search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கல்யாண ரங்கநாத பெருமாள் கோவில் - சீர்காழி
    X

    கல்யாண ரங்கநாத பெருமாள் கோவில் - சீர்காழி

    நாகை மாவட்டம், சீர்காழி அருகே திருநகரி கிராமம் உள்ள கல்யாண ரங்கநாத பெருமாள் கோவிலில் திருமங்கையாழ்வார் தனி சன்னிதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    நாகை மாவட்டம், சீர்காழி அருகே திருநகரி கிராமம் உள்ளது. இங்கு 108 திவ்யதேசங்களில் ஒன்றான கல்யாண ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் திருமங்கையாழ்வார் தனி சன்னிதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    குழந்தைப்பேறு :

    திருநகரிக்கு அருகே உள்ள திருக்குறவளூரில் கி.பி.398-ம் ஆண்டு நள வருடம் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் கார்முகத்தின் அம்சமாய் அவதரித்தார், திருமங்கையாழ்வார். இவர் இளமையிலேயே ஆயுத வித்தையில் தேர்ச்சி பெற்று விளங்கினார். அதனால் இவருக்கு ‘பரகாலன்’ என்ற பெயரும் உண்டு. சோழ மன்னன் திருமங்கையாழ்வாரை குறுநில மன்னராக ஆக்கினான். அதனால் தன் ஆட்சியை சிறப்பாக செங்கோல் செலுத்தி புகழ் பெற்று விளங்கினார் திருமங்கை.

    ‘திருவெள்ளக்குளம்’ என்று அழைக்கப்படும் அண்ணன் பெருமாள் கோவில் என்ற திருத்தலத்தில் உள்ள தாமரைப் பொய்கையில் பல கன்னியர்கள் நீராடினர். அவர்களில் ஓர் அழகிய நங்கை, குமுத மலரை கொய்து கொண்டிருந்தாள். அப்போது அவளுடைய தோழிகள் அவளை தனியே தத்தளிக்கவிட்டுச் சென்றனர். அந்த நேரம் பார்த்து அங்கு ஒரு வைத்தியர் வந்தார். அவர் அந்தப் பெண்ணிடம் விசாரிக்க, அவள் தோழிகள் தன்னை விட்டுவிட்டுச் சென்றதைக் கூறினாள். மேலும் தன்னை பாதுகாத்து அருள வேண்டும் என்றும் வேண்டினாள். வைத்தியரும் மன மகிழ்ச்சியோடு அந்தப் பெண்ணை, தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று மனைவியிடம் ஒப்படைத்தார். வைத்திய தம்பதியினருக்கு குழந்தைப்பேறு இல்லை. எனவே அந்த நங்கையை தங்கள் மகளாக நினைத்து வளர்த்து வந்தனர்.

    குமுதவல்லி :

    அந்த நங்கை, குமுத மலரை கொய்த காரணத்தால் ‘குமுதவல்லி’ என்று அழைத்தனர். அவள் திருமண வயது அடைந்தவுடன், அவளுக்கேற்ற கண வனைத் தேடினர்.

    இந்த நிலையில் திருமங்கை மன்னனுடைய ஆதரவாளர்கள் சிலர், குமுதவல்லியின் அழகைப்பற்றியும், குணாதிசயங்களைப் பற்றியும் அவரிடம் கூறினர். திருமங்கை மன்னன் திருவெள்ளக்குளத்தில் இருந்த வைத்தியர் இல்லத்திற்கு சென்று வைத்தியரிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது மறைந்திருந்து பார்த்த குமுதவல்லியை திருமங்கை கண்டார். கண்டவுடன் காதல் மேலோங்கி ‘இவளை எனக்கு திருமணம் செய்து தரவேண்டும்’ என்று கேட்டார்.

    இதைக்கேட்ட குமுதவல்லி குறுக்கிட்டு, ‘சங்கு சக்கர முத்திரையும், திருமண்ணும் தரித்த வைணவருக்கே வாழ்க்கைப்படுவேன்’ என்று கூறினாள். மேலும் ‘நீர் ஓராண்டு, தினமும் 1,008 வைணவர்களுக்கு அன்னதானம் வழங்கி அவர்களுடைய திருவடித் தீர்த்தத்தையும், அவர்கள் உண்ட சேடத்தையும் உட்கொண்டால் உம்மை நான் கணவராக ஏற்றுக் கொள்வேன்’ என்று கூற அவள்பால் கொண்ட வேட்கையினால், அதற்கு உட்பட்டு அப்படியே செய்வதாக வாக்குக்கொடுத்தார் திருமங்கை.

    அன்னதானம் :

    திருமங்கை மன்னன் தினமும் 1,008 வைணவருக்கு அன்னதானம் செய்து வந்தார். சோழ மன்னனுக்கு செலுத்த வேண்டிய பகுதி பணம் முழுவதும், இந்த நல்ல காரியத்திற்கு செலவழிந்தது. எனவே திருமங்கையால் பகுதி பணம் கொடுக்க முடியவில்லை. இதனால் சோழ மன்னன் திருமங்கையை பிடித்து சிறை வைத்தான். திருமங்கை உணவு இல்லாமல் 3 நாட்கள் பட்டினி கிடந்தார்.

    பெருமாள் திருமங்கையின் முன்பாக தோன்றி ‘உனக்கு உணவு மற்றும் வேண்டிய பொருட்களை தருகிறேன் வா’ என்று அழைத்துச் சென்றார். பின்னர் அங்கிருந்த ஒரு நதிக்கரையில் பொருள் உள்ள இடத்தை சுட்டிக்காட்டினார். திருமங்கை அந்த பொருளை எடுத்து வந்து அரசனுக்குச் சேர வேண்டியதை செலுத்தினார். மீதம் உள்ள பொருளை அன்னதானத்திற்கு வைத்துக்கொண்டார். திருமங்கை கைவசம் இருந்த பொருட்கள் எல்லாம் அன்னதானம் செய்து செலவழித்தார். அனைத்தும் செலவழிந்த நிலையில், என்ன செய்வதென்று அறியாமல், தன்னுடைய கையாட்கள் துணையோடு, வழிப்பறி செய்து அதன் மூலம் இறைவனை பூஜித்து, அன்னதானம் செய்தும் வந்தார்.

    கலியன் :

    திருமங்கையை நல்வழியில் திருப்புவதற்கு பெருமாள் சித்தம் கொண்டார். அதன்படி அந்தணர் வேடம் பூண்டு, தன் தேவியரோடு, நகைகளை அணிந்தபடி திருநகரியில் உள்ள வேதராஜபுரம் சென்றார். அங்கு அரச மரத்தடியில் பதுங்கி இருந்த திருமங்கை, அந்தண உருவில் இருந்த பெருமாளையும், தேவியரையும் தன் பரிவாரங்களின் துணையோடு ஆயுதம் தாங்கியபடி வழிமறித்தார். அவர்களிடம் நகைகளை பறித்தபோது, தேவியின் கால் விரலில் அணிந்திருந்த மெட்டியை, திருமங்கையால் கழற்ற முடியவில்லை. பலமுறை முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை. அதனால் திருமங்கைக்கு ‘கலியன்’ என்ற பெயரும் வந்தது.

    பின்னர் கொள்ளையடிக்கப்பட்ட மற்ற பொருட்களை எல்லாம் மூட்டையாகக் கட்டி, அந்த மூட்டையை தூக்க முயன்றார். அதுவும் அசைக்க முடியாதபடி ஆயிற்று. இதனால் ஆத்திரம் அடைந்த திருமங்கை, அந்த அந்தணரை (பெருமாளை) நோக்கி ‘நீ என்ன மந்திரம் பண்ணினாய்’ என்று தனது படையைக் காட்டி மிரட்டினார். அந்தணரும் அந்த மந்திரத்தினை உமக்கு சொல்லுகிறேன்; அருகில் வாரும்’ என அழைத்தார். அருகில் வந்த திருமங்கையின் காதில், ‘ஓம் நமோ நாராயணா’ எனும் மந்திரத்தை உபதேசித்து அருளினார். பின்னர் கருட வாகனத்தில் திருமகளோடு காட்சியளித்தார்.

    மந்திர உபதேசம் பெற்ற திருமங்கை, அஞ்ஞானம் அழிந்து தத்துவ ஞானம் கைவரப்பெற்றார். இறைவன் மீது நான்கு வகை கவிகளையும் பாடினார். தொடர்ந்து இறைவனின் பல தலங்களுக்குச் சென்று பெருமாளை வணங்கி, மங்களாசாசனம் பாடியுள்ளார். இதன் பிறகு திருமங்கை மன்னன் திருமங்கையாழ்வார் என அழைக்கப்படுகிறார்.

    சிறப்பு வழிபாடு :

    திருநகரி கல்யாணரங்கநாதர் கோவிலில், குமுதவல்லி நாச்சியாருடன் திருமங்கையாழ்வார் தனி சன்னிதியில் எழுந்தருளி பக்தர் களுக்கு அருள்பாலித்து வருகிறார். மாதந்தோறும் கார்த்திகை நாளில் திருமங்கையாழ்வாருக்கு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

    அந்நாளில் திருமங்கையாழ்வாரை வழிபட்டால் கல்வி செல்வம், குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்பட சகல செல்வங்களும் கிட்டும் என்பது ஐதீகம். வாழ்வில் நல்ல திருப்பம் ஏற்படும். இவரது சன்னிதியில் திருமங்கையாழ்வார் பூஜை செய்த ‘சிந்தனைக்கினியான் பெருமாள்’ தேவியர்களுடன் அருள்பாலிப்பது சிறப்பாகும்.

    பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் கார்த்திகை மாதம் 10 நாட்கள் திருமங்கை ஆழ்வார் கார்த்திகை உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு உற்சவம் அடுத்த மாதம் 4-ந் தேதி (ஞாயிற்றுக் கிழமை) தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருமங்கை ஆழ்வார் தங்ககுதிரை வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி 11-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையும் நடைதிறந்து இருக்கும்.

    வழியும் தூரமும் :

    இந்த கோவில் நாகை மாவட்டம் சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் புதுத்துறை மண்டபம் என்ற இடத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலும், திருவெண்காட்டில் இருந்து 5 கிலோமீட்டர் தூரத்திலும் திருநகரி என்ற கிராமத்தில் அமைந்துள்ளது.
    Next Story
    ×