search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கூன்பாண்டியனால் கட்டப்பட்ட தென் திருவண்ணாமலை கோவில்
    X

    கூன்பாண்டியனால் கட்டப்பட்ட தென் திருவண்ணாமலை கோவில்

    சிவபெருமான் கட்டளைப்படி மன்னன் கூன்பாண்டியனால் கட்டப்பட்ட திருக்கோவில் ஒன்று, தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா ஆம்பலாப்பட்டு கிராமத்தில் உள்ளது.
    சிவபெருமான் கட்டளைப்படி மன்னன் கூன்பாண்டியனால் கட்டப்பட்ட திருக்கோவில் ஒன்று, தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா ஆம்பலாப்பட்டு கிராமத்தில் உள்ளது. இங்குள்ள இறைவன் திருநாமம் அண்ணாமலையார். இறைவியின் பெயர் உண்ணாமுலையம்மன். பஞ்சபூத தலங்களில் ஒன்றான (நெருப்பு) திருவண்ணாமலைக்கு தென் திசையில் இந்தக் கோவில் அமைந்துள்ளதால் இது ‘தென் திருவண்ணாமலை’ என போற்றப்படுகிறது.

    தலபுராணம் :

    மதுரையை ஆட்சி செய்த மன்னன் கூன் பாண்டியன், சைவ சமயத்தைச் சேர்ந்த சிவனடியார்களுக்கு தீங்குகள் செய்து வந்தான். இதைக் கண்டு மனம் வருந்திய அவரது மனைவி மங்கையர்க்கரசி சைவ நெறி தழைத்தோங்க விரும்பி, திருஞானசம்பந்தரை மதுரைக்கு வரவழைத்தாள். இதை அறிந்த மன்னன், திருஞானசம்பந்தரை மதுரையில் இருந்து வெளியேற உத்தரவிட்டான். அன்று இரவு திருஞானசம்பந்தரும், சிவனடியார்களும் தங்கியிருந்த மடத்துக்கு சிலர் தீவைத்தனர். திருஞானசம்பந்தரோ ‘இந்த தீ பையவே சென்று பாண்டியர்க்கு ஆகவே’ என்று பாடினார்.

    சம்பந்தர் வாக்கு உடனே பலித்தது. அந்த தீ மன்னனிடம் சென்று, அவனுக்கு வெப்பு நோயை உண்டாக்கியது. அந்த நோயை போக்கிட பலரும் கடும் முயற்சி செய்தனர். ஆனால் அவர்கள் முயற்சி பலன் அளிக்கவில்லை. நோயின் கொடுமை அதிகரித்துக் கொண்டே சென்றது. இதனால் மங்கையர்க்கரசி மன்னனிடம் சென்று, ‘திருஞானசம்பந்தருக்கு தீங்கு இழைத்த தால்தான் இந்த நோய் ஏற்பட்டு இருக்கிறது. எனவே திருஞானசம்பந்தரை இங்கு வரவழைத்தால்தான் நோய் குணமாகும்’ என்றாள்.

    அதற்கு மன்னன் இசைவு தர, மங்கையர்க்கரசியின் வேண்டு கோளை ஏற்று திருஞானசம்பந்தர் அரண்மனைக்குச் சென்றார். ‘மந்திரமாவது நீறு’ என்ற திருநீற்று திருப்பதிகத்தை பாடி மன்னனின் உடல் மீது தம் திருக்கரத்தால் திருநீற்றைப் பூசினார். அவரது வெப்பு நோய் உடனடியாக தீர்ந்தது. மன்னன் திருஞானசம்பந்தரை வணங்கினான். திருஞானசம்பந்தர் மன்னனிடம், ‘அரசே! இறைவன் அருளால் உன் உடலை அக்கினியாய் தகித்த வெப்பு நோய் நீங்கியது. எனவே நீ பஞ்சபூத தலங்களில் நெருப்பு தலமான திருவண்ணாமலை சென்று இறைவனை தரிசனம் செய்து வரவேண்டும்’ என்றார். அதன்பேரில் கூன்பாண்டியன், மங்கையர்க்கரசி ஆகியோர் திருவண்ணாமலைக்கு புறப்பட்டனர்.

    கனவில் தெரிந்த காட்சி :

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகில் உள்ள ஆம்பலாப்பட்டு கிராமத்தை அவர்கள் அடைந்தபோது அந்தி சாய்ந்து விட்டதால், அங்கேயே தங்கினார்கள். கூன்பாண்டியன் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது, அவனது கனவில் தோன்றிய ஈசன், ‘இங்கே எனக்கொரு கோவில் கட்டு’ என்றார். அதன்படியே அங்கேயே மன்னன் ஒரு கோவிலை கட்டினான். அதற்கு அண்ணாமலையார் கோவில் என்ற திருநாமத்தை சூட்டினான் என்கிறது தல புராணம்.

    மூலவர் அருணாசலேஸ்வரர், சிவலிங்க வடிவில் காட்சி தருகிறார். இங்கு அர்த்த மண்டபம், முக்தி மண்டபம் மற்றும் ஞானசண்டிகேஸ்வரர், சொர்ணபைரவர், சனீஸ்வரர், கணபதி, முருகன் ஆகியோருக்கு தனித்தனி சன்னிதிகள் உள்ளன.

    126 அடி உயர ராஜகோபுரம் :

    பழமை வாய்ந்த இத் திருக்கோவில் சிதிலமடைந்த நிலையில் இருந்தது. கோவிலை புனரமைக்கும் பணியை சித்தர் ராஜா மகேந்திர சுவாமிகள் மேற்கொண்டார். ரூ.2 கோடி செலவில் 7 அடுக்குகள் கொண்ட வகையில் 126 அடி உயரத்தில் ராஜகோபுரம் கட்டப்பட்டது. மேலும் மகா மண்டபம், அம்மன்கோவில் கோபுரம் கட்டும் பணியும் நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலையில் கிரிவல பாதையில் அஷ்டலிங்கங்கள் இருப்பதை போன்று, கோவிலில் அஷ்டலிங்கங்களுக்கு தனி சன்னிதி கட்டப்பட்டு வருகிறது. திருப்பணிகள் விரைவில் முடிவு பெற்று கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடாகி வருகிறது.

    இந்தக் கோவிலில் பிரசித்திப்பெற்ற சொர்ணபைரவர் சன்னிதி உள்ளது. தேய்பிறை அஷ்டமி அன்று இவரை வழிபட்டால் பொன், பொருள் சேரும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். குழந்தை இல்லாதவர்கள் கோவிலுக்கு வந்து தைப்பூசம், கார்த்திகை மாத சோமவாரம் ஆகிய தினங்களில் நாள் முழுவதும் விரதம் இருந்து இறைவழிபாடு செய்து மண்சோறு சாப்பிடுகின்றனர்.

    பிரதோஷம் அன்று நந்திகேஸ்வரருக்கு பிரதோஷ வழிபாடு நடக்கிறது. தினமும் அதிகாலை 5.30 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது. காலையிலும், மாலையிலும் 2 கால பூஜைகள் செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் மாசிமாதம் மகாசிவராத்திரி, சித்ராபவுர்ணமி, ஐப்பசி மாதம் அன்னாபிஷேகம், கார்த்திகை தீபம் ஆகிய விழாக்கள் சிறப்பாக நடைபெறும். மாதந்தோறும் பவுர்ணமி கிரிவலம் நடைபெற்று வருகிறது.

    தஞ்சாவூரில் இருந்து ஆம்பலாப்பட்டு 32 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. தஞ்சாவூரில் இருந்து பஸ்வசதி உள்ளது. தஞ்சாவூர்-பட்டுக்கோட்டை வழியில் பாப்பாநாடு என்ற ஊரில் இறங்கி, அங்கிருந்து 2½ கிலோமீட்டர் தூரம் பயணித்தால் கோவிலை சென்றடையலாம்.
    Next Story
    ×