search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கலை பொக்கிஷம் கஜுராகோ கோவில்
    X

    கலை பொக்கிஷம் கஜுராகோ கோவில்

    மத்தியபிரதேசத்தில் மிகப்பெரிய சுற்றுலா தலமாக கஜுராகோ கோவில்கள் மாறி இருக்கின்றன. இந்த கோவில் பற்றிய வரலாற்றை தெரிந்து கொள்ளலாம்.
    கஜுராகோ கோவில் என்றதுமே இந்த கோவிலில் உள்ள ஆண்- பெண் உறவை சித்தரிக்கும் சிலைகள்தான் ஞாபகத்துக்கு வரும். எனவே, இது ஒரு ஆபாச கோவில் என்ற எண்ணமே எல்லோருக்கும் இருக்கிறது.

    இந்த எண்ணம் மிக, மிக தவறானது. எல்லோரும் நினைப்பது போல் இந்த கோவிலில் அனைத்து சிலைகளும் தாம்பத்திய உறவை சித்தரிக்கும் சிலைகள் அல்ல. கோவிலில் உள்ள மொத்த சிலைகளில் 10 சதவீத சிலைகள் மட்டுமே இதுபோன்ற சிலைகள் ஆகும். மற்றவை எல்லாம் இந்தியாவின் கலாச்சாரத்தை சித்தரிக்கும் அரிய சிலைகளாக உள்ளன.

    கஜுராகோ கோவில் மத்தியபிரதேசம் மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மத்திய பிரதேசத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான ஜான்சியில் இருந்து 175 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது.

    கி.பி. 900-ம் ஆண்டு வாக்கில் இந்த பகுதியை சந்தலா என்ற ராஜபுத்திர வம்சத்தினர் ஆண்டு வந்தனர். அவர்கள்தான் இந்த கோவிலை கட்டினார்கள். கி.பி. 950-ம் ஆண்டில் இருந்து கி.பி. 1050-ம் ஆண்டு வரை கோவில் கட்டுமான பணிகள் நடந்துள்ளன. அப்போதைய மன்னர்கள் யசோவர்மன், தன்கா ஆகியோர் கோவிலை கட்டியதாக வரலாற்று குறிப்புகள் உள்ளன.

    கஜுராகோ கோவில் என்பது ஒரே கோவில் அல்ல. 85 கோவில்கள் கொண்டது. 12-ம் நூற்றாண்டில் இந்த வளாகத்தில் 85 கோவில்கள் இருந்துள்ளன.
    முஸ்லிம் மன்னர்கள் ஒவ்வொரு முறை படையெடுத்து வரும் போதும் இங்கிருந்த கோவில்கள் இடிக்கப்பட்டன. மேலும் இயற்கையாகவும் பல கோவில்கள் இடிந்தன.

    தற்போது 22 கோவில்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. இவற்றை ஒட்டு மொத்தமாக கஜுராகோ கோவில் என்று அழைக்கிறார்கள்.

    கஜுரா என்றால் ஈச்ச மரம் என்று பெயர். இந்த பகுதியில் முன்பு ஏராளமான ஈச்ச மரங்கள் இருந்தன. எனவே, அங்கிருந்த கோவில்கள் கஜுராகோ கோவில்கள் என்று அழைக்கப்பட்டு வந்துள்ளன.

    இந்த வளாகத்தில் இந்து கோவில்கள் மட்டும் அல்ல. சைன மத கோவில்களும் கட்டப்பட்டன. மொத்தம் உள்ள 85 கோவில்களில் இரு கோவில்களும் கலந்தே இருந்தன.

    இப்போது எஞ்சி இருக்கும் 22 கோவில்களில் 18 இந்து கோவில்களும், 4 சைன கோவில்களும், இருக்கின்றன. 85 கோவில்களும் அழியாமல் இருந்த காலத்தில் 20 சதுர கிலோ மீட்டர் பரந்து விரிந்த பரப்பளவில் இருந்திருக்கிறது. தற்போது 22 கோவில்கள் மட்டுமே உள்ள நிலையில் 6 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் இருக்கிறது.

    அனைத்து கோவில்களும் இன்றும் இருந்திருந்தால் இந்தியாவில் மிகப்பெரிய கோவில்களில் ஒன்றாக கஜுராகோ இருந்திருக்கும். தற்போதுள்ள 22 கோவில்களில் 8 கோவில்கள் விஷ்ணுவுக்கு உரியதாகும். அடுத்து சிவனுக்கு 6 கோவில்களும், விநாயகர், சூரியனுக்கு தலா 1 கோவிலும், 4 சைன கோவிலும் இருக்கின்றன. மற்றவை தேவி மற்றும் பல்வேறு சாமி கோவில்கள்.



    அனைத்து கோவில்களிலும் மிகப்பெரியது. காந்தரிய மகாதேவா கோவில். இது சிவனுக்குரிய கோவில். இது, 109 அடி நீளமும், 60 அடி அகலமும், 116 அடி உயரமும் கொண்டது.

    இது, மொத்தம் 6,500 சதுரஅடி பரப்பளவில் அமைந்திருக்கிறது. இங்கு மட்டுமே 870 சிலைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் 1 மீட்டர் உயரமும், அதற்கும் மேல் உயரமும் கொண்டவை. மேலும் ஆயிரக்கணக்கான சிறு சிலைகளும் இருக்கின்றன. தாம்பத்திய உறவை சித்தரிக்கும் சிலைகளும் இவற்றில் அடங்கும்.
    இந்த கோவிலில் அஸ்திவாரத்தில் கிரானைட் கற்களை பொருத்தி அதன் மேல் பகுதியில் கற்களால் கட்டி உள்ளனர். உள்ளே பொருத்தப்பட்டுள்ள அனைத்து தூண்களிலும், சுவர்களிலும் சிலைகளை செதுக்கி உள்ளனர்.

    அனைத்து கோவில்களிலும் சேர்த்து பல்லாயிரக்கணக்கான சிலைகள் இருக்கின்றன. இங்கு மாதங்கேஸ்வரா என்ற இன்னொரு சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பிரமாண்ட லிங்கம் இருக்கிறது. இது 8.2 அடி உயரமும், 3.6 அடி குறுக்களவும் கொண்டது. 25 அடி உயர பீடத்தில் சிலை கம்பீரமாக அமைந்துள்ளது.

    இந்தியாவில் 3 புகழ் பெற்ற சிவன் கோவில்களான கேதர்நாத், காசி, கயா கோவில்களோடு சேர்ந்த 4-வது கோவிலாகவும் இது இருந்துள்ளது. இந்த கோவில் அமைந்த இடத்தில்தான் சிவனுக்கு திருமணம் நடந்ததாகவும், எனவே தான் அந்த இடத்தில் கோவில் கட்டி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    கோவில் அமைந்துள்ள இடத்தில் 64 புனித குளங்கள் இருந்துள்ளன. அவை மறைந்து மண்ணோடு மண்ணாகி போயிருந்த நிலையில் தற்போது 56 குளங்கள் அடையாளம் காணப்பட்டு தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.

    இந்த வளாகத்தில் உள்ள ஒவ்வொரு கோவிலிலுமே வித்தியாசமான வடிவத்தில் உயரமான கோபுரங்களுடன் கட்டப்பட்டுள்ளன. நாகரா கட்டிட கலையை பயன்படுத்தி இதை கட்டி இருக்கிறார்கள்.

    கட்டிடங்கள் முழுவதுமே கற்களாலேயே கட்டப்பட்டு உள்ளன. ஒவ்வொரு கல்லிலும் அழகிய வேலைப்பாடுகளை செய்துள்ளனர். ஆண்- பெண் உறவு தொடர்பான சிற்பங்களை கூட மிக கலைநயத்துடன் செதுக்கி இருக்கிறார்கள்.

    இந்த சிற்பங்கள் தவிர்த்து அந்த காலத்தில் வாழ்க்கை பற்றிய ஏராளமான சிற்பங்களும் தத்ரூபமாக செதுக்கப்பட்டுள்ளன. பெண்கள் அலங்காரம் செய்வது, விளையாடுவது, விவசாயம் செய்வது, மண்பாண்டம் செய்வது, முடி திருத்தம் செய்வது, நடனம் ஆடுவது, ஊர்வலம், போர் காட்சிகள் என பல வகை சிற்பங்கள் இருக்கின்றன.

    இந்த கோவில்களின் கட்டுமான பணிகளில் மிக கைதேர்ந்த கலைஞர்களை பயன்படுத்தி இருக்கிறார்கள். ஆயிரக்கணக்கானோர் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.

    சமீபத்தில் ‘ஹிஸ்ட்ரி’ டி.வி. சானலில் இந்த கோவில் வரலாற்றை பதிவு செய்து இங்கு படம் எடுத்தனர். அப்போது ஒரு நபர் 4 அடி சிலை ஒன்றை செய்வதற்கு எவ்வளவு நாட்கள் ஆகிறது என்று காட்டினார்கள். அந்த நபரால் அந்த சிலையை செய்து முடிக்க 60 நாட்கள் ஆனது.

    அப்படி என்றால் இந்த கோவில் முழுவதும் உள்ள சிலைகள் மற்றும் பல்வேறு சிற்பங்களை செதுக்க எத்தனை நபர்கள், எத்தனை நாட்கள் உழைத்து இருப்பார்கள் என்று பார்க்கும் போது, மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது என்று அந்த சானல் வியந்து கூறியது.

    தாம்பத்திய உறவு மனித வாழ்க்கையில் முக்கியமான அங்கம் என்றே அந்த காலத்தில் கருதப்பட்டது. இதனால்தான் தாம்பத்திய காட்சிகளையும் கூட கோவில்களில் சிலையாக செதுக்கி வைப்பது வழக்கமாக இருந்தது. அப்படித்தான் இங்கும் அதுபோன்ற சிலைகளை வைத்துள்ளனர்.



    கஜுராகோ கோவிலில் 12-ம் நூற்றாண்டு வரை மட்டுமே பூஜை, வழிபாடுகள் எல்லாம் நடந்துள்ளது. அப்போது ஏராளமான சாமியார்களும், துறவிகளும் இந்த கோவிலில் இருந்துள்ளனர். பிரசித்தி பெற்ற கோவிலாகவும் இருந்துள்ளது.

    இப்படி புகழ் பெற்று இருந்த நேரத்தில் 1022-ல் கஜினி முகமது இந்த கோவிலை தாக்க வந்தான். ஆனால், அப்போது அந்த பகுதி மன்னர் கஜினி முகமதுவுக்கு உரிய பணம், பொருட்கள் கொடுத்ததால் கோவிலை தாக்காமல் சென்று விட்டான்.

    13-ம் நூற்றாண்டில் டெல்லியை ஆண்ட சுல்தான் குதுப்தின் அய்பக் இந்த கோவிலை தாக்கினார். அதில், பல கோவில்கள் இடிக்கப்பட்டன. அதன் பிறகு வந்த பல மன்னர்களும் கோவிலை இடித்தனர்.

    இதனால் இங்கு வழிபாடு நடப்பது முற்றிலும் நின்று கோவில் கவனிப்பாரற்று போனது.

    1495-ல் சிக்கந்தர் லோடி மத்தியபிரதேச பகுதியில் இருந்த பல கோவில்களையும் இடிக்க உத்தரவிட்டார். ஆனால், அந்த காலத்தில் கவனிப்பாரற்று கிடந்த கஜுராகோ கோவில் புல்லும், புதரும் மண்டிய பகுதியாக இருந்தது. இதனால் இடிக்க வந்தவர்களின் கண்ணில் கோவில் தென்படவில்லை.

    எனவே, கோவில் தப்பியது. அப்போது மட்டும் இடித்து இருந்தால் அவர்கள் இதை முற்றிலும் தரைமட்டமாக்கி இருப்பார்கள். இப்படி ஒரு கலை பொக்கிஷம் இருந்ததே வெளி உலகுக்கு தெரியாமல் போய் இருக்கும்.

    வெளி உலகுக்கு அறிமுகப்படுத்திய வெள்ளைக்காரர்கள்

    சில கோவில்கள் இடிக்கப்பட்டதால் கோவில் வளாகமே முற்றிலும் கவனிப்பாரற்று 600 ஆண்டுகளுக்கு மேலாக கைவிடப்பட்டு இருந்தது. இதனால் கோவில் வளாகம் முழுவதும் மரம், செடிகள் வளர்ந்து அடர்ந்த காடாக மாறி இருந்தது. இப்படி ஒரு கட்டிடம் இருப்பதே பலருக்கு தெரியாமல் இருந்தது.

    1830-ம் ஆண்டு ஆங்கிலேய என்ஜினீயர் டி.எஸ். பர்ட் இந்த பகுதியை ஆய்வு செய்து பிரமாண்ட கோவில் அடர்ந்த காட்டுக்குள் இருப்பதை கண்டுபிடித்தார். அதன் பிறகு அலெக்சாண்டர் கன்னிங்கன் என்ற வெள்ளைக்காரர் கோவில் முழுவதையும் சுற்றி பார்த்து அதில் இருக்கும் சிற்பங்கள், கலைகள் அனைத்தையும் பற்றி குறிப்புகள் எழுதி வெளியிட்டார்.

    இதன்பிறகுதான் இதை பற்றிய தகவல் வெளி உலகுக்கு பரவியது. அதைத்தொடர்ந்து அங்கிருந்த புதர்கள் அனைத்தும் அகற்றப்பட்டு மறு சீரமைப்பு செய்தனர்.
    இப்போது மத்தியபிரதேசத்தில் மிகப்பெரிய சுற்றுலா தலமாக கஜுராகோ கோவில்கள் மாறி இருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் சுற்றுலா பயணிகள் இதை பார்க்க வருகிறார்கள். வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகையும் அதிகமாக உள்ளது.
    Next Story
    ×