search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பஞ்சமுகேஸ்வரர் கோவில் - திருவானைக்காவல்
    X

    பஞ்சமுகேஸ்வரர் கோவில் - திருவானைக்காவல்

    திருவானைக் காவலில் அமைந்துள்ள பஞ்சமுகேஸ்வரர் ஆலயம் கீழ் திசை நோக்கி அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் வரலாற்றை தெரிந்து கொள்ளலாம்.
    திருவானைக் காவலில் உள்ள பஞ்சமுகேஸ்வரர் ஆலயம் கீழ் திசை நோக்கி அமைந்துள்ளது. கோபுரத்தைக் கடந்து உள்ளே நுழைந்ததும் விசாலமான பிரகாரம். வலது புறம் திரும்பி நடந்தால் நாம் அருள்மிகு பஞ்சமுகேஸ்வரரை தரிசிக்கலாம்.

    பஞ்சமுக ஈஸ்வரன் :

    வலது புறம் உள்ள இறைவனின் சன்னிதியில் கருவறையில் கிழக்கு திசை நோக்கி அருள்புரிகிறார் பஞ்சமுகேஸ்வரர். ஐந்து முகங்கள் கொண்ட சிவலிங்க உருவில் அருள்பாலிக்கிறார் இறைவன்.

    சத்தியோஜாதம், அகோரம், தத்புருஷம், வர்மதேவம், ஈசானம், என்பனவே அந்த ஐந்து முகங்கள்.

    நான்முகனுக்கு இருப்பது போல் சிவலிங்கத்தின் நான்கு புறமும் முகங்கள் இருக்க, லிங்கமும் ஒரு முகமாக கணக்கிடப்பட்டு ஐந்து முகங்களைக் கொண்ட பஞ்சமுகேஸ்வரர் என இந்த இறைவன் அழைக்கப்படுகிறார். தாமரை பீடத்தில் அமர்ந்துஅருள் பாலிக்கிறார் இறைவன்.

    எதிரே தனி சன்னிதியில் 90 டிகிரி நேர்க் கோணத்தில் இறைவி திரிபுர சுந்தரியின் சன்னிதி உள்ளது. இறைவனும் இறைவியும் எதிர் எதிர் சன்னிதிகளில் அருள்பாலிப்பதால் இருவரையும் நாம் ஒரு சேர தரிசிக்க முடியும். இந்த அமைப்பு அபூர்வமானது என்கிறார்கள் பக்தர்கள்.

    இங்கு அம்மனுக்கு நான்கு கரங்கள். அன்னை தனது மேல் இரண்டு கரங்களில் சங்குகளை சுமந்தபடியும், கீழ் இரண்டு கரங்களில் அபய, ஹஸ்த முத்திரையுடனும் காட்சி தருகிறாள்.

    இறைவனையும் இறைவியையும் தரிசித்து விட்டு திரும்பி நடந்து சிறப்பு மண்டபத்தினுள் நுழைந்து மகாமண்டபத்தில் நுழைந்தால் ஆலயத்தின் பிரதான இறைவனான ராஜராஜேஸ்வரரை நாம் தரிசிக்கலாம்.

    எதிரே நந்தியும், பலிபீடமும் இருக்க அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள கருவறையில் இறைவன் ராஜராஜேஸ்வரர் லிங்கத் திருமேனியில் அருள்பாலிக்கிறார். மகாமண்டபத்தின் வடதிசையில் இறைவி ராஜ ராஜேஸ்வரியின் சன்னிதி உள்ளது.

    தல வரலாறு :

    விச்ரவஸ்ஸீக்கு ராவணன், குபேரன் என்று இரு புத்திரர்கள். இருவரின் தாய்மார்கள் வெவ்வேறானவர்கள். இருவருக்கும் ஆரம்பம் முதலே பகை உண்டாகி, போகப் போக அந்தப் பகை வளர்ந்து இருவரும் யுத்தம் புரியும் அளவிற்கு அது வளர்ந்தது.

    யுத்தமும் நடந்தது. குபேரனின் அனைத்து சொத்துகளும், ஐஸ்வரியங்களும,் புஷ்பக விமானமும் ராவணனால் அபகரிக்கப்பட்டன.

    மனம் உடைந்த குபேரன் மகாதேவரை ஆராதிக்க அப்போது ஒரு அசரீரி ஒலித்தது.

    ‘மகாவிஷ்ணுவானவர் தசரதன் என்ற அரசனுக்கு மகனாகப் பிறந்து, ராவணனை யுத்தத்தில் சந்திப்பார். அப்போது ராவணன் தோற்கடிக்கப் படுவான். உன்னிடமிருந்து பறிபோன புஷ்பக விமானம் உன்னை அப்போது அடையும்’ என்றது அக்குரல்.

    பின் குபேரன் காவிரியின் தென் கரையில் ஒரு ஆலயம் அமைத்து, இறைவனை அங்கு பிரதிஷ்டை செய்து அவருக்கு ராஜராஜேஸ்வரர் என்று பெயரிட்டு ஆராதிக்கத் தொடங்கினான். ராஜராஜேஸ்வரர் அருளால், குபேரன் இழந்த தன் பெருமைகளையும், பொருளையும் மீண்டும் பெற்றான்.

    பரிவார தெய்வங்கள் :

    ஆலய பிரகாரத்தின் மேற்கில் மகா கணபதி, வள்ளி, தெய்வானையுடன் முருகன், கஜ லட்சுமி ஆகியோர் சன்னிதிகளும் உள்ளன. வடக்கில் சண்டிகேசுவரர் சன்னிதி உள்ளது.

    கிழக்குப் பிரகாரத்தில் கால பைரவர் காட்சி தருகிறார். மாத தேய்பிறை அஷ்்டமியில் பைரவருக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. தவிர சிவலிங்க வடிவிலான சதுஷ் சஷ்டி கலேஸ்வரரின் திருமேனியும், அவர் அருகே சதுஷ் சஷ்டி கலேஸ்வரியின் திருமேனியும் அருள்பாலிக்கின்றன.

    தாமரை வடிவ பீடத்தில் எண்கோண வடிவ ஆவுடையில் பாணம் அமைந்துள்ளது. இந்த இறைவனுக்கு 64 முகங்கள். பாணம் முழுவதும் உள்ள 64 வரிக் கோடுகள் முகங்களாக கணக்கிடப்பட்டு அதே கோணத்தில் இறைவனை தரிசிக்கின்றனர் பக்தர்கள்.

    இறைவனின் பின் புறம் நான்கு வேதங்கள் சாலிக்கிராமம் வடிவில் அமைந்துள்ளது இந்த ஆலயத்தின் சிறப்பு அம்சமாகும்.

    ஆலயத்தின் தலவிருட்சம் மகாவில்வம். அதன் ஒரே இலையில் 12 முதல் 16 இதழ்கள் இருப்பது இந்த ஆலயத்தில் காணப்படும் அற்புதமான அதிசயம்.

    இறைவனின் தேவக் கோட்டத்தில் தெற்கில் தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார். இந்த ஆலயத்தில் நவக்கிரகங்கள் கிடையாது. தேவக் கோட்டத்தின் தென்புறம் துர்க்கையின் திருமேனியும் கிடையாது.

    ஆராதனைகள் :

    இங்கு இறைவனுக்கு மாத சிவராத்திரியிலும், பிரதோஷ நாட்களிலும் விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. ஐப்பசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. அன்று ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு பயன்பெறுகின்றனர்.

    இறைவன் பஞ்சமுகேஸ்வரருக்கும், அன்னை திரிபுர சுந்தரிக்கும் கார்த்திகை சோம வாரங்களிச் சங்காபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெறுகிறது. சிவராத்திரி அன்று இறைவனுக்கும் இறைவிக்கும் சிறப்பு ஆராதனைகள் நடைபெறுகின்றன.

    ஆலயம் காலை 6.30 மணி முதல் 9.30 மணி வரையிலும் மாலை 5.30 மணி முதல் 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    குபேரனின் துயர் தீர்த்த இத்தலத்து இறைவன் ராஜ ராஜேஸ்வரர் தன்னை நாடி வரும் பக்தர் களின் துயரையும் தீர்ப்பார் என பக்தர்கள் நம்புவது நிஜம் தானே!

    திருச்சி மாவட்டம், திருவானைக் காவல் கடைவீதியிலிருந்து 1 கி.மீ கிழக்கில் உள்ளது இந்த ஆலயம்.
    Next Story
    ×