search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    எண்ணியதை அருளும் சண்முகநாத சுவாமி கோவில்
    X

    எண்ணியதை அருளும் சண்முகநாத சுவாமி கோவில்

    திருச்சி மாவட்டம், லால்குடி தாலுகா திண்ணியம் கிராமத்தில் உள்ள சண்முகநாத சுவாமி கோவில் பல்வேறு சிறப்புகளை கொண்டது. அதை பற்றி பார்க்கலாம்.
    திருச்சி மாவட்டம், லால்குடி தாலுகாவில் உள்ளது திண்ணியம் கிராமம். இங்குள்ள சண்முகநாத சுவாமி கோவில் பல்வேறு சிறப்புகளை கொண்டது. 1000 ஆண்டு பழமை வாய்ந்த இந்த ஆலயம் ராஜராஜசோழனின் சகோதரியான குந்தவை நாச்சியார் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டதாகும். இக்கோவிலில் முருகப்பெருமான், வள்ளி – தெய்வானையுடன் மயில் மீது அமர்ந்தபடி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    ‘குமார தந்திரம்’ என்ற ஆகம சாஸ்திர விதிப்படி, திண்ணியம் சண்முகநாத சுவாமி கோவில் அமைப்பு களும், நித்திய பூஜைகளும் அமைந்துள்ளன. பொதுவாக முருகப்பெருமான் மட்டுமே மயில் மேல் அமர்ந்திருக்கும் கோலத்தைத் தான் அனைவரும் தரிசித்திருப்போம். ஆனால் இங்கு, வலதுபுறத்தில் வள்ளியும், இடது புறத்தில் தெய்வானையுமாக முருகப்பெருமான் மயில் மீது அமர்ந்திருக்கிறார்.  

    இதன்படி திண்ணியம் கிராமத்தில் அமைந்துள்ள இக்கோவில் ஊரில் நுழைந்த உடனே காணும் படி அமைந்துள்ளது. வேலும், மயிலும் துணை என்பார்கள். அந்தவகையில் கோவிலுக்குள் நுழைந்தவுடன் பெரிய வேல் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. திண்ணியம் சண்முகநாத சுவாமி கோவில் தியானம் செய்வதற்கு ஏற்ற வகையில் அமையப்பெற்றுள்ளது.

    சுவாமிக்கு எதிரில் அருணகிரிநாதரை பிரதிஷ்டை செய்துள்ளனர். அருகில் உற்சவமூர்த்திகளும் உள்ளனர். மேற்கில் அபிஷேக மண்டபம், கோடிஷ்வர சிவலிங்கம், கிழக்கு நோக்கிய சிவன் சன்னிதி, இடது பக்கம் ஸ்ரீபெரியநாயகி அம்பாள் கோவில் இருவருக்கும் முன்னே நந்திகேஷ்வரர், கோஸ்டிஷ்வர சுவாமி, வலது புறம் காசி விஸ்வநாத சுவாமி விசாலாட்சி அம்மனுடன் இருக்கிறார்கள்,

    மேலும் விநாயகர், சூரியன், பைரவர், சண்டிகேஷ்வரர், நவக்கிரகங்கள் ஆகிய பரிவார தேவர்களும், மகாலட்சுமியின் சகோதரியான ஜேஷ்டாதேவிக்கு தனி சிலையும் கோவிலுக்குள் உள்ளது. மேலும் கோவிலின்  தென் கிழக்கே மீனாட்சி சுந்தரேஷ்வரர் ஆலயமும், எதிர்புறம் மேற்கே ஸ்ரீசந்தான கோபால சுவாமி பெருமாள் கோவிலும், பின்புறம் திரவுபதி அம்மன் கோவில் மற்றும் கிராம தேவதைகள் கோவில்களும்  உள்ளன.

    திண்ணியம் சண்முகநாத சுவாமியை வழிபடுபவர்களுக்கு காரிய சித்தி உண்டாகும். இக்கோவிலில் கோபுர வாசல் படி மேடையில் கிழக்கு நோக்கியபடி இடும்பன் சன்னிதி உள்ளது. வழக்கமாக நவக்கிரகங்கள் ஒன்றையொன்று பார்த்துக் கொள்ளாத கோணத்தில் இருக்கும். ஆனால் இந்த ஆலயத்தில் நவக்கிரகங்கள் நேருக்கு நேராக பார்த்துக் கொள்வது போல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மூலவரான முருகப் பெருமானை தரிசித்து விட்டு நின்ற இடத்தில் இருந்து திரும்பிப் பார்த்தால், சிவன், பார்வதி இருவரையும் ஒருசேர தரிசனம் செய்யலாம்.

    இக்கோவிலில் காலை, மாலை என இரண்டு கால பூஜைகள் நடைபெற்று வருகிறது. மேலும் முருகப்பெருமானுக்கு உகந்த சஷ்டி, கார்த்திகை, தைபூசம், ஆகிய விசேஷ நாட்களில் விசேஷ அபிஷேகங்கள் மற்றும் சஹஸ்ரநாம அர்ச்சனைகள் நடத்தப்படுகின்றன. மேலும் பங்குனி உத்திரத்தின் போது வள்ளி திருமணம், கந்த சஷ்டி விழாவின் போது சண்முகா அர்ச்சனை, வளர்பிறை, தேய்பிறை அஷ்டமி பூஜைகளும் செய்யப்படுகின்றன. திருமணத்தடை உள்ளவர்கள் தொடர்ந்து 6 செவ்வாய்க்கிழமைகள், செவ்வரளி பூக்கள் கொண்டு முருகப்பெருமானை சஹஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டால், திருமணத் தடை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    திண்ணியம் கிராமத்தைச் சுற்றி பாடல் பெற்ற சிவ தலங்களும், வைணவ தலங்களும் அமைந்துள்ளன. வட காவிரி என்ற கொள்ளிடத்திற்கு நேர் வடக்கே திண்ணியம் சண்முகநாத சுவாமி ஆலயம் இருக்கிறது. திருமழபாடி, திருவையாறு பகுதிகளில் உள்ள முக்கிய சிவ தலங்கள் கிழக்கிலும், ரதிதேவிக்கு மாங்கல்ய சித்தி அளித்த பூவாளூர் என்ற ஷேத்திரம் மேற்கிலும், ஆலங்குடி, கீழப்பழுர், சிதம்பரம் பகுதிகளில் உள்ள சரித்திர பிரசித்தி பெற்ற புண்ணிய தலங்கள் வடக்கிலும், தெற்கில் திருத்தவத்துறை என்று அழைக்கப்படும் லால்குடி, அன்பில் என்ற அன்பிலாதுறை சிவதலம் மற்றும் மகா மாரியம்மன் கோவில்களும் இருக்கின்றன.
    Next Story
    ×