search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    குடும்ப ஒற்றுமை தரும் திருவள்ளுவர் திருக்கோவில்
    X

    குடும்ப ஒற்றுமை தரும் திருவள்ளுவர் திருக்கோவில்

    சென்னை மயிலாப்பூர் முண்டகக்கன்னியம்மன் ஆலயத்திற்கு அருகில் திருவள்ளுவர் கோவில் தெருவில் திருவள்ளுவர் திருக்கோவில் அமைந்துள்ளது.
    சென்னை மயிலாப்பூரில் உள்ளது முண்டகக்கன்னியம்மன் கோவில். இந்த ஆலயத்திற்கு அருகில் திருவள்ளுவர் கோவில் தெருவில் திருவள்ளுவர் திருக்கோவில் அமைந்துள்ளது. திருவள்ளுவர் கி.பி. 2-ம் நூற்றாண்டு முதல் 8-ம் நூற்றாண்டு வரையான இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்ததாக அறியப்படுகிறது. இவர் வடித்த திருக்குறள், அனைத்து மொழியினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, பல மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

    திருவள்ளுவர் சென்னை மயிலாப்பூரில் பிறந்தவர் என்று கூறப்படுகிறது. எனவே அவரது சமகாலத்தைச் சேர்ந்த ஏலோலங்கர் என்பவர் இந்த ஆலயத்தை கட்டமைத்ததாக செவி வழிச் செய்தி உள்ளது. தற்போது தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயம், 1970-ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டு இரண்டு தோரண வாசல்கள் அமைக்கப்பட்டன.

    முதல் தோரண வாசலின் முகப்பை கடந்து உள்ளே சென்றால், திருவள்ளுவர் சன்னிதியை தரிசிக்கலாம். மூலவராக திருவள்ளுவர் பத்மாசனத்தில் அமர்ந்துள்ளார். வலது கையில் சின்முத்திரையுடனும், இடது கையில் ஜெபமாலை மற்றும் ஏட்டுடனும், தலையில் லிங்கத்துடனும், அமைதியாகவும், சாந்தமுகத்துடனும் காட்சி தருகிறார்.

    திருவள்ளுவர் சன்னிதிக்கு இடதுபுறத்தில் தனிச் சன்னிதியில் வாசுகி அம்மையாருக்கு சன்னதி இருக்கிறது. இவர் வலது கையில் பூச்செண்டும், இடது கையில் பரதம், சிரசில் லிங்கம் மற்றும் கோடாங்கிக் கொண்டை அணிந்து காட்சி தருகிறார். இங்கு வந்து திருவள்ளுவரையும், பதிவிரதையான வாசுகி அம்மையாரை நினைத்து தியானித்தால், தம்பதி ஒற்றுமை மேம்படுவதாக நம்பப் படுகிறது.

    இரண்டாவது தோரண வாசலை கடந்து சென்றால் இடது புறத்தில் விநாயகர், அனுமன், நர்த்தன விநாயகர், பால கணபதி, பாலமுருகன் ஆகியோர் காட்சி தருகின்றனர். இவர்களை கடந்து சென்றால் கிழக்கு நோக்கியபடி ஏகாம்பரேஸ்வரர் தனிச்சன்னிதியில் அருள் புரிகிறார். இவருக்கு நேரேதிரே நந்தியம்பெருமான் அமர்ந்துள்ளார்.

    இறைவன் சன்னிதிக்கு இடதுபுறம் காமாட்சியம்மன் சன்னிதி இருக்கிறது. அம்மன் சன்னிதிக்கு வெளியே தெற்கு நோக்கிய பைரவரும், கிழக்கு நோக்கிய வள்ளி -தெய்வானை சமேத சுப்ரமணியரும், மேற்கு நோக்கிய வல்லப கணபதியும், தெற்கு நோக்கிய தட்சிணாமூர்த்தியும் அருள்பாலிக்கின்றனர். பிரகாரத்தில் கருமாரியம்மன் வீற்றிருக்கிறார். இவருக்கு இடதுபுறத்தில் சப்த கன்னியர்கள் நேர்கோட்டில் அமர்ந்து அருள்புரிகிறார்கள்.

    வெளிச் சுற்றுப் பிரகாரத்தில் மேற்கு நோக்கி லிங்கோத்பவரும், தெற்கு நோக்கி சண்டிகேஸ்வரரும், வடக்கு நோக்கி பிரம்மாவும், துர்க்கையம்மனும் காட்சி தருகிறார்கள். பிரகாரத்தை விட்டு வெளியே வருகையில், நவக்கிரக சன்னிதியை தரிசிக்கலாம். இதையடுத்து சனீஸ்வரர் தனிச் சன்னிதியில் வீற்றிருக்கிறார்.

    இந்த ஆலயத்தில் வள்ளுவர் தினம் சிறப்பான முறையில் நடத்தப்படுகிறது. மாசி உத்திரத்தில் வள்ளுவருக்கு குரு பூஜையும் நடைபெறுகிறது. சித்ரா பவுர்ணமி அன்று நடக்கும் திருக்கல்யாண உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொள்கிறார்கள். அறுபத்தி மூவர் திருவிழாவில் திருவள்ளுவர் மற்றும் வாசுகிஅம்மையார், கபாலீஸ்வரர் திருக்கோவிலுக்கு எழுந்தருளி, எல்லா சுவாமிகளுடனும் மாடவீதியில் திருவீதி உலா வருகின்றனர். ஆவணி மூல நட்சத்திரத்தில் திருவள்ளுவர் -வாசுகிஅம்மையாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.

    திருவள்ளுவர் தினத்தன்று தமிழக அரசால், அரசு விழா ஒன்று வருடம்தோறும் நடத்தப்படுகிறது. அன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை மாணவர்களுக்கு திருக்குறள் நூல் இலவசமாக வழங்கப்படுகிறது. அன்று மதியம் அன்னதானம் நடைபெறுகிறது. தினமும் காலை 6.30 மணி முதல் பகல் 11.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோவில் திறந்திருக்கும்.
    Next Story
    ×