search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இதய நோயை குணப்படுத்தும் இருதயாலீஸ்வரர் கோவில்
    X

    இதய நோயை குணப்படுத்தும் இருதயாலீஸ்வரர் கோவில்

    இருதயாலீசுவரராக அருள் பொழியும் திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் நகரில் உள்ள இத்தல இறைவனை வழிபட்டு இதய நோய் நீக்கம் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
    ஒவ்வொரு மனிதனுக்கும் ஆசைகள் இருக்கும். ஆசை என்பது ஆளுக்கு ஆள் மறுபடலாமே தவிர, ஆசை என்பதே இல்லாதவர் இருக்க முடியாது. குடியிருக்க சொந்தமாக வீடு கட்ட வேண்டும், ஊரைச் சுற்றி பவனி வர கார் வாங்க வேண்டும், பிறர் முன்பு அந்தஸ்தாக இருக்க நல்ல உடைகளை வாங்கி அணிய வேண்டும் என்ற ஆசைகள் அனைவருக்கும் உரியதுதான்.

    இதயத்தில் எழுப்பிய ஆலயம் :

    ஆனால் திருநின்றவூரில் வசித்த பூசலார் என்ற சிவபக்தருக்கு வந்த ஆசை சற்று வித்தியாசமானது. தனது இஷ்ட தெய்வமான சிவபெருமானுக்கு, கோவில் கட்டி, கும்பாபிஷேகம் செய்து மகிழ வேண்டும் என்பது தான் அந்த ஆசை. ஆனால் விதி வலியது அல்லவா? கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்த நினைத்த பூசலாரோ, மிகவும் ஏழ்மை நிலையில் வாழ்பவர். தினமும் உணவுக்கே அல்லாடும் ஒருவர் எப்படி கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்துவது?. அவரது இந்த எண்ணத்தைக் கேட்ட பலரும் எள்ளிநகையாடினார்கள்.

    ஆனால் அந்த சிவபக்தர் மனம் சோர்ந்து போய்விடவில்லை. பணம்தானே கையில் இல்லை. மனம் இருக்கிறது. மனதிலேயே என் அன்புக்குரிய இறைவனுக்கு ஆலயம் எழுப்புகிறேன் என்றவர், ஒவ்வொரு நாளும் ஆலயத்தின் வடிவம் குறித்த சிந்தனையிலேயே ஆழ்ந்தார். அவரை மக்கள் அனைவரும் சிவ பித்தன் என்று அழைக்கத் தொடங்கி விட்டனர். கோவிலின் கருவறை, மண்டபங்கள், உள்சுற்று, வெளிச்சுற்று, மதில்சுவர் என்று தினம் தினம் உள்ளத்தினுள்ளே, சிவபெருமானுக்கான ஆலயத்தை அற்புதமாக எழுப்பினார். அந்தக் கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்வதற்கான தேதியையும் தன் மனதிலேயே குறித்து விட்டார்.

    அப்போது காஞ்சியை ராசசிம்மன் என்ற பல்லவ மன்னன் ஆட்சி செய்து கொண்டிருந்தான். அவன் அந்தப் பகுதியில் சிவபெருமானுக்கு கலை நயத்தோடு கூடிய ஆலயம் ஒன்றைக் கட்டி முடித்து, பூசலார் தன் மனதில் குறித்து வைத்திருந்த தேதியிலேயே கும்பாபிஷேகம் நடத்துவதற்கு நாள் பார்த்திருந்தான். விடிந்தால் கும்பாபிஷேகம் என்ற நிலையில், அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டு தூங்குவதற்காக புறப்பட்டான் ராசசிம்மன்.

    கனவில் தோன்றிய ஈசன் :

    அப்போது அவனது கனவில் தோன்றிய சிவபெருமான், ‘நாளை நீ கட்டியிருக்கும் கோவில் கும்பாபிஷேகத்திற்கு என்னால் வர இயலாது. ஏனெனில் திருநின்றவூரில், பூசலார் என்ற என்னுடைய பக்தன் கட்டியிருக்கும் ஆலயத்தின் கும்பாபிஷேகமும் நாளை அதிகாலையில்தான் நடக்கிறது. நான் அங்குதான் எழுந்தருளப் போகிறேன்’ என்று கூறினார். கனவு கலைந்து திடுக்கிட்டு எழுந்தான் மன்னன். இறைவன் தனக்கு ஏதோ செய்தி சொல்வதாகவே கருதிய மன்னன், அந்த நள்ளிரவிலும், தன் பட்டத்து ராணி மற்றும் அமைச்சர்கள், காவலர்கள் புடைசூழ திருநின்றவூர் நோக்கி பயணப்பட்டான். அதிகாலைக்கு முன்பாகவே திருநின்றவூரை அடைந்து விட்டான்.

    செல்லும் வழி முழுவதும் மன்னனுக்கு, பூசலார் கட்டியிருக்கும் ஆலயத்தைப் பற்றிய சிந்தனையே மேலோங்கி இருந்தது. ‘நான் கட்டியிருப்பதை விட மிகப்பெரிய ஆலயமாக இருக்குமோ? கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடக்குமோ? அதனால்தான் இறைவன் என் இடத்திற்கு வருவதைக் காட்டிலும், இங்கு எழுந்தருளப்போகிறார் போலும். இறைவனே வருகிறார் என்றால் அந்த விழா வெகு சிறப்பாகத்தான் நடைபெற வேண்டும்’ என்று எண்ணியபடியே வந்தான்.

    ஆனால் ஊருக்குள் நுழைந்த மன்னனுக்கும், அவனுடன் வந்தவர்களுக்கும், அப்படி ஒரு விழா நடப்பதற்கான அறிகுறியே தென்படவில்லை. இறைவனின் வாக்குப்படி இங்கு நடைபெறும் கும்பாபிஷேகம் பற்றி, ஊர் மக்களிடம் மன்னன் விசாரித்தான். ஆனால் ஊரில் உள்ளவர்களோ, ‘அப்படி எதுவும் இங்கு நடைபெறவில்லையே’ என்றனர். மேலும் ‘பூசலார் என்று ஒருவர் பல நாட்களாக, உணவின்றி இலுப்பை மரத்தடியில் கண்மூடி அமர்ந்திருப்பதையும் தெரிவித்தனர்.

    பூசலார் நெஞ்சில் இறைவன் :

    மன்னன் பூசலார் இருந்த இடத்திற்கு விரைந்து சென்றான். அங்கு பூசலார், சிவபெருமானை நினைத்து தவம் இயற்றிக் கொண்டிருந்தார். அவர் முன்பாக மன்னனும், அவனுடன் வந்தவர்களும் கைகூப்பி நின்றனர். சிறிது நேரம் கழித்து விழிகளைத் திறந்த பூசலார், எதிரே அரசனும், அரசியும், அமைச்சரும் நிற்பதைக் கண்டார்.

    மன்னன், ‘என் கனவில் தோன்றிய இறைவன் இங்கு கும்பாபிஷேகம் நடைபெறுவதாகவும், அங்கு எழுந்தருளப் போவதாகவும் கூறியிருந்தார். அந்த கும்பாபிஷேகத்தைக் காணவே நாங்கள் வந்தோம். ஆனால் இங்கு அதுபோல் விழா நடைபெறுவதற்கான அறிகுறியே இல்லையே’ என்றான் மன்னன்.

    பூசலாரோ, ‘ஆலயம் கட்டப்பட்டிருப்பது உண்மைதான். அது என் இதயத்திற்குள் கட்டப்பட்டிருக்கிறது. அந்த ஆலயத்திற்குத்தான் இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது’ என்று விளக்கம் அளித்தார்.

    மன்னன், தானும் அந்த இதயக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் இறைவனை தரிசிக்க விரும்புவதாக தெரிவித்தார். உடனடியாக பூசலார் தனது இடது பக்க நெஞ்சைத் திறந்து காட்ட, அங்கே உள்ளம் பெரும் கோவிலாக, உத்தமர் சிவன் அதற்குள் இருப்பது போன்ற காட்சி தென்பட்டது. அரசனும் மற்றவர்களும் வியந்து போயினர். ‘எத்தனை உயர்ந்த பக்தி’ என்று ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். மன்னன், பூசலாரின் பாதம் பணிந்து வணங்கினான்.

    பின்னர் பூசலார் இதயத்தில் எழுப்பிய ஆலயத்தைப் போலவே, அங்கு ஒரு ஆலயத்தை எழுப்பினான். அந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் இறைவன், இருதயாலீஸ்வரர் என்று பெயர் பெற்றார். அதைத் தொடர்ந்து மன்னன், தன் ஊருக்குத் திரும்பி தான் கட்டிய ஆலயத்திற்கு கும்பாபிஷேகம் நடத்தினான் என்பது தல வரலாறு.

    இதய நோய் :

    உடலின் முக்கியமான உறுப்பு இதயம். இது சீராக இயங்கினால்தான் நாம் நல்லமுறையிலே நடமாட முடியும். இவ்வளவு ஏன்? இதயம் என்ற கைப்பிடியளவு உறுப்பு துடித்தால்தான் நாம் உயிர்வாழவே முடியும்.

    அப்படிப்பட்ட இதயத்திற்கு எத்தனையோ நோய்கள் வந்து அதன் செயல்பாட்டை சீரழிக்குமானால் மனிதனுக்கு இதய நோய்களும் இறப்பும் தவிர்க்க முடியாதது ஆகும்.

    அதனைத் தடுக்கவும், சிகிச்கை பெறவும் நவீன மருத்துவ உலகில் எத்தனையோ வழிகள் உண்டு. இருப்பினும் இறைவனை நம்பி வழிபடுவதால் மனதுக்கு அமைதியும் நம்பிக்கையும் கிடைப்பதால் உள்ளமும் உடலும், உடலை இயக்கும் இதயமும் சீராகும் நோய்களிலிருந்து விடுதலை கிடைக்கும்.

    அந்த வகையில் இருதயாலீசுவரராக அருள் பொழியும் இத்தல இறைவனை வழிபட்டு இதய நோய் நீக்கம் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் நகரில் உள்ள இத்திருக்கோவிலில் இதய நோய் உள்ளவர்கள் இறைவனை வழிபட்டு தீபம் ஏற்றி தனது சக்திக்கேற்ப அபிஷேகம், அர்ச்சனை செய்து வருகிறார்கள். திங்கட்கிழமை தோறும் தொடர்ந்து இந்த கோவிலுக்கு வந்து விளக்கேற்றி வழிபட்டால் நல்ல பலன் கிடைப்பதாக நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.
    Next Story
    ×