search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கல்விச் செல்வம் தரும் திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில்
    X

    கல்விச் செல்வம் தரும் திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில்

    அகோர முகத்தை கொண்டு, சிவபெருமான் அகோரமூர்த்தியாக திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் தனிசன்னிதியில் வீற்றிருந்து பக்தர்கள் வேண்டும் வரத்தை நிறைவேற்றி தருகிறார்.
    உலக இயக்கத்தை மேற்கொள்ளும் சிவபெருமானுக்கு ஐந்து முகங்கள் உள்ளன. அவை ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், சத்யோஜாதம் ஆகியவை ஆகும். இந்த ஐந்து முகங்களையும் நினைத்து தியானம் செய்தாலோ அல்லது வழிபாடு செய்தாலோ சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது பிரம்மதேவனின் வாக்காகும்.

    இந்த முகங்களில் ஈசானம், தத்புருஷம், வாமதேவம், சத்யோஜாதம் ஆகிய நான்கு முகங்களும் வழிபட முடியாத உருவங்கள் ஆகும். ஆனால், இதில் அகோர முகத்தை (அழகியமுகம்) கொண்டு, சிவபெருமான் அகோரமூர்த்தியாக திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் (புதன் ஸ்தலம்) கோவிலில் தனிசன்னிதியில் வீற்றிருந்து பக்தர்கள் வேண்டும் வரத்தை நிறைவேற்றி தருகிறார்.

    நாகப்பட்டினம் மாவட்டம் திருவெண்காட்டில் சுவேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இத்தலத்தின் சிறப்புகள் பற்றி திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோர் பாடி உள்ளனர். இத்தலத்தில் இறைவனாக சுவேதாரண்யேஸ்வரரும், இறைவியாக பிரம்ம வித்யாம்பிகை அம்மனும் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

    தலவரலாறு :

    முன்னொரு காலத்தில் ஜலந்தாசுரன் என்ற அசுரனின் மகனாக பிறந்தவன் மருத்துவாசுரன். இவன் தனக்கு இறைவன் அருள் கிடைக்க வேண்டும் என்று நினைத்தான். அதற்காக பல்வேறு ரிஷிகளின் ஆலோசனையை ஏற்று சிவனை வேண்டி நடுக்கடலில் நெடுங்காலமாக பெரும் தவம் இருந்தான். அவனது தவத்தை மெச்சிய சிவபெருமான் மருத்துவாசுரன் முன்பு தோன்றி, என்ன வரம் வேண்டும் என்று கேட்டார்.

    அப்போது அந்த அசுரன், சிவனிடம் உள்ள சூலாயுதத்தை கேட்டான். இதனையடுத்து சிவபெருமான் அவனுக்கு சூலாயுதத்தை வழங்கினார். அதனை பெற்ற மருத்துவாசுரன் நல்லகாரியங்களை செய்யமால், உலகத்தில் உள்ள தேவர்கள், மனிதர்கள் ஆகியோரை துன்புறுத்தினான். அவனால் துன்புறுத்தப்பட்டவர்கள் சிவனிடம் முறையிட்டனர்.

    உடனே சிவபெருமான் தனது வாகனமான நந்தியை மருத்துவாசுரனிடம் அனுப்பினார். நந்திபகவான் மருத்துவாசுரனிடம் சென்று அறிவுரைகளை கூறினார். அதனை ஏற்காத மருத்துவாசுரன் நந்தியை போருக்கு அழைத்தான். அப்போது ஏற்பட்ட சண்டையில் மருத்துவாசுரன் நந்தியை தாக்கி, அதன் கொம்பை முறித்தான். மேலும், நந்தியின் உடலில் 9 இடங்களில் காயத்தை ஏற்படுத்தினான். (திருவெண்காடு ஆலயத்தில் உள்ள நந்தியின் உடலில் காயங்களையும், கொம்பு முறிக்கப்பட்டு இருப்பதையும் இப்போதும் காணலாம்).

    அஷ்ட பைரவர்கள் :

    இதனை அறிந்த சிவபெருமான் சினம்கொண்டு, நெருப்பு பிழம்பாக வெடித்து சிதறி மருத்துவாசுரன் முன்பு தோன்றினார். அப்போது அவருடைய உருவம் கரிய திருமேனியுடன், செவ்வாடை அணிந்து, இடது காலை முன் வைத்து, வலது கால் கட்டை விரலையும், அடுத்த விரலையும் ஊன்றி நடைகோலமாக கம்பீரமான போர்க்கோலத்துடன் காட்சி அளித்தார்.

    மேலும், எட்டு கரங்களில் மணி, கேடயம், கத்தி, வேதாளம், உடுக்கை, கபாலம், திரிசூலம், எரிசி போன்றவற்றை தாங்கியிருந்தார். கோரைப் பற்களுடன், 14 பாம்புகளை தன் மேல் அணிந்து, மணிமாலை சாத்தி, அஷ்ட (எட்டு) பைரவர்களுடன் புன்னகை முகத்துடன் காட்சி அளித்தார். அகோரமூர்த்தி மாசி மாதம் தேய்பிறை பிரதமை பூர நட்சத்திர ஞாயிற்றுக்கிழமை இரவு 12 மணிக்கு அவதரித்தார். இந்த தோற்றத்தை பார்த்த மருத்துவாசுரனுக்கு பயம் ஏற்பட்டது.

    இதனையடுத்து அவர் உடனடியாக அகோரமூர்த்தியின் பாதத்தில் சரண அடைந்தார். இதனால் மனம் இரங்கிய அகோரமூர்த்தி மருத்துவாசுரனுக்கு உபதேசம் செய்தார். அகோரமூர்த்தி, அவனுக்கு அனுக்கிரகம் செய்தபோது மருத்துவா சுரன் அகோரமூர்த்தியிடம் தங்களை வழிபடும் பக்தர்களுக்கு நவக்கிரக தோஷம், பித்ரு தோஷம், எம பயம், எதிரிகளால் ஏற்படும் தொந்தரவுகளை நீக்கி அருள வேண்டும். மேலும் வாழ்வில் செழிப்பு, ஆரோக்கிய வாழ்வு, செல்வாக்கு, இடைவிடாத இறை பக்தி தர வேண்டும் என்று வேண்டினான். அகோரமூர்த்தியும் அவனது வேண்டுகோளை ஏற்று, சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் தனி சன்னிதி கொண்டு அருள்பாலிக்கிறார்.

    தலசிறப்புகள் :

    இந்தக் கோவிலில் சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய 3 பொறிகள், சூரியன், சந்திரன், அக்னி என முக்குளங்கள் உருவானதாக புராண வரலாறுகள் கூறுகின்றன. இந்த குளங்களில் புனிதநீராடி சுவேதாரண்யேஸ்வரரை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இங்குள்ள பிரம்மவித்யாம்பாள், பிரம்மனுக்கு ஞானத்தை போதித்ததாக கூறப்படுகிறது. இவரை வழிபட்டால் கல்வி, ஞானம் கிடைக்கும். நவக்கிரகங்களில் ஒன்றான புதனுக்கு இங்கு தனிசன்னிதி உள்ளது.

    பல்வேறு சிறப்புகள் பெற்ற அகோரமூர்த்திக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றாலும், கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமை அதிலும் குறிப்பாக கார்த்திகை 3-வது ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் பூஜையில் கலந்து கொள்வது நல்லது. இந்த ஆண்டு கார்த்திகை 3-வது ஞாயிற்றுக்கிழமை வருகிற 4-ந் தேதி வருகிறது.

    அன்றைய தினம் காலையில் காவிரியில் இருந்து நீர் எடுத்து வந்து அகோரமூர்த்திக்கு அபிஷேகம் நடைபெறும். மாலையில் பக்தர்கள் பால்காவடி எடுத்து வந்த பால் மூலம் அபிஷேகம் நடைபெறும். அத்துடன் பல்வேறு வாசனை திரவியங் களின் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். 4-ந் தேதி இரவு 7 மணி தொடங்கும் அபிஷேகம் 11 மணி வரை நடைபெறும். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்த பூஜையில் கலந்து கொண்டால் கல்விச்செல்வம் உள்பட சகல செல்வங்களும் கிட்டும்.

    பல்வேறு சிறப்புகள் பெற்ற இத்தலம் நாகை மாவட்டம் திருவெண்காட்டில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் மயிலாடுதுறையில் இருந்து 25 கி.மீட்டர் தூரமும், சீர்காழியில் இருந்து 12 கி.மீட்டர் தூரமும் உள்ளது.

    Next Story
    ×