search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சென்னையில் உள்ள நவக்கிரக தலங்கள்
    X

    சென்னையில் உள்ள நவக்கிரக தலங்கள்

    நவக்கிரகங்களை வழிபாட்டு தலங்கள் தமிழகத்தில் பல இடங்களில் உள்ளது. சென்னையில் உள்ள நவக்கிரக தலங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
    வாழ்க்கையில் வரக்கூடிய இன்ப துன்பங்கள் அனைத்தும், நவக்கிரக அமைப்பால் நிர்ணயம் செய்யப்படுகிறது என்பது பரவலான ஆன்மிக நம்பிக்கையாக இருந்து வருகிறது. நவக்கிரகங்களை வழிபாட்டு தலங்கள் தமிழகத்தில் பல இடங்களில் உள்ளது. அந்தத் தலங்களில் எல்லாம் இறைவனைக் காட்டிலும் நவக்கிரகங்களுக்கே அதிக சிறப்பு வழங்குவதைக் காணலாம்.

    சூரியனுக்குரிய சூரியனார் கோவில், சந்திரனுக்குரிய திங்களூர் கோவில், குருவிற்குரிய ஆலங்குடி, திருநள்ளாறு சனீஸ்வரன், செவ்வாய்க்குரிய வைத்தீஸ்வரன் கோவில், புதனுக்குரிய திருவெண்காடு, சுக்ரனுக்குரிய கஞ்சனூர், ராகுவுக்குரிய திருநாகேஸ்வரம், கேதுவுக்குரிய கீழ்பெரும்பள்ளம் ஆகியவை சிறப்புக்குரியவையாகும். ஆனால் சென்னையில் உள்ளவர்களுக்கு சென்னையைச் சுற்றிலுமே நவக் கிரகங்களுக்கான 9 பரிகாரத் தலங்களும் உள்ளன. நவக்கிரக பரிகாரத்திற்கு இந்தத் தலங்களை வழிபட்டாலே போதுமானது. சென்னையில் உள்ள நவக்கிரக தலங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

    கேது பரிகார தலம் :

    போரூர் அருகில் உள்ள கெருகம்பாக்கம் நீலகண்டேஸ்வரர் ஆலயம், கேதுவுக்குரிய பரிகார தலமாக விளங்குகிறது. இதனை வட கீழ்பெரும்பள்ளம் என்றும் அழைக்கிறார்கள். மூலவர் பெயர் நீலகண்டேஸ்வரர். அம்பிகையின் பெயர் ஆதி காமாட்சி. ஜாதக ரீதியாக உள்ள நாகதோஷத்தை போக்கக்கூடிய சக்தி வாய்ந்த தலமாக இது கருதப்படுகிறது. இத்தலத்தில் கேது பகவானை தனிச் சன்னிதியில் தரிசனம் செய்யலாம். ஆலயத்தின் பழைய பெயர், ‘அழகிய சோழ நல்லூர்’ என்பதாகும். கேதுவால் வழிபடப்பட்ட பெருமை கொண்ட ஆலயம் என்பதால், அவரால் ஏற்படும் தோஷங்கள் இங்கு நிவர்த்தியாகின்றன.

    ஒவ்வொரு நாளும் வரக்கூடிய எமகண்ட வேளை என்பது கேதுவிற்கு உரிய தாகும். இங்கே செய்யப்படும் எமகண்ட வேளை பூஜைகள் விசேஷமானது. நீலகண்டேஸ்வரருக்கும், நந்திக்கும் இடையே இருக்கும் மேல் விதானத்தில், சூரியனை கேது விழுங்குவது போன்ற ஒரு சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதற்கு கீழாக நின்றபடி நீலகண்டேஸ்வரரையும், அம்பிகையையும் பிரார்த்தனை செய்தால் கேது தோஷம் நீங்கும்.

    செவ்வாய் பரிகார தலம் :

    சென்னைக்கு தெற்கே இருக்கும் பூந்தமல்லியில் உள்ளது வைத்தீஸ்வரன் கோவில். இந்த ஆலயம்தான் செவ்வாய் பரிகார தலமாக கருதப்படுகிறது. காரணம் செவ்வாயும், தேவர்களின் அதிபதியான இந்திரனும் இத்தலத்தில் உள்ள வைத்தீஸ்வர சுவாமியை வணங்கி, தங்களது சிரமங்கள் நீங்க பெற்றிருக்கின்றனர். 1,300 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம் சோழர் களால் அமைக்கப்பட்டதாக தெரிகிறது. இக்கோவிலின் மூலவர் பெயர் வைத்தியநாத சுவாமி. அம்பிகையின் பெயர் தையல் நாயகி அம்மன். நவக்கிரகங்களில் அங்காரகன் எனப்படும் செவ்வாய்க்குரிய தலமாக இத்தலம் விளங்குகிறது. செவ்வாய்க்கிழமை அன்று வரும் ராகுகால நேரத்தில் இத்தலத்தில் உள்ள அங்காரகனுக்கும், விஷ்ணு துர்கைக்கும் மாவிளக்கு தீபம் ஏற்றி வழிபட வேண்டும். அதன் மூலம் செவ்வாய் பரிகாரமும், தீராத நோய்கள், பகை மற்றும் தோல் நோய்கள் நீங்குவதாக பக்தர்களின் நம்பிக்கை நிலவுகிறது.

    குரு பரிகார தலம் :

    போரூரில் வீற்றிருக்கும் ராம நாதேஸ் வரர் கோவில், குருவுக்குரிய பரிகார தலமாக கருதப்படுகிறது. மூலவர் பெயரானது ராமநாதேஸ்வரர் என்பதாகும். அம்பிகையின் பெயரானது சிவகாம சுந்தரி. சிவபெருமானை குருவாக பாவித்து, ராமபிரான் வழிபட்ட தலம் என்பதால், குரு தலமாக விளங்குகிறது. இந்த ஆலயம் ஆதி ராமேஸ்வரம் என்றும் வழங்கப்படுகிறது.

    சுப காரியங்களை நடத்துவதற்கு முன்பாக இத்தலம் வந்து தரிசனம் செய்வது விசேஷம். குறிப்பாக வியாழன் தோறும் விரதம் இருந்து, குரு ஸ்துதியை மனதால் ஜெபித்து, வழிபாடுகள் நடத்துவதால் குருவின் பலமானது விரும்பியபடி கிடைக்கும்.

    சந்திரன் பரிகார தலம் :

    குன்றத்தூருக்கு அருகில் உள்ள சதுர்வேதிமங்கலம் எனப்படும் சோமங்களம் சோமநாதீஸ்வரர் கோவில், சந்திரனுக்குரிய பரிகார தலமாக விளங்குகிறது. மூலவர் சோமநாதேஸ்வரர். அம்பிகையின் பெயர் காமாட்சி. சந்திரன் வழிபட்டு பேறு பெற்றதால் சோமங்களம் என்ற பெயர் வழங்கப் படுகிறது. சோமன் என்றால் சந்திரன் என்று பொருள். கோவில் கோபுரமானது கஜப் பிருஷ்ட அமைப்பில் இருப்பதும், சதுர தாண்டவ மூர்த்தியாக நடராஜர் விளங்குவதும் இங்குள்ள சிறப்பு களாகும். இத்தல இறைவனை வழிபட்டால் சந்திர தோஷம் நீங்கும்.

    சூரியன் பரிகார தலம் :


    சென்னை போரூருக்கு அருகில் உள்ள கொளப்பாக்கம் அகத்தீஸ்வரர் ஆலயம், சூரிய பரிகார தலமாக விளங்குகிறது. 1,300 ஆண்டுகள் பழமையானது இந்த ஆலயம். இத் தலத்தின் இறைவன் அகத்தீஸ்வரர். அவருக்கு வாகீச மகாதேவர் என்ற பெயரும் உண்டு. இறைவியின் திரு நாமம் ஆனந்தவல்லி. தெற்கு நோக்கி அருளும் அம்பிகையின் கருவறை கோஷ்டங்களில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, திருமால், துர்க்கை, பிரகாரத்தில் சண்டிகேஸ்வரர் ஆகியோர் அருள்கின்றனர். இங்கே தனி சன்னிதியில் சூரிய பகவான் ஈஸ்வரனை நோக்கிய வண்ணம் விசேஷமாக உள்ளார்.

    ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை அன்றும், சூரியபகவானுக்கு சிவப்பு நிற உடை அணிவித்து, சிவப்பு நிற மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். மேலும் சூரியனுக்குரிய தானியமான கோதுமையை, அவர் காலடி களில் வைத்து மனமுருக வேண்டினால் சூரிய தோஷங்கள் நீங்குகின்றன. சூரிய பகவான் இத்தல மூலவரை வழிபட்டதால் சூரிய பரிகார தலமாக விளங்கி வருகிறது.

    ராகு பரிகார தலம் :

    பெரிய புராணத்தை இயற்றிய சேக் கிழாரின் அவதாரத் தலமான, குன்றத் தூரில் இருக்கும் திரு நாகேஸ்வரர் கோவில் ராகு பரிகாரத் தலமாக விளங்குகிறது. ராகுவால் வழிபடப்பட்டதால் இத்தலத்து ஈஸ்வரருக்கு ‘திருநாகேஸ்வரர்’ என்பது பெயராகும். இந்த ஆலயத்தில் ராகுவுக்குரிய வழிபாடுகள் விசேஷமாக செய்யப்படுகிறது. அம்பிகைக்கு காமாட்சி என்று பெயர். மூலவருக்கு வழங்கப்பட்ட பழைய பெயர் ‘சடையாண்டீஸ்வரர்’ என்பதாகும்.

    ராகு பாதிப்பு உள்ளவர்கள், ராகு திசை அல்லது புத்தி நடப்பில் இருப்பவர்கள், இத்தலத்து சிவபெருமானையும், அம்பிகையையும் வழிபடுவது வழக்கம். சர்ப்ப தோஷம் மற்றும் சர்ப்ப சாபம் போன்றவற்றால், திருமணத்தடை மற்றும் ஆயுள் பாதிப்பு உண்டாகலாம். அதற்கு ராகு கால வழிபாடு செய்வது அவசியம். சர்ப்ப சாந்தி பரிகாரமாக ஹோமமும் செய்து நல்ல பலன்களை பெறலாம்.

    புதன் பரிகார தலம் :

    சென்னை போரூருக்கு அருகில் உள்ளது கோவூர் என்ற திருத்தலம். இங்கு சுந்தரேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இறைவனின் திருநாமம் சுந்தரேஸ்வரர், அம்பாளின் திருநாமம் சவுந்தராம்பிகை. கி.பி. 965-ம் ஆண்டில் சுந்தர சோழன் என்பவனால் இந்த ஆலயம் கட்டப்பட்டதாக குறிப்புகள் உள்ளன. இங்குள்ள இறைவனை காமதேனு வழிபட்டதால், இத்தலம் ‘கோவூர்’ என்று வழங்கப்படுகிறது. இத்தலமே சென்னையில் இருக்கும் புதனுக் குரிய பரிகார தலமாகும்.

    பஞ்ச ரத்ன கீர்த்தனை பாடல் பெற்ற தலங்களில் இத்தலமும் ஒன்று. இங்கு ஒவ்வொரு புதன்கிழமையும் நடைபெறும், மகாவில்வ இலை பூஜை விசேஷமானதாகும். சீதையை தேடி வந்த ராமன், இத்தல இறைவனை 48 நாள் விரதம் இருந்து வழிபட்ட பிறகே ராமேஸ்வரம் புறப்பட்டதாக தல புராணம் தெரிவிக்கிறது. ஜாதகரீதியாக புதன் நீச்சமாக இருப்பவர்கள், இங்கே வழிபாடு செய்து புதனின் அருளை பெற்று மகிழலாம். இத்தலத்தில் மகாவில்வ மரமானது ஸ்தல விருட்சமாக உள்ளது.

    சுக்ரன் பரிகார தலம் :

    சென்னைக்கு தெற்கே இருக்கும் மாங்காட்டில் உள்ள மிகவும் பழமையான கோவில் திருவல்லீஸ்வரர் (வெள்ளஸ்வரர்) ஆலயம். நவக்கிரக தலங்களில் சுக்ரனுக்குரியதாக இத்தலம் விளங்குகிறது. சுக்ராச்சாரியாரால் பூஜிக்கப்பட்ட இத்தல இறைவனை, தமிழில் வெள்ளஸ்வரர் என்றும், சமஸ்கிருதத்தில் பார்க்கவேஸ்வரர் என்றும் அழைக்கிறார்கள். இத்தலத்து வில்வ மரத்தடியில் பெரிய அளவிலான பாண லிங்கம் உள்ளது. இத்தலத்தின் தல விருட்சம் மகா வில்வம். கண் சார்ந்த குறைபாடுகள் உடையவர்கள் வெள்ளஸ்வரரை, வெள்ளிக்கிழமைகளில் தரிசித்து வழிபட்டு வந்தால், அவர்களது குறைகள் நீங்கப்பெறுவதாக ஐதீகம். சுக்ரனின் சாரம் பெற்ற பரணி, பூரம், பூராடம் நட்சத்திர நாட்களில் சுக்ரனுக்கு பரிகார பூஜைகள் செய்தும் மகிழ்ச்சியான வாழ்வை அடையலாம்.

    சென்னைக்கு தெற்கே இருக்கும் மாங்காட்டில் உள்ள மிகவும் பழமையான கோவில் திருவல்லீஸ்வரர் (வெள்ளஸ்வரர்) ஆலயம். நவக்கிரக தலங்களில் சுக்ரனுக்குரியதாக இத்தலம் விளங்குகிறது. சுக்ராச்சாரியாரால் பூஜிக்கப்பட்ட இத்தல இறைவனை, தமிழில் வெள்ளஸ்வரர் என்றும், சமஸ்கிருதத்தில் பார்க்கவேஸ்வரர் என்றும் அழைக்கிறார்கள்.

    இத்தலத்து வில்வ மரத்தடியில் பெரிய அளவிலான பாண லிங்கம் உள்ளது. இத்தலத்தின் தல விருட்சம் மகா வில்வம். கண் சார்ந்த குறைபாடுகள் உடையவர்கள் வெள்ளஸ்வரரை, வெள்ளிக்கிழமைகளில் தரிசித்து வழிபட்டு வந்தால், அவர்களது குறைகள் நீங்கப்பெறுவதாக ஐதீகம். சுக்ரனின் சாரம் பெற்ற பரணி, பூரம், பூராடம் நட்சத்திர நாட்களில் சுக்ரனுக்கு பரிகார பூஜைகள் செய்தும் மகிழ்ச்சியான வாழ்வை அடையலாம்.

    சனி பரிகார தலம் :

    சனிக்குரிய திருத்தலமானது திருநள்ளாறு. அதேபோல சென்னையில் இருப்பது வடநள்ளாறு என்று அழைக்கப்படுகிறது. இந்த தலம், பல்லாவரம் அருகே உள்ள பொழிச்சலூரில் இருக் கிறது. மூலவர் பெயர் அகஸ்தீஸ்வரர். அம்பிகையின் பெயர் ஆனந்தவல்லி.

    சிவபெருமானின் திருக்கோலங்களில் ஒன்றான பைரவமூர்த்தி, இத்தலத்தில் காவல் தெய்வ மாக ஆக்ரோஷம் பெற்ற சம்ஹார கால பைரவராக வீற்றிருக்கிறார். சனியின் தொல்லைகளை களைவதில் பைரவமூர்த்திக்கு இருக்கும் முக்கியத்துவத்தை அவரது அருளை பெற்றவர்களே அறிவார்கள். இத்தலத்தில் சனிக்கு தனி சன்னிதியும், நள தீர்த்தமும் அமைந்துள்ளது கூடுதல் சிறப்பு.
    Next Story
    ×