search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருக்கடவூர் மயானம் எனும் திருக்கடவூர் திருமெய்ஞானம் திருக்கோவில்
    X

    திருக்கடவூர் மயானம் எனும் திருக்கடவூர் திருமெய்ஞானம் திருக்கோவில்

    கங்கை தீர்த்தமாகத் தோன்றிய தலம் என்ற சிறப்பை பெற்றது, திருக்கடவூர் மயானம் எனும் திருக்கடவூர் திருமெய்ஞானம் திருக்கோவில்.
    பிரம்மன் வழிபட்டுப் பேறு பெற்றதலம், மார்க்கண்டேயன் தன் ஆயுள் நீட்டிக்க வழிபட்ட 108 தலங்களில் 107-வது தலம், கங்கை தீர்த்தமாகத் தோன்றிய தலம் போன்ற சிறப்புகளைப் பெற்றது, திருக்கடவூர் மயானம் எனும் திருக்கடவூர் திருமெய்ஞானம் திருக்கோவில். சிவபெருமான், பிரம்மனை அழித்து நீறாக்கியதால், ‘கடவூர் மயானம்’ என்றும், மீண்டும் உயிர்ப்பித்து அவருக்கு ஞானத்தை அருளி படைப்புத் தொழிலை வழங்கியதால், ‘கடவூர் திருமெய்ஞானம்’ எனவும் இத்திருத்தலம் வழங்கப்படுகிறது.

    ஆலய அமைப்பு :

    இந்த ஆலயம் ராஜகோபுரம் ஏதுமின்றி, எளிய நுழைவு வாசலைக் கொண்டு மேற்கு முகமாய் அமைந்துள்ளது. நுழைவு வாசலின் உள்ளே நுழைந்ததும், விசாலமான பிரம்மாண்ட வடிவில், நீளமான சுற்றுச் சுவரோடு ஆலயம் தென்படுகிறது. சுவாமி சன்னிதியை நெருங்கும் போது பலிபீடம், கிழக்கு நோக்கிய நந்திதேவர் காட்சி தருகின்றனர். மகாமண்டபத்தில் நுழைந்ததும், நேர் எதிரே கருவறையில் பிரம்மனை உயிர்ப்பித்து அருளிய பிரம்மபுரீஸ்வரரின் எழிற்கோலம் நம்மைப் பரவசத்தில் ஆழ்த்துகிறது. பிரம்மனின் பெயராலேயே இத்தல இறைவன் அழைக்கப்படுகிறார். சதுர வடிவ ஆவுடையாரில் வீற்றிருந்தபடி மேற்கு முகமாய் அருள் வழங்குகிறார். மார்க்கண்டேயர், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் முதலானவர்களுக்கு காட்சி தந்த இறைவன் இவர்.

    வில்லேந்திய சிங்கார வேலன் :

    சுவாமியின் மகாமண்டபத்தில் உற்சவத் திருமேனிகள் அழகுற அணிவகுக்கின்றன. இதில் குறிப்பாக சிங்காரவேலனின் உற்சவத் திருமேனி கலைநயம் மிகுந்து காணப்படுகிறது. கையில் வில்லேந்தியபடி, தன் துணைகளான வள்ளி- தெய்வானையுடன் கம்பீரமாக காட்சியளிக் கிறார் சிங்காரவேலர் இவருக்கு இங்கு கந்தசஷ்டி விழா சிறப்பாக நடத்தப்படுகிறது. மேலும் நடராஜர் சபை, மறுபுறம் பைரவர் சன்னிதிகளும் அமைந்துள்ளன.

    கருவறைச் சுற்றில் துர்க்கை, தட்சிணாமூர்த்தி, நர்த்தன விநாயகர், அர்த்தநாரீஸ்வரர், கல்யாணசுந்தரர் திருவுருவங்கள் கலைநயத்தோடு காட்சி தருகின்றன. தட்சிணாமூர்த்தி கல்லால மரம் இன்றி காட்சி தருவது அபூர்வமான அமைப்பாக உள்ளது. அவரது திருவடியில் ஆறு சீடர்கள் அமர்ந்திருக்கின்றனர்.

    இறைவி மலர்க்குழல் மின்னம்மை :

    சுவாமி சன்னிதியின் எதிரே இடதுபுறம் தென்மேற்கு மூலையில், இறைவி மலர்க்குழல் மின்னம்மை, மூன்று நிலை ராஜகோபுரத்துடன் தனிச்சன்னிதி கொண்டு கிழக்கு முகமாய் சுவாமி சன்னிதியை நோக்கி வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். அன்னையின் சன்னிதி மகாமண்டபம், அர்த்த மண்டபம், கருவறை கொண்டு விளங்குகிறது. துவாரபாலகிகள் காவல்நிற்க, அன்னை நின்ற கோலத்தில் அபய-வரத முத்திரையுடன்கூடிய நான்கு கரங்களுடன் அருள்புரிகிறார். அன்னைக்கு அம்மலக் குஜநாயகி, அமலக்குயமின்னம்மை போன்ற பெயர்களும் உள்ளன.

    இந்தத் திருக்கோவிலின் தலமரம் கொன்றை ஆகும். தலத் தீர்த்தம் காசித் தீர்த்தம். ஆலயத்தை ஒட்டியுள்ள பெரிய திருக்குளம் ‘பிரம்ம தீர்த்தம்’ என வழங்கப்படுகிறது. இது மட்டுமின்றி, ஆலயத்தில் இருந்து சுமார் ½ கிலோமீட்டர் தொலைவில், கிணறு வடிவில் காசித் தீர்த்தம் அமைந்துள்ளது.

    மார்க்கண்டேயருக்காக பங்குனி மாதம், அஸ்வினி நட்சத்திரத்தன்று கங்கையே தீர்த்தமாகத் தோன்றினார் எனத் தலபுராணம் கூறுகிறது. இதுவே கடவூர் தீர்த்தக் கிணறு என்றும், காசி தீர்த்தம் என்றும், அஸ்வினித் தீர்த்தம் என்றும் வழங்கப்படுகிறது. இந்த ஐதீகத்தினை உறுதிப்படுத்தும் விதமாக பங்குனி மாதம் அஸ்வினி நட்சத்திரத்தன்று பஞ்சமூர்த்திகள் வழிபாடு நடைபெறுகிறது. இந்த தீர்த்தத்தைக் கொண்டே திருக்கடவூர் அபிராமி மற்றும் ஈஸ்வரருக்கு நாள்தோறும் அபிஷேகம் செய்யப்பயன்படுகிறது.

    இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயம், தினமும் காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    எமனை எட்டி உதைத்து, மார்க்கண்டேயரைக் காத்த அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில், திருஆக்கூர், திருதலைச்சங்காடு, திருவலம்புரம், திருவிடைக்கழி, அனந்தமங்கலம் என பழம்பெரும் திருக்கோவில்கள் பல இந்த ஆலயத்தின் அருகே அமைந்துள்ளன. பிரம்மனுக்கு ஞானத்தை அருளியதால், கல்வி, ஞானம் பெற ஏற்ற தலமாக திருக்கடவூர் மயானம் விளங்குகிறது.

    அமைவிடம் :

    நாகை மாவட்டம், தரங்கம்பாடி வட்டத்தில், மயிலாடுதுறை - தரங்கம்பாடி வழித்தடத்தில் திருக்கடவூர் எனும் புகழ்மிக்க திருத்தலம் உள்ளது. இதன் பின்புறம் கிழக்கே 2 கிலோமீட்டர் தொலைவில் திருக் கடவூர் திருமெய்ஞானம் திருத்தலம் இருக்கிறது. சென்னையில் இருந்து தெற்கே 300 கிலோமீட்டர் தொலைவிலும், மயிலாடுதுறையில் இருந்து கிழக்கே 25 கிலோமீட்டர் தூரத்திலும், காரைக்காலுக்கு வடக்கே 25 கிலோமீட்டர் தொலைவிலும், தரங்கம்பாடிக்கு வடமேற்கே 12 கிலோமீட்டர் தூரத்திலும் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது.
    Next Story
    ×