search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கூவாகம் கூத்தாண்டவர் கோவில் - விழுப்புரம்
    X

    கூவாகம் கூத்தாண்டவர் கோவில் - விழுப்புரம்

    விழுப்புரம் மாவட்டம் கூவாகம் என்ற பகுதியில் இருக்கிறது கூத்தாண்டவர் கோவில். இந்த கோவிலின் வரலாற்றை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
    விழுப்புரம் மாவட்டம் கூவாகம் என்ற பகுதியில் இருக்கிறது கூத்தாண்டவர் கோவில். இந்த ஆலயத்தில் சித்திரை மாதம் நடைபெறும் திருவிழா மிகவும் பிரசித்திப் பெற்றதாகும். இந்த திருவிழாவில்தான் திருநங்கைகள் கலந்து கொண்டு, அரவானை கணவனாக நினைத்து தாலி கட்டிக்கொள்ளும் வைபவம் நடைபெறும். இந்த சிறப்பு மிகுந்த விழா சித்ரா பவுர்ணமியன்று வெகு விமரிசையாக நடைபெற்று நிறைவுபெறும்.

    மகாபாரத புராணக் கதையின் முக்கிய கதாபாத்திரமான அர்ச்சுனனுக்கும், நாகக்கன்னிக்கும் பிறந்தவர் அரவான். மகாபாரதத்தில் 18 நாட்கள் நடைபெற்ற குருச்சேத்திரப் போரை மையமாகக் கொண்டது அரவானின் கதை. குருச்சேத்திர போரில் பாண்டவர்கள் வெற்றி பெற, காளி தேவிக்கு பலி கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதற்கு எந்த குற்றமும் இல்லாத, சகல லட்சணமும் பொருந்திய ஒரு மனிதப்பலி தேவைப்பட்டது. பாண்டவர் தரப்பில் சகல லட்சணமும் பொருந்தியவர்கள் மூன்று பேர் இருந்தனர். ஒருவர் கிருஷ்ணர், மற்றவர்கள் அர்ச்சுனனும், அவனது மகன் அரவானும். இவர்களில் கிருஷ்ணரும், அர்ச்சுனனும் குருச்சேத்திரப் போருக்கு அவசியத் தேவை உள்ளவர்கள். எனவே அரவான் அந்த பலிக்காக தேர்வு செய்யப்பட்டான்.

    பலியாக ஒப்புக்கொண்ட அரவான் மூன்று கோரிக்கைகளை வைத்தான். பலியாகும் முன் ஒரு நாள் மட்டும், ஒரு பெண்ணை திருமணம் செய்து வாழ வேண்டும். பலி கொடுத்ததும் தன்னுடைய கண்களால் குருச்சேத்திர போரை முழுமையாக பார்க்க வேண்டும். தனக்கு பூலோகத்தில் வழிபாடு நடைபெற வேண்டும். பின்வரும் இரண்டு கோரிக்கைகளை நிறைவேற்றிவிட கிருஷ்ணருக்கு எந்த நெருக்கடியும் இல்லை. ஆனால் ஒரே நாளில் இறக்கப் போகும் ஒருவனை எந்த பெண் மணந்து கொள்ள முன் வருவாள். எனவே கிருஷ்ணரே, மோகினி அவதாரம் எடுத்து அரவானை மணம் செய்து கொண்டாள். அரவான் இறந்ததும் தாலி விலக்கி விதவைக் கோலம் கொண்டாள்.

    இதனை நினைவு கூறும் வகையிலேயே கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் திருவிழா நடக்கிறது. 18 நாட்கள் நடைபெற்ற குருச்சேத்திரப் போரை நினைவு கூறும் வகையில், இந்த ஆலய திருவிழாவும் 18 நாட்கள் நடைபெறுகிறது. சித்திரா பவுர்ணமி அன்று கூத்தாண்டவராகிய அரவானைக் கணவனாக நினைத்துக் கொண்டு, திருநங்கைகள் கோவில் அர்ச்சகர் கையால் தாலி கட்டிக் கொள்வார்கள். அன்று இரவு முழுவதும் ஆட்டம், பாட்டம் என்று கோவில் விழா களைகட்டும்.



    மறுநாள் பொழுது விடிந்ததும் அலங்கரிக்கப்பட்ட தேரில் அரவான் சிற்பம், கூத்தாண்டவர் கோவிலில் இருந்து நான்கு கி.மீ தூரத்தில் உள்ள கொலைக் களமான அமுத களம் கொண்டு செல்லப்படும். வடக்கே உயிர் விடப்போகும் அரவானைப் பார்த்து திருநங்கைகள் ஒப்பாரி வைக்கும் வைபவம் அப்போதுதான் அரங்கேறும். அமுதகளத்தில் அரவான் தலை துண்டிக்கப்படும். திருநங்கைகள் அனைவரும் முதல்நாள் தாங்கள் கட்டிக்கொண்ட தாலி அறுத்து, பூ எடுத்து, வளையல் உடைத்து பின் வெள்ளைப் புடவை உடுத்தி விதவை கோலம் பூணும் நிகழ்வுடன் விழா நிறைவு பெறும்.

    இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக மூன்று நாட்களுக்கு முன்பாகவே திருநங்கைகள் கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் குவியத் தொடங்கிவிடுவார்கள். திருநங்கைகளின் உணர்வுகளை பகிர்ந்து கொள்ளும், அவர்களை கலைகளை வெளிப்படுத்தும் விழாவாக இந்த திருவிழா அமைகின்றது.

    கூத்தாண்டவர் கோவில்கள் :

    கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டம் முதல் கோயம்புத்தூர் வரை உள்ள பகுதிகளில் மட்டும் கூத்தாண்டவர் கோவில்கள் காணப்படுகின்றன. இவற்றுள் முப்பத்திரண்டு கோவில்கள் பிரபலமானவை, அதில் முதன்மையான இடத்தை கூவாகம் பெறுகிறது.

    கோயம்புத்தூர் மாவட்டத்தில் சிங்காநல்லூர் (நீலிக்கோணாம்பாளையம்), கஞ்சப்பள்ளி, குமாரமங்கலம், குறிச்சி, குட்டாம்பட்டி, துடியலூர். கடலூர் மாவட்டத்தில் கொத்தட்டை, புவனகிரி, தேவனாம்பட்டணம், திருவேட்களம். ஈரோடு மாவட்டத்தில் களரிகியம், சேலம் மாவட்டத்தில் பழையசூரமங்கலம், பனை மடல், பேளூர், தெடாவூர். திருவண்ணாமலை மாவட்டத்தில் சேர்ப்பாப்பட்டு, கீழ்வானம்பட்டி, தேவனூர், வேதாந்தவதி, வீரனேந்தல். வேலூர் மாவட்டத்தில் சோழவரம், ஒடுகத்தூர், புலிமேடு, புதூர், வெள்ளையம்பட்டி, வரகூர். விழுப்புரம் மாவட்டத்தில் கூவாகம், கொணலூர், பெண்ணைவளம், தைலாபுரம். புதுச்சேரி மாநிலத்தில் மதுக்கரை, பிள்ளையார்குப்பம் ஆகிய இடங்களில் அரவானுக்கு ஆலயங்கள் உள்ளன.

    விழுப்புரம் மாவட்டம் மடப்புரம் சந்திப்பில் இருந்து 30 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது கூவாகம்.
    Next Story
    ×