search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மனத்துயர் நீக்கும் மத்யார்ஜூனேஸ்வரர் ஆலயம்
    X

    மனத்துயர் நீக்கும் மத்யார்ஜூனேஸ்வரர் ஆலயம்

    சுமார் 1000 ஆண்டுகள் பழமையான ராஜேந்திரம் ஆலயத்தை ராஜேந்திர சோழனே கட்டியுள்ளான். இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் இறைவனின் பெயர் மத்யார்ஜூனர் என்பதாகும்.
    வான் பொய்ப்பினும் வற்றாத வளம் பெருக்கும் வன்மை பொருந்தியது காவிரி நதி. பொன் விளையும் பூமியாக மாற்றுவதால் பொன்னி நதி என்ற பெயரும் இந்த நதிக்கு உண்டு. இந்த புனித நதியின் தென்கரையில் பல சிவத்தலங்கள் அமைந்துள்ளன. அவற்றுள் ஒன்று ராஜேந்திரம். இத்தலத்திற்கு தேவாரப்பாடல் பெறவில்லை. எனினும் தேவாரப் பாடல்கள் பெற்ற ஐயர்மலை, திருக்கடம்பந்துறை, திருஈங்கோய்மலை போன்ற திருக்கோவில்களுடன் நெருங்கிய தொடர்புடையது.

    கரிகாலனின் ஆர்வம் :

    நம் பாரத புண்ணிய பூமி, புராணங்களில் கர்ம பூமி எனப் போற்றப்படுகிறது. முற்காலத்தில் முனிவர்கள் பலர் பாரத தேசம் முழுவதும் கால் நடையாக வலம் வந்து ஆங்காங்கே இறைவனின் திருமேனிகளை நிலை நிறுத்தி வழிபட்டு வந்தனர். பின்னால் வந்த பல மன்னர்கள் ஆலயம் அமைப்பதில் அக்கறை காட்டினர். சில மன்னர்கள் தன் வாழ்நாள் முழுவதையும் இறைபணிக்கே அர்ப்பணம் செய்தனர்.

    கரிகால் பெருவளத்தான் காடு கெடுத்து நாடாக்கினான் என்று வரலாறு கூறுகிறது. இம்மன்னன் காவிரிக்கு இருபுறமும் கரை எடுத்தான். கல்லணை கட்டினான். இதனால் இரு கரைகளிலும் ஊர், பேரூர், நகர் ஆகியவை தோன்றி செழிப்புற்றன. ஆலயம் கட்டுவதில் சோழ மன்னர்களுக்கு தனி ஆர்வம் உண்டு. சுமார் 1000 ஆண்டுகள் பழமையான ராஜேந்திரம் ஆலயத்தை ராஜேந்திர சோழனே கட்டியுள்ளான்.

    இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் இறைவனின் பெயர் மத்யார்ஜூனர் என்பதாகும். இறைவியின் திருநாமம் தேவநாயகி.

    ஆலய அமைப்பு :

    ஆலயம் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பைத் தாண்டி உள்ளே நுழைந்ததும் கொடிமர விநாயகர், கொடி மரம், பீடம், நந்தி ஆகியவைகள் உள்ளன. பிரகாரத்தின் வலதுபுறம் பைரவர் சன்னிதியும் வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்களும் அருள்பாலிக்கின்றனர். அடுத்துள்ள மகா மண்டபத்தின் முகப்பில் இடதுபுறம் கணபதியும், வலதுபுறம் பாலதண்டாயுதபாணியும் வீற்றிருக்கின்றனர்.

    மகா மண்டபத்தின் வலதுபுறம் அன்னை தேவநாயகியின் சன்னிதி உள்ளது. அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள கருவறையில் இறைவன் மத்யார்ஜூனர், லிங்கத் திருமேனியில் கீழ் திசை நோக்கி அருள் பாலிக்கிறார். தேவக்கோட்டத்தின் தென் திசையில் சனீஸ்வரனும், தென்முகக் கடவுள் தட்சிணாமூர்த்தியும் அமர்ந்திருக்க, வடக்கில் விஷ்ணு, துர்க்கை திருமேனிகள் உள்ளன.

    சனீஸ்வரன் சன்னிதி :

    தேவக்கோட்ட தென்திசையில் நர்த்தன கணபதி இருக்க வேண்டிய இடத்தில், சனீஸ்வரன் சன்னிதி இருப்பது இந்த ஆலயத்தின் மிகவும் சிறப்பான அம்சமாக கருதப்படுகிறது.

    நள மாமன்னன் ஏழரை நாட்டுச் சனியால் பாதிக்கப்பட்டு மிகவும் அல்லல்பட்டான். சனியின் பார்வையில் இருந்து தப்ப, ஊர் உராகச் சுற்றித்திரிந்தான். இந்த ஆலயம் வந்த நள மாமன்னன் தெற்கு நோக்கி அமைந்துள்ள சனீஸ்வரனை வழிபட்டு அருள்பெற்றார். இறுதியாக திருநள்ளாறு சென்று சனீஸ்வரனை வழிபட்டு சனியின் தாக்கம் குறையப் பெற்றார். இதை உறுதிபடுத்தும் வகையில் சனீஸ்வர சன்னிதியில் மேல்புறத்தில் யோகநிலையில் அமர்ந்திருக்கும் திருவுருவம் நளமகராஜனின் உருவம்தான் என்கின்றனர்.

    ஆலயத்தின் மேற்கு திருச்சுற்றில் முருகன், வள்ளி தெய்வானையுடன் ஆறுமுகங்கள், 12 கரங்களுடன் மயில் வாகனத்தில் அருள்பாலிக்கிறார். தவிர முருகப்பெருமானின் ஒரு கரம் சின் முத்திரையுடன் அமைந் திருப்பது எங்கும் காண இயலாத அபூர்வ அமைப்பாகும். ஆலய தல விருட்சமான மருதமரம் மேற்குப் பிரகாரத்தில் செழுமையாக வளர்ந்துள்ளது.

    முனிவர்களாலும், சித்தர்களாலும் உருவாக்கம் செய்யப்பட்டு, பிற்கால சோழ மன்னன் ராஜேந்திர சோழனால் இந்த ஆலயம் முழுமையான தோற்றம் பெற்றதாக செவி வழி செய்தி. அதனால்தான் இந்த ஊர் ராஜேந்திரம் என அழைக்கப்படுகிறது. இந்த ஊருக்கு மேற்கில் 20 கி.மீ. தொலைவில் பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் என்ற ஊரில் சிவன் கோவில் ஒன்று அமைந் திருப்பது இந்தத் தகவலை உறுதிபடுத்துகிறது.

    சிறப்பு ஆராதனைகள் :

    ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் இறைவன், இறைவிக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. ஆனி மாத பவுர்ணமி அன்று இறைவனுக்கு மா, பலா, வாழை என முக்கனி அபிஷேகம் நடைபெறும். ஐப்பசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம் நடைபெறும்.

    மார்கழி 30 நாட்களும் தனுர்மாத பூஜை சிறப்பாக நடைபெறுகிறது. நவராத்திரியின்போது அன்னை தேவநாயகி ஒன்பது நாட்களும் ஒன்பது அலங்காரத்தில் அருள்பாலிப்பதுடன், 10-ம் நாள் அம்பு போடும் உற்சவம் நடைபெறும்.

    வைகாசி விசாகத்தில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் சந்தனகாப்பு அலங்காரம் நடைபெறும் வழக்கம். கந்த சஷ்டியிலும் முருகப்பெருமானுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்படும். நட ராஜருக்கு சித்திரை, ஆனி, ஆவணி, புரட்டாசி, மார்கழி, மாசி ஆகிய ஆறு மாதங்களில் முறையே திருவோணம், உத்திரம், வளர்பிறை சதுர்த்தசி, திருவாதிரை நாட்களில் சிறப்பு அபிஷேகமும், ஆராதனைகளும் நடக்கிறது.

    இந்த ஆலய கும்பாபிஷேகம் கடந்த 6.6.11-ல் நடைபெற்றுள்ளது. ஆலயத்திற்கு ராஜகோபுரம் இல்லை. புதிதாக 5 நிலை ராஜகோபுரம் கட்ட அடித்தளம் போடப்பட்டுள்ளது. இந்து அறநிலையத்துறையின் கீழ் சிறப்பாக செயல்பட்டு வரும் இந்த ஆலயத்தில் தினமும் ஒரு கால பூஜை மட்டுமே நடைபெறுகிறது. மாலை 5 மணி முதல் இரவு 8 மணிவரை ஆலயம் திறந்திருக்கும்.

    தன்னை ஆராதிக்கும் பக்தர் களின் மனத்துயரைக் களைந்து அவர்கள் மங்களகரமாய் வாழ இத்தல இறைவன் மத்யார்ஜூனேஸ்வரரும், இறைவி தேவநாயகியும் அருள்புரிவார்கள் என்ற பக்தர் களின் நம்பிக்கை நிஜமே.

    இத்தலம் குளித்தலை என தற்போது அழைக்கப்படும் திருக்கடம்பந்துறைக்கு கிழக்கேயும் பெட்டவாய்த்தலைக்கு மேற்கேயும் அமைந்துள்ளது. திருச்சி- கரூர் நெடுஞ்சாலையில் மருதூர் பேருந்து நிலையத்திலிருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள ராஜேந்திரம் என்ற கிராமத்தில் உள்ளது இந்த மத்யார்ஜூனேஸ்வரர் ஆலயம்.

    Next Story
    ×