search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சோம்பல் நீக்கி சுறுசுறுப்பு தரும் திருஎறும்பியூர் தலம்
    X

    சோம்பல் நீக்கி சுறுசுறுப்பு தரும் திருஎறும்பியூர் தலம்

    எறும்புகள் பூஜித்த இத்தல சுவாமியை வழிபடுபவர்கள், சோம்பல் நீங்கி சுறுசுறுப்பு பெறுவார்கள் என்று நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.
    நாளெல்லாம் உழைத்த மனிதனுக்கு, சோர்வு ஏற்படுவதும் அதன் காரணமாக ஓய்வும், உறக்கஉண்டு விட்டு, இரவில் தங்கள் கூடுகளில் தங்கி இளைப்பாறும். பின்னர் மீண்டும் அதிகாலையில் சுறுசுறுப்பாகப் பறப்பது வழக்கம். சில மனிதர்கள் எப்போதும் மந்தமாக இருப்பதும், வேலை எதுவும் செய்யாமல் சோம்பிக் கிடப்பதும் அவர்களுக்கு நல்லதல்ல. இதனால் அவர்கள் மனதளவில் மட்டுமல்லாது உடலளவிலும் நோய்வாய்ப்பட்டு போகிறார்கள். இது தவிர்க்கப்பட வேண்டும்.

    உள்ளத்தையும், உடலையும் புத்துணர்ச்சியோடு வைத்துக்கொண்டால் சோம்பல் நீங்கி சுறுசுறுப்பு வரும். தேனீக்களையும், எறும்புகளையும் அதற்கு உதாரணமாகச் சொல்வார்கள். அப்படிப்பட்ட எறும்புகள் வழிபட்ட திருஎறும்பியூர் ஈசன் கோவிலைப் பற்றி  பார்க்கலாம்.

    எறும்பீசர் :

    மலைக்கோட்டை மாநகரமான திருச்சிராப்பள்ளிக்கு கிழக்கே 10 கி.மீ தொலைவில் உள்ளது, திருவெறும்பூர் என்று அழைக்கப்படும் திருஎறும்பியூர். நெடுஞ்சாலையில் பயணிக்கும் போதே வடபுறத்தில் கிரீடம் வைத்தாற்போல கோவில் ஒன்று குன்றின் மீது அமைந்திருக்கிறது. நெடுஞ்சாலையில் இருந்து தோரணவாயில் வழியாக சில அடிகள் சென்றால், மலையின் படிக்கட்டுகள் தொடங்கும். 125 படிக்கட்டுகளில் ஏறி உச்சியை அடைந்தால், கோட்டைச் சுவரில் கோபுரம் இருக்கும். கிழக்கு நோக்கிய சன்னிதியில் வீற்றிருக்கும் இறைவனை எறும்பீசர், பிப்பிலீ ஈசர் என்றும் சொல்கிறார்கள். ‘பிப்பிலீ’ என்றால் எறும்பு என்று பொருள்.

    மேலும் மதுவனேசுவரர், மாணிக்கநாதர், மணிக்கூடாசலபதி போன்ற பெயர்களும் இத்தல இறைவனுக்கு உண்டு. மணல் லிங்கமாக இருப்பதால், இங்குள்ள சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. சிவபெருமானின் சுயம்பு வடிவான லிங்கத் திருமேனி இத்திருக்கோவிலில் வித்தியாசமான தோற்றத்தில் காட்சி அளிக்கிறது. சில கோவில் களைப் போல வழுவழுப்பாக இல்லாமல், சொரசொரப்பாகவும், இரண்டாகப் பிளவுபட்ட தோற்றத்திலும் இத்தல சிவலிங்கம் காணப்படுகிறது. சிவலிங்கத்தின் வலதுபுறத்தை சிவனாகவும், இடதுபுறத்தை சக்தியாகவும் பாவித்து, சிவசக்தியாகவே பக்தர்கள் தரிசிக்கிறார்கள். சற்று சாய்ந்த நிலையில் இருக்கும் இந்த லிங்கத்திற்கென ஒரு புராணக் கதை உலவுகிறது.

    எறும்புகள் பூசித்த சிவன் :

    தேவர்களின் தலைவனான இந்திரனையும், மற்ற தேவர்களையும் தாரகாசுரன் என்ற அசுரன் துன்புறுத்தி வந்தான். தேவர்கள் அனைவரும் இதுபற்றி பிரம்மதேவரிடம் சென்று முறையிட்டனர். பிரம்மாவோ, மண்ணுலகில் இத்தலத்தின் மலை மீது இருக்கும் சிவனை பூக்கொண்டு அர்ச்சித்து வழிபட்டால், அசுரனின் தொல்லையில் இருந்து விடுபடலாம் என்று துன்பத்தில் இருந்து தப்பிக்கும் வழியைக் கூறினார்.

    இதையடுத்து தேவர்கள் அனைவரும் அசுரனுக்கு பயந்து, சிறிய உருவான எறும்பாக வடிவெடுத்து இத்தலத்திற்கு வந்தனர். மேலும் எறும்பு வடிவத்திலேயே, சிவனது சிரம் மீது ஏறி பூக்களைக் கொண்டு அர்ச்சித்து வழிபட்டனர். எறும்பு வடிவில் இருந்த தேவர்களுக்கு அருள்செய்ய நினைத்த சிவபெருமான், எறும்புகள் ஏறுவதற்கு வசதியாக வழுவழுப்பான தனது லிங்க உருவத்தை சொரசொரப்பாக மாற்றிக்கொண்டாராம்.

    எறும்புகளின் வழிபாட்டில் மகிழ்வுற்ற எம்பெருமான் அசுரனை அழித்து, தேவர்களுக்கு வாழ்வு கொடுத்தார். எறும்புகள் வழிபட்டதன் காரணமாக இத்தல இறைவனுக்கு ‘எறும்பீசர்’ என்று பெயர் வந்ததாக தல புராணம் தெரிவிக்கிறது. இன்றும் சிவ பூஜை நடக்கும் நேரத்தில் கருவறையில் எறும்புகள் ஊர்ந்து செல்லுவதைக் காணலாம். தேவர்கள் வந்து தினமும் எறும்பு வடிவில் இத்தல இறைவனை வழிபடுவதாக நம்பப்படுகிறது.

    தத்துவம் சொல்லும் துவாரபாலகர் :

    இத்திருத்தல நாயகி தெற்கு நோக்கிய சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறாள். இத்தல அம்பாள், சவுந்தரநாயகி, மதுவனேஸ்வரி, நறுங்குழல் நாயகி, சுகந்தகுழல் ஈஸ்வரி, ரத்தினாம்பாள் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறாள். மலையின் கீழ் இருந்த அம்பாள் கோவில் சிதிலமடைந்ததால், புதிய சிலையுடன் சுமார் ஐநூறு வருடங்களுக்கு முன்பு மலைமீது தற்போது இருக்கும் சன்னிதியை அமைத்திருக்கிறார்கள்.

    சிவன் சன்னிதி செல்லும் முன்பு உள்ள துவாரபாலகர் களில் ஒருவர் கோபமான முகத்துடனும், மற்றொருவர் சாந்தமான முகத்துடனும் இருக்கிறார்கள். கோபத்துடன் வந்தாலும் கடவுளை வழிபட்டபின் சாந்தம் கிடைக்கும் என்ற தத்துவத்தை இந்த சிலைகள் போதிப்பதாகச் சொல்கிறார்கள்.

    இத்தல விநாயகர் ‘செல்வ விநாயகர்’ என்பதால், அவர் தன்னை வழிபடுபவர்களுக்கு சகல ஐஸ்வரியங்களையும் வழங்குகிறார். மூலஸ்தானத்தின் பின்புறம் வள்ளி- தெய்வானையுடன் விளங்கும் சுப்ரமணிய சுவாமி இருக்கிறார். இவரது பீடத்தில் அறுங்கோண (ஆறு) சக்கரம் இருக்கிறது. இந்த வடிவேலனை வழிபடுபவர்கள் எதிரிகள் பயம் நீங்கி வாழ்வார்கள். நவக்கிரகங்களின் சன்னிதியில் சூரியனின் மனைவியான உஷா, பிரத்யுஷா ஆகிய இருவரும், ஒருவரை ஒருவர் நோக்கியவாறு காட்சி தருகின்றனர். இந்தச் சிவ மலைக்கு எதிரே அடிவாரத்தில், பிரம்ம தீர்த்தம் உள்ளது. தல விருட்சமான வில்வமரம் மலை மேல் இருக்கிறது.

    அப்பர் பாடல் :

    ‘அல்லல் தீர்க்கும் அருமருந்தை ஆமாறறிந்தென் உள்ளந் தெளிந்து எறும்பியூர் மலைமேல் மாணிக்கத்தை செழுஞ்சுடரை சென்றடையப் பெற்றேன் நானே’ என்று அப்பர் பெருமான் திருத்தாண்டகத்திலும், பத்து திருக்குறுந்தொகையிலும் பதிகங்களாகப் பாமாலை சூட்டியுள்ளார். தேவாரப்பாடல் பெற்ற காவிரித் தென்கரைத் தலங்களில், இந்த ஆலயம் 70-வது திருத்தலமாகத் திகழ்கிறது. தினமும் காலை 6.30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

    எறும்புகள் பூஜித்த இத்தல சுவாமியை வழிபடுபவர்கள், சோம்பல் நீங்கி சுறுசுறுப்பு பெறுவார்கள் என்று நம்பிக்கையுடன் சொல்கிறார்கள். காலாற நடந்து 125 படிகள் கடந்து, அங்கு வீசும் மலைக் காற்றை அனுபவித்தாலே நமக்கு உற்சாகம் பிறக்கும். இன்னும் என்ன தாமதம்? நீங்களும் சுறுசுறுப்புடன் திகழ இன்றே எறும்பீசரை வழிபட கிளம்புங்கள்.
    Next Story
    ×