search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில்
    X

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில்

    திருவண்ணாமலையில் தான் முதன் முதலில் லிங்க வழிபாடு தோன்றியது.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் பற்றிய வரலாற்றை கீழே விரிவாக பார்க்கலாம்.
    ல வரலாறு :

    பிருங்கி முனிவர் அம்பாள் பார்வதியை வணங்காமல் சிவனை மட்டுமே வணங்கி வந்தார். அவருக்கு, சிவமும் சக்தியும் ஒன்று என்பதை உணர்த்துவதற்காக சிவன் அம்பிகையை பிரிவது போல ஒரு லீலை நிகழ்த்தினார். அவள் இத்தலத்தில் அவருடன் மீண்டும் இணைய வேண்டிய தவமிருந்தாள்.

    அவளுக்கு காட்சி தந்த சிவன், தனது இடது பாகத்தில் ஏற்று, அர்த்தநாரீஸ்வரராக காட்சி கொடுத்தார். சக்தியும் சிவமும் ஒன்றே என்று உண்மையை பிருங்கி உணர்ந்தார். இவ்வாறு சிவன் அர்த்தநாரீஸ்வர வடிவம் எடுத்த பெருமையை உடைய தலம் இது. பிரம்மாவும், விஷ்ணுவும் நெருப்பாக நின்ற சிவபெருமானின் அடிமுடி காண முயன்றனர். அந்த நெருப்பு மலையாக மாறியது. அதுவே கோவிலின் பின்னணியிலுள்ள திருவண்ணாமலையாகும்.

    கிழக்குப் பக்கத்தில் வானளாவ நின்று காட்சியளிக்கும் கோபுரம்- ராஜகோபுரம் எனப்படுகிறது. இது 217 அடி உயரமுடையது. பதினொரு நிலைகளை - மாடங்களையுடையது. மாநகருக்குச் சிறப்பு கோவில் கோபுரம். மேற்குக் கோபுரம் பேய்க் கோபுரம் என அழைக்கப்படுகிறது. மேலக் கோபுரம் என்பது மேக்கோபுரமாகி அது நாளடைவில் பேய்க் கோபுரமாக மருவியது.

    தெற்குக் கோபுரம் திருமஞ்சன கோபுரம் என்ற பெயரைத் தாங்கி மங்கலமாக நிற்கிறது. வடக்குக் கோபுரம்- அம்மணி அம்மன் கோபுரம் அம்மணி அம்மாள்- இவர் திருவண்ணாமலைக்கு மேற்கில் உள்ள செங்கம் வட்டம் சென்ன சமுத்திரத்தை சேர்ந்த இவர் வீடு தோறும் சென்று பொருள் ஈட்டி வடக்குக் கோபுரத்தைக் கட்டி முடித்தார். அதனால் இவ்வம்மையார் பெயரால் அம்மணி அம்மன் கோபுரம் என்று விளங்குகிறது.

    வடக்குத் தெற்காக உள்ள கோவில் மதில் சுவரின் நீளம் 700 அடிகள். தென் மதில் 1479 அடி நீளம். வடக்கு மதில் 1590 அடி நீளம்.
    தெற்கு, மேற்கு, வடக்கு ஆகிய திசைகளில் இரண்டு இரண்டு கோபுரங்களாக உள்ளன. ராஜ கோபுரம் மட்டும் ஒற்றையாய் அமைந்துள்ளது.

    பிரமாண்டமான மணிகள் :

    திருவண்ணாமலை ஆலயத்தில் மிகப் பிரமாண்டமான 3மணிகள் உள்ளன. அதில் 2 மணிகள் அண்ணாமலையார் சன்னதி மண்டபத்தில் உள்ளது. மற்றொரு மணி உண்ணாமுலை அம்மன் சன்னதியில் கட்டப்பட்டுள்ளது. இந்த மூன்று மணிகளையும் அடிக்கும் போது அதன் சத்தம் நீண்ட தொலைவுக்கு கேட்குமாம். இந்த மூன்று மணிகளும் நூற்றாண்டை கடந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.



    அம்பாளை பாதுகாக்கும் நந்தி :

    ஆலயங்களில் அம்பாள் சன்னதி முன்பு சிம்மம்தான் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் திருவண்ணாமலை ஆலயத்தில் உண்ணாமுலை அம்மன் சன்னதியில் நந்தி உள்ளது. அம்பாளுக்குரிய சிம்மம் அங்கு இல்லை. ஈசனிடம் கோபித்துக் கொண்டு பூலோகத்துக்கு வந்த பார்வதி இத்தலத்தில் தவம் இருந்தாள். அவளுக்கு பாதுகாப்பாக நந்தியும் வந்து விட்டார். இதை பிரதிபலிக்கவே உண்ணாமுலை அம்மன் சன்னதி முன்பு நந்தி உள்ளது.

    ஆலய கட்டமைப்பு அதிசயங்கள்:

    அண்ணா மலையார் ஆலயம் எத்தனையோ ஆச்சரியங் களையும், அதிசயங்களையும் கொண்டது. இந்த ஆலயம் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மிகப்பெரிய ஆலயங்களில் தனித்துவம் கொண்டதாக இந்த ஆலயம் திகழ்கிறது. இந்த ஆலயத்துக்கு 7 பரிகாரங்கள் உள்ளன. 9 பெரிய கோபுரங்கள் உள்ளன. 40-க்கும் மேற்பட்ட சன்னதிகள் அமைந்துள்ளன. இதில் 4 விநாயகர் சன்னதிகளும், 4 முருகர் சன்னதிகளும் அடங்கும்.
    சிலைகள் என்று கணக்கிட்டால் ஆலயம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட சிலைகள் உள்ளன. 2-ம் பிரகாரத்தில் 63 நாயன்மார்களுக்கு கற்சிலைகளும், வெண்கல சிலைகளும் உள்ளன. 2-ம் பிரகாரத்தில் திரும்பும் திசையெல்லாம் லிங்கங்களை காணலாம்.

    தினசரி பூஜை காலங்கள் :

    நடை திறப்பு    : காலை 5.00 மணி
    கோ பூஜை    : காலை 5.15 மணி
    பள்ளியெழுச்சி பூஜை     : 5.30 மணி
    உஷாகால பூஜை     : 6.00 மணி
    காலசந்தி பூஜை     : 8.30 மணி
    உச்சிகால பூஜை     : 11.00 மணி
    நடைசாற்றுதல்    : நண்பகல் 12.30 மணி
    நடை திறப்பு    : 3.30 மணி
    சாயரட்சை பூஜை     : மாலை 5.30 மணி
    இரண்டாம் கால பூஜை    : இரவு 7.30 மணி
    அர்த்தஜாம பூஜை    : 9.00 மணி
    பள்ளியறை பூஜை    : 9.15 மணி
    நடைசாற்றுதல்    : 9.30 மணி

    360 தீர்த்தங்கள் :

    இத்தலத்தில் அம்பிகை, கணேசர், முருகன், வயிரவர், பிரம்மன், திருமால், இலக்குமி, கலைமகள், சூரியன், சந்திரன், சப்த கன்னிகைகள், அஷ்ட வசுக்கள் முதலியோர் அமைந்தனவும், மூழ்கிப்பேறு பெற்றனவுமாகிய அவரவர் பெயரால் வழங்கப்பெறும் முன்னூற்று அறுபது புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன. அவற்றுள் மிகச் சிறந்தவை சிவகங்கையும், பிரம்ம தீர்த்தமும், சக்கர தீர்த்தமும், இந்திர தீர்த்தமும் அக்கினி தீர்த்தமும் ஆகும். இந்திர தீர்த்தத்தில் தெப்போற்சவம் நடைபெறும்.



    அபிதகுசாம்பாள் சன்னதி :

    இத்திருக்கோவிலில் சதுர் புஜத்துடன் வீற்றிருக்கும் அபிதகு சாம்பாள் வேறெங்கும் இல்லாத அளவிற்கு சுமார் 6 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் காணப்படுகிறாள்.இந்த அம்பிகை தெற்கு முகமாக வீற்றிருந்து சாந்தமாக தினம் ஒரு விதமான முகத் தோற்றத்துடன் பக்தர்களுக்கு அருள் பாலிப்பது குறிப்பிடத்தக்கது.

    ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் பகல் வேலையில் சிறப்பு பூஜையும், அபிஷேகமும், திருவிளக்கு பூஜையும் மகளிரால் செய்யப்படுகிறது. வெள்ளிக் கிழமை மற்றும் செவ்வாய் கிழமைகளில் ராகு காலத்தில் சிறப்பு வழிபாடும், கூட்டுப் பிரார்த்தனையும், கோ பூஜையும் வெகு விமரிசையாக நடைபெற்று வரப்படுகிறது.
    அவ்வப்போது அம்பாளுக்கு பூச்சொரிதல், சந்தனகாப்பு, 108 பால்குட அபிஷேகம், நிறை பணி காட்சி போன்ற வைபவங்கள் பக்தகோடிகளால் செய்து வரப்பட்டு அம்மனின் பரிபூர்ண அருளை பெற்றுவருவதாக நம்பப்படுகிறது.

    காஞ்சி ஸ்ரீலஸ்ரீ சங்கராச்சாரிய சுவாமிகள் 1967-ல் இத்தலத்துக்கு வருகை புரிந்து ஸ்ரீ சக்கரத்தினை அபீதகு சாம்பாள் சன்னதியில் பிரதிஷ்டை செய்துள்ளார்கள்.
    வியாபாரத்திலும், தொழி லிலும் சிறந்த லாபங்களை பெற்று வளமடைய அதிர்ஷ்ட தேவியாக இத் திருத்தலத்தில் உள்ள அம்பாள் விளக்குகிறாள்.
    இந்த அம்பாளை மனம் உருகி வழிபட்டால் மாணவர்கள் கல்வியில் மேம்படவும், குடும்பத்தில் அதிர்ஷ்டம், ஐஸ்வர்யம், லட்சுமி கடாட்சம் முதலிய னவற்றை பெறலாம்.

    லைக்குள் இயங்கும் மர்ம உலகம் :

    அண்ணாமலை முழுவதும் கருங்கல் வடிவமல்ல, மலைக்குள் பிரும்மலோகம் உள்ளதென்பது ஐதீகம். சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் அண்ணாமலையில் ஒரு இரவு முழுவதும் தியானித்திருந்த சுஜாதாசென் என்கிற ஆங்கிலேய பெண் மலைக்குள் ஒரு பெரிய உலகத்தையே தாம் கண்டதாகக் கூறி இருக்கிறார்.
    அப்போது இதனை யாரும் நம்பவில்லை. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் எஸ்.என்.டாண்டன் என்பவருக்கு பல அற்புதக் காட்சிகள் காணக் கிடைத்தன. அவர்தாம் கண்டதாகக் கூறிய பலவும் ஆங்கில அம்மையார் கண்டவற்றை ஒத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    எட்டுக்கை கால பைரவர் :


    திருவண்ணாமலை கோவிலின் பிரம்ம தீர்த்தக் கரையில் கால பைரவர் சந்நிதி இருக்கிறது. இவரது சிலையை திருவாசியுடன் ஒரே கல்லில் சுமார் 6 அடி உயரத் துக்கு வடித்திருக்கின்றனர். எட்டு கைகளில் ஆயுதங்கள் ஏந்தி, கபால மாலையுடன் காட்சி தருகிறார். தலையில் பிறைச்சந்திரன் இருக்கிறது. திருஷ்டி, பயம் நீங்க இவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள். தேய்பிறை அஷ்டமி நாளிலும் ஞாயிறு ராகு காலத்திலும் இவரை வழிபடுவது சிறப்பு.
    இந்தியாவில் உள்ள கால பைரவர் சிலைகளில் இந்த சிலையே உயரமானது.
    Next Story
    ×