search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    புதன் கிரக தோஷம் நீக்கும் திருக்காலிமேடு திருக்கோவில்
    X

    புதன் கிரக தோஷம் நீக்கும் திருக்காலிமேடு திருக்கோவில்

    இந்திரன், புதன் வழிபட்டுப் பேறு பெற்ற தலம் என்ற பெருமைகள் கொண்ட ஆலயமாகத் திகழ்கிறது, காஞ்சீபுரம் நகரில் அமைந்துள்ள கச்சி நெறிக்காரைக்காடு எனும் திருக்காலிமேடு திருக்கோவில்.
    காஞ்சீபுரத்தின் ஆதி கோவில், செம்மணலால் ஆன லிங்கத் திருமேனி கொண்ட இறைவன், இந்திரன், புதன் வழிபட்டுப் பேறு பெற்ற தலம் என பல்வேறு பெருமைகள் கொண்ட ஆலயமாகத் திகழ்கிறது, காஞ்சீபுரம் நகரில் அமைந்துள்ள கச்சி நெறிக்காரைக்காடு எனும் திருக்காலிமேடு திருக்கோவில்.

    காஞ்சீபுரத்தில் எண்ணற்ற ஆலயங்கள் அமைந்துள்ளன. மன்னர் காலத்தில், சிவகாஞ்சி, விஷ்ணுகாஞ்சி, ஜைனகாஞ்சி என மூன்று பகுதிகளைக் கொண்டு காஞ்சீபுரம் நகரம் விளங்கியது.

    இதில் சைவ ஆலயங்களில் திருக்கச்சி ஏகம்பம், திருமேற்றளி, ஓணகாந்தன்தளி, திருக்கச்சி நெறிக்காரைக் காடு, திருக்கச்சி அநேகதங்காவதம் என ஐந்து தேவாரப் பாடல் பெற்ற தலங்களும், கச்சி மயானம், இடபேஸ்வரம் என இரு வைப்புத் தலங்களும் அமைந்துள்ளன. இதில் திருக்கச்சி நெறிக்காரைக்காடு என்ற தேவாரத்தலமே இன்று திருக்காலிமேடு என அழைக்கப்படுகிறது.

    தல வரலாறு :

    காஞ்சீபுரம் பழங்காலத்தில் தற்போதைய திருக்கோவில் இடத்திற்கும் மேற்கே பரந்து விரிந்து இருந்துள்ளது. அதற்குச் செல்லும் வழியில் காரைக் காடுகள் நிறைந் திருந்தன. அந்தக் காட்டுப் பகுதியில் இத்திருக்கோவில் அமைந்திருந்ததால், இத்தலத்தை காரைக்காடு என திருஞானசம்பந்தர் அழைக்கின்றார். அதையொட்டி திருக் கச்சி நெறிக்காரைக்காடு என்ற பெயர் வழங்கலானது.

    காஞ்சி புராணம், இத்தலத்தினை ‘சத்ய விரத நாதம்’ என அழைக்கின்றது. காஞ்சி மாநகரின் பன்னிரண்டு பெயர்களில் சத்யவிரதநாதமும் ஒன்றாகும். இங்கு எழுந்தருளிய இறைவன் சத்தியநாதர் என வழங்கப்படுகிறார். இவரே காஞ்சீபுரத்தின் ஆதி நாயகராவார். ஜோதிலிங்கத்தை விஷ்ணு வழிபடுவதற்கு முன்பாகவும், மண் லிங்கமான ஏகம்பனை, அம்பிகை வழிபடுவதற்கு முன்பாகவும் தோன்றியது இந்த ஆலயம் என்று கூறப்படு கிறது. அன்னை போக சக்தியாக (உலோகத் திருமேனியில்) கருவறைக்குள் எழுந்தருளி உள்ளார். அன்னையின் திருப்பெயர் பிரமராம்பிகை என்பதாகும். அன்னை வலது கரத்தில் மச்ச ரேகையும், தான்ய ரேகையும், மீனின் வடிவம் மற்றும் நெற்கதிர் வடிவம் அமைக்கப் பட்டுள்ளன.

    இறைவன் பெயர் சத்யநாதசுவாமி. செம்மணலால் உருவானவர். செம்மேனி கொண்ட இறைவன், மேற்கு முகமாய் காட்சி தருகிறார். இவரின் திருமேனி பார்ப்பதற்கு மிகவும் ஈர்ப்பு சக்தியுடன் காட்சி தருவது குறிப்பிடத்தக்கது. கோவிலுக்கு முன்புறம் இந்திரன் அமைத்த இந்திர தீர்த்தம் உள்ளது. இதன் கிழக்குக் கரையில் இந்திரன் வழிபட்ட விநாயகர் அமர்ந்துள்ளார். தலமரம் காரைச் செடியாகும்.



    புராண வரலாறு :

    தனது தவ வலிமையால் விரும்பிய வடிவம் பெறும் வரம் பெற்றவன் இந்திரன். ஒரு முறை கவுதம மகரிஷியின் உருவம் தரித்து, அவரது மனைவி அகல்யாவை அடைந்தான். இதையறிந்த மகரிஷி, இந்திரனுக்கு சாபமிட்டார். அகல்யாவையும் கல்லாக மாற்றினார். அந்த சாபம் நீங்குவதற்காக அகல்யா வழிபட்ட தலம் இது என்று தல புராணம் தெரிவிக்கிறது.

    சந்திரனும், வியாழனின் பத்தினியான தாரைக்கும் பிறந்தவர் புதன். தன் பிறப்பின் ரகசியம் அறிந்து மனம் வருந்திய புதன், காரைக்காடு சத்திய விரத நாதரை வழிபட்டு நவக்கிரகங்களில் ஒன்றாகும் வரம் பெற்றார். எனவேதான் இந்த தலத்தில் சிவன் சன்னிதியை நோக்கி புதன் சன்னிதி அமைந்துள்ளது.

    ஆலய அமைப்பு :

    கோவிலில் எளிய நுழைவு வாசலில் நுழைந்ததும் பலிபீடம், கொடிமரம், நந்திதேவரை தரிசிக்கலாம். மூன்று நிலை ராஜகோபுரம் மேற்குநோக்கி அமைந்துள்ளது. ராஜகோபுரத்தின் உள்ளே சென்றால் அகன்ற வெளிப் பிரகாரம் உள்ளது. சங்கிலி மண்டபம், புதன் சன்னிதி, சனி பகவான் சன்னிதி இருக்கின்றன. உட்பிர காரத்தில் நாற்புறமும் திருமாளிகைப் பத்தி அமைக்கப்பட்டுள்ளது. வலது பக்கத்தில் தெற்கு நோக்கிய நடராஜர் சபை உள்ளது. அருகே நால்வர், புதன், இந்திரன், பைரவர் வீற்றிருக்கின்றனர்.

    கிழக்குப் பிரகாரத்தில் மேற்கு நோக்கிய படி விநாயகர், மூன்று லிங்கங்கள், ஆறுமுகன் சன்னிதி இருக்கிறது. இதையடுத்து இரண்டு சிறிய லிங்கங்கள் உள்ளன. தென்மேற்கு முனையில் பிரதோஷ நாயகரும், திருமாலும், திருமகளும் அருள்புரிகின்றனர். தென் மேற்கு முனையில் உலாத் திருமேனிகள், பஞ்சமூர்த்திகள் அமைந்துள்ளன.

    புதன்கிழமைகளில் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி, புதனுக்கு பச்சைத் துணி சாத்தி, பச்சைப் பயறு படைத்து வழிபட்டால் புதன் கிரகத்தால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும். இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 11.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரையும் திறந்திருக்கும்.

    காஞ்சீபுரம் பேருந்துநிலையத்தில் இருந்து வடகிழக்கே 3 கி.மீ. தொலைவில், இத்திருக்கோவில் அமைந்துள்ளது.
    Next Story
    ×