search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மனதை குளிர்விக்கும் தோரணமலை முருகன் கோவில்
    X

    மனதை குளிர்விக்கும் தோரணமலை முருகன் கோவில்

    முருகன் வீற்றிருக்கும் “தோரணமலை” முழுக்க முழுக்க வித்தியாசமானது. மிகுந்த தனித்துவம் கொண்டது. இந்த கோவிலின் வரலாற்றை விரிவாக பார்க்கலாம்.
    குன்று இருக்கும் இடங்கள் எல்லாம் குமரன் அருள் வீசும் இடங்கள்.முருகப் பெருமான் அருளாட்சி செய்யும் எத்தனையோ மலைதலங்களை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். பழனி, மருதமலை, திருத்தணி பழமுதிர்ச்சோலை என்று முருகன் வீற்றிருக்கும் மலை தலங்களை சொல்லிக்கொண்டே போகலாம். அந்த வரிசையில் இடம் பெற்றுள்ள “தோரணமலை” முழுக்க முழுக்க வித்தியாசமானது. மிகுந்த தனித்துவம் கொண்டது.

    முதலில் தோரணமலை எங்கு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். நெல்லை மாவட்டத்தில் இப்புண்ணிய மலை அமைந்துள்ளது. தென்காசியில் இருந்து கடையம் செல்லும் வழித்தடத்தில் இத்தலம் உள்ளது. நெல்லையில் இருந்தும் மிக எளிதாக இத்தலத்துக்கு செல்ல முடியும். இந்த தோரணமலையின் உச்சியில் முருகன் குடி கொண்டிருக்கிறான். இந்த முருகப்பெருமானுக்கு உள்ள மிகப்பெரிய சிறப்பு என்ன தெரியுமா?

    தமிழ் வாழ வழி வகுத்த குறுமுனியான அகத்தியர், மருத்துவ உலகமே வியந்து பார்க்கும் தேரையர் சித்தர் இருவரும் பல நூறு ஆண்டுகளாக வழிபட்ட பெருமை, மகிமையும் இந்த முருகப் பெருமானுக்கு உண்டு. தமிழ்நாட்டில் உள்ள நூற்றுக்கணக்கான முருகத் தலங்களில் அறுபடை வீடுகள் உள்பட எந்த ஒரு தலத்துக்கும் இல்லாத மிக முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பாக இது கருதப்படுகிறது.

    பல நூறு ஆண்டுகளாக மலை உச்சியில் இருப்பதாலோ என்னவோ, இந்த முருகன் மிகச்சிறந்த வரப்பிரசாதமாகத் திகழ்கிறார். நீங்கள் என்ன ஆசைப்பட்டு கேட்டாலும் சரி... தொழில் விருத்தி ஆகவேண்டுமா? குடும்பத்தில் ஏற்படும் சிறுசிறு சச்சரவுகளா? கடன் தொல்லையா? நல்ல வேலை வேண்டுமா? பதவி உயர்வு வேண்டுமா? திருமணம் நடக்க வேண்டுமா? புத்திரப் பாக்கியம் வேண்டுமா? இப்படி நீங்கள் என்ன கேட்டாலும் தோரண மலை முருகன் வாரி வழங்க தயங்குவதே இல்லை.

    அதுவும் இவரிடம் மலை ஏறி வந்து யார் ஒருவர் கண்ணீர் விட்டு தமது கோரிக்கைகளை வைக்கிறாரோ, அவரை தோரணமலை மேலும் அழவிடுவதில்லை.
    அகத்தியர், தேரையர் வழிபட்ட இந்த சிறப்பான முருகன் அறுபடை வீடுகளுக்கு இணையாக பக்தர்களிடம் பிரசித்தி பெற்றிருக்க வேண்டுமே... ஏன் பல நூறு ஆண்டு கழித்து இப்போது தெரியத் தொடங்கியுள்ளது? என்று நீங்கள் கேட்கலாம். அதற்கு விடை காண நாம் வரலாற்று நிகழ்வுகளை பார்க்க வேண்டும்.

    உலகத்தை சமப்படுத்த தென்பகுதியில் உள்ள பொதிகை மலைக்கு செல் என்று சிவபெருமான், அகத்தியருக்கு உத்தரவிட்டு, அவர் வந்த கதை உங்களுக்கு தெரிந்ததுதான். அகத்திய முனிவர் பொதிகைக்கு வந்து கொண்டிருந்தபோது கடையம் அருகே உள்ள தோரணமலையை பார்த்து வியந்தார். யானை வடிவத்தில் இருந்த அந்த மலை வாரணமலை என்றழைத்தார். அதுதான் மருவி தோரணமலை ஆகிவிட்டது.

    தோரணமலை அவருக்கு மிகவும் பிடித்துபோனது. அதற்கு மிக முக்கிய காரணம் அந்த மலை அவருக்கு மனதை குளிரச் செய்து அமைதியை தந்தது. எனவே அந்த மலையில் சிறிது காலம் தூங்கி செல்லலாம் என்று அகத்தியர் மலை உச்சிக்கு சென்றார். தோரணமலையில் பச்சை பசேலன விளைந்து கிடந்த சுமார் 4 ஆயிரம் மூலிகை செடி வகைகளை பார்த்ததும் அகத்தியர் மேலும் மகிழ்ச்சி அடைந்தார். அந்த மூலிகைகள் என்னென்ன நோய் தீர்க்கும் என்பதை கண்டுபிடித்தார்.

    அந்த குறிப்புகளை எல்லாம் அவர் குறிப்புகளாக எழுதினார். அவைதான் இன்று அகத்தியர் மருத்துவ நூல்களாக உலகம் முழுவதும் பரவியுள்ளன. ஆக அகத்தியரின் மருத்துவ ஆய்வுக்கு வித்திடப்பட்ட இடம் இந்த தோரணமலை என்பது குறிப்பிடத்தக்கது. அகத்தியரின் சீடராக வந்து சேர்ந்த தேரையரும் மருத்துவத்தில் நிறைய புதுமைகளை செய்தார். அவர்கள் இருவராலும் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோரணமலை மிகப்பெரும் மருத்துவ தொழிற்சாலை போல செயல்பட்டது.

    தோரணமலையின் பல பகுதிகளிலும் ஆங்காங்கே குழிகள் உள்ளன. மிக அழகாக வட்ட வடிவத்தில் இருக்கும் அந்த குழிகள் எல்லாம் அகத்தியர், தேரையர் கண்காணிப்பில் சித்தர்கள் மூலிகைகளை இடித்து மருந்து தயாரித்த இடங்கள் என்று சொல்கிறார்கள். அவர்கள் அந்த மலையில் இருந்த போது, தங்கள் இஷ்ட தெய்வமான இந்த முருகரை வழிபட்டனர். சில ஆண்டுகளுக்கு பிறகு அகத்தியர் தோரணமலையில் இருந்து பொதிகை மலைக்கு சென்று விட்டார். அவரது சீடர் தேரையரோ, அந்த தோரணமலையின் ஒரு பகுதியில் ஜீவசமாதி ஆகிப்போனார். இதனால் மற்ற மகரிஷிகள், முனிவர்கள், சித்தர்களும் தோரண மலையில் இருந்து இடம்பெயர்ந்தனர்.

    இதன் காரணமாக தோரணமலை அழகன் முருகன் ஆராதனை செய்யப்படாத நிலை ஏற்பட்டது. அகத்தியர், தேரையர்களின் மருத்துவ தயாரிப்பு இடங்களும் இருந்த இடம் தெரியாமல் தூர்ந்து போய்விட்டன. நாளடைவில் ஒட்டுமொத்த தோரணமலையும் மக்கள் கவனத்தில் இருந்து திசைமாறிப்போனது.

    மிகவும் சிறப்பாக வழிபடப்பட்ட முருகனும் கால ஓட்டத்தில் அருகில் உள்ள சுனைக்குள் போகும் நிலை ஏற்பட்டுவிட்டது. ஆனால் முருகன் எத்தனை நாட்களுக்குத்தான் அந்த சுனைக்குள் இருப்பார்? மீண்டும் மக்கள் வந்து தன்னை தரிசித்து பயன்பெறட்டும் என்று முருகப்பெருமான் திருவுளம் கொண்டான். தோரணமலை அருகில் உள்ள முத்துமாலைபுரம் என்ற ஊரை சேர்ந்த நா.பெருமாள் என்பவர் கனவில் தோன்றினார்.

    “நான் தோரணமலை உச்சியில் உள்ள சுனைக்குள் கிடக்கிறேன். என்னை வெளியில் எடுத்து வைத்து வணங்குங்கள்” என்றான். மறுநாள் விடிந்ததும் பெருமாள் ஆட்களை அழைத்து கொண்டு மலை உச்சிக்கு சென்றார். சுனையில் உள்ள தண்ணீரை இறைத்து வெளியேற்றினார்கள். சொன்னபடி தோரணமலைமுருகன் அங்கே இருந்தார்.

    அந்த சிலையை எடுத்து மலை அடி வார குகையில் வைத்து வழிபட்டனர். இன்றும் அந்த சிலையே தோரணமலை சன்னிதானத்தில் மூலவராக உள்ளார். பெருமாளின் மகனும் ஆசிரியருமான ஆதிநாராயணன், தோரணமலை முருகன் பற்றிய சிறப்புகளை பரப்பச் செய்தார். நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள சுமார் 150 சினிமா தியேட்டர்களில் சிலைடு மூலம் தோரணமலை முருகன் பற்றிய தகவலை பரப்பினார்.

    இதையடுத்து மக்கள் சாரை, சாரையாக தோரணமலைக்கு வரத்தொடங்கினார்கள். பக்தர்கள் வசதிக்காக அவர் தோரணமலை உச்சிக்கு செல்ல சுமார் 1000 படிகள் கொண்ட படியை ஏற்படுத்தினார். சுனைகளையும் மேம்படுத்தினார்.

    தற்போது அவரது குமாரர் செண்பகராமன், தோரணமலை சைன் சிறப்புகளை உலகம் முழுமைக்கும் பரவச்செய்யும் தச்லைமற்ற பணியில் “தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். இதனால் தோரணமலை முருகனை வழிபட வருபவர்கள் எண்ணிக்கை உயர்ந்தபடி உள்ளது.

    இத்தலத்து முருகன் கிழக்கு நோக்கி திருச்செந்தூர் முருகனை பணித்தபடி உள்ளார். எனவே இத்தலத்திற்கு வந்து வழிபட்டால் திருச்செந்தூரில் வழிபட்ட அதே பலன்கள் கிடைக்கிறது.

    பொதுவாக இருநதிகளுக்கு இடையில் உள்ள தலம் சிறப்பான புனிதத்தலமாக கருதப்படும். தோரணமலையை சுற்றி ராமநதி, ஜம்புநதி ஒடுகின்றன. இதுதவிர இப்போதும் இந்த மலையில் தேரையரும், மற்ற சித்தர்களும் அபே நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதனால் மலை ஏறும் போதே நம்மை அறியாமலே நம் உடல் சிலிப்பாறுவதை உணர முடியும். 1000 படிகள் என்பதால் மலை ஏற சிரமமாக இருக்குமோ என்று சிலர் நினைக்கலாம். நீங்கள் முதல் படியில் காலை எடுத்து வைத்தால் போதும், அதன்பிறகு அப்பன் முருகன் நம்மை மலை உச்சிவரை வரவழைத்து விடுவான். எப்படி ஏறினோம். எப்படி இறங்கினோம் என்பதே தெரியாது.

    அதிலும் மலையில் உள்ள சுனைத்தீர்த்தம் ஏதாவது ஒன்றில் சற்று நீராடினால் போதும், மலை ஏறி வந்த அலுப்பு தெரியவே தெரியாது. புனித நீராடி விட்டு முருகனை நெருங்கும் போது நிச்சயம் இரட்டிப்பு பலன்களைப் பெறலாம். கடையம், பாவூர்சத்திரம், ஆவுடையானூர் உள்பட சுற்றுப்பகுதியைச் சேர்ந்த பலர் தவறாமல் தினமும் மலை ஏறி முருகனை வழி படுவதை கடமையாக வைத்துள்ளனர். தோரணமலையில் உள்ள ஒவ்வொரு படிக்கட்டிலிலும் ஏற, ஏற முருகன் நூல்களை வாழ்வில் உயர்த்தி வருவதாக கூறினார்கள்.

    மலை உச்சியில் சற்று நேரம் அமர்ந்து தியானம் செய்தால், மனம் குளிர்ந்து வருகிறது. எந்த ஒரு மலையிலும் கிடைக்காத மனஅமைதியை அங்கு நீங்கள் பெற முடியும். உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் தேரையர் உள்ளிட்ட சித்தர்களின் ஆசியும் சேர்ந்து கிடைக்கும். முருகனின் அருளையும், சித்தர்களின் ஆசியையும் ஒருங்கேப் பெறவே முக்கிய நாட்களில் இங்கு விமரிசையாக விழா நடத்தப்படுகிறது. நாளை மறுநாள் (வியாழக்கிழமை) தைப்பூசம் இந்த புராணமலையில் சிறப்பாக நடைபெற உள்ளது.

    மலைஉச்சியில் மின்சாரம், குடிநீர், கழிவறை ஆகிய மூன்று முக்கியமான வசதிகள் இல்லாதது மிகப்பெரும் மனக்குறைவாக உள்ளது. முருகப்பக்தர்கள் நினைத்தால் மூன்று மாதத்தில் அந்தத்திருப்பணிகளை செய்து முடித்து விடமுடியும். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தோரணமலையில் இந்தத்திருப்பணிகள் செய்பவர்களின் குடும்பமும் நிச்சயம் வாழையடி வாழையாக தழைக்கும்.

    குகையில் முருகன் தரிசனம்

    தோரண மலையில் குகையில் முருகப்பெருமான் தரிசனம் தருகிறார். இந்த குகை இயற்கையில் கிழக்கு நோக்கி அமைந்திருப்பது தனிச்சிறப்பு. இந்த முருகன் திருச்செந்தூர் முருகனை நோக்கிய வண்ணம் இருப்பதால் இவரை வழிபட்டால் திருச்செந்தூர் முருகனை வணங்கிய புண்ணியம் கிடைக்கும். இதனால் முருகனுக்கு மாலை அணிந்து விரதம் இருக்கும் பக்தர்கள் தோரண மலைக்கும் வந்து செல்கிறார்கள்.

    வழிபாட்டு நேரம்

    சிறந்த பிரார்த்தனை தலமாக விளங்கும் தோரணமலை முருகன் கோவிலில் தமிழ்மாத கடைசி வெள்ளிக்கிழமை தோறும் உச்சிகால பூஜையின் போது (11 மணி முதல் 1.30 மணி வரை) சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் அன்னதானமும் நடக்கின்றன. திருமணம், மகப்பேறு ஆகியவற்றுக்காகவும் நோய் குணமாகவும் சொத்து தகராறு, குடும்பத்தகராறு நீங்கவும் தோரணமலை முருகனை வழிபட்டு வருகின்றனர். மருத்துவ படிப்பு, விரும்பிய வேலை, தொழில் அமையவும் உயர்பதவி கிடைக்கவும் அருள்பாலிக்கிறான் முருகன். செவ்வாய், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் கார்த்திகை, விசாகம் ஆகிய நட்சத்திரங்களும் முருகனை வழிபட உகந்ததாகும். மலை அடிவாரத்தில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும்.

    ‘குகைக்குள் வாழும் குகனே’

    பாரதியார் பெண் எடுத்த ஊர் கடையம். அவரது மனைவி செல்லம்மா பிறந்த ஊர் என்பதால் பாரதியார் கடையம் வரும்போதெல்லாம் தோரண மலை சென்றதாக கூறுகின்றனர். பாரதி ‘குகைக்குள் வாழும் குகனே’ என்று போற்றிப் பாடியதும் இந்த தோரணமலை முருகனைத்தான்.

    தோரணமலை முருகன் பற்றிய கூடுதல் தகவல்களை செண்பகராமனிடம் 9965762002 என்ற எண்ணில் பெறலாம்.
    Next Story
    ×