search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தோஷங்களை விலக்கும் அப்ரதீஸ்வரர் கோவில் - திருச்சி
    X

    தோஷங்களை விலக்கும் அப்ரதீஸ்வரர் கோவில் - திருச்சி

    பூராட நட்சத்திரக்காரர்கள் இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டு நிறைவான பலனைப் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
    தவம் செய்ய சிறந்த இடம் எது? என்று கேட்டால்.... மலை, காடு, நதியோரம், குடில், மர நிழல் இப்படிப்பட்ட இடங்களில்தான் தேவர்களும், முனிவர்களும், தேவியரும் தவமிருந்ததாக புராணங்களிலும், தல வரலாறுகளிலும் படித்திருக்கிறோம். வானில் புவி ஈர்ப்புக்கு அப்பாற்பட்ட இடத்தில் தேவி தவமிருந்தாள் என்பது அபூர்வமான தகவல் அல்லவா?

    நகர் என்ற தலத்தில் அருள்பாலிக்கும் இறைவன் அப்ரதீஸ்வரர் ஆலயத்தின் தல புராணம் அப்படித்தான் சொல்கிறது. அது என்ன கதை?

    தல வரலாறு :

    ஒரு சமயம் அம்பிகை ஏகாந்தமாகத் தவமிருக்க விரும்பினாள். அதற்கான இடத்தைத் தேடியவள், அதுவரை யாரும் தவம் இருந்திராத ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்தாள்.

    புவி ஈர்ப்புக்கு அப்பாற்பட்ட பீதாம்பர யோகம் என்ற நிலையில், பூமிக்கு மேல் குறிப்பிட்ட உயரத்தில் மிதந்தவாறு, அசலன யோகம் என்ற அசைவற்ற யோக நிலையில் சர்வேஸ்வரனை நோக்கி தவமிருக்கத் தொடங்கினாள் அம்பிகை. அதை அறிந்ததும் யோக மாயையான அன்னையின் சக்தியால் இயங்கும், பிரபஞ்சத்தின் அனைத்துக் கோள்களும், நட்சத்திரங்களும் அத்தலத்தை வலமாகவும், இடமாகவும் வலம் வரலாயின.

    அசலனத் தவத்திலிருந்து நவமி திதி நாள் ஒன்றில், அன்னை மீண்டாள். அப்போது அத்தலத்தில் சூரிய சந்திரக் கிரகங்களும், கோடானு கோடி நட்சத்திரங்களும் வல இடமாக வலம் வந்து இறைவனை வணங்குவதைக் கண்டு அதிசயித்தாள் தேவி. சகலமும் ஒன்றாக வலம் வர அந்த இடத்தில் இருக்கும் இறைவனின் விசேஷமான சுயம்பு வடிவே காரணம் என்பதை ஞானபூர்வமாக உணர்ந்தாள். உடனே தேவி இறைவனை கோடானு கோடி சொர்ண வில்வ தளங்களால் பூஜிக்கத் தொடங்கினாள். மகிழ்ந்த சர்வேஸ்வரன் சுயம்பு லிங்க மூர்த்தியாகத் தோன்றி அன்னையின் சலனமற்ற யோகநிலையை வாழ்த்தி அருளினார்.

    அன்னை மானுட வடிவில் சலனம் ஏதுமில்லா நிலையில் தியானம் இருந்ததால், அம்பிகைக்கு ‘அசல சுந்தரி’ என்ற பெயர் வந்தது. ஆலயத்தில் இறைவனின் திருநாமம் அப்ரதீஸ்வரர் என்பதாகும். அன்னைக்கு அதுல சுந்தரி என்ற பெயரும் உண்டு. கிரகங்கள் இங்கு ஒன்றாக நகர்ந்ததால் ‘நகர்’ என்று பெயர் பெற்ற தலம் இது. இங்குள்ள கல்வெட்டுளிலும் ‘நகர்’ என்ற பெயரே காணப்படுகிறது.

    ஆலய அமைப்பு :

    ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. சுற்றிலும் உயரமான மதிற்சுவர் உள்ளது. முகப்பைத் தாண்டியதும் இடதுபுறம் திருக்குளம் இருக்கிறது. அடுத்துள்ள நுழைவு வாசலைக் கடந்ததும் திருச்சுற்று வருகிறது. பிரகாரத்தின் மேற்கில் தென் கயிலாசநாதர், சண்முகநாதர், வள்ளி - தெய்வானை, வட கயிலாசநாதர், கஜலட்சுமி சன்னிதிகள் உள்ளன.

    வடக்கில் ஆதி மூலவரான நகரீஸ்வரரின் தனிக்கோவில் உள்ளது. இவரது சன்னிதிக்கு எதிரே ஆலயத்தின் தலவிருட்சமான மகாவில்வ மரம் இருக்கிறது. மற்ற வில்வ மரங்களைப் போல் இந்த மரத்தில் முட்கள் காணப்படவில்லை. காசியில் மட்டுமே இது போன்ற மரங்கள் காணப்படுவதாகக் கூறுகின்றனர். வடக்குப் பிரகாரத்தில் சண்டீஸ்வரர் சன்னிதியும், வட கிழக்கு மூலையில் நவக்கிரகங்களும் உள்ளன. தேவ கோட்டத்தில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, துர்க்கை ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். நவக்கிரக மண்டபத்தில் சூரியன் மத்தியில் இருக்க மற்ற கிரகங்கள் சூரியனை பார்த்த நிலையில் வைக்கப்பட்டுள்ளது அபூர்வ அமைப்பாகும்.

    பிரகாரத்தின் கீழ் பகுதியில் சூரியன், பைரவர் திருமேனிகள் உள்ளன. காலசந்தியின் போது முதலில் சூரியனுக்கு தீபாராதனைக் காட்டிய பிறகே, விநாயகருக்கும், இறைவன், இறைவிக்கும் தீபாராதனை காட்டப்படுகின்றன. இந்த விநோத வழக்கம், இந்த ஆலயத்தில் மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது.

    மண்டபத்தின் வலதுபுறம் இறைவி அதுல சுந்தரி தென் திசை நோக்கி அருள்பாலிக்கிறாள். அன்னைக்கு நான்கு கரங்கள். தனது மேல் கரங்களில் அங்குசம் பாசம் தாங்கியும், கீழ்க்கரங்களில் அபய வரத முத்திரை தாங்கியும், ஜடாமகுடம் அணிந்தும் அன்னை கருணை ததும்ப அருள்பாலிக்கும் அழகே அழகு.

    கருவறையில் இறைவன் அப்ரதீஸ்வரர் லிங்கத்திருமேனியாக கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். மூலவரின் விமானம் தஞ்சைப் பெரிய கோவிலில் இருப்பது போன்று மிக உயரமாக உள்ளது. இறைவனுக்கு எதிரே இரண்டு நந்திகள் உள்ளன. பிரதோஷ காலத்தில் இந்த இரண்டு நந்திகளையும் வழிபடுவதால் இரட்டிப்பு பலன் கிடைப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர். இரண்டாம் ராஜாதி ராஜன், மூன்றாம் குலோத்துங்கன் மற்றும் மாறவர்மன் குலசேகர பாண்டியன் ஆகியோர் காலத்து கல்வெட்டுகள் இங்கு காணப்படுகின்றன. ஆலயம் முழுவதும் கருங்கற்களால் கட்டப்பட்டிருப்பது ஆலயத்தின் மற்றொரு சிறப்பு.

    தல விருட்சமான மகா வில்வ மரத்தின் அடியில், ஒரு பெரிய சகஸ்ரலிங்கம் அமைக்கப்பெற்றுள்ளது. இந்த மரத்திற்கு சந்தனம், பூசு மஞ்சள் பூசி, குங்குமம் இட்டு புத்தாடை அணிவித்து மரத்தையும், சகஸ்ரலிங்கத்தையும் வழிபட்டால் பித்ரு தோஷமும், இன்னபிற தோஷங்களும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

    இத்தலத்து இறைவனையும், இறைவியையும் கோள்களே வழிபட்டதால், இங்கு வந்து வழிபடும் பக்தர்களுக்கு நட்சத்திர தோஷம், கிரகதோஷம் முதலியன நீங்கும் என்பது ஐதீகம். திருமணக் குழப்பங்கள் நீங்கவும், குழந்தைப்பேறு பெறவும் நவமி திதியில் இத்தலம் வந்து கோவில் பிரகாரத்தை இடம் வலமாகச் சுற்றி வந்து தரிசித்தால் உரிய பலன் கிடக்கும்.

    ஆராதனைகள் :

    தினமும் நான்கு கால பூஜைகள் நடைபெறும் இந்த ஆலயம், காலை 6 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும். ஆலயத்தின் தீர்த்தம் பால்குனி ஆறு. இந்த ஆலயத்தில் நவராத்திரி, தீபாவளி, பொங்கல், சிவராத்திரி, ஐப்பசி பவுர்ணமி, சோமவாரங்கள், பிரதோஷ நாட்களில் இறைவனுக்கும், இறைவிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. பவுர்ணமி நாட்களில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொள்ளும் விளக்குப் பூஜை வெகு சிறப்பாக நடைபெறும். திருவாதிரை அன்று நடராஜர் வீதியுலா வருவதுண்டு.

    இறைவனையும் இறைவியையும் கோள்கள் வழிபட்ட தலம் இது. எனவே இத்தல இறைவன் இறைவியை வழிபடுவதால் அனைத்து தோஷங்களும் விலகும் என்பதுடன், பூராட நட்சத்திரக்காரர்கள் இங்கு வந்து வழிபட்டு நிறைவான பலனைப் பெறலாம் என்று பக்தர்கள் நம்புவது உண்மையே.

    அருகாமை ஆலயங்கள் :

    நகர் என்ற இந்த ஊருக்கு அருகில் ஏராளமான சிறப்பு பெற்ற ஆலயங்கள் உள்ளன. லால்குடி சப்தரிஷிஸ்வரர் ஆலயம், திருமங்கலம் சாம வேதீஸ்வரர் ஆலயம், பூவாளூர் திருமூலநாதர் ஆலயம், திருமாந்துறை ஆம்ரவனேஸ்வரர் ஆலயம், ஆங்கரை மருதாந்த நாதேஸ்வரர் ஆலயம், ஆதிகுடி அங்குரேஸ்வரர் ஆலயம், திண்ணியம் சண்முகநாத சுவாமி ஆலயம் போன்ற ஆலயங்கள் உள்ளன.

    திருச்சி நகரிலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலும், லால்குடி சாலையில் மாந்துறையில் இருந்து வடக்கே 2 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது நகர் என்ற திருத்தலம். திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து திருமங்கலம் செல்லும் பேருந்துகள் இவ்வூர் வழியாகச் செல்லும்.
    Next Story
    ×