search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மாங்கல்ய தோஷம் நீக்கும் திருமங்கலக்குடி
    X

    மாங்கல்ய தோஷம் நீக்கும் திருமங்கலக்குடி

    தஞ்சாவூர் மாவட்டத்தில், கும்பகோணம் - மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் ஆடுதுறைக்கு வடக்கே இரண்டு கி.மீ. தொலைவில் உள்ளது திருமங்கலக்குடி தலம்.
    தஞ்சாவூர் மாவட்டத்தில், கும்பகோணம் - மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் ஆடுதுறைக்கு வடக்கே இரண்டு கி.மீ. தொலைவில் உள்ளது திருமங்கலக்குடி தலம். இங்கு எழுந்தருளியிருக்கும் இறைவன் பெயர் பிராணநாதேஸ்வரர். மங்களநாதர் என்றும் இவரை அழைப்பார்கள். இந்தக் கோவிலில் எல்லாம் மங்களகரமானவையே! இறைவி ‘மங்களநாயகி’. விநாயகர் ‘மங்கள விநாயகர்’. விமானம் ‘மங்கள விமானம்’. கோவில் ‘மங்கள கோவில்’. தீர்த்தம் ‘மங்கள தீர்த்தம்’.

    தல வரலாறு :

    எமனுடன் போராடி தன் கணவன் சத்தியவான் உயிரை மீட்டாள் சாவித்திரி. ஆனால் இன்னொரு பெண்ணோ இறைவனுடன் போராடி தன் கணவனை மீட்டாள்.

    என்ன கதை அது?

    முதலாம் குலோத்துங்கசோழனிடம், அலைவாணர் என்ற அமைச்சர் இருந்தார். இவர் சிவபெருமானிடம் அளவிலா பக்தி கொண்டவர். தான் வணங்கும் சிவபெருமானுக்கு தான் வசிக்கும் திருமங்கலக்குடியில் சிவாலயம் ஒன்று அமைக்க ஆர்வம் கொண்டார். ஆனால் அதற்கு நிறையப் பணம் வேண்டுமே! என்ன செய்வது? என்று யோசித்தார். வரி வசூலில் வரும் பணம் யாவும், அலைவாணர் மூலமே கஜானாவுக்குச் செல்ல வேண்டும். தவறு என்று தெரிந்தும் சிவபெருமானின் மேல் இருந்த பக்தியால் அலைவாணர் அந்தத் தவறை செய்யத் துணிந்தார்.

    ஆம்! வரி வசூலில் வசூலான பணம் முழுவதையும், கோவில் கட்டுவதில் செலவழிக்கத் தொடங்கினார். கோவிலும் கட்டி முடிக்கப்பட்டது. அரசின் வரிப்பணத்தை அமைச்சர் கோவில் கட்ட செலவிடுகிறார் என்று கேள்விப்பட்ட மன்னன் கோபம் கொண்டான். மன்னனின் கோபத்துக்கு அஞ்சிய அமைச்சர் தன் உயிரை தானே மாய்த்துக் கொண்டார்.

    கணவனின் முடிவை அறிந்த அவரது மனைவி, அவர் கட்டிய கோவிலில் உள்ள இறைவனிடமும், இறைவியிடமும் கண்ணீர் பெருக கதறி அழுதாள். தன் கணவனுக்கு உயிர்ப்பிச்சை தருமாறு வேண்டினாள். மனமிறங்கினர் இறைவனும், இறைவியும். இறந்து போன அலைவாணர், உறக்கத்தில் இருந்து எழுந்ததைப் போல எழுந்து வந்தார்.

    தன் பக்தனுக்கு மீண்டும் பிராணனை அருளி உயிர்ப்பித்ததால், இங்குள்ள இறைவன் ‘பிராண நாதேஸ்வரர்’ என அழைக்கப்படுகிறார். அமைச்சரின் மனைவியின் மாங்கல்யத்தைக் காத்து அருள் புரிந்ததால் இத்தல இறைவி ‘மங்கள நாயகி’ என அழைக்கப்படுகிறார்.



    வழிபாடு :


    திருமங்கலக்குடியில் கோவில் கொண்டுள்ள இறைவனை, திருமால், பிரம்மதேவன், அகத்தியர், சூரியன், காளி ஆகியோர் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். இது திருமாங்கல்ய தோஷங்களை நீக்கும் தலம். மங்களாம்பிகைக்கு ஐந்து வெள்ளிக்கிழமைகள் அர்ச்சனை செய்து வழிபட்டால் மாங்கல்ய தோஷமும், களத்திர தோஷமும் அகலும்.

    இங்கு ஞாயிறு மதியம் உச்சிகால பூஜையில் வெள்ளெருக்கு இலையில் தயிர்சாதம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. அன்னையின் திருக்கரத்தில் இருக்கும் மாங்கல்ய சரடு, பெண்களுக்கு பிரசாதமாகத் தரப்படுகிறது.

    பிராண நாதேஸ்வரருக்கு 11 ஞாயிற்றுக்கிழமைகள் அர்ச்சனை செய்து வந்தால், நவக்கிரக தோஷம், பூர்வஜென்ம தோஷம் அனைத்தும் விலகும்.

    கோவில் அமைப்பு :

    ஆலயத்தின் முன்பு ஐந்து நிலை ராஜகோபுரம் கம்பீரமாகக் காட்சித் தருகிறது. உள்ளே இரண்டு பிரகாரங்கள். இறைவன் பிராணநாதேஸ்வரர் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். முன் மண்டபத்தில் தென்திசை நோக்கியபடி நான்கு கரங்களுடன் காட்சி தருகிறார் மங்களநாயகி. அம்மனின் முன்கரத்தில் மாங்கல்ய சரடுகள் தொங்குகின்றன.

    தேவகோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, துர்க்கை, சண்டிகேசுவரர், ஆறுமுகக்கடவுள், பிரம்மன் ஆகியோரது திருமேனிகள் உள்ளன.

    இந்தக் கோவில் முதலாம் குலோத்துங்கசோழன் காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது. இந்த பழமையான கோவிலை சம்பந்தரும், திருநாவுக் கரசரும் தம் தேவாரத்தில் சிறப்புறப் பாடியுள்ளனர்.

    நவக்கிரக நாயகர்கள் சாப விமோசனம் பெற அருளிய, திருமங்கலக்குடி பிராணநாதேசுவரரையும், மங்களாம்பிகையையும் தரி சனம் செய்து விட்டு, அருகில் உள்ள சூரியனார் கோவில் சென்று நவக்கிரக நாயகர்களையும் ஒருமுறை தரிசித்து வரலாமே!

    தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணம் - மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் ஆடுதுறைக்கு வடக்கே 2 கி.மீ தொலைவில் உள்ளது திருமங்கலக்குடி.
    Next Story
    ×