search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பூமியை மீட்ட பூவராகப்பெருமாள் கோவில் - கடலூர்
    X

    பூமியை மீட்ட பூவராகப்பெருமாள் கோவில் - கடலூர்

    ஆதிவராகப் பெருமாள் பூவராக மூர்த்தியாக கடலூர் மாவட்டத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். அந்த திவ்ய சேத்திரத்தைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
    திருப்பதி - திருமலையில் ஏழுமலையான் எழுந்தருள்வதற்கு இடமளித்தவர் ஆதிவராகப் பெருமாள். இவர் திருமலையில் சந்திர புஷ்கரணி திருக்குளத்தின் அருகில் தனிக்கோவிலில் அருள்பாலிக்கிறார். இவரை வழிபட்ட பிறகே, ஏழுமலையானை தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம். திருமாலின் பத்து அவதாரங்களில் மூன்றாவது அவதாரமாக விளங்குவது வராக அவதாரம்.

    இவர் பூவராக மூர்த்தியாக கடலூர் மாவட்டத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். அந்த திவ்ய சேத்திரத்தைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

    ஆலய அமைப்பு :

    மேற்கு நோக்கிய ஏழு நிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாக எழுந்து நிற்கிறது ஆலயம். கோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால், சிற்ப அழகு மிளிரும் கருங்கல் தூண்களுடன் ஆயிரங்கால் மண்டபம் உள்ளது. அங்குள்ள கருடாழ்வாரைச் சேவித்துவிட்டு உள்ளே சென்றால், கருவறையின் முன்பாக ஜெய, விஜயர்கள் துவார பாலகர்களாக வீற்றிருக்கின்றனர். கருவறையின் உள்ளே பாவன விமானத்தின் கீழ் பூவராகமூர்த்தி சேவை சாதிக்கிறார்.

    திருமலை, காஞ்சி, திருக்கோவிலுர், ஒப்பிலியப்பன் கோவில் போன்ற தலங்களில் நெடுமாலாகக் காட்சி தருபவர், இங்கே சிறிய மூர்த்தியாகப் பெரிய கீர்த்தியுடன் தோற்றம் காட்டுவது கொள்ளை அழகு. மேற்கு நோக்கி திருமேனியாக இருந்தாலும், வராக மூர்த்தியின் முகமானது தெற்கு பார்த்தபடி இருக்கிறது.

    வழக்கமாகச் சங்கு சக்கரம் ஏந்தி நான்கு திருக்கரங்களுடன் காட்சிதரும் மகாவிஷ்ணு, இங்கு வராகர் கோலத்தில் இரண்டு கரங்களுடன், அதனை இடுப்பில் வைத்தபடி எழில் கோலத்துடன் இருக்கிறது. அவருடன் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள் உடன் இருக்கின்றனர். முழுவதும் சாளக்கிராமக் கல்லால் ஆனது இந்த வராகமூர்த்தியின் உருவம். எனவே தினமும் திருமஞ்சனம் செய்யப்படுகிறது.

    வட இந்தியாவில், சாளக்கிராமம், புஷ்கரம், நைமிசாரண்யம், பத்திரிகாச்ரமம், தென்னகத்தில் ஸ்ரீரங்கம், திருப்பதி, வானமாமலை போல் ஸ்ரீமுஷ்ணத்தில் அருளும் பூவராக மூர்த்தி பெருமாளும், சுயம்புமூர்த்தி என்ற பெருமையுடன் திகழ்கிறார்.

    பூமியை மீட்டவர் :

    இரண்யாட்சன் என்ற அசுரனிடமிருந்து பூமியை மீட்க மகாவிஷ்ணு, வராகராக (காட்டுப்பன்றி) அவதாரம் எடுத்தார். பின்னர் இரண்யாட்சனை அழித்து கடலுக்குள் இருந்த பூமியை மீட்டு, தனது இரு கோரைப் பற்கள் இடையே சுமந்தபடி வெளிப்பட்டு அருள் செய்தார் என்கிறது புராணம்.



    இவர் தனது ஒரு விழிப் பார்வையினால் அரச மரத்தையும், மறு விழிப் பார்வையால் துளசிப் செடியையும் உருவாக்கினார். இந்த ஆலயத்தின் தல விருட்சமாக அரசமரம் உள்ளது. திருக்கோவிலின் பின்புறம் நித்ய புஷ்கரணி என்ற திருக்குளம் உள்ளது. இதன் அருகே தென் கிழக்கில் தலவிருட்சம் காணப்படு கிறது. இதன் அருகே பிரகன்நாயகி சமேத நித்திஸ்வரர் வீற்றிருக்கும், பழங்கால சிவன் ஆலயம் ஒன்று இருக் கிறது.

    வரம் அருளும் பூவராகவர் :

    பிள்ளைப்பேறு வேண்டுவோர் நித்ய புஷ்கரணியில் நீராடி, அரசமரத்தைச் சுற்றிவந்து, பூவராகரை உள்ளன்புடன் வழிபட்டால், சந்தான பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. பெருமாள் சன்னிதிக்கு வடக்குச் சுற்றில், பாவை பாட்டு பாடிய ஆண்டாள் தனிச் சன்னிதியில் இருக்கிறார்.

    பரமபத வாசல் கோபுரம் அருகே மகேஸ்வரி, சாமுண்டி, வராகி போன்ற சப்த மாதர்களின் திருமேனிகள் உள்ளன. இவர்களை வேண்டிக் கொண்டு அருகே இருக்கும் வேப்ப மரத்தடியில், குழந்தை அம்மன் சன்னிதியில் விளக்கேற்றி வழிபட்டாலும், குழந்தை பாக்கியம் வந்து சேரும். இது தவிர ஆலயத்தில் உடையவர் சன்னிதி, சேனை முதலியார் சன்னிதி, வேதாந்த தேசிகர் சன்னிதி ஆகியவையும் உள்ளன.

    தெற்குப் பக்கத்தில் தனிக்கோவிலில் அம்புஜவல்லித் தாயார் கிழக்கு திசை நோக்கி அமர்ந்தபடி அருள்பாலிக்கிறார். அருகே உள்ள வளையமாதேவி என்ற ஊரில் கார்த்திகாயினி முனிவரின் மகளாக அவதரித்து இத்தலப் பெருமாளைத் திருமணம் செய்து கொண்டவர்தான், இந்த அம்புஜவல்லித் தயார்.

    இத்தலத்து சுவாமியையும், தாயாரையும் சேவித்தாலே திருமண வரம், குழந்தைபேறு கிடைக்கும். பகை அகலும், காரியத் தடை விலகும் என்று கூறுகிறார்கள். இத்தல மகிமை பற்றி கந்தபுராணம், பிரமாண்ட புராணம், விஷ்ணுபுராணம், பாகவதம் ஆகிய நூல்களில் விவரிக்கப்பட்டுள்ளது.

    விழாக்கள் :


    இக்கோவிலில் மாசி மக நாளில், உற்சவ மூர்த்தியானவர், சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை என்ற கடலோர கிராமத்துக்கு எழுந்தருள்வார். அங்கே தர்காவின் எதிரே பெருமாள் வரும்போது இஸ்லாமிய மக்கள், அரிசி, பூ, பழம் கொடுத்து மரியாதை செய்வார்கள். பிறகு புவனகிரி வந்து அங்குள்ள சவுராஷ்டிர சத்திரத்தில் சுவாமி தங்கியிருக்கும் போது, மத வேறுபாடின்றி அனைவரும் இறைவனைச் சேவிப்பார்கள் என்பது மகிழ்ச்சியூட்டும் செய்தியாகும்.

    இந்த ஆலயம் தினமும் காலை 7.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும்.

    சென்னையில் இருந்து 210 கிலோமீட்டர் தொலைவிலும், கடலூரில் இருந்து 52 கிலோமீட்டர் தொலைவிலும் ஸ்ரீமுஷ்ணம் உள்ளது. கடலூரில் இருந்து பஸ் வசதிகள் உள்ளன.
    Next Story
    ×