search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ராஜகோபால் பெருமாள் கோவில் - அனந்தமங்கலம்
    X

    ராஜகோபால் பெருமாள் கோவில் - அனந்தமங்கலம்

    நாகை மாவட்டம் அனந்தமங்கலம் என்ற சிற்றூரில் ராஜகோபால் பெருமாள் சன்னிதியில் திரி நேத்ர தஜ புஜவீர ஆஞ்சநேயர் என்ற திருநாமத்துடன் தனி சன்னிதியில் வடக்கு நோக்கி எழுந்தருளி உள்ளார்.
    கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக போற்றப்படும் ஜெயவீர அனுமன் சிவபெருமானின் அவதாரமாக தோன்றியவர். அன்புக்கும், தொண்டுக்கும், வீரத்திற்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் ஆஞ்சநேயர், சிரஞ்சீவி பட்டம் பெற்றவர்.

    ராமநாமத்தின் உயிர் உருவமான ஆஞ்சநேயர் எந்தவிதமான பிரதிபலனையும் கருதாமல் தூய அன்புடனும் பக்தியுடனும் ராமனுக்கு பணிவிடை செய்தார். அறிவு, உடல் வலிமை, துணிச்சல், புகழ், ஆரோக்கியம், வீரம், ஆகிய அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்ற அனுமன் மார்கழி மாதம் மூலம் நட்சத்திரத்தில் வாயு தேவனுக்கும்- அஞ்சனா தேவிக்கும் மகனாகப் பிறந்தார். அவரது பிறந்த தினம், அனுமன் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.

    நாடு முழுவதும் அனுமனுக்கு கோவில்கள் இருந்தாலும் நாகை மாவட்டம் அனந்தமங்கலம் என்ற சிற்றூரில் ராஜகோபால் பெருமாள் சன்னிதியில் திரி நேத்ர தஜ புஜவீர ஆஞ்சநேயர் என்ற திருநாமத்துடன் தனி சன்னிதியில் வடக்கு நோக்கி எழுந்தருளி உள்ளார்.

    இங்கு எழுந்தருளி இருக்கும் அனுமன் நவக்கிரக தோஷங்களை போக்கும் ஆற்றல் படைத்தவர். அனுமன் மூன்று கண்களையும், பத்து கரங்களையும், உடையவர். சங்கு, சக்கரம், சூலம், கபாலம், மழு பாசம், வில், அம்பு, சாட்டை, நவநீதம் ஆகியவற்றை கரங்களில் ஏந்தி முதுகின் இருபக்கங்களிலும் கருடனுக் குரிய சிறகுகளோடு எழுந்தருளி காட்சி தருகின்றார்.

    இதுபோன்ற ஆஞ்சநேயரின் திருமேனி இக் கோவிலில் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது. இவரை தரிசிப்பதால் அறிவு கூர்மையாகும். உடல் வலிமைபெறும். அச்சம் அகலும். வியாதி விலகும். வாக்கு வன்மை வளமாகும். இந்த கோவிலின் கருவறையில் உள்ள மூலவர் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி உடனாகிய வாசுதேவப்பெருமாள் ஆவார். அருகில் உற்சவர் ராஜகோபாலப்பெருமாள் ருக்மணி, சத்யபாமாவுடன் அருளாசி புரிகிறார்.

    தனிச்சன்னிதியில் கிழக்குநோக்கி அமர்ந்த கோலத்தில் செங்கமலவல்லித் தாயார் அருள்பாலிக்கிறார். தனிக்கோவிலில் வடக்கு முகமாக உள்ள ஆஞ்சநேயர் உற்சவத்திருமேனி கோவில் அருகே இடதுபுறமாக எழுந்தருள செய்யப்பட்டுள்ளது. ஆஞ்சநேயருக்கு அருகில் இடதுபுறம் பூமிதேவித் தாயார் எழுந்தருளியுள்ளார்.

    தலவரலாறு:

    ராவணனால் சிறை பிடிக்கப்பட்ட சீதையை மீட்பதற்காக ராமன் இலங்கை சென்று யுத்தம் செய்து வெற்றிபெற்று சீதையை சிறைமீட்டார். பின்னர் ராமன் சீதை, லக்குவன், அனுமன் முதலியோர் புட்பகவிமானத்தில் ஏறி அயோத்திக்கு திரும்பிக்கொண்டு இருந்தனர். வழியில் பரத்வாஜ் மகரிஷியின் அழைப்பிற்கு இணங்க அவரது ஆசிரமத்தில் தங்கி உணவு உண்டனர். அப்போது அங்கு வந்த நாரதர் ராமனை வாழ்த்தினார்.

    மேலும் அவர் ராமனிடம், ராவணனை அழித்து விட்டீர்கள். ஆனாலும் இன்னும் சில அரக்கர்கள் ஆங்காங்கே இருக்கவே செய்கின்றனர். அவர்களுள் ரக்தபிந்து, ரக்தராட்சசன் ஆகிய இருவரும் மிக கொடியவர்கள். அவர்கள் தற்சமயம் கடலுக்கடியில் கடுந்தவம் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தவம் பூர்த்தியானால் அவர்கள் கடும் வல்லமையுடன் உலகை அழித்து விடுவர். ஆதலால் உலக மக்கள் நன்மைக்காக அவர்களை நீ அழிக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டார்.

    அதைக்கேட்ட ராமன் அரக்கர்களை அழிப்பதற்கு ஒத்துக்கொண்டார். ஆனால் அவர் பரதனுக்கு கொடுத்த வாக்கின்படி உடனே அயோத்திக்கு திரும்ப வேண்டும். என்ன செய்யலாம் என்று ஆலோசனை செய்தார். பின்னர் அனைவரின் ஆலோசனை படி அரக்கர்களை அழிக்க எல்லையில்லா ஆற்றலை படைத்த மாவீரன் அனுமனை அனுப்புவது என்று முடிவு செய்யப்பட்டது. அதற்கு அனுமனும் ஒப்புக்கொண்டார்.

    அவரை மும்மூர்த்திகளும், தேவர்களும் வெற்றிவாகை சூடி வர வாழ்த்தினர். அரக்கர்களை வெல்ல திருமால் தம் சங்கு, சக்கரத்தை அனுமனுக்கு அளித்தார். பிரம்மா பிரம்ம கபாலத்தையும், ருத்ரன் மழுவையும், வழங்கினர். ராமன் வில்லையும் அம்புகளையும் அளித்தார். இந்திரன் வஜ்ஜிராயுதத்தையும் வழங்கினார். இப்படி தெய்வங்கள் வழங்கிய ஆயுதங்களுடன் ஆஞ்சநேயர் பத்து கரங்களுடன் காட்சி தந்தார்.

    அப்போது கருடாழ்வார் தம் இருசிறகுகளையும் அவருக்கு தந்தார். சிவபெருமான் ஆஞ்சநேயருக்கு தம்முடைய சிறப்புக்குரிய மூன்றாவது கண்ணையே வழங்கினார். மூன்று கண்களும் (திரிநேத்ரம்) பத்து கைகளும் (தஜபுஜம்) கொண்டு வீர ஆஞ்சநேயர், அங்கிருந்து ‘ஸ்ரீராம்’ என்று வீரமுழக்கமிட்டுச்சென்று கடலுக்கு அடியில் பதுங்கி தவம் செய்துகொண்டிருந்த ரக்தபிந்து, ரக்தராட்சசன், ஆகிய இருவரையும் தேடிச்சென்று சம்காரம் செய்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ராமனைச்சந்திக்க வந்தார். வழியில் கடற்கரை ஓரத்தில் இயற்கை அழகு நிரம்பியுள்ள ஓரிடத்திற்கு வந்ததும் அவர் ஆனந்த பரவச நிலையை அடைந்தார். அந்த இடத்தில் இறங்கி சற்றுநேரம் ஆனந்தமாகத்தங்கி இருந்தார். இந்த இடமே அனந்தமங்கலம் ஆயிற்று.

    தெப்பக்குளம்:

    ஆஞ்சநேயர் சன்னிதிக்கு முன்பு தெப்பக்குளம் உள்ளது. அதன் பெயர் தாமரைக்குளம். இந்த குளத்தில் கால், கைகளை தூய்மை செய்து கொண்டு ஆஞ்சநேயரை வணங்கி வலம்வந்து பெரிய கோவிலான ராஜகோபாலப்பொருமாள் கோவிலுக்கு செல்லலாம்.

    ஆனந்தநிலையில் வீற்றிருக்கும் ஸ்ரீதிரிநேத்ர தஜபுஜ வீர ஆஞ்சநேயரை வழிபட்டால் திருமால், சிவபெருமான் பிரம்மா, ஸ்ரீராமன், இந்திரன், ருத்ரன், கருடாழ்வார் ஆகிய அனைவரையும் வழிபட்ட பலன் கிடைக்கும்.

    உடல், மனநலம் குன்றியவர்கள், திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், தொழிலில் நஷ்டம் அடைந்தவர்கள், பில்லி, சூனியம், ஏவலால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஆலயத்திற்கு வந்து ஆஞ்சநேயரை வழிபட்டு அல்லல் நீங்கி ஆனந்தம் பெறுகின்றனர்.

    இத்திருக்கோவில் இந்துசமய அறநிலைய ஆட்சி துறையின் நிர்வாகத்தில் உள்ளது. தினமும் 6 காலபூஜை நடைபெற்று வருகிறது. அமாவாசை தோறும் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. மார்கழிமாதம் அமாவாசையின் போது அனுமன் ஜெயந்தி விழா மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது.

    ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையிலும், வியாழக்கிழமையிலும் ஆஞ்சநேயரை வழிபட ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அனந்தமங்கலம் ஆஞ்சநேயரின் நித்யவாசஸ்தலம் ஆகும். இங்குள்ள ஆஞ்சநேயரை வழிபட காலநேரம் பார்க்க வேண்டியது இல்லை. எப்போதும் வழிபடலாம். ஆங்கிலப்புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசி, தமிழ்ப்புத்தாண்டு, ஸ்ரீராமநவமி, ஸ்ரீகோகுலாஷ்டமி ஆகியவை முக்கியமாக கொண்டாடப்படும் திருவிழாக்கள் ஆகும்.

    கோவில் அமைவிடம் :

    நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி வட்டத்தில் உள்ளது அனந்தமங்கலம். சிதம்பரத்தில் இருந்து சீர்காழி, திருக்கடையூர், தரங்கம்பாடி, காரைக்கால் வழியாக நாகப்பட்டினம் செல்லும் சாலையில் திருக்கடையூருக்கும், தரங்கம்பாடிக்கும் இடையே உள்ளது அனந்தமங்கலம்.

    அனந்தமங்கலம் பஸ்நிலையத்தை நாராயணநாயக்கன் சாவடி என்று அழைப்பர். அங்கிருந்து ½ கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது அனந்தமங்கலம்.
    Next Story
    ×