search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    எல்லா வளமும் தரும் ஊத்துக்காடு எல்லையம்மன் கோவில்
    X

    எல்லா வளமும் தரும் ஊத்துக்காடு எல்லையம்மன் கோவில்

    `அன்னை ஆதிபராசக்தி பல்வேறு இடங்களில் அருள்பாலித்து வருகிறாள். அவ்வகையில் அருள்மாரியாக ஊத்துக்காடு எல்லையம்மன் திகழ்கின்றாள்.
    அன்னை ஆதிபராசக்தி பல்வேறு இடங்களில் அருள்பாலித்து வருகிறாள். அவ்வகையில் அருள்மாரியாக ஊத்துக்காடு எல்லையம்மன் திகழ்கின்றாள்.

    தொண்டை மண்டலத்தின் ஒரு பகுதியை விஜயநகர மன்னர்கள் ஆண்டு வந்தனர். அவர்களில் தலைசிறந்தவர் கிருஷ்ண தேவராயர். இவர் காட்டுக்குச் சென்று வேட்டையாடுவது வழக்கம். அவருடன் பாதுகாவலர்களோ படை வீரர்களோ செல்வது இல்லை. அவர் வளர்த்த நாய் ஒன்று மட்டுமே உடன் செல்லும்.

    அதன்படி கிருஷ்ண தேவராயர் காட்டுக்குச் சென்றபோது வேட்டையாடும் ஆர்வத்தில் காட்டில் வெகு தொலைவுக்கு வந்துவிட்டார். வழி தெரியவில்லை. மிகுந்த களைப்பால் தாகமும் ஏற்பட்டது. சுற்றுமுற்றும் தேடியும் தடாகத்தைக் காணவில்லை. ஒருவித மயக்கத்துடன் மரத்தில் சாய்ந்து அமர்ந்தார் மன்னர்.

    இதைக் கண்ட நாய் அரசரின் நிலையறிந்து வருந்தியது. நீண்ட தொலைவு அலைந்து ஒரு தடாகத்தைக் கண்டுபிடித்தது. பிறகு மன்னரை எழுப்பி அவருக்கு வழிகாட்டியது. தடாகத்தைக் கண்ட மன்னர் அகமகிழ்ந்து நீரைக் குடிக்க முயன்றார். அப்போது அவருக்கு அருகில் எலுமிச்சம் பழம் ஒன்று மிதந்து வந்தது. அதை நோக்கியபோது தடாகத்தில் சிலை ஒன்று எழுவதைக் கண்டு அதிசயித்தார் மன்னர்.

    இதே நேரத்தில் மன்னரைத் தேடி பரிவாரங்கள் காட்டுக்குள் வந்தன. மன்னரின் உத்திரவுப்படி அவர்கள் சிலையை நீரிலிருந்து வெளியே எடுத்து வந்தனர். இதன்பின் அம்மனுக்கு அங்கேயே கோயில் எழுப்பினார் மன்னர். காட்டு எல்லைப்பகுதியின் ஊற்று நீர் தடாகத்தில் கிடைத்ததால் அம்மனும் ஊற்றுக்காடு எல்லையம்மன் என்று அழைக்கப்பட்டாள். அதுவே மருவி தற்போது ஊத்துக்காடு என்று இவ்வூர் அழைக்கப்படுகிறது.

    இந்நிலையில் மன்னரின் மெய்க்காப்பாளரின் கனவில் தோன்றிய எல்லையம்மன், ""ஊருக்கு கிழக்குப் பகுதியில் என்னை வைத்து வழிபடுங்கள்'' என்றாள். அதன்படி ஊரின் கிழக்குப் பகுதியில் திருக்கோயில் கட்டி எல்லையம்மனை பிரதிஷ்டை செய்தார் மன்னர்.

    எல்லையம்மன் நான்கு கரங்களுடன் காட்சியளிக்கிறாள். இடது மேல் கையில் சூலத்துடனும் வலது மேல் கையில் உடுக்கையுடனும் மற்ற இரு கைகளில் அபயம் மற்றும் வரத கரத்துடனும் வலது காலை மடித்து இடது காலினை மகிஷன் தலை மீது வைத்தபடியும் பக்தர்களுக்கு அருள்புரிகிறாள்.

    கருவறைக்கு முன்புறம் துவாரபாலகர்களும், ஏழரை அடி உயரம் உள்ள காளிகாம்பாளும் உள்ளனர்.

    கருவறையின் வெளிப்புறச் சுவரில் வாராகி, மாகேஸ்வரி, வைஷ்ணவி, பிராமி, துர்கை, ஆஞ்சநேயர், மகாவிஷ்ணு ஆகியோர் அருள்புரிகின்றனர்.

    மேலும் காலபைரவர் சந்நிதி, நவகிரகங்களின் சந்நிதி, சிவன், பார்வதி மற்றும் விநாயகர் சந்நிதிகளும் உள்ளன.

    விசேஷங்கள்: இந்தக் கோயிலில் தினமும் 3 கால பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன.

    சித்திரை மூல நட்சத்திரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்ததால் அதை பத்து நாட்கள் பிரம்மோற்ஸவ விழாவாக பக்தர்கள் கொண்டாடுகின்றனர். அதில் ஒன்றாக தெப்போற்ஸவம் நடக்கிறது. இங்கே அம்மனுக்குப் படைத்த உப்பில்லாத வெண்பொங்கல் பிரசாதமாக வழங்கப்படுவது சிறப்பு.

    பிரார்த்தனை:

     இந்தக் கோயில் திருக்குளத்தில் நீராடி வேப்பிலையை உடலில் அணிந்து பொங்கல் வைத்து வழிபட்டால் திருமணம் கைகூடும். தீராத நோய் தீரும். தொழில் வளர்ச்சியடையும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கோயில் அருகில் உள்ள அலரி மரத்தில் தொட்டில் கட்டி வழிபட்டால் அந்த பாக்கியம் கிடைக்கும். பில்லி, சூனியத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கோயில் அருகில் உள்ள ஆகாஷ தேவதையை வழிபட்டால் பிரச்சனை தீரும்.

    அமைவிடம்:


    காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் தாலுக்காவில் உள்ளது ஊத்துக்காடு. வாலாஜாபாத் நகரிலிருந்து 4 கி.மீ. தொலைவு.
    Next Story
    ×