஞாயிறு ஆகிய நாட்களில் இங்குள்ள இறைவனுக்கும் இறைவிக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

    இத்தலத்து இறைவி பெரியநாயகி. பெண்களின் மனம் கவர்ந்த நாயகி. பெண்களின் குறைகளை தீர்த்து வைப்பதில் நிகரற்றவள் என பக்தர்கள் கூறுகின்றனர். குழந்தை இல்லாத பெண்கள் இத்தலத்து இறைவியிடம் வந்து மனமுருக வேண்டி, ஆராதனை செய்துவிட்டு செல்கின்றனர். அடுத்த ஆண்டே அவர்களுக்கு குழந்தைபேறு கிட்டுகிறது என்கின்றனர் பக்தர்கள்.

    தங்களது குழந்தைகளுடன், மீண்டும் வரும் பெண்கள், இறைவிக்கு கைநிறைய வளையல்களைக் கொண்டு வந்து, அதை இறைவிக்கு அணிவித்து நன்றி தெரிவித்து வழிபட்டு செல்கின்றனர். அவர்கள் மனமும் மகிழ்வில் நிறைகிறது.

    அக்னி பகவான் :

    இத்தலத்தின் தல விருட்சம் எலுமிச்சை மரம். இந்த எலுமிச்சை மரத்தடியில் அமர்ந்துதான், இறைவன் அக்னி பகவானுக்கு அருள்புரிந்தார் என்கிறது தல வரலாறு. அந்த கதை என்ன?

    இந்திரனும், பிரம்மாவும் சிவபெருமானை நோக்கி பல தவங்கள் செய்தனர். யாகங்கள் செய்தனர். ஒரு முறை யாக குண்டத்தில் இருந்த உணவை, ருசியாக இருந்தது என்பதால் அக்னி பகவான் அளவுக்கு மீறி சாப்பிட்டு விட்டார். இதனால் அக்னி பகவானை நோய் பற்றிக்கொண்டது. அவரது உடல் மெலிந்து போனது. அக்னி பகவானின் மனைவி சுவாகா தேவி, தேவர்களின் குருவான பிரகஸ்பதியிடம் சென்று, தன் கணவனின் நிலையை எடுத்துக்கூறினாள்.

    பிரகஸ்பதி கூறியபடி திரு அன்னியூர் வந்தனர் இருவரும். தீர்த்தத்தில் நீராடி இறைவனையும், இறைவியையும் வழிபட்டனர். இறைவன் தலவிருட்சமான எலுமிச்சை மரத்தடியில் எழுந்தருளி அக்னி தேவனுக்கு அருள்புரிந்து, அவரது நோயை குணமாக்கினார். எலுமிச்சை மரத்தடியில் எழுந்தருளியதால் இறைவன் ‘விகு சாரண்யேசுவரர்’ எனப் பெயர் பெற்றார். இவர் ஆலயத்தின் தெற்கு பிரகாரத்தில் தனி மண்டபத்தில் கீழ்திசை நோக்கி அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார்.

    நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறைக்கு வடமேற்கே 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பொன்னூர் என்ற இந்த தலம்.
    Next Story
    ×