search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ராமபிரான் பாவ விமோசனம் பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவில்
    X

    ராமபிரான் பாவ விமோசனம் பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவில்

    கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டத்தில் மலைமுகடுகளுடன் இயற்கை எழில் சூழ்ந்த இடமாகவும், பக்தி மனம் கமழும் இடமாகவும் திகழும் பத்ராவதியில் லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது.
    கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டத்தில் மலைமுகடுகளுடன் இயற்கை எழில் சூழ்ந்த இடமாகவும், பக்தி மனம் கமழும் இடமாகவும் பத்ராவதி திகழ்கிறது. பத்ராவதி பழைய நகரில் லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் திருவுருவ திருமேனி சதுர் புஜத்துடன் பத்மம், சங்கு, சக்கரம், கத ஆயுதங்கள் ஏந்தி அமிர்தவள்ளி தாயாரை தனது இடது மடியில் அமர்த்திய கோலத்தில் திருமுகத்துடன் காட்சி தருகிறார். தேவி அமிர்த கலசம் ஏந்தி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மூலவர் லட்சுமி நரசிம்மருடன் அமிர்தவள்ளி தாயார் சிலையை வங்கி மகரிஷி பிரதிஷ்டை செய்ததாக வரலாறு கூறுகிறது.

    மேலும் உட்பிரகாரத்தில் உபதெய்வங்களாக வேணுகோபால், புருஷோத்தமன், கணபதி, ஸ்ரீங்கேரி போன்ற தெய்வங்கள் எழுந்தருளியுள்ளனர். இந்த சிலைகளை வைசில மகாராஜா விஷ்ணுவரதனின் பேரன் வீரநரசிம்மன் ஆட்சியில் சிறந்த சிற்பியாக விளங்கிய சக்னாச்சாரியின் மகன் டக்னாச்சாரி செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இந்த கோவில் உருவானதிற்கு வரலாறு உள்ளது. அதை காண்போம்..

    காட்டுப்பகுதியான பெங்கிப்புராவில் 24 மணி நேரமும் காட்டு தீ எரிந்த வண்ணம் இருந்தது. இதனால் வெப்பம் நிறைந்த பூமியாக இருந்த பெங்கிப்புராவின் மையப்பகுதியில் வற்றாத ஜீவ நதியாக விளங்கிய பத்ரா ஆறு மேற்கு நோக்கி பாய்ந்தோடி வருகிறது. இந்த பகுதியில் வங்கி மகரிஷி என்பவர் வாழ்ந்து வந்தார். இந்த பகுதியில் வசித்து வந்த மக்கள் விவசாயம் செய்து வாழ்க்கை நடத்தினர்.

    காட்டுப் பகுதியில் பாளையக்காரர்கள் ஆயுதங்களை தயாரித்து வெளிநாட்டினருக்கு கொடுத்து பிழைப்பு நடத்தினர். இந்த சூழ்நிலையில் போதிய மழை இன்மையால் விவசாயம் செய்து வந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதைதொடர்ந்து தங்களது விவசாயம் செழிக்கவும், தொழில் பெருகவும், சுபிட்சமாக வாழவும் வகைசெய்யும்படி அந்தப் பகுதி மக்கள், வங்கி மகரிஷியிடம் வேண்டுகோள் விடுத்தனர். இதையடுத்து வங்கி மகரிஷி பத்ரா ஆற்றின் வலது கரையில் அமர்ந்து ஸ்ரீலட்சுமி நரசிம்மரை நோக்கி கடும் தவம் மேற்கொண்டார்.

    அவரது தவத்திற்கு மன மிறங்கி, ஸ்ரீலட்சுமி நரசிம்மர் அவர் முன்தோன்றி அருட்காட்சி புரிந்தார். அப்போது இந்த ஊர் மக்கள் சுபிட்சமாக வாழ அருள்புரிய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அவரது வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட ஸ்ரீலட்சுமி நரசிம்மர் பெங்கிப்புரா பகுதி செழித்தோங்கவும், மக்கள் சுபிட்சம் பெறவும் செய்தார். அதன் பின்னர் பெங்கிப்புராவை லட்சுமிபுரா என மக்கள் அழைத்து வந்தனர். பின்னர் அந்த பெயர் மருவி, தற்போது பத்ராவதி பழைய நகர் என அழைக்கப்படுகிறது.



    அதன் பயனாக வங்கி மகரிஷி, கடந்த 1220-ம் ஆண்டு ஸ்ரீலட்சுமி நரசிம்மர் உடன் அமிர்தவள்ளி தாயார் சிலையை பிரதிஷ்டை செய்தார். இங்கு ஸ்ரீலட்சுமி நரசிம்மர் திருவுருவ திருமேனி சதுர்புஜத்துடன் அமிர்த வள்ளி தாயாரை தனது இடது மடியில் அமர்த்தி காட்சி தருகிறார். புன்னகை பூக்கும் திருமுகத்துடன் தேவி அமிர்த கலசம் ஏந்தி காட்சி தருகிறார்.

    கடந்த 13-ம் நூற்றாண்டில் ஸ்ரீலட்சுமி நரசிம்மருக்கு கோவில் கட்டும் திருப்பணிகளை பல்லவ மன்னர் தொடங்கினார். திருக்கோவில் நட்சத்திர வடிவில் 5 யானைகள் தாங்கிய நிலையில் 150 மிகச்சிறிய கோபுர அமைப்புகளுடன் கலைநயத்துடன் கோவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போதும் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கோவில் அதே கலைநயமிக்க சிற்ப கலைகளுடன் காட்சி அளிக்கிறது.

    இந்த கோவில் வளாகத்தில் புஷ்கர்னி தீர்த்த கிணறு உள்ளது. இந்த கிணற்றில் உள்ள புனித தீர்த்தத்தில் நாம் குளித்து சென்றால், பாவ விமோசனம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. அதற்கு ஒரு வரலாறும் உள்ளது.

    அதாவது, ராமாயண யுத்தத்தில் வெற்றி கண்ட ஸ்ரீராமன், பாவ விமோசனம் பெற வேண்டுமென்றால் புண்ணிய நதியாக விளங்கும் பத்ரா ஆற்றின் கரையோரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள லட்சுமி நரசிம்மரை வழிபடும்படி உபதேசம் பெற்றார். அதன்படி ஸ்ரீராமன் இந்த கோவில் உள்ள புஷ்கர்னி தீர்த்த கிணற்றில் புனித நீராடி, பின்னர் லட்சுமி நரசிம்மரை வழிபாடு செய்து சகல பாவங்களில் இருந்தும் விமோசனம் பெற்றதாக கூறப்படுகிறது.

    ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவிலில் ஆயிரம் ஆண்டு பழமையான அரசமரம் தல விருட்சமாக விளங்குகிறது. இங்கு நாகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு பக்தர்கள் வணங்கி வருகிறார்கள். இத்தகைய புகழ்பெற்ற இந்த கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு பூஜையும், மே மாதம் கோவிலின் பிரம்ம உற்சவ விழாவும், புத்த பூர்ணிமா அன்று தேரோட்டமும் நடக்கிறது. மேலும் தினமும் கோவிலில் 3 கால பூஜைகளும், சனிக்கிழமை தோறும் சிறப்பு பூஜையும் நடக்கிறது.

    ஒரே கல்லில் ஆன புருஷோத்தமன் சிலை :

    இந்தக் கோவிலில் புருஷோத்தமனுக்கு தனி சன்னிதி உள்ளது. இங்கு புருஷோத்தமன் 4 திருக் கரங்களுடன் காட்சி தருகிறார். கைகளில் முறையே அங்குசம், பத்மம், சங்கு, கதாயுதம் ஏந்தி அருள்புரிகிறார். பொதுவாக சாமி சிலைகளில் கல்லில் கண்கள் வடிவமைப்பது இல்லை.

    மேலும் புருஷோத்தமன் சிலையை சுற்றி வளைவு அலங்கார சட்டமும் (பிரபாவதி) கல்லிலேயே செதுக்கப்பட்டுள்ளது. அதில் தசாவதார காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இவை அனைத்தும் ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற சிலை அமைப்பு தமிழ்நாட்டில் சீர்காழி, திருநாங்கூர் என்ற பகுதியில் உள்ள கோவிலில் மட்டுமே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×