search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பொருளை வாரி வழங்கும் புரவுவரிநாதர் கோவில் - திருநெல்வேலி
    X

    பொருளை வாரி வழங்கும் புரவுவரிநாதர் கோவில் - திருநெல்வேலி

    வாழ்க்கையின் சிறப்புக்கு உதவும் பொருள் வளத்தை வாரி வழங்கும் தலமாகத் திருநெல்வேலி மாவட்டம், கீழக்கல்லூர் புரவுவரிநாதர் கோவில் இருக்கிறது.
    அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை, பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பது வள்ளுவரின் வாக்கு. அத்தகைய பெருமைக்குரியப் பொருளைச் சேர்ப்பதும், செலவழிப்பதும் சிறப்பாக நடைபெற்றால்தான் வாழ்வு சிறக்கும். வாழ்க்கையின் சிறப்புக்கு உதவும் பொருள் வளத்தை வாரி வழங்கும் தலமாகத் திருநெல்வேலி மாவட்டம், கீழக்கல்லூர் புரவுவரிநாதர் கோவில் இருக்கிறது.

    பிரம்மதேசத்தின் ஒரு பகுதியாக இருந்த சபேசபுரத்தில் நெல் விளையக் கூடிய விவசாய நிலங்கள் அதிகமாக இருந்தன. விவசாயத்திற்கு உதவும் ஆடு, மாடு போன்ற கால்நடைகளுக்குத் தேவையான மேய்ச்சல் நிலங்களும் சில இடங்களில் இருந்தன. சபேசபுரத்திலிருக்கும் அனைத்து மாடுகளையும் தினமும் காலையில் மேய்ச்சலுக்குக் கொண்டு சென்று விடுவதுடன், மாலையில் அவைகளை அங்கிருந்து ஓட்டி வந்து திரும்பவும் உரியவர்களிடம் ஒப்படைக்கும் பணியை ஒருவன் செய்து கொண்டிருந்தான்.

    அவன் மேய்ச்சலுக்குக் கொண்டு சென்ற மாடுகளில் ஒரு பசு மட்டும் தினமும் அந்தக் கூட்டத்திலிருந்து தனியே பிரிந்து செல்வதும், வீடு திரும்பும் மாலை வேளையில் மீண்டும் அந்தக் கூட்டத்தோடு வந்து சேர்ந்து கொள்வதுமாக இருந்தது. அதைக் கண்ட அவன், அந்தப் பசு தினமும் எங்கே செல்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள நினைத்தான்.

    மறுநாள் காலையில், மேய்ச்சலுக்குக் கொண்டு சென்ற மாடுகளிடமிருந்து அந்தப்பசு மட்டும் பிரிந்து சென்றதைப் பார்த்த அவன், அந்தப் பசுவை பின் தொடர்ந்து சென்றான். அந்தப்பசு ஒரு இடத்தில் போய் நின்று கொண்டு, அங்கிருந்த கல் ஒன்றின் மீது தானாகப் பாலைச் சுரந்தது. மேய்ச்சலுக்குக் கொண்டு வந்த பசு, தானாகச் சுரந்து பாலை வீணாக்குகிறதே என்று நினைத்த அவன், அந்தப்பசுவை நோக்கிச் சிறிய கல் ஒன்றை எடுத்து வீசினான்.

    அதனால் அச்சமடைந்த பசு, தான் பால் சுரந்து கொண்டிருந்ததை நிறுத்தி விட்டுக் கீழேயிருந்த கல்லை மிதித்தபடி ஓடியது. அந்தக் கல்லில் பசுவின் கால் பட்ட இடத்திலிருந்து ரத்தம் வெளியேறத் தொடங்கியது. கல்லில் இருந்து வந்த ரத்தத்தைக் கண்டு பயந்த அவன் அங்கிருந்து ஊரை நோக்கி ஓடினான்.

    ஊருக்குள் சென்று, அங்கிருந்த பெரியவர்களிடம் தான் பார்த்ததைச் சொன்னான். ஊர்ப் பெரியவர்கள் அந்த ஊரிலிருந்த மக்களுடன் சேர்ந்து அவன் சொன்ன இடத்தை வந்து பார்த்தனர். அங்கிருந்த கல், சுயம்புலிங்கமாக அவர்களுக்குக் காட்சியளித்தது. அந்தச் சுயம்புலிங்கத்தின் மேற்பகுதியில் பசு மிதித்ததால் ஏற்பட்ட கால் குளம்புத் தடத்திலிருந்து, ரத்தம் வெளியே வந்து கொண்டிருந்தது.

    சுயம்புலிங்கத்தை வணங்கிய மக்கள், அந்த இடத்தில் இறைவனுக்குக் கோவில் கட்டி வழிபடுவதாகச் சொல்லி வேண்டினார்கள். அவர்கள் வேண்டிய நிலையில், சுயம்புலிங்கத்திலிருந்து வெளியேறிக் கொண்டிருந்த ரத்தம் நின்றது. அதன் பிறகு, அந்த இடத்தில் இறைவனுக்குக் கோவில் கட்டப்பட்டது. கோவிலில் இருக்கும் இறைவனைப் பசு அடையாளம் காட்டியதால், அந்த இறைவனுக்குத் தேனுபுரீஸ்வரர் (தேனு பசு) என்று பெயரிட்டு வழிபடத் தொடங்கினர். இந்த லிங்கத்தில் இன்றும் பசு மிதித்ததன் அடையாளமாகப் பசுவின் கால் குளம்புத் தடம் இருப்பதைக் காண முடியும்.

    புரவு வரி நாதர் :


    தற்போது கீழக்கல்லூர், நடுக்கல்லூர், மேலக்கல்லூர், கோடகநல்லூர் என்று அழைக்கப்படும் சில ஊர்களைக் கொண்டிருந்த அன்றைய பிரம்மதேசம் பகுதி ராஜராஜ சோழன் மன்னராக இருந்த காலத்தில், அவனுடைய ஆட்சிக்கு உட்பட்டதாக இருந்தது. பிரம்மதேசம் பகுதியில் விளைந்த கோடகன் சம்பா என்கிற உயர்வகை நெல்லிலிருந்து தயாரிக்கப்பட்ட உணவு மிகவும் ருசியாக இருந்ததுடன், அந்த உணவு சில நாட்கள் வரைக் கெட்டுப் போகாமலும் இருந்தது.

    இதனையறிந்த மன்னன், அந்த நெல்லை இறைவழிபாட்டுப் பணிகளுக்குப் பயன்படுத்தத் திட்டமிட்டான். அவன், இப்பகுதியில் விளையும் நெல்லில் ஆறிலொரு பங்கினைத் தாங்களாகவே கணக்கிட்டு, சபேசபுரத்திலுள்ள (தற்போதைய கீழக்கல்லூர்) தேனுபுரீஸ்வரர் கோவிலில் இருக்கும் இறைவன் முன்னிலையில் அரசிறையாகச் (வரி) செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டான்.

    இப்பகுதி மக்களும் தாங்கள் விளைவித்த நெல்லிலிருந்து ஒரு பகுதியை அரசிறையாக இந்தக் கோவிலில் இருக்கும் இறைவன் முன்பாகச் செலுத்தத் தொடங்கினர். அரசிறையாகப் பெறப்பட்ட நெல் திருநெல்வேலி, திருச்செந்தூர், பாபநாசம், சங்கரன்கோயில், திருவைகுண்டம், ஆழ்வார்திருநகரி போன்ற மன்னனின் ஆட்சிப் பகுதியிலிருந்த பல்வேறு இடங்களில் அமைந்திருந்த கோவில்களுக்குப் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டது.

    நெல்லை அரசிறையாக வசூலிக்கும் அரசிறைக் கணக்கர் எனும் பணியை இக்கோவில் இறைவனே செய்தமையால் இறைவனுக்குப் புரவு வரி நாதர் (புரவு வரி அரசிறைக் கணக்கன்) என்கிற புதிய பெயரும் ஏற்பட்டது. இந்தப் புதிய பெயரும் பேச்சு வழக்கில் நாளடைவில் மாற்றமடைந்து, தற்போது புறவேலி நாதர் என்று அழைக்கப்பட்டு வருகிறது.

    இக்கோவிலில் இருக்கும் முன் மண்டபத்தில் இருக்கும் தனிச்சன்னிதியில் அழகாம்பிகை தெற்கு நோக்கிப் பார்த்தபடி நின்ற நிலையில் இருக்கிறார். இக்கோவில் வளாகத்தில், யோக தட்சிணாமூர்த்தி, கன்னி விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் இருக்கும் முருகன், நாக கன்னிகைகள், சண்டிகேஸ்வரர், தர்மசாஸ்தா, காலபைரவர், பூதத்தார், மங்கள சனீஸ்வரன், சூரியன் மற்றும் சந்திரன் ஆகியோருக்குத் தனித்தனியாகச் சிறிய சன்னிதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

    இக்கோவில் வளாகத்தில் முன் பகுதியில் இறைவன் முன்னிலையில் நெல்லை அரசிறையாகப் பெறுவதற்காக அமைக்கப்பட்ட சதுரவடிவ வரி தானியச் சிறப்பு மேடை இன்றும் இருக்கிறது.

    அமைவிடம் :

    திருநெல்வேலி சந்திப்புப் பேருந்து நிலையத்திலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் கீழக்கல்லூர் எனும் ஊரில் அமைந்திருக்கும் இக்கோவிலுக்குத் திருநெல்வேலி சந்திப்புப் பேருந்து நிலையத்திலிருந்து பேட்டை வழியாகச் சேரன்மகாதேவி, முக்கூடல் போன்ற ஊர்களுக்குச் செல்லும் நகரப் பேருந்துகளில் செல்லலாம்.
    Next Story
    ×