search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நடராஜ பெருமானுக்கு உகந்த தலமான திருச்சிற்றம்பலம் திருத்தலம்
    X

    நடராஜ பெருமானுக்கு உகந்த தலமான திருச்சிற்றம்பலம் திருத்தலம்

    நடனமாடி நடராசர் இத்தலத்தில் உறைந்ததால் இத்தலம் நடனபுரியானது. அத்துடன் இத்தலம் நடராச பெருமானுக்கு உகந்த தலமாகி திருச்சிற்றம்பலம் எனப் பெயர் பெற்றது.
    பரம் பொருளான சிவபெருமான் மக்களுக்கு திருவருள் செய்யும் கருணையோடு சிவாலயங்களில் சிவலிங்கத் திருமேனியோடு எழுந்தருளி அருள் பாலித்துக்கொண்டிருக்கிறார்.

    நடராசரின் தரிசனம் :

    கவுசிக வம்சத்தில் தோன்றிய ஸ்ரீ ஞானசிந்து என்ற மகரிஷி இறைவன் மேல் அளவில்லா பக்தி கொண்டிருந்தார். அவருக்கு காலை தனுஷ்கோடி ஸ்நானம், மதியம் கங்கா ஸ்நானம், போஜனம், இரவு தில்லை நடராசரின் தரிசனம். இதுதான் அவருடைய தினசரி நியமம். இது தவறினால் தீ வளர்த்து உயிரை மாய்த்துக்கொள்வதாக விரதம் மேற்கொண்டிருந்தார்.

    ஒரு நாள் திருச்சிற்றம்பலம் வந்தார் மகரிஷி. கடுமையான பேய் மழை பொழியவே, அவரால் மேற்கொண்டு பயணத்தைத் தொடர முடியவில்லை. சிவபெருமானை வணங்கிவிட்டு இரவு இத்தலத்திலேயே தங்கிவிட்டார். பொழுது விடிந்தது. மகரிஷி மன வருத்தத்துடன் இறைவனை வேண்டினார். தன் விரதத்தை நிறைவேற்ற முடியவில்லையே என மன வேதனையோடு இறைவன் முன் கண்ணீர் மல்க நின்றார். தான் கொண்ட விரதப்படி தன் உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்தார்.

    அருகே கிடந்த மரக்கட்டைகளைக் குவித்தார். தீயை மூட்டினார். தீ மளமளவென எரியத் தொடங்கியது. கண்களை மூடி நடராசரை ஒருமுறை தியானித்தார். பின் எதிரே எரிந்து கொண்டிருந்த தீயில் பாயத் தயாரானார். தீயில் பாயத் தொடங்கிய போது நடராச பெருமான் அவர் முன் தரிசனம் தந்து அவரை தடுத்தாட்கொண்டார். தவிர அவர் என்றும் வழிபட வசதியாக இத்தலத்திலேயே தங்கி அருள்பாலிக்கத் தொடங்கினார்.

    நடனமாடி நடராசர் இத்தலத்தில் உறைந்ததால் இத்தலம் நடனபுரியானது. அத்துடன் இத்தலம் நடராச பெருமானுக்கு உகந்த தலமாகி திருச்சிற்றம்பலம் எனப் பெயர் பெற்றது.

    இறைவன்- இறைவி :

    இந்த ஆலயத்தில் அருள்பாலிக்கும் இறைவன் பெயர் நடனபுரீஸ்வரர். இறைவியின் பெயர் சவுந்திர நாயகி. இத்தலம் கொள்ளிடம் என அழைக்கப்படும் வடகாவிரிக்கும் சுப்பிரமணிய நதி எனும் மண்ணியாற்றுக்கும் இடையில் அமைந்துள்ளது.

    இத்தலத்தின் பெருமான் நடனபுரீசுவரர் மற்றும் அம்பாள் சவுந்திர நாயகி ஆகியோரது திருக்கோவில்கள் 21.8.1978-ல் கருங்கல் திருப்பணி செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சம்பந்தர், அப்பர், சுந்தரமூர்த்தி ஆகியோரின் செப்புத் திருமேனிகள் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டன. இத்தலத்தில் மேற்கில் வளர்தொட்டி எனும் வைப்புத்தலமும் திருப்பந்தணை நல்லூர் என்று பெயர் பெற்று தற்போது பந்தணைநல்லூர் என அழைக்கப்படுகிறது. பசுபதீசுவரர் ஆலயம் உள்ள தலமும் தெற்கில் திருமணஞ்சேரி, திருவேள்விக்குடி, திருத்துருத்தி தலங்களும் வடக்கில் ஓமாம் புலியூர் என்ற தலமும் கிழக்கில் மந்தாரம் எனும் வைப்புத்தலமும் உள்ளன. தவிர கிழக்கில் சற்றுத்தொலைவில் செவ்வாய் தலமான வைத்தீஸ்வரன் கோவிலும் நந்தனாருக்காக நந்தி விலகிய திருப்புன்கூர் போன்ற சிறப்பு மிக்க தலங்களும் உள்ளன.

    ஆதியில் அடர்ந்த வில்வக்காடாக இருந்தது இத்தலம். இறைவன் வில்வ மரத்தடியில் அமர்ந்து காட்சி கொடுத்ததால் இத்தலம் வில்வாரண்யம் என்றும் இறைவன் வில்வனேசுவரர் என்றும் அழைக்கப்படுவதுண்டு.

    ஆலய அமைப்பு :

    ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. எதிரே திருக் குளம் உள்ளது. ஆலயத்தின் முகப்பில் நந்தி தனி மண்டபத்தில் அருள்பாலிக்கிறார். அடுத்து பலிபீடம். உள்ளே நுழைந்ததும் மகாமண்டபம் உள்ளது. மகாமண்டபத்தின் வடகிழக்கு மூலையில் சூரியன், பைரவர் திருமேனிகள் உள்ளன. வலதுபுறம் இறைவி சவுந்திரநாயகி தென்முகம் நோக்கி அமைதியே உருவாக சாந்தம் தவழும் முகத்துடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள்.

    அடுத்து உள்ளது சிறப்பு மண்டபம். நுழைவு வாசலின் இடதுபுறம் கணபதியும், வலதுபுறம் விநாயகர், வள்ளி, ஞானமுத்து குமாரசாமி, தெய்வானை, சனீஸ்வரன் திருமேனிகள் உள்ளன. சிறப்பு மண்டபத்தின் வலதுபுறம் நடராஜர் சிவகாமி சன்னிதி உள்ளது. கருவறையை நோக்கி நந்தியும் பலிபீடமும் உள்ளன. அடுத்து உள்ள அர்த்தமண்டபத்தின் நுழைவு வாயிலில் இரண்டு துவார பாலகர்கள் கம்பீரமாக வீற்றிருக்கிறார்கள். அர்த்த மண்டபத்தைத் தொடர்ந்து கருவறை உள்ளது. உள்ளே இறைவன் அருள்மிகு நடனபுரீஸ்வரர் லிங்கத்திருமேனியில் அருள்பாலிக்கிறார். தேவக்கோட்டத்தின் தென்புறம் தட்சிணாமூர்த்தியும் வடக்கே துர்க்கையும் அருள்பாலிக்கின்றனர்.



    பரிவார தெய்வங்கள் :

    திருச்சுற்றில் மேற்கில் நிருதி விநாயகர், நால்வர், சுப்ரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை, மகாலட்சுமி, ஸ்ரீகாசி விசுவநாதர் ஆகியோர் தனித்தனி சன்னிதிகளில் அருள்பாலிக்கின்றனர். வடக்கு பிரகாரத்தில் சண்டீஸ்வரர் சன்னிதி உள்ளது. வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள் தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கின்றனர்.

    ஆலயத்தின் தலவிருட்சம் வில்வமரம். ஆலயத்தின் எதிரே உள்ள திருக்குளத்திற்கு சந்திர புஷ்கரணி என்று பெயர். இந்த ஆலயத்தின் தீர்த்தமும் இதுவே. இந்த ஆலயத்தில் திருப்பணிகள் செய்யப்பட்டு 13.6.2008 அன்று குடமுழுக்குத் திருவிழா நடைபெற்றுள்ளது.

    சுமார் 500 ஆண்டுகளைக் கடந்த மிகவும் பழமையான இந்த ஆலயம் தற்போது கண்களைக் கவரும் விதமாக புதுப்பொலிவுடன் திகழ்கிறது.

    நமக்கு துன்பம் வரும்போது இறைவனே நம்மைத் தேடி வந்து அருள்பாலிப்பார் என்ற உண்மையை பக்தர்களுக்கு உணர்த்திய தலம் இது என்று பக்தர்கள் சிலிர்ப்புடன் கூறுவது உண்மையே.

    பந்தநல்லூர்-சீர்காழி பேருந்து தடத்தில் பந்தநல்லூருக்கு கிழக்கே 5 கி.மீ. தொலைவில் உள்ளது திருச்சிற்றம்பலம் என்ற இந்த தலம். மயிலாடுதுறை, சிதம்பரம் சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், கும்பகோணம், திருப்பனந்தாள், பந்தநல்லூர் முதலிய ஊர்களில் இருந்து இத்தலம் செல்ல பேருந்து வசதிகள் உள்ளன. மயிலாடுதுறையிலிருந்து நகரப் பேருந்தும், மணல்மேட்டிலிருந்து மினிபஸ் வசதியும் உள்ளன.

    நோய் நிவர்த்தி தலம் :

    சந்திரன் ஷயரோக வியாதியால் பீடிக்கப்பட்டு அதிலிருந்து நிவர்த்தி பெற விரும்பி அருகே உள்ள வளர்தொட்டி என்ற தலத்தில் உள்ள பிரம்மபுரீஸ்வரரை வழிபட விரும்பினார். எனவே தான் கையோடு கொண்டு வந்திருந்த சிவலிங்கத்தை திருச்சிற்றம்பலத்தில் இருந்த வில்வ மரத்தடியில் வைத்துவிட்டு வளர்தொட்டி சென்றார். பிரம்மபுரீசுவரரை வணங்கிவிட்டு திரும்பி வந்து சிவலிங்கத்தை எடுக்க முயன்றார். அவரால் முடியவில்லை. ‘யாம் இத்தலத்தில் இருக்க விருப்பமுடையோம்’ என அசரீரி ஒலிக்க சந்திரன் சிவலிங்கத்தை அங்கேயே விட்டுச்சென்றுவிட்டார். எனவே இங்குள்ள பெருமானுக்கு சந்திரேசுவரர் எனவும் இத்தலத்திற்கு சந்திரஜோதிபுரம் சந்திரேசம் என்ற பெயர்களும் உண்டு.

    பராசர மகரிஷி யமுனா நதிக்கரையில் மச்சகந்தியைக் கண்டு மோகித்தார். அதன் காரணமாக சித்த பிரமை அடைந்தார். பின்னர் நாரதர் வழிகாட்டியபடி இத்தலம் வந்து குணமடைந்தார். இங்குள்ள சந்திரபுஷ்கரணியில் மூழ்கி சில காலம் இங்கேயே தங்கி இறைவனை வழிபட்டு பிரம்மஹத்தி தோஷமும் நீங்கப் பெற்றார். எனவே இங்குள்ள இறைவன் பராசரேசுவரர் என்றும் இத்தலம் பராசரேசம் என்ற பெயரிலும் அழைக்கப் படுவதுண்டு.
    Next Story
    ×