search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    காமதேனு பசு வழிபட்ட பசுபதீஸ்வரர் கோவில்
    X

    காமதேனு பசு வழிபட்ட பசுபதீஸ்வரர் கோவில்

    காமதேனு பசு வழிபட்ட பசுபதீஸ்வரர் கோவில் பற்றிய சிறப்பான தகவல்களை இந்த பகுதியில் பார்க்கலாம்.
    கொங்கு மண்டலத்தில் உள்ள ஏழு சிவாலயங்களாகிய ஆதி கருவூர், வெஞ்சமாங்கூடலூர், திருமுருகன்பூண்டி, அவினாசி, திருச்செங்கோடு, பவானி, திருப்பாண்டிக் கொடுமுடி என்பனவற்றும் முதன்மையானதாக உள்ளது ஆதி கருவூர். தற்போது கரூர் என்று அழைக்கப்படும் இந்த திருத்தலத்தில் உள்ள பசுபதீஸ்வரர் கோவில் சிறப்புமிக்கதாகும்.

    ஆதி கருவூர் என்று இந்தத் திருத்தலம் அழைக்கப்படுவதற்கு, உலகம் தோன்றும் போது முதன் முதலாக தோன்றிய ஊர் என்பதாகவும், பிரம்மன் தனது படைப்பு தொழிலை முதன் முதலாக தொடங்கிய இடம் என்பதாகவும் கொள்ளலாம். மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் மூன்று சிறப்புகளை கொண்டதாக இந்த ஆலயம் திகழ்கிறது.

    தல வரலாறு :

    பிரம்மன் தானே ஆதிகர்த்தா என்றும், தான் படைப்பு தொழிலை செய்யாவிட்டால், காத்தல், அழித்தல் முதலியவைகளை செய்பவர்களுக்கு வேலையில்லை என்றும் எண்ணி கர்வம் கொண்டார். அவரது அறியாமையை போக்க நினைத்தார் சிவபெருமான். ஒரு முறை பிரம்மன் படைப்புத் தொழிலைத் தொடங்கினார். ஆனால் எந்த ஒரு உயிரும் உருவாகவில்லை.

    சிவபெருமான், தன்னை வணங்க கயிலைக்கு வந்த காமதேனுவிடம், 'நீ பூலோகம் சென்று, பிரம்மனைப் போல படைப்பு தொழில் செய்து வா' என்று அருளினார். அதன்படி அன்று முதல் பிரம்மனுக்கு பதிலாக காமதேனு பசுவே, படைப்புத் தொழிலை செய்து வந்தது. இதையறிந்ததும் கர்வம் அகன்ற பிரம்மதேவன், சிவபெருமானை வணங்கி தான் செய்த பிழைக்கு வருந்தினார். மீண்டும் தனக்குப் படைப்புத் தொழிலை தந்தருள வேண்டும் என்று வேண்டினார்.

    உடனே சிவபெருமான், 'நீ ஆம்பிரமா நதிக்கரையில் உள்ள வஞ்சிவனம் எனப்படும் கருவூரில், என்னை தியானித்து வழிபடுவாயாக' என்று அருளினார். அதன்படி பிரம்ம தேவன், ஆம்பிரமா நதிக்கரையில் இருந்து சிவபெருமானை வழிபட்டு வந்தார். பல காலம் அவர் செய்து வந்த தவத்தின் பலனாக அவருக்கு சிவபெருமான் காட்சி கொடுத்தார்.

    'பிரம்மனே! இன்று முதல் உன்னுடைய அனைத்து வினைகளும் அகன்றது. இந்த தலத்தில் பெரும் வேள்வி ஒன்றை இயற்றி, கலைமகளை மணம் செய்து படைப்பு தொழிலையும் இந்த இடத்தில் இருந்த படியே நடத்துவாயாக..' என்று அருள்புரிந்தார்.

    அதன்பிறகு பிரம்மன், ஆம்பிரமா நதியின் வடபுறத்தில் தனது பெயரால் தீர்த்தம் ஒன்றை ஏற்படுத்தி, சிவபெருமானை வழிபட்டார். பின்னர் வெண்ணெய் மலையின் வடக்கே பெரிய வேள்விச் சாலை ஒன்றை ஏற்படுத்தி வேள்வி செய்தார். பின்னர் கலைமகளை மணம் முடித்தார். தொடர்ந்து அந்தப் பகுதியில் சிவபெருமானுக்கு திருக்கோவில் ஒன்றையும் அமைத்தார். அந்த ஆலயத்தின் தென்கிழக்கு திசையில் காளி கோவில் ஒன்றும், அய்யனார் கோவில் ஒன்றும் தோற்றுவித்தார்.

    பூலோகம் வந்த காமதேனு வராககிரி தொடங்கி, ஒவ்வொரு சிவாலயமாக வழிபட்டவாறே வஞ்சிவனம் வந்தது. அங்கிருந்து தவம் செய்தது. ஒரு நாள் ஆகாயத்தில் இருந்து ஒரு அசரீரி ஒலித்தது. 'காமதேனுவே! வஞ்சி வனத்துக்குள் ஒரு புற்றிடத்தில், ஆதிலிங்கம் என்னும் மகாலிங்கம் உள்ளது.

    அது சுயம்பு மூர்த்தியாகும். அதனை பூஜித்து வா' என்றது அந்தக் குரல். காமதேனுவும் அவ்வாறே சென்று, ஆதிலிங்கத்தை கண்டு, தனது மடியில் இருந்து பாலை சொரிந்து தினமும் வழிபாடு செய்தது. ஒரு நாள் அதன் கால் குளம்பு, இறைவனின் திருமுடியின் இடது பாகத்தில் பட்டுவிட்டது. இதனால் அதில் இருந்து ரத்தம் வெளிவந்தது. அதைக் கண்ட காமதேனு பதைபதைத்தது.

    அப்போது இறைவன் தோன்றி, 'காமதேனுவே! பதற்றம் வேண்டாம். இது உன் பிழையல்ல. நீ என்னை வழிபட்டமையால், இன்றும் முதல் இந்த லிங்கம் பசுபதிநாதர் என்ற பெயரால் அழைக்கப்படும். என்னுடைய அருள் இருந்தால், பிரம்மன் மட்டுமல்ல... பசுவும் கூட படைப்புத் தொழிலை நடத்தும் என்பதை உணர்த்துவதற்காகவே உன்னை பூலோகம் வந்து படைப்புத் தொழில் செய்யச் செய்தேன். பிரம்மனிடம் படைப்புத் தொழிலை ஒப் படைத்து விட்டு, தேவலோகம் செல்வாயாக' என்று ஆசி கூறி மறைந்தார் என்பது தல வரலாறு.

    ஆலயத்தின் முன்பாக ஏழு நிலை ராஜகோபுரம் கம்பீரமாக காட்சி தருகிறது. ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால், சிறிய கோபுரம் ஐந்து நிலைகளுடன் உள்ளது. இரண்டிற்கும் இடைபட்ட இடத்தில் விளக்கேற்றும் வகையில் கல் தூண் ஒன்று இருக்கிறது. இதன் நான்கு பகுதிகளிலும் புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. தெற்கு நோக்கியவாறு விநாயகர் வீற்றிருக்கிறார். 12 நாகங்களால் அமையப்பெற்ற நாகப்பந்தலின் கீழ், காமதேனு தன் நாவால் லிங்கத்தை வருடியபடி, பால் சொரியும் காட்சி அமைப்பு காணப்படுகிறது. ஆலயத்திற்குள் வீற்றிருக்கும் மூலவரான சிவலிங்கம் சுயம்பு மூர்த்தியாகும்.

    இவர் பசுபதிநாதர் என்று அழைக்கப்படுகிறார். இந்த மூர்த்தம் சற்றே சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. பங்குனி மாதத்தில் தன் மீது விழும் சூரிய ஒளியை ஏற்றுக்கொள்ளும் பொருட்டு சாய்ந்துள்ளதாக காரண காரியம் கூறப்படுகிறது. இந்த லிங்கத்தின் மீது பசுவின் காலடி தடம் இருப்பதை இன்றும் காணலாம். கிழக்கு நோக்கி அம்மன் சன்னிதி உள்ளது. அம்பாள் அலங்காரவல்லி என்னும் கிருபாநாயகி ஆவார். அம்மன் திருவடியின் கீழ் சக்ர பீடம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இது தவிர தெற்கு நோக்கியவாறு சவுந்திரநாயகி என்னும் வடிவுடையாள் அம்மனின் சன்னிதியும் இருக்கிறது.

    மூலவர் கருவறையைச் சுற்றி நர்த்தன விநாயகர், தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், பிரம்மதேவர், துர்க்கா பரமேஸ்வரி ஆகியோரது சன்னிதிகள் உள்ளன. மேலும் நவக்கிரகங்களும், பைரவர் முதலிய திருவுருவங்களும் இருக்கின்றன.

    இறைவனுடன் ஐக்கியமான பெண் :

    ஆலயத்தில் உள்ள சவுந்திரநாயகி அம்மன் சன்னிதி, பிற்காலத்தில் அமைக்கப்பட்டது என்பது தெளிவாக தெரிகிறது. சவுந்திரநாயகி என்ற பெயரில் உள்ள அம்பாள், தனது தவப் பயனால், ஈசனை மணந்த மானுடப் பெண் என்று கூறப்படுகிறது. கருவூருக்கு மேற்கே அப்பிபாளையம் என்ற சிறிய கிராமம் இருந்தது. இங்கு வேட்டுவ இனத்தைச் சேர்ந்த தனவந்தருக்கு வடிவுடையாள் என்ற பெண் இருந்தாள். அவள் மற்ற பெண்களைப் போல் அல்லாமல், அதீத அறிவுடன் வளர்ந்தாள். வயது ஏற, ஏற அவளிடம் பேச்சு குறைந்து, மவுனம் அதிகரித்தது. பசுபதி ஈஸ்வரரை வணங்க வேண்டும் என்ற மகளின் கோரிக்கையை அவளது தந்தை நிறைவேற்றிவைத்தார்.

    மகளுக்காக சந்தனக் கட்டையில் சிவலிங்கம் செய்து கொடுத்தார். அந்த லிங்கத்திற்கு வடிவுடையாள் தினமும் வழிபாடு செய்து வந்தாள். வேடுவ குலத்தில் பிறந்தும், புலால் உண்ணாமல் சைவ வழியில் இருந்து சிவனை பூஜித்தாள். திருமண வயது வந்ததும், பசபதீஸ்வரரையே மணக்க எண்ணினாள். அதைக் கேட்ட பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். ஆனால் அன்றிரவு வடிவுடையாள் பெற்றோர் கனவில் சிவபெருமான் தோன்றினார். 'உங்கள் மகளை, யாம் பங்குனி உத்திர திருவிழாவின் 7-ம் நாளில் திருமணம் செய்வோம். அதன் அடையாளமாக அப்பிபாளையம் முழுவதும் அன்றைய தினம் பூச்செரிந்து இருக்கும்' என்று கூறினார்.

    அதைக் கேட்ட வடிவுடையாளின் பெற்றோர் பங்குனி உத்திர திருவிழாவின் 7-ம் நாளுக்காக காத்திருக்கத் தொடங்கினர். அந்த நாளும் வந்தது. கனவில் ஈசன் சொன்னது போலவே, நிஜத்தில் அப்பிபாளையம் முழுவதும் பூச்செரிந்து இருந்தது. வீட்டில் தியானத்தில் இருந்த வடிவுடையாளின் கழுத்தில் ஒளிவீசும் மலர் மாலை அலங்கரித்து இருந்தது. இதையடுத்து ஊர் மக்கள் அனைவரும் வடிவுடையாளை பல்லக்கில் ஏற்றிக்கொண்டு, பசுபதீஸ்வரர் ஆலயத்திற்கு வந்தனர். கருவறைக்குள் சென்ற வடிவுடையாள் இறைவனோடு ஐக்கியமானாள் என்கிறது தலவரலாறு.

    பங்குனி உத்திர விழாவின் ஆறாம் நாள் பசு பதீஸ்வரர் அப்பிபாளையம் செல்வதும், அங்கிருந்து ஏழாம் நாள் கரூர் பசுபதீஸ்வரர் ஆலயத்திற்கு வடிவுடையாளுடன் வருவதும் இன்றும் நடைபெறும் ஐதீக நிகழ்வாகும்.

    Next Story
    ×